search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வஸ்திர மரியாதை"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடக்கிறது.
    • இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை நடைபெறும் தேரோட்டத்தின்போது, தேரில் எழுந்தருளுவார்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும் தொண்டு செய்து அவருக்கு மனைவியானாள். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் இடையே சம்பந்தமும், உறவும், மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.

    பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் கோவில் ஊழியர் யானை மீது அமர்ந்து பட்டு வஸ்திரங்களை எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கள பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இன்று காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கள பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது, தேரில் எழுந்தருளுவார்.

    • வஸ்திர மரியாதை பொருட்களை நேற்று இரவு திருப்பதிக்கு எடுத்து சென்றனர்.
    • நாளை ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். முன்பு மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம், அவர்களிடம் கிடைக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி மாதம் 1-ந் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதிக்கு எடுத்துச்செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனைத்தும் கோவிலில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஒரு தட்டை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் மணியக்காரர் உடையவர் ஸ்ரீதர், அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து, மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னா் வஸ்திர மரியாதை பொருட்களை நேற்று இரவு திருப்பதிக்கு எடுத்து சென்றனர். இவர்கள் ஆடி முதல் தேதியான நாளை(திங்கட்கிழமை) திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள்.

    • ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலுக்கும் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகின்றன
    • ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து மைசூர் ஸ்ரீ சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கு மரியாதை வழங்கப்பட்டு வருகின்றன

    2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், "பிற மாநிலங்கள், பிற நாடுகளிலுள்ள கோவில்களுடன் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களில் இருந்து வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இருந்து ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன சுவாமி கோவிலுக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி கோவிலில் இருந்து கர்நாடக மாநிலம் மேல்கோட்டை செல்வ நாராயண பெருமாள் கோவிலுக்கும், ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து மைசூர் ஸ்ரீ சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் இருந்து ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலுக்கும் வஸ்திர மரியாதை மற்றும் மாலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை சுப்பிரமணியர் கோவில் மற்றும் கொடுமலை விநாயகர் கோவிலுக்கு தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து வஸ்திர மரியாதை, மாலை ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×