search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிருந்தா காரத்"

    • தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம்.
    • வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.

    நாமக்கல்:

    ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது அகில இந்திய மாநாடு நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் சார்பில் விவாதம், தொகுப்புரை, அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நடைபெறுகின்றன.

    மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பா.ஜ.க.வின் அரசியல் நாடகம். இந்த மசோதா நிறைவேறுவது கடினம்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

    வருகின்ற 5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். அதற்குப் பின்னர் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்யப்படும்.

    தமிழக அரசு வழங்கி வரும் பெண்களுக்கான உரிமைத்தொகை பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

    இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று 3-வது நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

    • பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன் ஷரன் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று முன்தினம் டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டகளத்துக்கு முன்னாள் வீரர்-வீராங்கனைகள் வந்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அங்கு பல வீரர்-வீராங்கனைகள் குவிந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் மத்திய விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. 72 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடுவிதித்துள்ளது.

    இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் நேற்று இரவு மத்திய மந்திரி அனுராக்தாகூர் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தை அனுராக்தாகூரின் இல்லத்தில் நடந்தது. இதில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், ரவி தகியா உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது.

    பேச்சுவார்த்தையின் போது இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ்பூஷன் ஷரன்சிங்கை நீக்க வேண்டும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மல்யுத்த சம்மேளனத்தை கூண்டோடு கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வீரர்-வீராங்கனைகள் முன் வைத்தனர்.

    மல்யுத்த சம்மேளனத்திடம் விளையாட்டு அமைச்சகம் விளக்கம் கேட்டு இருப்பதால் காத்திருக்குமாறு மத்திய மந்திரி அனுராக்தாகூர் தெரிவித்தார்.

    மேலும் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படும் என்றும் விசாரணை குழுவை அமைக்க அரசு தயாராக இருப்பதாகவும் மந்திரி தெரிவித்தார்.

    ஆனால் பிரிஜ்பூஷனை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தெரிவித்தனர். இதனால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது. இன்று மதியம் மீண்டும் வீரர்-வீராங்கனைகளுடன் மந்திரி அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று 3-வது நாளாக மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் தொடர்ந்தது. அங்கு 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டக்காரர்கள் கூறும்போது, 5 முதல் 6 வீராங்கனைகள், சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது போலீசில் புகார் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். வீராங்கனை வினேத்போகத் கூறும்போது, எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். பிரிஜ்பூஷனை சிறைக்கு அனுப்பும் வரை போராட்டம் நீடிக்கும் என்றார்.

    தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரிஜ்பூஷன், தனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது என்றும் இது மல்யுத்த வீராங்கனைகளையும், விளையாட்டையும் கேவலப்படுத்த நடக்கும் முயற்சி என்றும் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இன்று பேட்டி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே பிரிஜ்பூஷனிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பாஜக தலைவர் பபிதா போகத் உறுதி அளித்தார்.
    • மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ள இவர்கள், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். அவர்களின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

    இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜக தலைவரும் மல்யுத்த வீராங்கனையுமான பபிதா போகத் இன்று ஜந்தர் மந்தர் சென்று போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார். அவர்களின் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான பிருந்தா காரத், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது, இந்த போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்றுகூறி அவரை அங்கிருந்து செல்லும்படி கைகூப்பி கேட்டுக்கொண்டனர்.

    "தயவுசெய்து மேடையில் இருந்து கீழே இறங்குங்கள். தயவு செய்து இதை அரசியலாக்க வேண்டாம், இது விளையாட்டு வீரர்களின் போராட்டம்" என பஜ்ரங் புனியா கேட்டுக்கொண்டார்.

    இதுபற்றி பேசிய பிருந்தா காரத், "மல்யுத்த வீரர்கள் இங்கு தர்ணா போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, பெண்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவேண்டும். விசாரணை முடிவடையும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என்றார்.

    • சிபிஐ சோதனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்.
    • அரசியல் ரீதியாக போராட ராஷ்டிரிய ஜனதாதளம் அழைப்பு.

    மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் 14 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. இதையடுத்து சிசோடியா, டெல்லி கலால் துறை அதிகாரிகள், மதுபான நிறுவன நிர்வாகிகள், டீலர்கள், ஊழியர்கள் உள்பட 15 பேர் மீது சிபிஐ தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிபிஐ சோதனை நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா கூறியுள்ளதாவது: சிபிஐ குழு, எனது வீட்டை சோதனை செய்து எனது கணினி மற்றும் தொலைபேசியை கைப்பற்றினர். எனது குடும்பத்தினர் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர், தொடர்ந்து ஒத்துழைப்போம். நாங்கள் எந்த ஊழலோ, தவறோ செய்யவில்லை. நாங்கள் பயப்படவில்லை. சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சிசோடியா விட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க் கட்சிகளை மத்திய அரசு குறி வைப்பதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். 


    டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளதை ராஷ்டிரிய ஜனதாதளம் விமர்சித்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி போராட முன் வர வேண்டும் என்று அக்கட்சியின் எம்பி மனோஜ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, டெல்லி மதுபான கடை உரிமம் வழங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். 


    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட அன்றே டெல்லி அரசு, மதுக் கொள்கையை வாபஸ் பெற்றதாகவும், ஒரு ஊழல்வாதி தன்னை நிரபராதி என்று நிரூபிக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர் ஊழல்வாதியாகவே இருப்பார் என்றும், அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

    ×