search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் நீதிமன்றம்"

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம். ஆர். காந்தி தாக்கப்பட்ட வழக்கில் வருகிற 16-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று நார்கோவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம். ஆர். காந்தி.

    எம். ஆர். காந்தி பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவராகவும் உள்ளார். இவரது வீடு நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ளது.

    எம். ஆர். காந்தி தினமும் வீட்டில் இருந்து ஆசாரிபள்ளம் சாலையில் நடை பயிற்சிக்கு செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதியும் அவர் வீட்டில் இருந்து தனியாக நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.

    எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், இடலாக்குடியை சேர்ந்த செய்யது அலி நவாஸ், பிரபு என்ற அப்துல் அஜிஸ், மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காலின் மற்றும் ஷாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்று கோர்ட்டில் இந்த வழக்கின் 5 குற்றவாளிகளில் 4 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். இதையடுத்து 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து இன்று இந்த வழக்கின் குற்றவாளிகள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள்.

    இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையே நாகர்கோவில் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாண்டிய ராஜ், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 16-ந் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 16-ந் தேதி வெளியாகும் என தெரிகிறது.
    தந்தையை தாக்கியவரை கொன்ற வழக்கில் சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நாகர்கோவில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த தம்மத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32).

    செல்வகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே கோவில் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது.

    இதில் ஏற்பட்ட தகராறில் செல்வராஜை, செல்வகுமார் தாக்கினார். இது பற்றி செல்வராஜ், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

    இதற்கிடையே செல்வராஜ், தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன்கள் பாபு (26), அய்யப்பன் (24), மணி கண்டன் (23) ஆகியோர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் தம்மத்து கோணம் பகுதியில் நடந்து சென்ற செல்வகுமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். கடந்த 9-6-2011-ல் இந்த சம்பவம் நடந்தது.

    செல்வகுமார் கொலை செய்யப்பட்டது பற்றி ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்வராஜின் மகன்கள் மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    கைதான 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

    செல்வகுமார் கொலை தொடர்பாக நடந்த வழக்கில் இன்று கூடுதல் மாவட்ட கோர்ட்டு நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு கூறினார்.

    இதில் செல்வகுமாரை கொலை செய்தது தொடர்பாக அண்ணன், தம்பிகள் மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், செல்வகுமாரை தடுத்து நிறுத்தி மிரட்டியது தொடர்பாக 6 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் வழங்கி தீர்ப்பு கூறினார். இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    கொலை வழக்கின் தீர்ப்பை கேட்க இன்று மணிகண்டன், அய்யப்பன், பாபு ஆகிய 3 பேரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ஞானசேகர் வாதாடினார்.
    ×