search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் மறியல்"

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பாரபட்சமாக சம்பளம் வழங்கப்படுவதை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டம் பணியில் ஏராளமான கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினக் கூலியாகவும், மாத கூலியாகவும் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து சமீபகாலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாரபட்சமாக சம்பளம் வழங்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இன்று காலை தொரவி கிராமம் அருகே விழுப்புரம் - திருக்கனூர் சாலையில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுமார் 100 பேர் திடீரென திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், ரமேஷ் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பன்ட ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விக்கிரவாண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவாலி, நாராயணன் ஆகியோரும் விரைந்து வந்து இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன் பின் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    பயணிகள் ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு கோவை, சூலூர், சோமனூர், இருகூர், பெருந்துறை, ஈரோடு, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் தினமும் காலையில் ரெயிலில் வேலைக்கு சென்று விட்டு மாலை ரெயில் மூலம் வீடு திரும்புவார்கள். இதற்காக மாதாந்திர பாஸ் வாங்கி வைத்துள்ளனர்.

    கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி தொழிலாளர்கள் பெரும்பாலும் நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் பயணிகள் ரெயிலில் தான் மாலை வேலை முடிந்து வீடு திரும்புவார்கள்.

    நாகர்கோவில் - கோவை பயணிகள் ரெயில் வழக்கமாக இரவு 7.10 மணிக்கு திருப்பூர் வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் கடந்த சில நாட்களாக இரவு 9.30 மணி, 10 மணிக்குதான் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் மாலை வேலை முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் காத்து கிடந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து கோவை வந்த உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். ஏராளமான தொழிலாளர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

    இது குறித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொழிலாளர்கள் நாகர்கோவில் பயணிகள் ரெயில் மாலை 6.30 மணிக்கு ஈரோடு வந்து விடுகிறது. ஆனால் திருப்பூருக்கு வழக்கத்தை விட 2 மணி நேரம் தாமதமாக தான் வருகிறது என குற்றம் சாட்டினார்கள்.

    அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள். பயணிகள் ரெயில் குறித்த நேரத்தில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, பரளியாறு, காளிகேசம், மணலோடை, சிற்றாறு, கல்லாறு, கோதையாறு, மைலாறு உள்பட 9 இடங்களில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளது.

    இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

    கடந்த 1.12.2016 முதல் 33 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இதுவரை கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறவில்லை என்று தொழிலாளர் சங்கத்தினர் கூறி வந்தனர். இந்தநிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் வல்சகுமார் தலைமை தாங்கினார். தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தி.மு.க. பொருளாளர் கேட்சன், இளைஞர் அணி நிர்வாகி சிவராஜ், தொ.மு.ச. விஜயன், அன்னை சோனியா ராகுல் காந்தி பேரவை குமரன் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு அலுவலக வாயில் முன்பு அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் திரளான ஆண், பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து நாகர்கோவில் டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்தனர். #tamilnews
    ×