search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers stir"

    நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, பரளியாறு, காளிகேசம், மணலோடை, சிற்றாறு, கல்லாறு, கோதையாறு, மைலாறு உள்பட 9 இடங்களில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளது.

    இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

    கடந்த 1.12.2016 முதல் 33 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இதுவரை கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறவில்லை என்று தொழிலாளர் சங்கத்தினர் கூறி வந்தனர். இந்தநிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் வல்சகுமார் தலைமை தாங்கினார். தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தி.மு.க. பொருளாளர் கேட்சன், இளைஞர் அணி நிர்வாகி சிவராஜ், தொ.மு.ச. விஜயன், அன்னை சோனியா ராகுல் காந்தி பேரவை குமரன் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு அலுவலக வாயில் முன்பு அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் திரளான ஆண், பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து நாகர்கோவில் டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்தனர். #tamilnews
    ×