search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவ் விமர்சனம்"

    ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தேவ்' படத்தின் விமர்சனம். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar
    கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார்.

    இவ்வாறாக கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக முகநூலில் பெண் தேடலில் ஈடுபட, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்க்கின்றனர். கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் பிடித்து விடுகிறது.



    சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார். 

    ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையேயான நட்பு, காதல், பாசம், பிரிவு என்ன? கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின் மாறுபட்ட படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடனத்திலும் தேறியிருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு அபாரம். கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்ககேற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.



    விக்னேஷ்காந்த் காமெடியில் சிரிக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் அனுபவ நடிப்பாலும், அம்ருதா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் காட்சிக்கு ஏற்பவும் வந்து செல்கின்றனர்.

    என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கார்த்தியின் கதாபாத்திரமும், ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையில் இருக்கும் ரகுலின் கதாபாத்திரத்திற்கு இடையேயான காதலை வித்தியாசமான கோணத்தில், காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநருக்கு பாராட்டுக்கள். வழக்கமான காதல் கதையில், வித்தியாசமாக காட்சிப்படுத்துதல் மூலம் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமென்ட் என காட்சிகள் ரசிக்கும்படியாகவே உள்ளது. திரைக்கதையின் நீளத்தை மட்டும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். 



    ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை அபாரம், பாடல்களில் அவரது பழைய ஹிட் பாடல்களை உணர முடிகிறது. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் படத்திற்கே பலமாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் `தேவ்' காதலன். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar

    ×