search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி வாலிபர் கொலை"

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு முற்றியதால் வாழ்வில் விரக்தியடைந்த அகிலா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • ஆகாஷ் யாரால், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாகவே உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50), விவசாயி. இவரது மனைவி பங்கஜவல்லி (47). இந்த தம்பதியினருக்கு ஆகாஷ் என்ற செல்வமாரி (19) மற்றும் தயானந்தன் (17), சந்திரபிரகாஷ் (15) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

    இதில் ஆகாஷ் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னை விட இரண்டு வயது மூத்தவரான தாயனூரை சேர்ந்த அகிலா (21) என்ற பெண்ணை காதலித்து இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஒரு சில நாட்களிலேயே இரு வீட்டாரும் இவர்களை சேர்த்துக் கொண்டனர்.

    இதற்கிடையே ஆகாஷ் தீய நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனை மனைவி மற்றும் உறவினர்கள் கண்டித்தும் அவர் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. இதனால் புதுமண தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை இருவீட்டாரின் உறவினர்களும் அவ்வப் போது சமாதானம் செய்து வைத்தனர்.

    இருந்தபோதிலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு முற்றியதால் வாழ்வில் விரக்தியடைந்த அகிலா கணவருடன் கோபித்துக் கொண்டு தாயனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பல முறை குடும்பம் நடத்த அழைத்தும் அகிலா மறுத்துவிட்டார்.

    அவர்கள் சேர்ந்து வாழ்ந்ததற்கு ஆதாரமாக தற்போது அகிலா 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையே ஆகாஷ் பள்ளக்காட்டில் உள்ள தனது வீட்டிலும், தாயனூரில் உள்ள மனைவி வீட்டிலும் மாறி மாறி இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பள்ளக்காட்டில் உள்ள தனது வீட்டில் இரவு சுமார் 9 மணியளவில் சாப்பிட்டு விட்டு, தனது தாயிடம் மனைவியை பார்க்க செல்வதாக கூறி விட்டு வந்துள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் தனது வீட்டிற்கு செல்லவில்லை.

    இதனால் அவருடைய பெற்றோர்கள் மனைவி வீட்டில் இருப்பதாகவும், மனைவியோ கணவர் பெற்றோர் வீட்டில் இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு இரவில் யாரும் ஆகாஷை தேடவில்லை. இன்று அதிகாலை புங்கனூர் பெரிய ஏரிக்கு அருகில் உள்ள வயல் வெளியில் முகம் மற்றும் கை, கால்களில் காயங்களுடன் ஆகாஷ் பிணமாக கிடந்தார்.

    குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலை சுற்றிப்பார்க்க வந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி, வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுபற்றி உடனடியாக புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரனுக்கு தகவல் கொடுத்தார். அவர் சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட ஆகாஷின் உச்சந்தலையில் கொலையாளிகள் ஸ்குரு டிரைவர் அல்லது கத்தரிக் கோலால் அடித்து இறக்கியுள்ளனர்.

    சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த ஆகாஷின் பெற்றோர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி கதறி அழுதனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பரவாசுதேவன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    ஆகாஷ் யாரால், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாகவே உள்ளது. குடிப்பழகத்திற்கு அடிமையான அவர் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த போதிலும் அவரது வீட்டிற்கு சென்று வருவது தொடர்பாக யாராவது அவரை கொலை செய்தார்களா அல்லது வேறு பெண் பிரச்சினையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் முதற்கட்ட விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர்.

    மேலும் கடந்த 7-ந்தேதி தற்போது சம்பவம் நடந்த பகுதியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த சுள்ளமணிகரையில் மலை கொழுந்தன் என்பவரது மனைவி அக்கம்மாள் நகைக்காக கொல்லப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே மற்றொரு கொலை சம்பவம் கொடூரமாக அரங்கேறி இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.

    ×