என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி வாலிபர் கொலை"

    • திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த போதே இந்த படுகொலை நடந்துள்ளது.
    • திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 7,000க்கும் கூடுதலான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி, வெட்டி படுகொலை செய்திருக்கிறது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் வாழும் பகுதியிலேயே ஓர் இளைஞர் ஓட , ஓட விரட்டி படுகொலை செய்யப் படுகிறார் என்றால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

    பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான தாமரைச் செல்வன் இன்று காலை இரு சக்கர ஊர்தியில் வந்து கொண்டிருந்த போது, வேறு சில இரு சக்கர ஊர்திகளில் வந்த இளமாறன் என்பவர் உள்ளிட்ட 5 பேர் தங்களின் வாகனத்தை தாமரைச் செல்வனின் வாகனம் மீது மோதி கீழே தள்ளியுள்ளனர். அங்கேயே அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்ற போது, காவலர் குடியிருப்புக்குள் நுழைந்தால் தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் அவர் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும், கொலைகார கும்பல் எந்த அச்சமும் இல்லாமல் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து தாமரைச் செல்வனை கொலை செய்திருக்கிறது. அதுவும் திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்த போதே இந்த படுகொலை நடந்துள்ளது.

    திமுக ஆட்சியில் கொலை செய்யக் கூடாத இடங்கள் என்று எதுவுமே இல்லை எனக் கூறும் அளவுக்கு எல்லா இடங்களிலும் கொலைகள் செய்யப்படுகின்றன. நெல்லை நீதிமன்ற வளாகத்தில் படுகொலை, தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை படுகொலை, சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு அரிவாள் வெட்டு என திரும்பும் திசையெங்கும் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 7,000க்கும் கூடுதலான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, இந்த வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து விட்டதாக பெருமை பேசிக் கொள்கிறது. பாவங்களை செய்யக் கூடாது என்று கூறினால், பாவங்களை செய்தால் என்ன, அது தான் பரிகாரம் செய்து விட்டோமே? என்று கேட்பதைப் போலத் தான் திமுகவின் விளக்கம் அமைந்துள்ளது.

    கொலைகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கத் தவறிய திமுக, சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியை இழந்து விட்டது. அனைத்துக்கும் ஒரு முடிவு உண்டு, கொலை, கொள்ளைகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசுக்கு விரைவில் முடிவு கட்டப்படும். அதன் மூலம் தமிழகத்தில் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு நிலை நாட்டப்படும்.

    • பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • முதலமைச்சர் ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் பழைய தபால் நிலைய சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரை செல்வன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர். பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயிர் பயத்தில் அப்பகுதியில் அலறியடி ஓடியுள்ளார்.

    காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரை செல்வன் தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் வீடு திறந்து இருந்ததால் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் பக்கத்தில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் காவலர் குடும்பத்தின் கண்முன்னே தாமரை செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட காவலர் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டுள்ளனர்.

    இதனை சக காவலர்கள் கல்லால் கொலையாளிகளை தாக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததால் அனைவரும் தூரத்தில் இருந்தே தாக்கியுள்ளனர். இதில், ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாமரை செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வந்துள்ள முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு முற்றியதால் வாழ்வில் விரக்தியடைந்த அகிலா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • ஆகாஷ் யாரால், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாகவே உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50), விவசாயி. இவரது மனைவி பங்கஜவல்லி (47). இந்த தம்பதியினருக்கு ஆகாஷ் என்ற செல்வமாரி (19) மற்றும் தயானந்தன் (17), சந்திரபிரகாஷ் (15) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

    இதில் ஆகாஷ் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னை விட இரண்டு வயது மூத்தவரான தாயனூரை சேர்ந்த அகிலா (21) என்ற பெண்ணை காதலித்து இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஒரு சில நாட்களிலேயே இரு வீட்டாரும் இவர்களை சேர்த்துக் கொண்டனர்.

    இதற்கிடையே ஆகாஷ் தீய நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனை மனைவி மற்றும் உறவினர்கள் கண்டித்தும் அவர் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. இதனால் புதுமண தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை இருவீட்டாரின் உறவினர்களும் அவ்வப் போது சமாதானம் செய்து வைத்தனர்.

    இருந்தபோதிலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு முற்றியதால் வாழ்வில் விரக்தியடைந்த அகிலா கணவருடன் கோபித்துக் கொண்டு தாயனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பல முறை குடும்பம் நடத்த அழைத்தும் அகிலா மறுத்துவிட்டார்.

    அவர்கள் சேர்ந்து வாழ்ந்ததற்கு ஆதாரமாக தற்போது அகிலா 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையே ஆகாஷ் பள்ளக்காட்டில் உள்ள தனது வீட்டிலும், தாயனூரில் உள்ள மனைவி வீட்டிலும் மாறி மாறி இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பள்ளக்காட்டில் உள்ள தனது வீட்டில் இரவு சுமார் 9 மணியளவில் சாப்பிட்டு விட்டு, தனது தாயிடம் மனைவியை பார்க்க செல்வதாக கூறி விட்டு வந்துள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் தனது வீட்டிற்கு செல்லவில்லை.

    இதனால் அவருடைய பெற்றோர்கள் மனைவி வீட்டில் இருப்பதாகவும், மனைவியோ கணவர் பெற்றோர் வீட்டில் இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு இரவில் யாரும் ஆகாஷை தேடவில்லை. இன்று அதிகாலை புங்கனூர் பெரிய ஏரிக்கு அருகில் உள்ள வயல் வெளியில் முகம் மற்றும் கை, கால்களில் காயங்களுடன் ஆகாஷ் பிணமாக கிடந்தார்.

    குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலை சுற்றிப்பார்க்க வந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி, வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுபற்றி உடனடியாக புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரனுக்கு தகவல் கொடுத்தார். அவர் சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட ஆகாஷின் உச்சந்தலையில் கொலையாளிகள் ஸ்குரு டிரைவர் அல்லது கத்தரிக் கோலால் அடித்து இறக்கியுள்ளனர்.

    சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த ஆகாஷின் பெற்றோர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி கதறி அழுதனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பரவாசுதேவன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    ஆகாஷ் யாரால், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாகவே உள்ளது. குடிப்பழகத்திற்கு அடிமையான அவர் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த போதிலும் அவரது வீட்டிற்கு சென்று வருவது தொடர்பாக யாராவது அவரை கொலை செய்தார்களா அல்லது வேறு பெண் பிரச்சினையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் முதற்கட்ட விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர்.

    மேலும் கடந்த 7-ந்தேதி தற்போது சம்பவம் நடந்த பகுதியிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த சுள்ளமணிகரையில் மலை கொழுந்தன் என்பவரது மனைவி அக்கம்மாள் நகைக்காக கொல்லப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே மற்றொரு கொலை சம்பவம் கொடூரமாக அரங்கேறி இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.

    ×