search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் கம்ப்யூட்டர்கள்"

    தனியாருக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களை உளவு பார்க்க அரசின் சில துறைகளுக்கு அதிகாரமளித்த நடவடிக்கையை எதிர்த்த வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #SCnotice #PIL
    புதுடெல்லி:

    உளவு அமைப்புகளான உளவுத்துறை (ஐ.பி.), போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை பொருளாதார அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம், வருவாய் உளவுத்துறை, சி.பி.ஐ., தேசிய விசாரணை முகமை, ‘ரா’ உளவு அமைப்பு, சிக்னல் உளவுத்துறை, டெல்லி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் ஆகிய 10 அமைப்புகளுக்கு கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம்  20-12-2018  அன்று அறிவிக்கை வெளியிட்டது.

    மத்திய உள்துறை வழங்கிய இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

    இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை கைபேசிகளுக்கும் பொருந்தும் வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை அடிப்படையான தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் 25-12-2018 அன்று பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தில் அரசியல் எதிரிகள், சிந்தனையாளர்கள் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் ஆகியோரை கண்டறிந்து பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உளவுபார்க்கும் ஆளும்கட்சியின் இந்த சர்வாதிகார நடவடிக்கை நாட்டில் நெருக்கடி நிலையை பிறப்பிப்பதற்கு ஒப்பான ஜனநாயக படுகொலையாகும்.

    எனவே, இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கை சட்டத்துக்கு விரோதமானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று இந்த நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த உத்தரவின் அடிப்படையில் தனிநபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் விசாரணை அமைப்புகள் கிரிமினல் நடவடிக்கைகளை எடுக்க தடை விதிக்கவும் அவர் வலியுறுத்தினார்.



    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்குவந்தது. இவ்விவகாரத்தில் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. #SC #SCnotice #PIL 
    ×