search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பொருட்காட்சி"

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 48-வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    இந்த பொருட்காட்சியில், 51 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவை தவிர கடைகள், பொழுதுபோக்கு வளாகம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றி ருந்தன. அரசு பள்ளி மாண வர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தினந்தோறும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக சென்று சுற்றுலா பொருட்காட்சியை கண்டு களித்தனர். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சுற்றுலா பொருட்காட்சி நேற்று முடிவடைந்தது. இந்த பொருட்காட்சியை மொத்தம் 5.86 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இவர்களில் 4,91,361 பேர் பெரியவர்கள், 94,637 பேர் குழந்தைகள் ஆவர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடப்பதால் கடந்த வாரம் பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது. சிறந்த அரங்குக்கான விருது ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பொருட்காட்சியில் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 30 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
    • 2020-ம் ஆண்டு வருகையை ஒப்பிட்ட போது, ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பார்வையிட்டுள்ளனர்.

    சென்னை :

    சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி 4-ந்தேதி தொடங்கிய 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நேற்று நிறைவு பெற்றது. இதன் நிறைவு விழா நேற்று இரவு நடந்தது. இதில் சிறந்த அரங்கம் அமைத்த அரசு துறையினருக்கு அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

    அந்தவகையில் அரங்கம் அமைப்பில் ஓட்டு மொத்தமாக சிறந்து விளங்கியதற்காக காவல்துறைக்கும், தமிழ்நாடு அரசுத்துறைகளில் சிறப்பான அரங்கம் அமைப்பிற்கு முதல் பரிசு பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறைக்கும், 2-ம் பரிசு உயர்கல்வித்துறைக்கும், 3-ம் பரிசு சிறைத்துறைக்கும் வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியம், தெற்கு ரெயில்வே, மெட்ரோ ரெயில் நிறுவனம் உள்ளிட்ட சிறப்பாக அரங்கம் அமைத்த மத்திய அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி கடந்த ஜனவரி 4-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் மாநில அரசுத் துறைகளின் 27 அரங்கங்களும், 21 பொதுத்துறை நிறுவன அரங்கங்களும், மத்திய அரசின் இரண்டு துறைகளின் அரங்கங்களும் பிற மாநில அரசின் ஒரு அரங்கமும் பொருட்காட்சியில் பங்கேற்றன. அரசின் ஆக்கபூர்வ பணிகளையும் மக்கள் நலனுக்காக செயல்படுத்தும் புதிய திட்டங்களையும் எளிதில் புரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன.

    பொருட்காட்சியில் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 30 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இப்பொருட்காட்சியில் 110 சிறிய கடைகளும், 30 பெரிய அரங்கங்களும் 15-க்கும் மேற்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் காணக் கிடைத்தன. பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய் வீடு 3 டி தியேட்டர் போன்ற காட்சிகள் கண்காட்சியில் களை கட்டின.

    டெல்லி அப்பளம் உள்ளிட்ட உணவு வகைகளும் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இதுவரை பார்த்திராத விளையாடி மகிழ்ந்திட 32-க்கும் மேற்பட்ட விளையாட்டுச் சாதனங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு வளாகமும் இங்கே இடம்பெற்று இருந்தது. சிறுவர் ரெயில், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் இளையோரைச் சுண்டி இழுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டு ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

    8 லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் பார்த்து சென்றுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு வருகையை ஒப்பிட்ட போது, ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பார்வையிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவருமான டாக்டர் பி.சந்தரமோகன், சுற்றுலா இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்தீப் நந்தூரி, சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • தீவுத்திடலில் பொருட்காட்சி நடந்து வருகிறது.
    • 1,47,205 குழந்தைகள் என மொத்தம் 7,96,584 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு நடைபெறும் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் 64 வது நாளான நேற்று வரை 64 நாட்களிலும் சேர்த்து 6,49,379 பெரியவர்கள், 1,47,205 குழந்தைகள் என மொத்தம் 7,96,584 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.

    2019-ம் ஆண்டில் 64 நாட்களில் பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை 6,08,502 ஆகும். 2020-ம் ஆண்டில் 64 நாட்களில் பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை 6,83,603 ஆகும்.

    2023-ம் ஆண்டில் 64 நாட்களில் பார்வையிட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை-7,96,584 ஆக உயர்ந்துள்ளது.

    • சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி நடந்து வருகிறது.
    • இந்த கண்காட்சி 70 நாட்கள் நடைபெற உள்ளது.

    சென்னை :

    சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனருமான சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் பல்வேறு திட்டங்களின் செயல் மாதிரிகளுடன் அரசு துறைகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர 125 சிறிய கடைகள் மற்றும் 60 தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல்வேறு விளையாட்டுகளுடன் கூடிய பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் ரெயில், பனிக்கட்டி உலகம். மீன் காட்சியகம், பேய் வீடு, பறவைகள் காட்சி, 3டி தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்காட்சி மூலமாக நேரடியாக சுமார் 5 ஆயிரம் பேரும், மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த 13-ந்தேதியுடன் (38 நாட்களில்) பொருட்காட்சிக்கு 4,89,669 பெரியவர்கள், 1,12,905 குழந்தைகள் என மொத்தம் 6 லட்சத்து 2 ஆயிரத்து 574 பேர் வந்துள்ளனர். 2019-ம் ஆண்டில் 38 நாட்களில் 4.76 லட்சம் பேரும், 2020-ம் ஆண்டில் 5.31 லட்சம் பேரும் பார்வையிட்டிருந்தனர்.

    இந்த பொருட்காட்சியில் சுற்றுலாத்துறை அரங்கில் மெய்நிகர் காட்சி (விர்சுவல் ரியாலிட்டி) முறையில் யுனெஸ்கோவால் உலக புராதன சின்னங்களக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி மலை ரெயில், தாராசுரம் கோவில் ஆகியவை படமாக்கப்பட்டுள்ளன.

    மெய்நிகர் காட்சி (விர்சுவல் ரியாலிட்டி) என்ற சிறப்பு பிரத்யோக சாதனத்தின் மூலம் இந்த இடங்களின் புகைப்படங்கள் பார்வையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டு வருகிறது.

    70 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வ பணிகளையும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 60 தனியார் அரங்குகள், 125 கடைகள் இடம் பெற்றுள்ளன.
    • சுகாதாரத்துறை கொரோனாவை வென்றதை அதன் வடிவத்துடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

    பொழுது போகலையே... எங்கே போகலாமுன்னு யோசிக்கிறீங்களா...?

    வாங்க போகலாம்...

    தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியாச்சு.

    அரசின் மக்கள் நலதிட்டங்களை மக்கள் எளிதில் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் அரசின் பல்வேறு துறைசார்ந்த காட்சி அரங்கங்கள் கண்ணை கவரும் வகையிலும், சிந்தனையை தூண்டும் வகையிலும் இடம்பெற்றுள்ளன.

    இத்தனை துறைகள் இவ்வளவு நல்ல காரியங்களை மக்களுக்கு செய்கிறதா என்பதை தெரிந்துகொள்ளவும் முடிவும்.

    இந்த திட்டத்தில் நாமும் பயன்பெற முடியும் என்பது தெரிந்தால் அணுகி பயன்பெறவும் முடியும். இவ்வளவுதானா... இதில் எப்படி பொழுதுபோகும்? பொழுது போக்குன்னா பார்க்க... ரசிக்க... ருசிக்க... வாங்க... என்று எல்லாம் வேண்டாமா என்று யோசிப்பது புரிகிறது.

    சுற்றுலா பொருட்காட்சியாச்சே அதெல்லாம் இல்லாமல் இருக்குமா? 60 தனியார் அரங்குகள், 125 கடைகள் இடம் பெற்றுள்ளன.

    தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள சிறப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பல பகுதிகளிலும் கிடக்கும் பலவகையான பொருட்களை பார்க்கவும் முடியும், வாங்கவும் முடியும்.

    கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடுவதைபோல் ஓடினாலும் நேரம் பத்தாது என்பதுதான் சென்னை நகர வாழ்க்கை. இதில் வெளியூர்களை எல்லாம் சென்று பார்க்க ஏது நேரம்? என்று மனதில் புழுங்கி கொண்டிருப்பவர்களுக்கு பார்த்து மகிழ நல்ல வாய்ப்பு.

    தமிழ்நாட்டின் சிறந்த கலாச்சாரம், கலை, கட்டிடக்கலை, பாரம்பரியம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பிற சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார்கள்.

    சுகாதாரத்துறை கொரோனாவை வென்றதை அதன் வடிவத்துடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதன் கீழ் சித்த மருத்துவத்துறை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மூலிகைச்செடிகளை அதன் பெயர்களுடன் வைத்துள்ளார்கள். இதை வீடுகளிலும் வளர்த்து பயன்பெற முடியும் என்று விளக்கப்படுகிறது.

    சென்னையின் அடையாளத்தை மாற்றிய மெட்ரோ ரெயில் திட்ட காட்சிகளும் கவர்கிறது. இவைகளை கடந்து மறுபக்கம் சென்றால் சூடான பஜ்ஜி, விதவிதமான நொறுக்கு தீனிகளை வாங்கி ருசிக்கலாம். பாக்கெட்டில் பணம் இருந்தால் போதும்.

    அங்கிருந்து நகர்ந்தால் அந்தரத்தில் சாகசம் செய்வது போல் சுழலும் ராட்சத ராட்டினங்கள், சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள், சிறுவர் ரெயில், பனிக்கட்டி உலகம், மீன்காட்சியகம், பேய்வீடு என ஒவ்வொன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

    ஆடி, அமர அமர்ந்து பார்த்து ரசிக்க 3டி காட்சி தியேட்டர், ஓட்டல் என ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் ரசனைக்கும் தீனிபோடும் வகையில் இடம்பெற்றுள்ளது. பொழுது போகுமா என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தவர்கள். எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் ஒருநாள் வரவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வரவழைக்கும்.

    டிரைவ் இன் ஓட்டலுக்காக அங்கும் இங்கும் அலைய வேண்டாம். அதுவும் இங்கே உண்டு. காரிலேயே அமர்ந்து உண்டு மகிழலாம்.

    தமிழகத்தின் மிக முக்கியமான அடையாளங்களான மகாபலிபுரம் சிற்பம், வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை ஆகிய சிற்பங்கள் 3-ன் வழியாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

    நிஜத்திலும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து தமிழ்நாட்டையே பார்த்து ரசித்து மகிழ்ந்த உணர்வோடு திரும்பலாம்.

    • இந்திய நாட்டியத் திருவிழா தினமும் நடத்தப்பட உள்ளது
    • இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது.

    சென்னை :

    இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் போனது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு 47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடைபெறுகிறது.

    இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதிமாறன் எம்.பி., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருமான டாக்டர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடக்க நிகழ்வாக, கண்காட்சியின் நுழைவுவாயில் பகுதியில் திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பின்னர், தீவுத்திடல் வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள டிரைவ்-இன் ரெஸ்டாரன்ட், டிரைவ்-இன் தியேட்டரும் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேடையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

    இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது. சுற்றுலா பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசுத் துறையும் செயல்படுத்தும் திட்டங்கள், அவற்றின் மூலம் மக்கள் பெறும் பயன்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

    இதுதவிர, 60 தனியார் அரங்குகளும், 125 சிறிய கடைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொழுது போக்கு விளையாட்டு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலா பொருட்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    சிறுவர்களுக்கு ரெயில், பனிக்கட்டி உலகம், மீன் காட்சியகம், பேய்வீடு, 3டி தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுவது போல, சென்னை தீவுத்திடலில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திய நாட்டியத் திருவிழா தினமும் நடத்தப்பட உள்ளது என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

    • பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள், தின்பண்டங்கள், ஓட்டல்கள் ஏராளம் இடம் பெறுகின்றன.
    • 70 நாட்கள் பொருட்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்டினங்கள், பொருட்கள் வாங்குவதற்கு உரிய கடைகள், தின்பண்டங்கள், ஓட்டல்கள் ஏராளம் இடம் பெறுகின்றன.

    இது தவிர அரசுத்துறை அரங்கங்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல் விளக்க அரங்கங்கள், மத்திய அரசின் நிறுவனங்கள், எரிசக்தி துறை அரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் இடம் பெறுகிறது.

    அரசின் புதிய திட்டங்கள் வளர்ச்சி பணிகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்படுகிறது.

    இந்த பொருட்காட்சியில் மக்களை கவரும் வகையில் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பிடித்த பல்வேறு விளையாட்டு அம்சங்களும் இதில் இடம் பெறுகிறது. பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

    70 நாட்கள் பொருட்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொருட்காட்சியை நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.

    • பொருட்காட்சியின் நுழைவுவாயில் தமிழக பண்பாடு, கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்படும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து விழாவை நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    கடைசியாக 2019-ம் ஆண்டு பொருட்காட்சி நடந்தது. கொரோனா தொற்று பாதிப்பால் 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியை நடத்த சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அனைத்து முன் ஏற்பாடுகளையும் இப்போதே தொடங்கி விட்டது. 60 நாட்கள் இப்பொருட்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி டெண்டர் திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பொருட்காட்சிக்கான மற்ற பணிகள் தொடங்கும்.

    மத்திய, மாநில அரசு துறை அரங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. 2 வருடத்திற்கு பிறகு தீவுத்திடலில் பொருட்காட்சி நடைபெறுவதால் பல்வேறு சிறப்புகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பொருட்காட்சியின் நுழைவுவாயில் தமிழக பண்பாடு, கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்படும். நுழைவு வாசலுக்கான அனுமதி முதலமைச்சரிடம் இருந்து பெறப்படுகிறது. கலைநயத்துடன் அமையப்பெறும் நுழைவு பகுதி அனைவரையும் கவரும் வகையில் இடம் பெற வேண்டும் என்பதில் சுற்றுலாத்துறை உறுதியாக உள்ளது.

    பொருட்காட்சியில் வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர்களை கவரும் வகையில் மேலும் பல புதிய விளையாட்டு சாதனங்களை அமைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. ராட்சத ராட்டினங்கள், சிறுவர் ரெயில் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இடம்பெற உள்ளன.

    தமிழக அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த அரங்குகள் அதிகளவில் இடம் பெறுகின்றன. கடந்த 18 மாதங்களில் அரசு செயல்படுத்திய சிறப்பு திட்டங்கள் பொதுமக்க ளுக்கு தெரியும் வகையில் அரசின் அரங்குகள் இடம் பெற உள்ளன.

    சுற்றுலா பொருட்காட்சி இந்த ஆண்டு தாமதம் இல்லாமல் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் தொடங்கப்படுகிறது.

    அதாவது டிசம்பர் 25-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் பொருட்காட்சியை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து விழாவை நடத்தவும் சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கும். டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து தீவுத்திடலை சமன்படுத்தும் பணி, நடைபெறும் என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • டிசம்பர் 2-வது வாரம் தொடங்குகிறது.
    • இந்த பொருட்காட்சி மார்ச் மாதம் வரை 70 நாட்கள் நடைபெறும்.

    சென்னை :

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி அடுத்த மாதம் (டிசம்பர்) 2-வது வாரம் தொடங்குகிறது.

    இந்த பொருட்காட்சி மார்ச் மாதம் வரை 70 நாட்கள் நடைபெறும்.

    இதற்கென அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

    கண்காட்சியின்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

    ×