search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி- அரையாண்டு விடுமுறையில் திறக்க ஏற்பாடு தீவிரம்
    X

    சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி- அரையாண்டு விடுமுறையில் திறக்க ஏற்பாடு தீவிரம்

    • பொருட்காட்சியின் நுழைவுவாயில் தமிழக பண்பாடு, கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்படும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து விழாவை நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    கடைசியாக 2019-ம் ஆண்டு பொருட்காட்சி நடந்தது. கொரோனா தொற்று பாதிப்பால் 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியை நடத்த சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அனைத்து முன் ஏற்பாடுகளையும் இப்போதே தொடங்கி விட்டது. 60 நாட்கள் இப்பொருட்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி டெண்டர் திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பொருட்காட்சிக்கான மற்ற பணிகள் தொடங்கும்.

    மத்திய, மாநில அரசு துறை அரங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. 2 வருடத்திற்கு பிறகு தீவுத்திடலில் பொருட்காட்சி நடைபெறுவதால் பல்வேறு சிறப்புகளுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    பொருட்காட்சியின் நுழைவுவாயில் தமிழக பண்பாடு, கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்படும். நுழைவு வாசலுக்கான அனுமதி முதலமைச்சரிடம் இருந்து பெறப்படுகிறது. கலைநயத்துடன் அமையப்பெறும் நுழைவு பகுதி அனைவரையும் கவரும் வகையில் இடம் பெற வேண்டும் என்பதில் சுற்றுலாத்துறை உறுதியாக உள்ளது.

    பொருட்காட்சியில் வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர்களை கவரும் வகையில் மேலும் பல புதிய விளையாட்டு சாதனங்களை அமைக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. ராட்சத ராட்டினங்கள், சிறுவர் ரெயில் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைய இடம்பெற உள்ளன.

    தமிழக அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த அரங்குகள் அதிகளவில் இடம் பெறுகின்றன. கடந்த 18 மாதங்களில் அரசு செயல்படுத்திய சிறப்பு திட்டங்கள் பொதுமக்க ளுக்கு தெரியும் வகையில் அரசின் அரங்குகள் இடம் பெற உள்ளன.

    சுற்றுலா பொருட்காட்சி இந்த ஆண்டு தாமதம் இல்லாமல் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் தொடங்கப்படுகிறது.

    அதாவது டிசம்பர் 25-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் பொருட்காட்சியை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்து விழாவை நடத்தவும் சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கும். டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து தீவுத்திடலை சமன்படுத்தும் பணி, நடைபெறும் என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×