search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுத்தாம்டன் டெஸ்ட்"

    சவுத்தாம்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. INDvsENG
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.

    புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் வழக்கம் போல கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சற்றே பிரகாசமாக தெரிந்தது.

    ஆனால் தேனீர் இடைவேளைக்கு இரண்டு ஓவர்கள் முன் மோயின் அலி வீசிய பந்தை கோலி தடுப்பாட்டம் ஆட முயற்சிக்க பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் இருந்த குக் வசம் சென்றது. இதனால், 58 ரன்களுக்கு விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.



    அடுத்து களமிறங்கிய பாண்டியா வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் சிறிது நேரம் அதிரடி காட்டிய ரிஷப் பந்த் 12 பந்துகளில் 18 ரன்கள் அடித்த நிலையில் மொயின் அலியின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்து வெளியேறினார்.

    பின்னர் களமிறங்கிய இஷாந்த் ஷர்மா 0, ஷமி 8, அஷ்வின் 24 அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 69.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    அதிகபட்சமாக கோலி 58 ரன்கள், ரகானே 51 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெடுக்களையும், ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

    இதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது. INDvsENG
    சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது. #INDvsENG
    லண்டன் :

    இங்கிலாந்து இந்தியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி புஜாராவின் அபார சதத்தால் 273 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. நேற்றய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் குக் 12 ரன்கள், மொயின் அலி 9 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    பின்னர் சற்று பொருமையுடன் விளையாடிய ஜென்னிங்ஸ் மற்றும் ஜோ ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. 36 ரன்கள் எடுத்திருந்த ஜென்னிங்ஸ் முகமது ஷமி வீசிய பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பெய்ர்ஸ்டோ முதல் பந்திலேயே ஷமியின் வேகத்தில் ஸ்டெம்புகள் தெரிக்க ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

    இவர்களை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 48 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், 122 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து பரிதவித்தது.



    அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 6-வது விக்கெட்டுக்கு பட்லருடன் ஜோடி சேர்ந்து வழக்கம் போல இந்திய பந்து வீச்சாளர்களின் விக்கெட் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டு சீரான வேகத்தில் ரன்களை குவித்து வருகின்றனர்.

    இன்றைய ஆட்டத்தின் தேனீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 156 ரன்கள் குவித்து இந்தியாவை விட 127 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பட்லர் 22 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா மற்றும் பூம்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். #INDvsENG
    சவுத்தாம்டன் டெஸ்டின் இரண்டாம் நாளில் விராட் கோலி, புஜாரா ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுக்களை இழந்து 100 ரன்கள் குவித்துள்ளது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக வீசி இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினர். இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அதன்பின் மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த குர்ரன் இந்திய வீரர்களில் விக்கெட் வேட்டைக்கு தடை போட்டார். இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி 40 ரன்னில் வெளியேறினார். இறுதியில், குர்ரன் 78 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் நாளில் 4 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ராகுல் 11 ரன்னுடனும், தவான் 3 ரன்னுடனும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினார்கள். ராகுல் மேற்கொண்டு 8 ரன்களே சேர்த்து 19 ரன்களில் பிராட் வீசிய பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    அடுத்ததாக ஆட்டத்தின் 17-வது ஓவரில் ஷிகர் தவானும் பிராட் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்து தடுமாறியது.



    3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாராவும், விராட் கோலியும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை இருவரும் கணித்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், இந்திய அணி உணவு இடைவேளை வரை 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்கள் இழந்துள்ளது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட இந்தியா 146 ரன்கள் பிந்தங்கியுள்ளது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். #INDvsENG
    சவுத்தாம்டனில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் குக் மற்றும் ஜென்னிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆட்டத்தில் இரண்டாவது ஓவரை வீசிய பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முதல் பந்திலேயே தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, கேப்டன் ரூட்டை 4 ரன்களில் வெளியேற்றிய இஷாந்த் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை படைத்தார். இதில், கபில் தேவ் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பேய்ர்ஸ்டோ 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய குக் 18வது ஓவரில் பாண்டியா வீசிய பந்தில் மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஆட்டத்தின் 26-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பட்லரும், 34-வது ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்சும் ஷமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால், 86 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து திணறியது

    பின்னர் ஜோடி சேர்ந்த மொயின் அலி மற்றும் குர்ரன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மொயின் அலி 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஷ்வின் தனது சுழலில் அவரை வீழ்த்தினார். 7-வது விக்கெட்டுக்கு மொயின் அலியும், குர்ரனும் இணைந்து 81-ரன்கள் சேர்த்தனர்.



    அடில் ரஷித் 6, பிராட் 17 என அடுத்தடுத்த விக்கெட்டுக்கள் சரிந்தாலும் மறுமுனையில் சாம் குர்ரன் நிலைத்து நின்று விளையாடினார், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு போக்கு காட்டிய அவர் இறுதியில் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஷ்வின் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.

    கடைசியில் 76.4 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பூம்ரா 3 விக்கெட்டுக்கள், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், பாண்டியா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் வீழ்த்தினர். #INDvsENG
    சவுத்தாம்டனில் இன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருவதால் 171 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணி திணறி வருகிறது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று  தொடங்கியது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தவித்து வருகிறது. பூம்ரா தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆட்டத்தில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ் ஆட்டமிழந்தார்.

    இதைத் தொடர்ந்து கேப்டன் ரூட் 4 ரன்களில் இஷாந்த் சர்மா ஓவரில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகலில் 250 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3-வது வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இஷாந்த் சர்மா படைத்தார்.

    இதைத்தொடர்ந்து பேய்ர்ஸ்டோ 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய குக் 18வது ஓவரில் மூன்றாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லரும், பென் ஸ்டோக்சும் இந்திய பந்துவீச்சாளர்களின் உத்திகளை கணித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் ஆட்டத்தின் 26-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பட்லரும், 34-வது ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்சும் ஷமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

    சிறப்பாக விளையாடிய மொயின் அலியை தனது சுழலில் வீழ்த்தினார் அஷ்வின், அவர் 40 ரன்கள் எடுத்திருந்தார். 7-வது விக்கெட்டுக்கு மொயின் அலியும், குர்ரனும் இணைந்து 81-ரன்கள் சேர்த்தனர்.

    இதனால் 61 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ரன்களுடன் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. சாம் குர்ரன் 37 ரன்களுடனும், ரஷித் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி தரப்பில் பூம்ரா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுக்களையும், பாண்டியா, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். #INDvsENG
    சவுத்தாம்டனில் இன்று தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    தொடர்ந்து, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது.

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா தரப்பில் 3-வது டெஸ்டில் விளையாடிய அணியே மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இந்த போட்டியிலும் களம் இறங்குகிறது. கடந்த போட்டியில் காயம் அடைந்த அஸ்வின் குணமடைந்துவிட்டதாக கூறிய கோலி கடந்த போட்டியை போலவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் காயம் காரணமாக வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக இளம் வீரர் சாம் குர்ரன் மற்றும் மொயின் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கேப்டன் ஜோ ரூட் தெரிவித்தார்.

    இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். முடியாத பட்சத்தில் ‘டிரா’ செய்ய முயற்சிப்பர். இங்கிலாந்தும் வெற்றி பெற முடியாவிட்டாலும் அந்த அணி ‘டிரா’ செய்தால் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே, இந்த டெஸ்டில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. #INDvsENG
    ×