search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை"

    கேரளாவில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜலந்தர் பிராங்கோ முல்லக்கல் இன்று போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். #JalandharBishop #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் (வயது 54) என்பவர் மீது பாலியல் புகார் கூறி உள்ளார்.

    இதுபற்றி அவர் குருவிலங்காடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். அந்த புகாரில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2016-ம் ஆண்டு வரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

    தன் மீதான பாலியல் புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு அவர் கேட்ட சலுகைகளை தான் செய்து கொடுக்காததால் தன்னை மிரட்டுவதற்காக பொய் புகார் கூறி உள்ளதாக தெரிவித்தார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு இன்று (19-ந்தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார்கள். இதை ஏற்றுக்கொண்ட பி‌ஷப் தனது பொறுப்புகளை மூத்த பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணைக்கு ஆஜராக நேற்றே அவர் கேரளா வந்து விட்டதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் இன்று காலை வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவும் கோட்டயத்தில் முகாமிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கர் கூறும்போது பி‌ஷப்பிடம் விசாரணை நடத்திய பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்றார். இன்றைய விசாரணையின் போது பி‌ஷப்பிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பற்றி போலீசார் கொச்சி சரக ஐ.ஜி. விஜய்சகோராவிடமும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் சார்பில் நேற்று கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 25-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால் 25-ந்தேதி வரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    பி‌ஷப்பை கைது செய்ய கோரி கொச்சியில் நடைபெறும் தொடர் போராட்டம் இன்று 13-வது நாளை எட்டி உள்ளது. இந்த போராட்டத்தில் 5 கன்னியாஸ்திரிகளும் பங்கேற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரியும் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பி‌ஷப்பை கைது செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.

    இன்று போராட்டம் நடைபெறும் இடத்திலும் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.   #JalandharBishop #FrancoMulakkal
    கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக கருத்து கேட்ட பத்திரிகையாளரிடம் எரிந்து விழுந்ததற்காக நடிகர் மோகன் லால் மன்னிப்பு கேட்டார். #Mohanlalapologises #Mohanlaljourno
    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான மோகன் லால் விஸ்வசாந்தி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். 

    கேரள மாநிலத்தில் பல்வேறு சமூகநலச் சேவைகளில் விஸ்வசாந்தி அறக்கட்டளையின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்களுக்கான புதிய மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தை புனரமைப்பதற்காக  வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் பங்கேற்கும் வட்டமேஜை கருத்தரங்கம் ஒன்றுக்கும் மோகன் லால் ஏற்பாடு செய்தார்.

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு பொருட்களை அனுப்புவது தொடர்பாக நேற்று விஸ்வசாந்தி அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு மோகன் லால் பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது, கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் எரிச்சல் அடைந்த மோகன் லால் அந்த செய்தியாளரை கடிந்து கொண்டார்.

    வெள்ள நிவாரண உதவி செய்வது தொடர்பான உன்னத நோக்கம் பற்றி பேசி கொண்டிருக்கும்போது, இதைப்போன்ற அவசியமற்ற கேள்விகளை கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? வெள்ள நிவாரணத்துக்கும் கன்னியாஸ்திரி புகாருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று மோகன் லால் எதிர் கேள்வி கேட்டார். 

    இந்த விவகாரம் செய்தியாக வெளியானதும் சமூக வலைத்தளங்களில் மோகன் லாலுக்கு எதிராக பலர் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டனர். 
        
    இதைதொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மோகன் லால் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று விளக்கம் அளித்துள்ளார். சமயம் அறியாமல் அந்த பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி தன்னை கோபப்படுத்தியதாக அவர் குறிப்பிடுள்ளார்.

    ‘அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி கேரள மாநிலத்தில் தற்போது மிகுந்த பரபரப்புக்குள்ளான ஒரு விவகாரம் தொடர்பானதுதான். ஆனால், அப்போது அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையில் நான் இல்லை. நான் வேறொரு மனநிலையில் இருந்ததால் நிருபருக்கு அப்படி பதில் அளிக்க நேர்ந்தது.

    ஒரு நிறுவனத்தையோ, பத்திரிகையாளர்களையோ, தனிநபரையோ அவமதிக்கும் வகையில் நான் அப்படி பதில் அளிக்கவில்லை. எனது பதிலால் அந்த கேள்வியை எழுப்பியவரின் மனம் காயப்பட்டிருந்தால், தயவு செய்து என்னை உங்களது மூத்த சகோதரராக நினைத்து எனது மன்னிப்பை ஏற்குமாறு கேட்டு கொள்கிறேன்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Mohanlalapologises #Mohanlaljourno
    பாலியல் புகாரில் சிக்கிய ஆயர் பிராங்கோ முல்லக்கல் ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. #FrancoMulakkal
    புதுடெல்லி:

    கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காடு கன்னியர் மடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிராங்கோ முல்லக்கல் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இப்புகார் தொடர்பாக கோட்டயம் போலீசார் ஜலந்தர் சென்று ஆயர் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை நடத்தினர். மேலும் வருகிற 19-ந்தேதி அவர், கோட்டயம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    இதற்கிடையே கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகன் தலையிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்தது.

    கேரளாவில் இருந்து ஏராளமானோர் இது தொடர்பாக போப் ஆண்டவருக்கும் புகார்கள் அனுப்பினர். இதையடுத்து வாடிகன் தலைமையகம் இப்புகார் குறித்து விசாரணை நடத்தியது.

    இதற்கிடையே புகாருக்கு ஆளான ஆயர் பிராங்கோ முல்லக்கல் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அதே நேரம் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராவேன் என்றும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அவர், ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

    அதில், ஆயர் பிராங்கோ முல்லக்கல், மறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகி உள்ளார். அவருக்கு பதில் 3 பேர் கொண்ட கமிட்டி நிர்வாகப்பொறுப்பை மேற்கொள்ளும். நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகினாலும் அவர், ஆயராக தொடர்வார்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த கடிதம் ஜலந்தர் மறை மாவட்ட பாதிரியார்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஜலந்தர் ஆயர் பிராங்கோ முல்லக்கல் பதவி விலகி இருக்கும் தகவல் கொச்சியில் போராட்டம் நடத்தி வரும் கன்னியாஸ்திரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

    அதே நேரம் ஆயர் பிராங்கோ முல்லக்கல் கைதாகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்.  #FrancoMulakkal

    கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கன்னியாஸ்திரி கற்பழிப்பு விவகாரத்தில் வரும் 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. #keralanunrape #Keralapolicesummon #BishopFrancoMullakal
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
     
    கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னியாஸ்திரிகளை படத்தில் காணலாம்.

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இன்று கருத்து தெரிவித்த கேரள மந்திரி ஈ.பி.ஜெயராஜன், உரிய சாட்சியங்களுடன் குற்றம்சாட்டப்பட்டவரின் மீது இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளதால் வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகும்படி பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜி.  விஜய் ஷக்காரே தெரிவித்துள்ளார். #keralanunrape #Keralapolicesummon #BishopFrancoMullakal 
    ஜலந்தர் பி‌ஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமான வாடிகனில் உள்ள போப் ஆண்டவரின் அலுவலகத்திற்கு புகார் கடிதம் ஒன்று எழுதி உள்ளார். #Jalandharbishop
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செயல்படும் சீரோ மலபார் சபையின் கீழ் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் ஒரு சபை செயல்பட்டு வருகிறது. இதன் பி‌ஷப்பாக இருப்பவர் பிராங்கோ முல்லக்கல்.

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் குருவிலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். கோட்டயத்திற்கு அந்த பி‌ஷப் வந்தபோது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர், போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரள தனிப்படை போலீசார் ஜலந்தர் சென்று பி‌ஷப்பிடம் இந்த புகார் பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதனால் பாலியல் புகார் கூறப்பட்ட பி‌ஷப் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் பி‌ஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமான வாடிகனில் உள்ள போப் ஆண்டவரின் அலுவலகத்திற்கு இது தொடர்பாக புகார் கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

    எனது சிறு வயது முதல் சபையை தாய்க்கு சமமாக பாவிக்கவே கற்பிக்கப்பட்டேன். ஆனால் அனுபவ ரீதியாக இங்கு பெண்கள் சிற்றன்னை தனமாகதான் நடத்தப்படுகின்றனர். என்னை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி நான், ஏற்கனவே உங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்.

    ஆனால் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போலீசில் புகார் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தனக்கு தேவைப்படும் கன்னியாஸ்திரிகளை நிர்பந்தப்படுத்தியோ அவர்களது பலவீனத்தை பயன்படுத்தியோ பி‌ஷப், தனது ஆசைக்கு இணங்க வைப்பது வழக்கம். அவர் ஏராளமான கன்னியாஸ்திரிகளிடம் தவறாக நடந்துள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் பி‌ஷப்பின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாக 20-க்கும் அதிகமான கன்னியாஸ்திரிகள் சபையில் இருந்து வெளியேறி உள்ளனர். பி‌ஷப்பால் பலமுறை நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோதும், அதை உடனே வெளியே சொல்லாததற்கு மிகுந்த பயமும், அவமானமும் தான் காரணம். எனது குடும்பத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் இருந்தது.

    நான் இழந்ததை வாடிகனால் திருப்பித்தர முடியுமா? பி‌ஷப்பால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு உடனே சபையில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். ஆனால் சபை மூத்தவர்கள் நிர்ப்பந்தம் காரணமாக நான் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

    பி‌ஷப் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெறும்படி பலரும் என்னை மிரட்டுகிறார்கள். பணம், அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் இருந்து பி‌ஷப் தப்ப முயற்சி செய்கிறார். சபையில் பெண்களுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும் நீதியை உறுதிப்படுத்தும் சட்டம் ஏதாவது உண்டா? அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பயந்து பாதிப்பு குறித்து வெளியே சொல்லாமல் பயந்து வாழும் கன்னியாஸ்திரிகள் பலர் உள்ளனர். இவைகளை சபை கண்டு கொள்ளாமல் இருந்து அதன் மீதான மக்களின் நம்பிக்கை அழிந்து விடும்.

    எனவே பிராங்கோவை பி‌ஷப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதற்கிடையில் தன் மீது கூறப்பட்டுள்ள புகாரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த புகார் ஆதாரமற்றவை என்றும், அது தொடர்பான விசாரணையை சந்திக்க தான் தயாராக உள்ளேன். என் மீது களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. என்னை நிர்ப்பந்தப்படுத்தவும் முயற்சி செய்கிறார்கள். அந்த கன்னியாஸ்திரி என்னிடம் பல தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். அது நடக்காததால் தற்போது எனது மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பொய் புகார் கூறி உள்ளார்.

    குற்றம் நடந்ததா? என்பது புகார் தெரிவித்தவர், நான், கடவுள் ஆகிய 3 பேருக்குதான் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரியின் சகோதரரும் பி‌ஷப் மீது பல குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அவர் கூறும்போது, பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தான் குற்றமற்றவர் என்று கூறுவது பொய். அவர் செய்த தவறை வெளியே கூறாமல் இருக்க ரூ.5 கோடி பணம் மற்றும் 10 ஏக்கர் நிலம் தருவதாக பேரம் பேசினார்கள். இதையும் நாங்கள் போலீசில் தெரிவித்துள்ளோம் என்றார்.

    இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கி உள்ள பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த போராட்டத்தில் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த 4 கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டுள்ளதால் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று 4-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் பி‌ஷப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி உள்ளனர். அதில் பி‌ஷப்பை உடனே கைது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

    இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பி‌ஷப்பை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர். #Jalandharbishop

    கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஜலந்தர் பி‌ஷப்பிடம் தனிப்படை போலீசார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். #Jalandharbishop #Nun
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பி‌ஷப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என போலீசில் புகார் அளித்தார்.

    புகாரில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை குருவிலாங்காடு கன்னியர் மடத்தின் விருந்தினர் இல்லத்தில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறி இருந்தார்.

    இதன் பேரில் கோட்டயம் போலீசார் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த கன்னியர் மடத்திற்கு சென்று விசாரணையும் நடத்தினர்.

    கன்னியாஸ்திரியின் புகாரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக பொய் புகார் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் பி‌ஷப்புக்கு எதிராக பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    மேலும் புகார் கூறப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது. எனவே கோட்டயம் போலீசார் இப்புகார் தொடர்பாக பி‌ஷப்பிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    இதற்கிடையே கேரள கத்தோலிக்க ஆலய சீரமைப்பு குழுவினர் இச்சம்பவம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தனர். அதில், கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பி‌ஷப்பை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர்.

    இதற்கு நேற்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடந்த 2014 முதல் 2016 வரை நடந்துள்ளது. எனவே இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.

    பி‌ஷப்பிடம் நேரில் விசாரணை நடத்த உள்ளோம். அதன் பிறகே அவரை கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று மனுவில் கூறி இருந்தனர்.

    அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் நேற்று கைதாவார் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று கூடுதல் எஸ்.பி. சுபாஷ் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ஜலந்தர் சென்றது. அவர்கள் நேற்று பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை விசாரிக்க அவரது இல்லத்திற்கு சென்றனர்.

    இரவு 7.45 மணிக்கு சென்ற தனிப்படை போலீசார் இன்று அதிகாலை 4.45 மணிக்கு வெளியே வந்தனர். சுமார் 9 மணி நேரம் அவர்கள் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணை முடிந்து வெளியே வந்த கூடுதல் எஸ்.பி. சுபாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் பாலியல் புகார் குறித்து விரிவாக விசாரித்தோம். குருவிலாங்காடு கன்னியர் மட விருந்தினர் இல்லத்தில் அறை எண் 20-ல் பி‌ஷப் தங்கி இருந்தாரா? என்றும் கேட்டோம். ஆனால் பி‌ஷப் இதனை முழுமையாக மறுத்துள்ளார்.

    சம்பவ நாளில் குருவிலங்காடு செல்லவில்லை என்று கூறுகிறார். கன்னியாஸ்திரி கூறியதும், பி‌ஷப் கூறுவதும் முரண்பட்டதாக உள்ளது. எனவே இதுபற்றி மீண்டும் விசாரிக்க வேண்டியது இருக்கிறது. அந்த விசாரணை முடியும் வரை பி‌ஷப்பை கைது செய்ய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Jalandharbishop #Nun
    ×