search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகே அந்தோணி"

    • காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ந்தேதி நடக்கிறது.
    • வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.

    காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி மறுத்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தலில் களமிறங்க மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் முடிவு செய்தார்.

    ஆனால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறை காரணமாக, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் முதல்-மந்திரி பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே கெலாட்டுக்கு பதிலாக அங்கு சச்சின் பைலட்டை முதல்-மந்திரியாக்க கட்சி மேலிடம் முடிவு செய்ததாக தெரிகிறது. ஆனால் இதற்கு கெலாட்டின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகவும் முடிவு செய்தனர்.

    இதனால் மாநில அரசில் குழப்பம் ஏற்பட்டது. எனவே கட்சித்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது.

    அதேநேரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்த திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர், அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்காக அவர் டெல்லி புறப்பட்டு உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். எனினும் தேர்தலில் போட்டியிடுவது என்பது அவரது தனிப்பட்ட முடிவு என்றும் அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.அந்தோணியை, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

    அப்போது, நடைபெற உள்ள கட்சித்தலைவர் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தேர்தலில் களமிறங்க சாத்தியமுள்ள வேட்பாளர்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.

    இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாக கட்சித் தலைமை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    ×