search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை குண்டு வெடிப்பு"

    இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து ஒருவாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நீக்கப்பட்டது. #Lankbombings #Lankaliftscurfew
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 253 உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து வன்முறை சம்பங்களை தவிர்க்கும் வகையில் தாக்குதல் நடைபெற்ற அன்றிரவு 8 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், நாள்தோறும் இந்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது.



    இந்நிலையில், கல்முனை, சம்மந்துறை, சவாலக்கடே ஆகிய 3 பகுதிகளை தவிர நாடு முழுவதும் முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நீக்கப்பட்டதாக இலங்கை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ரிவன் குணசேகர தெரிவித்துள்ளார். #Lankaliftscurfew #Lankanightcurfew #Lankbombings
    இலங்கையை போன்று கோவையில் குண்டு வெடிக்கும் என்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். #srilankablasts

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு மர்ம போன் ஒன்று வந்தது.

    போனில் பேசிய நபர் இலங்கையை போன்று கோவையிலும் குண்டு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

    இதுபற்றி சென்னை போலீசார், உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவை போலீசார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். போனில் பேசிய நபர் பொள்ளாச்சி பகுதியில் 2 பேர் குண்டு வைக்கப் போவதாக பேசிக் கொண்டு இருந்தனர் என்றும், இதனை கேட்டுத்தான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பொள்ளாச்சியில் இருந்து பேசியதை போலீசார் உறுதி செய்தனர்.


    போனில் பேசியநபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதால் அவர் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்கபட வில்லை. அவரை பிடிக்க போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர்.

    வெடி குண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 2 மணி முதல் ரெயில் நிலையம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள்.

    அதிகாலை 4 மணி வரை 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை.

    சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசியவர் குடிபோதையில் உளறினாரா என விசாரித்து வருகிறார்கள். கட்டுப்பாட்டு அறையில் பதிவான எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். #srilankablasts

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இலங்கை குண்டு வெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. #SriLankablasts
    திசையன்விளை:

    ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் 3 கிறிஸ்தவ தேவாலயத்திலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் குண்டு வெடித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உலகம் முழுவதும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இந்த நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், தோமையார் புரம், கூட்டப்புளி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் இன்று அனைத்து படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஒருவர் கூட மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் மீன் விற்பனையும் நடைபெறாது.

    இன்று மாலை உவரியில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் சென்று குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த சம்பவத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  #SriLankablasts
    இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. #Kotahenablast #SriLankablast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொட்டாஞ்சேனை, புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்றை கண்டுபிடித்த சிறப்புப்படை போலீசார் அதை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்ய முற்பட்டனர்.

    அப்போது அந்த குண்டு எதிர்பாராதவிதமாக திடீரென்று வெடித்துச் சிதறியது.

    நேற்றைய தொடர் குண்டுவெடிப்புகளால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ள நிலையில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடித்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். #Kotahenablast #SriLankablast 
    இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #SriLankablast #Rameswaramtemple
    ராமேசுவரம்:

    இலங்கையில் தேவாலயங்களை குறி வைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து இலங்கை அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

    குறிப்பாக இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இலங்கையில் இருந்து பயங்கரவாதிகள் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட், கப்பல் மற்றும் சிட்டா ஹெலிகாப்டரிலும் வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் கோவிலுக்குள்ளும் அவ்வப்போது மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். #SriLankablast #Rameswaramtemple
    ×