search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி தினம்"

    • இந்தி தினம் கொண்டாடுவதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பும் கண்டனமும் வலுத்துவருகிறது.
    • கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது" என குமாரசாமி கூறி உள்ளார்

    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி திவாஸ் என்ற பெயரில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த தினத்தைக் கொண்டாட இந்தி பேசாத மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தி தினத்தையொட்டி வடமாநில தலைவர்கள் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என பேசுகிறார்கள். இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்பும் கண்டனமும் வலுத்துவருகிறது.

    இந்த ஆண்டு இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி மொழி உலக அரங்கில் இந்தியாவுக்கு சிறப்பு மரியாதையைக் கொண்டு வந்துள்ளது என்று இந்தி மொழி தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அமித் ஷா

    அமித் ஷா

    இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் செம்டம்பர் 14ம் தேதி இந்தி திவஸ் என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கான விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நமது கலாச்சாரம், ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்கவேண்டும். நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதி ஏற்கவேண்டும், என கூறியிருக்கிறார்.

    ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டிற்கு நேர் எதிரானது.

    இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்படவேண்டும் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவாக இருக்கிறது. அப்போதுதான் உண்மையான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

    சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத்தள்ளி, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும்.

    இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா, அதனை ஹிந்தியா என்ற பெயரில் பிளவுபடுத்தும் முயற்சிகள் வேண்டாம். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக்கி, இந்தி தினத்திற்குப் பதில் இந்திய மொழிகள் நாள் என கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்தவேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.

    கர்நாடகாவில் இந்தி தினத்தைக் கொண்டாட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மதச்சார்பற்ற ஜனதா தளம் மூத்த தலைவர் குமாரசாமி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தி தினத்தை கொண்டாட கூடாது என கூறி உள்ளார். "கர்நாடகாவில் கன்னட மொழியை கொண்டாடுவதை தவிர்த்து, இந்தி மொழி தினம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது" எனக் குமாரசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×