search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க தேர்தல்"

    அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு விவகாரம் தொடர்பாக பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கைது செய்யப்பட்டார். #DonaldTrump #NastyaRybka
    மாஸ்கோ:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்பின் வெற்றிக்காகவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்ற ஹிலாரி கிளிண்டன் தோல்விக்காகவும் ரஷியா நேரடியாக தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை ரஷியாவும், டிரம்பும் பல முறை மறுத்துள்ளனர்.

    ஆனால், டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷியாவின் தலையீடு இருந்ததற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்று பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி நாஸ்டியா ரிப்கா கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் மாஸ்கோ விமான நிலையத்தில் ரஷிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

    அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான படத்தை அவரது வக்கீல் டிமிட்ரி ஜாட்சரின்ஸ்கி சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த கைது நடவடிக்கையை சர்வதேச ஊழல் என்று விமர்சித்து உள்ளார்.

    இதற்கிடையே ரஷிய உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாஸ்டியா ரிப்காவும், மேலும் 3 பேரும் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், அதனால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நாஸ்டியா ரிப்காவுக்கும், அவரோடு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள 3 பேருக்கும் அதிகபட்சம் 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. #DonaldTrump #NastyaRybka
    அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த நாட்டின் உளவு அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்து உள்ளன. #USElection #Interference #Vote
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என எழுந்துள்ள புகார் பற்றி ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த நவம்பர் 6-ந் தேதி, ஒட்டுமொத்த பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையின் 33 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தல், டிரம்பின் 2 ஆண்டு கால ஆட்சிக்கான பொது வாக்கெடுப்பாக கருதப்பட்டதால் உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் இந்த தேர்தலிலும் ரஷியா தலையிட முயற்சிப்பதாக புகார் எழுந்தது. அத்துடன் சீனாவும் இந்த தேர்தலில் தலையிட முயற்சிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புகார் தெரிவித்தார். இதை சீனா திட்டவட்டமாக மறுத்தது. பிற எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் சீனா தலையிட்டதே இல்லை என அந்த நாட்டு அரசு கூறியது.

    ஈரான் மீதும் புகார் கூறப்பட்டது.

    தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கூடுதலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதேபோன்று செனட் சபை தேர்தலில் குடியரசு கட்சி அதிக இடங்களை பிடித்தது.

    இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் சபை தேர்தலில் எந்தவொரு வெளிநாடும் தலையிடவில்லை என அமெரிக்காவின் 17 முன்னணி உளவு அமைப்புகள் உறுதிபட தெரிவித்துள்ளன.

    இதுபற்றி தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் டான் கோட்ஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-

    நமது நாட்டின் தேர்தல் உள்கட்டமைப்பில் எந்த சமரசமும் நடைபெறவில்லை. வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையிலோ, ஓட்டு எண்ணிக்கையை தடுக்கவோ, ஓட்டு எண்ணிக்கையை சரிபார்க்கவோ தடைகள் செய்யப்பட்டன என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

    2018-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரஷியா, சீனா, ஈரான் உள்ளிட்ட பிற நாடுகள் தங்கள் நலன்களை மேம்படுத்திக்கொள்வதற்காக, அமெரிக்காவை இலக்கு வைத்து நடவடிக்கைகள் எடுத்ததற்கோ, பிரசாரங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியதற்கோ ஆதாரம் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #USElection #Interference #Vote
    அமெரிக்காவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார். #DonaldTrump #China #USElection
    வாஷிங்டன்:

    உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி, 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

    இதற்கிடையே அமெரிக்காவில் வரும் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.



    இந்த தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எங்கள் விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதின் மூலம், எங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக சீனா வெளிப்படையாகவே கூறி உள்ளது” என்று கூறினார்.

    டிரம்பின் இந்த குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

    இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங்க் சுவாங்க் நேற்று கருத்து தெரிவிக்கையில், “சீனாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள்கூட, நாங்கள் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்பதை அறிவார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “நாங்கள் எங்கள் அரசியலில் மற்றவர்களின் தலையீட்டை விரும்ப மாட்டோம். மற்றவர்களின் உள்நாட்டு அரசியலில் நாங்களும் தலையிட மாட்டோம்” என்று கூறினார். #DonaldTrump #China #USElection
    அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு பற்றி பொய் சொன்ன டிரம்ப் ஆலோசகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #DonaldTrump #GeorgePapadopoulos
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாக புகார் எழுந்து இருக்கிறது.

    குறிப்பாக அப்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா தலையிட்டது என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அமெரிக்காவில் ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.



    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்பின் உதவியாளராக, அவரது பிரசார குழுவில் இணைந்து செயல்பட்டவர், ஜார்ஜ் பப்படோபுலஸ் (வயது 31). இவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் டிரம்பின் வெளியுறவு கொள்கை ஆலோசகராக சேர்ந்தார்.

    இவருக்கு மால்டா நாட்டை சேர்ந்த கல்வியாளர் ஜோசப் மிப்சுட் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஜார்ஜ் பப்படோபுலஸ்சிடம் ஜோசப் மிப்சுட், ஹிலாரி தொடர்பான ஆயிரக்கணக்கான மின் அஞ்சல்கள் ரஷியர்களிடம் உள்ளது என கூறினார். மேலும் அவர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினிடம் தனக்கு தொடர்பு உண்டு என்றும் கூறினார்.

    இந்த நிலையில் டிரம்பிடமும், அப்போதைய செனட் சபை எம்.பி.யான ஜெப் செசன்சிடமும், தன்னால் டிரம்ப், புதின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியும் எனவும் ஜார்ஜ் பப்படோபுலஸ் கூறி உள்ளார். இதற்கு டிரம்ப் தலையை அசைத்து சம்மதம் தெரிவித்து உள்ளார். ஆனால் இது குறித்து முடிவு எடுப்பதை அவர் ஜெப் செசன்சிடம் விட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கு இடையே லண்டன் விடுதி ஒன்றில் ஆஸ்திரேலிய உயர் அதிகாரி ஒருவரிடம் ஜோசப் மிப்சுட்டுடனான தனது சந்திப்பு பற்றி ஜார்ஜ் பப்படோபுலஸ் கூறி உள்ளார்.

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்கள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய கால கட்டத்தில், ஆஸ்திரேலிய உயர் அதிகாரி, ஜார்ஜ் பப்படோபுலஸ் தன்னிடம் கூறிய விவகாரங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டார்.

    அதைத் தொடர்ந்து, அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் அதிகாரிகள், ஜார்ஜ் பப்படோபுலஸ்சிடம் விசாரணை நடத்தினர்.

    அந்த விசாரணையில் ரஷியாவுடன் தொடர்பு உடைய 2 பேரை தான் டிரம்ப் உதவியாளராக சேர்ந்த பின்னர் சந்தித்து இருந்தாலும், டிரம்பிடம் சேருவதற்கு முன்பாக சந்தித்ததாக பொய் சொல்லி விட்டார்.

    இது தொடர்பாக அவர் மீது வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எப்.பி.ஐ.யிடம் தான் பொய் சொன்னது குறித்து அவர் ஒப்புக்கொண்டார்.

    மேலும் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பும் அளித்து உள்ளார்.

    அதன் காரணமாக அவருக்கு குறைந்த தண்டனையாக 14 நாள் சிறைத்தண்டனையும், 9 ஆயிரத்து 500 டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 65 ஆயிரம்) அபராதமும் விதித்து நீதிபதி ராண்டல்ப் மோஸ் தீர்ப்பு அளித்தார். அப்போது அவர், ஜார்ஜ் பப்படோபுலஸ் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் பொய் கூறி விட்டார் என கூறினார்.

    முன்னதாக ஜார்ஜ் பப்படோபுலஸ் நீதிபதியிடம், “நான் தேசப்பற்று கொண்ட அமெரிக்கர். இப்போது என் வாழ்க்கையே தலைகீழாகப்போய்விட்டது. என்னை நான் சரிசெய்து கொள்ள வாய்ப்பு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  #DonaldTrump #GeorgePapadopoulos
    அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Facebook #ElectionMeddling
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதியும், இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதியும் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில் இருந்து, அதன் கோடிக்கணக்கான உபயோகிப்பாளர்களின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

    அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும், பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    இந்த நிலையில், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வரும் நவம்பர் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் சதி செய்து ‘பேஸ்புக்’கில் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

    அந்த வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளது. அதே நேரத்தில் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டதின் பின்னணியில் எந்தக் குழுவினர் உள்ளனர் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த கணக்குகளை உருவாக்கியவர்கள் மறைந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கணக்குகள் அஜ்ட்லான் வாரியர்ஸ், பிளாக் எலிவேசன், மைன்ட்புல் பீயிங், ரெசிஸ்டர்ஸ் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்டு இருந்தனவாம். ஒரு கணக்கை மட்டுமே 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் தொடர்ந்து வந்து உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது.  #Facebook #ElectionMeddling #tamilnews 
    ×