search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்திக்கடவு அவிநாசி திட்டம்"

    • 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடையவில்லை.
    • வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றால், திட்டம் மேலும் தாமதாகும் என்பது போல் தெரிகிறது.

    அவிநாசி:

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்கள் 65 ஆண்டுகளுக்கும் மேலாக காத்து கொண்டிருக்கின்றனர். 3 தலைமுறைக்கும் மேலாக கானல்நீராக இருந்த திட்டத்துக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி பணியாணை வந்ததை தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டன. 27 மாதங்களில் திட்டம் முடிக்கப்படும் என்றும், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதிக்குள் திட்டம் நிறைவடையும் என கணிக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அ.தி.மு.க.வின் தேர்தல் பரப்புரையில் முக்கிய அங்கம் வகித்தது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்ட திட்டம் இது. திட்டம் தொடங்கிய பிறகு, இயற்கை வேறு மாதிரியாக சதிராடியது. உலகை உறைய வைத்த கொரோனா தொற்றால், அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகள் முடங்கின.

    தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து, விரைவில் திறக்கப்படும் என 3 மாவட்ட மக்களும் எதிர்பார்ப்பில் காத்திருக்க, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பில்லூர் அணையில் தண்ணீர் வந்தால் தான், ஒன்றரை டிஎம்சி., தண்ணீர் எடுத்து திட்டத்தை திறக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து, திட்டத்தை விரைவில் திறக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

    திட்டத்தில் 99 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் 921 குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் என 1045 நீர் நிலைகள் பயன்பெறும் திட்டம் இது. இதில் 900-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் சோதனை ஓட்டம் நிறைவடையவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்தின் காரணமாக திட்டம் தற்போது வரை 99 சதவீதம் பணிகள் நிறைவடைந்தும், திட்டம் நிறைவடையவில்லை.

    இந்த திட்டத்தில் 6 குடிநீரேற்று நிலையங்கள் உள்ளன. இதில் முதல் மற்றும் 2-ம் குடிநீரேற்று நிலையங்களுக்கு இடைப்பட்ட, கூடுதுறை பவானி தொடங்கி- சித்தோடு வரையிலான சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு பிரதான குழாய் பதிப்புக்காக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. நிலத்தடி நீராதாரத்துக்கான முக்கியமான திட்டம் என்பதை கடந்து, குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் உட்பட பல்வேறு நீராதாரத்தேவைகளை பூர்த்தி செய்கிறது என்பது தான் பிரதானமாக பார்க்கிறோம். திட்டத்தில் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் விட்டுவிட்டால் உரிய நீர் நிர்வாகம் செய்து, திட்டத்தை விரைவுப்படுத்தி திறக்க வேண்டும். ஒருவேளை வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றால், திட்டம் மேலும் தாமதாகும் என்பது போல் தெரிகிறது.

    இந்நிலையில் இன்னும் 4 மாதங்களுக்கு பிறகு பாராளுமன்றத் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிடும் என்பதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடங்கிவிடக்கூடிய சூழல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தை திறக்கும்போதே மாநில அரசு, விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். அது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்ட ஒற்றைக்குடையின் கீழ், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் என அனைத்துதரப்புக்குமான முழுப்பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 16.8.2023-ந்தேதி கடிதம் அனுப்பி மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தினேன்.
    • தமிழக அரசு தற்போது அதற்கான பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கிறது.

    திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு காலிங்கராயன் அத்திக்கடவு அவிநாசி என்று பெயர் வைத்தால்தான் உண்மை நிலையை மக்கள் அறிய உதவும் என்று நான் கடந்த 10.4.2023 அன்று சட்டசபையில் பேசினேன். அதற்கு அன்றே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தார். அதன் பிறகு கடந்த 16.8.2023-ந்தேதி கடிதம் அனுப்பி மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தினேன். தமிழக அரசு தற்போது அதற்கான பரிசீலனை செய்வதாக தெரிவித்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
    • ஒவ்வொரு பகுதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி அடுத்த மாதம் இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அவினாசி:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. ஏறத்தாழ அனைத்து பணிகளும் நிறைவு பெற்ற நிலையில், பவானி காலிங்கராயன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் நீரேற்று நிலையத்தில் இருந்து மோட்டார் மூலம் நீரை இறைத்து 2-வது நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    அதன்பின் 3-வது நீரேற்று நிலையம் என படிப்படியாக வெள்ளோட்டம் பார்க்கப்பட உள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், வெள்ளோட்டம் பார்க்கப்படும் பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறதா, தண்ணீர் செல்வதில் தடை எதுவும் ஏற்படுகிறதா என்பன உள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்சினைகளை அறிந்து பிரச்சினை இருப்பின் அதை சரி செய்வர்.

    இவ்வாறு ஒவ்வொரு பகுதியாக வெள்ளோட்டம் பார்க்கும் பணி அடுத்த மாதம் இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரேற்று பணியில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு அவை களையப்பட்ட பின் அதிகாரபூர்வ வெள்ளோட்ட அறிவிப்பு வெளியாகும் என்றனர். பல ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தற்போது வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது திருப்பூர் மாவட்ட பொதுமக்கள்- விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×