search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wear helmet"

    குழந்தைகள்-மனைவியை மனதில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் அறிவுரை வழங்கினார்.
    தஞ்சாவூர்:

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். கார் போன்ற வாகனங்களில் ஓட்டுனர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றுகாலை 10 மணி முதல் 12 மணி வரை போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    தஞ்சை பெரியகோவில் புதுஆற்றுப்பாலம் அருகே தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் மேற்பார்வையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை அழைத்து எதற்காக ஹெல்மெட் அணியாமல் வந்தீர்கள் என போலீசார் கேள்வி எழுப்பினர்.

    அப்போது அவர்கள், தரமான ஹெல்மெட் கிடைப்பதில்லை. முடி உதிரும் என்றும், அவசரத்தில் மறந்துவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் பேசும்போது, நமக்கு உயிர் தான் முக்கியம். முடி அல்ல. அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துவிட்டதாக இனிமேல் கூறக்கூடாது. குடும்ப தலைவனாக, தலைவியாக, அண்ணனாக, தம்பியாக பல நிலைகளில் நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கலாம்.

    உங்களது குழந்தைகள்-மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை மனதில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். விபத்தில் உங்களுக்கு ஏதாவது நேரிட்டால் குடும்பத்தை யார்? பார்த்து கொள்வார்கள். விபத்து ஏற்பட்டால் தலையில் தான் முதலில் அடிபடும். தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 25 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இலக்கு அல்ல. உங்களை ஹெல்மெட் அணிய வைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். உங்களது நன்மைக்காக தான் சொல்கிறோம். அவசரம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்று கூறினார்.

    பின்னர் அவர், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களை அழைத்து பாராட்டினார். மேலும் ஹெல்மெட் அணிந்து தலைமுறையை காப்பீர். ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டாதீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

    முன்னதாக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் நிருபர்களிடம் கூறும்போது, இருசக்கர வாகனங்களால் தான் 75 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ்காரர்கள் முதல் டி.ஐ.ஜி. வரை எல்லா நிலையில் உள்ளவர்கள் வாகன தணிக்கையில் 2 மணிநேரம் ஈடுபட்டனர். தினமும் வாகன தணிக்கை நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. தொடர் நடவடிக்கையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 50 சதவீதமும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 32 சதவீதமும் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினார். 
    போலீசாரும், போலீஸ் அதிகாரிகளும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர். #Helmet #Seatbelt
    சென்னை:

    சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் உள்ளன. அதில் 2 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள். அதிக விபத்தில் சிக்குபவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான். பலியானவர்களில் 70 முதல் 90 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமலும், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமலும் சென்றவர்கள் தான்.

    2016-ம் ஆண்டு ஹெல்மெட் அணியாததால் விபத்தில் 4,091 பேர் இறந்துள்ளனர். அதன்பின்னர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக 2017-ம் ஆண்டு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,956 ஆக குறைந்துள்ளது.

    மோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் ஆகிய இருவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். அதேபோல காரில் டிரைவர் மட்டுமல்ல, பக்கவாட்டில், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் என்று அனைவரும் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணியவேண்டும்.

    இந்த சட்ட விதிகளை போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்பற்றினால் விபத்தில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் குறையும். அதனால், இந்த சட்டப்பிரிவையும், விதிகளையும் தீவிரமாக அமல்படுத்தக்கோரி போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் கடந்த மார்ச் 29-ந்தேதி மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கூறியதாவது:-

    ஹெல்மெட் சட்டத்தை அதிகாரிகள் தீவிரப்படுத்தியதால் 2017-ம் ஆண்டு வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்று கூறியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விபத்தில் மனித உயிர் பலியாகவில்லை என்ற நிலை வரவேண்டும் என்று மனுதாரர் நினைக்கிறார்.

    இதற்காக போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    கேரளாவில் கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள், நீதிபதி வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமீறியதாக கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் மட்டுமல்ல, போலீஸ்காரர்களும் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். கார்களில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் போலீஸ் அதிகாரிகள் செல்கின்றனர்.

    இதுபோன்ற நிலை மாறவேண்டும். போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்டும்’, ‘சீட் பெல்ட்டும்’ அணிந்துகொண்டு தான் மோட்டார் வாகனங்களை ஓட்டவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    கூடுதல் அரசு பிளடர் இ.மனோகரன், இந்த சட்டத்தையும், விதிகளையும் போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்துகின்றனர். அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்துகின்றனர் என்று கூறினார்.

    தற்போது நவீன வாகனங்களில் முகப்பு விளக்கின் வெளிச்சம் அதிகமாக உள்ளது. அந்த முகப்பு விளக்கில் கருப்பு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படுவது இல்லை. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது.

    புதிதாக தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் பகல் நேரங்களில் முகப்பு விளக்கு எரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை இயக்கியவுடன் தானாக முகப்பு விளக்கு எரிவதுபோல புதிய வண்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட விளக்குகளில் பொருத்தப்படும் பல்புகள் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும்.

    ஆனால், சிலர் சந்தையில் இருந்து கலர் கலராக எல்.இ.டி. பல்புகளை வாங்கி முகப்பு விளக்கில் பொருத்தி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே இதுதொடர்பாக எடுத்துள்ள, இனி எடுக்கப்போகின்ற நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் வருகிற 27-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 
    ×