search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள்-மனைவியை மனதில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும்
    X

    குழந்தைகள்-மனைவியை மனதில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும்

    குழந்தைகள்-மனைவியை மனதில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் அறிவுரை வழங்கினார்.
    தஞ்சாவூர்:

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். கார் போன்ற வாகனங்களில் ஓட்டுனர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றுகாலை 10 மணி முதல் 12 மணி வரை போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    தஞ்சை பெரியகோவில் புதுஆற்றுப்பாலம் அருகே தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் மேற்பார்வையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை அழைத்து எதற்காக ஹெல்மெட் அணியாமல் வந்தீர்கள் என போலீசார் கேள்வி எழுப்பினர்.

    அப்போது அவர்கள், தரமான ஹெல்மெட் கிடைப்பதில்லை. முடி உதிரும் என்றும், அவசரத்தில் மறந்துவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் பேசும்போது, நமக்கு உயிர் தான் முக்கியம். முடி அல்ல. அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துவிட்டதாக இனிமேல் கூறக்கூடாது. குடும்ப தலைவனாக, தலைவியாக, அண்ணனாக, தம்பியாக பல நிலைகளில் நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கலாம்.

    உங்களது குழந்தைகள்-மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை மனதில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். விபத்தில் உங்களுக்கு ஏதாவது நேரிட்டால் குடும்பத்தை யார்? பார்த்து கொள்வார்கள். விபத்து ஏற்பட்டால் தலையில் தான் முதலில் அடிபடும். தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 25 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இலக்கு அல்ல. உங்களை ஹெல்மெட் அணிய வைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். உங்களது நன்மைக்காக தான் சொல்கிறோம். அவசரம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்று கூறினார்.

    பின்னர் அவர், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களை அழைத்து பாராட்டினார். மேலும் ஹெல்மெட் அணிந்து தலைமுறையை காப்பீர். ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டாதீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

    முன்னதாக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் நிருபர்களிடம் கூறும்போது, இருசக்கர வாகனங்களால் தான் 75 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ்காரர்கள் முதல் டி.ஐ.ஜி. வரை எல்லா நிலையில் உள்ளவர்கள் வாகன தணிக்கையில் 2 மணிநேரம் ஈடுபட்டனர். தினமும் வாகன தணிக்கை நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. தொடர் நடவடிக்கையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 50 சதவீதமும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 32 சதவீதமும் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினார். 
    Next Story
    ×