search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Plan"

    பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    இதற்காக பிரான்ஸ் நாட்டின் ‘சூயஸ்’ நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ரூ.2961 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் தற்போது கோவை நகரில் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

    கோவை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 3.5 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. மாநகராட்சி வார்டு எண்ணிக்கை முதலில் 72 ஆக இருந்தது. தற்போது 100 வார்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. முந்தைய 72 வார்டுகள் 60 வார்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

    இந்த வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து 60 வார்டுகள் முழுவதும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்து, இதற்கான திட்டத்தை ஆய்வு செய்தது. இதனை தனியார் மூலம் செயல்படுத்த முடிவு செய்து ரூ.595.24 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    இந்த அறிக்கையில் புதிய குடிநீர் குழாய் அமைப்பது, புதிய நீர்தேக்க தொட்டிகள் கட்டுவது உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் நோக்கம் நகரில் உள்ள அனைத்து பொதுகுடிநீர் குழாய்களையும் அகற்றிவிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பதாகும். மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கவும், குடிநீர் பயன்பாட்டை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டது. 3 நிறுவனங்கள் பங்கேற்ற டெண்டரில் ‘சூயஸ்’ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த ‘சூயஸ்’ நிறுவனத்துக்கு கட்டுமானத்துக்கு ரூ.646 கோடி, இயக்குதல் மற்றும் பராமரித்தலுக்கு ரூ.2325 கோடி என மொத்தம் ரூ.2961 கோடிக்கு பணி ஆணை வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது.

    ‘சூயஸ்’ நிறுவனத்தினர் முதல் 1 வருடம் கள ஆய்வு செய்வார்கள். பின்னர் அடுத்த 4 ஆண்டுகளில் திட்டத்தை செயல்படுத்தி முடிக்க உள்ளனர். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பொதுமக்களிடம் குடிநீருக்கு அதிக தொகை நிர்ணயம் செய்வார்கள் எனவும், இதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என புகார் எழுந்துள்ளது.

    24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்பது கவர்ச்சிக்கரமாக இருந்தாலும் பணம் இருப்பவர்களுக்கே தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை உருவாகும் என பொது மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக இனி குடிநீர் கட்டணத்தை மாநகராட்சி நிர்ணயிக்க முடியாது. திட்டத்தை செயல்படுத்தும் சூயஸ் நிறுவனம் நிர்ணயிக்கும் அளவுக்கு பணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சில அமைப்பினர் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பெரிய திட்டத்தை அரசே செயல்படுத்தாமல், தனியாருக்கு விட்டது ஏன்? எனவும் சில அமைப்பினர் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். மேலும் இத்திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    ஆனால் இந்த புகார்களை மறுத்துள்ள மாநகராட்சி கமி‌ஷனர் விஜய கார்த்திகேயன் குடிநீர் கட்டணத்தை தமிழக அரசுடன் கலந்தாலோசித்து மாநகராட்சியே முடிவு செய்யும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    24 மணி நேர குடிநீர் திட்டத்தில் 60 வார்டு பயனாளிகளின் வீட்டு இணைப்புகள் எண்ணிக்கைக்கு தேவையான குடிநீர்அளவு ஆய்வு செய்யப்படும். இதன் அடிப்படையில் பகிர்மான குழாய் திட்டம் வடிவமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் அடுத்த 4 வருடங்களில் நிறைவேற்றப்படும்.

    பயனாளிகளுக்கான குடிநீர் விநியோகத்தின் அளவீடு முறையும், அதற்கான கட்டணமும் தானியங்கி மீட்டரில் பதிவு செய்யப்பட்டு பயனாளிகள் செலுத்தக்கூடிய குடிநீர் கட்டணம் பிரத்தியேக செயலி மூலம் வசூல் செய்யப்படும். கட்டணத் தொகை மாநகராட்சி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். குடிநீர் கட்டணம் தமிழக அரசுடன் ஆலோசித்து மாநகராட்சியால் நிர்ணயிக்கப்படும். இத்திட்டம் கோவை மாநகராட்சிக்கு சிறப்பான ஒரு திட்டமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த திட்டம் தொடர்பாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சிலர் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே அரசின் திட்டங்களுக்கு எதிராக வதந்யை பரப்புவதாக மாநகராட்சி என்ஜினீயர் லட்சுமணன் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவிடம் புகார் மனு கொடுத்தார்.

    அவ்வாறு வதந்தி பரப்பி பரபரப்பான சூழ்நிலை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். இதன்பேரில் உக்கடம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 504, 505(2) -ன் கீழ் (அரசு திட்டங்களுக்கு எதிராக கலகத்தை உண்டாக்குதல் மற்றும் வதந்திகளை பரப்புதல்) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டியில் ரூ.81.82 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்த 2-வது குடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #EdappadiPalanisamy
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.81.82 கோடி செலவில் 2-வது குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வந்தது. இன்று அந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் அத்தியாவசிய தேவைகளை அரசு நிறைவேற்றுகிறது. குடி மராமத்து திட்டத்தால் நல்ல பலன் கிடைத்துள்ளது. விவசாயிகளை காக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது.

    வீதிகளில் மூடப்படாமல் இருக்கும் குழாய்களை மூடி நீர் வீணாவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும். தங்கத்துக்கு இணையான தண்ணீரை வீணாக்க கூடாது. விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டுகுடிநீர் திட்டம் உருவாக்கப்படும்.  

    இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #EdappadiPalanisamy
    ×