search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic ramaswamy"

    மதுரையில் இன்று டிராபிக் ராமசாமியுடன், அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மதுரை:

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே உள்ள பிளாட்பாரத்தில் அ.தி.மு.க.வினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.

    இன்று காலை அந்தப்பகுதிக்கு வந்த பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தனது செல்போனில் பிளக்ஸ் பேனர்களை படம் பிடித்தார். மேலும் அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தார்.

    பொதுமக்களுக்கான நடைபாதையில் எவ்வாறு பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது? என்பது குறித்து டிராபிக் ராமசாமி அதிகாரியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் டிராபிக் ராமசாமியை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். ஒருசிலர் நடுரோட்டில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அ.தி.மு.க.வினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு டிராபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    இந்த சம்பவத்தால் மதுரை-அழகர்கோவில் சாலையில் இன்று சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சிறிது நேரத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அங்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் ராமசாமியை சந்தித்து பேசினார்.

    உடனடியாக பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது.
    டிராபிக் ராமசாமி தனக்காக போராடவில்லை. பொதுநலனுக்காகத்தான் போராடுகிறார் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #TrafficRamaswamy #HighCourt
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினேன். ஆனால், அதே இடத்தில் மீண்டும் பேனர்களை வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசாரிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.



    எனவே, சட்டவிரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி வாதிட்டார். போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், எத்திராஜ் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தையும் போலீசார் அப்புறப்படுத்திவிட்டனர் என்று கூறினார்.

    இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ‘சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அந்த நபர்கள் மீது அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை?’ என்று கேட்டார்.

    மேலும், ‘ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று கட்சி பாகுபாடு எதுவுமின்றி சட்டவிரோதமாக அனைவரும் பேனர்களை வைக்க அனுமதிப்பது ஏன்?. டிராபிக் ராமசாமி ஒன்றும் தனக்காக போராடவில்லை. பொதுநலனுக்காகத்தான் போராடுகிறார். சட்டவிரோதமாக சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்கள் சரிந்து பொதுமக்கள் மீது விழுந்தால், பாதிக்கப்படுவது யார்? என்பதை அதிகாரிகள் யோசிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பின்னர், ‘எழும்பூர் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை போலீஸ் கமிஷனர் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி அறிவித்தார். 
    ×