என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொளஞ்சியப்பர் கோவில்"

    • கொளஞ்சியப்பர் கோவிலில் ‘பிராது கட்டுதல்’ எனும் புதுமையான நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
    • முனியப்பர் சன்னிதியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வேல் அல்லது சூலத்தில் கட்ட வேண்டும்.

    விருத்தாச்சலம் அருகே மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோவில். இங்கு மூலவராக முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் 'பிராது கட்டுதல்' எனும் புதுமையான நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. அதாவது நமது மேலதிகாரிகளுக்கு நாம் எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போல இந்த நேர்த்திக்கடன் அமைந்துள்ளது.

    அதாவது கோவில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன், என் பெயர் இது... என்பன போன்ற முழுமையான விவரங்களை எழுதி, தனது குறை, கோரிக்கைகள் என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். பின்பு அதை கொளஞ்சியப்பர் சன்னிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் கொடுக்க வேண்டும்.

    அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சன்னிதியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வேல் அல்லது சூலத்தில் கட்ட வேண்டும். நியாயமான கோரிக்கைகளை முருகப்பெருமான் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. நாம் எந்த ஊரில் இருந்து வருகிறோமோ அந்த இடத்திற்கும், கோவிலுக்கும் இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து, ''இந்த தேதியில் நான் வைத்த பிராது கட்டுதல் வேண்டுதல் நிறைவேறியதால், அதை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்'' என கூறி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

    குழந்தை வரம் வேண்டி, கடன் தொல்லை தீர, திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம் கிடைக்க, வேலை மாறுதல், குடும்ப கஷ்டம், பிரிந்திருக்கும் கணவன் - மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் விலக போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பிராது கட்டுவதற்காக கோவிலின் பிரகாரத்தில் முனீஸ்வரன் சன்னிதி அருகே இடமும் உள்ளது.

    விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா தொடங்கியது.
    விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சித்தி விநாயகர், கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கொளஞ்சியப்பர் தங்க காப்பு அலங்காரத்திலும், சித்தி விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி காலையில் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வெள்ளித்தேர் புறப்பாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, விருத்தாசலம் வேடப்பர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி பெருவிழா தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    ×