search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.180 crore"

    • கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1.80 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,264 மூட்டைகளில் 2,20,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.80.69-க்கும், அதிகபட்சமாக ரூ.88.07-க்கும் விற்பனையாயின. 2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.30.99-க்கும், அதிகபட்சமாக ரூ.81.99-க்கும் விற்பனையாயின.

    மொத்தம் ரூ.1.80 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • காணிக்கை பணம் எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.
    • 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், கோவில் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

    பழனி:

    பழனி கோவிலில் கடந்த 27 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் புதிய உத்தரவின்படி ஆண் பணியாளர்கள் வேட்டி அணிந்து வந்திருந்தனர். மேலும் உள்ளே வரும் நேரம், வெளியே செல்லும் நேரம் ஆகியவை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது.

    கண்காணிப்பு காமிராக்களிலும் காணிக்கை எண்ணும் பணி கண்காணிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், கோவில் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். முதல்நாள் உண்டியலில் ரொக்கமாக ரூ.1 கோடியை 80 லட்சத்து 31 ஆயிரத்து 420 கிடைத்தது. 1121 கிராம் தங்கம், 19317 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 131 ஆகியவை கிடைத்தன.

    உண்டியல் எண்ணும் பணியை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பொறுப்பு பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். இன்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்து வருகிறது.

    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    சென்னை:

    வருமான வரித்துறை சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரத்தில், காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த அரசு முதல்நிலை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.174 கோடி, 105 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் கிடைக்காததால் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.



    குறிப்பாக சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனையை தொடர்ந்தனர்.

    கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வருமான வரித்துறையினர் சோதனையின்போது, செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி லாக்கர் சாவிகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    செய்யாத்துரை கணக்கு வைத்துள்ள வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்துள்ள பணபரிமாற்ற விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வங்கிகளில் இருந்து பெற்றுள்ளனர். அத்துடன் செய்யாத்துரை, அவரது மகன்கள் மற்றும் துணை நிறுவன நிர்வாகிகளின் வங்கி லாக்கர்களையும் திறந்து சோதனையிட வங்கி அதிகாரிகளிடம் முறையான அனுமதியை பெற்று வருகின்றனர்.

    இதுதவிர சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தில் செய்யாத்துரை தொடர்பான ஆவணங்களை தேடியபோது, ரூ.4 கோடி சிக்கியது. இந்த பணம் செய்யாத்துரைக்கு சொந்தமானதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிலரை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

    அத்துடன் செய்யாத்துரை, அவருடைய மகன் நாகராஜ் மற்றும் அவர்களது நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், இயக்குனர்களிடம் நேரில் விசாரணை நடத்த வருமான வரித்துறை எண்ணியுள்ளது. இதற்காக செய்யாத்துரை உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வருமான வரித்துறை தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த விசாரணையின்போது மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    செய்யாத்துரை மற்றும் அவரது நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கத்தை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பினாமி சொத்துகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    செய்யாத்துரை, நாகராஜிக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட 3 நிறுவனங்களும் தலா ரூ.10 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்த 3 நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.54 கோடியே 70 லட்சமாகும். இப்படி இருக்க தற்போது வரை எப்படி ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் இவர்களுக்கு வந்தது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

    செய்யாத்துரை மற்றும் நாகராஜிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் சில தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இவர்களை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அத்துடன் செய்யாத்துரைக்கு தொழில் ரீதியாக மிக நெருக்கமாக இருப்பவர்களின் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதால், அவர்களையும் விசாரணைக்கு அழைப்பதற்காக அனைவருக்கும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணி ஓரிரு நாட்களில் நடைபெறும். இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

    காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் டி.வி.எச். நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது தீபக் என்பவருக்கு சொந்தமான கோவிலாம்பாக்கத்தில் உள்ள எவால்வு குளோத்திங் கம்பெனியிலும் வருமான வரி சோதனை நடந்ததாக தவறாக செய்தி வெளியானது. எவால்வு குளோத்திங் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் இல்லை என்றும், எவால்வு குளோத்திங் நிறுவனத்துக்கும், எஸ்.பி.கே. அல்லது டி.வி.எச். நிறுவனங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும் எவால்வு குளோத்திங் நிறுவன வக்கீல் டி.மோகன் தெரிவித்து உள்ளார்.

    மயிலாப்பூர் வீரபெருமாள் கோவில் தெருவில் உள்ள நாகராஜின் உதவியாளர் பூமிநாதன் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களையும், பணத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    அவருடைய பெற்றோரிடம் விசாரித்ததில், தனது மகன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது பைகளை எடுத்து வருவார். கம்பெனிக்கு சொந்தமான பொருட்கள் என்பதால் அவற்றை நாங்கள் என்ன ஏது என்று கேட்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டுவந்தார். அதில் என்ன இருக்கிறது என்று நாங்கள் கேட்கவில்லை என்று அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அந்த தெருவில் வசிப்பவர்களும் பூமிநாதன் பெரிய பைகளையும், சூட்கேசுகளையும் கொண்டு வந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர்.

    மயிலாப்பூர், பங்கார அம்மாள் கோவில் தெருவில் வசித்து வரும் காரைக்குடியை சேர்ந்த நகை ஆசாரி முத்தையா என்பவர், பிரபல நகை கடைகளுக்கும், வெளிமாநிலங்களில் உள்ள நகை கடைகளுக்கும் நகைகளை செய்து கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருடைய வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இங்கிருந்து ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  #SPKgroup #ITRaid #IncomeTaxRaid
    ×