search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People tribute"

    மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு 3-வது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Karunanidhi #RIPKarunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்தே தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்றும் சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    இன்று 3-வது நாளாக கருணாநிதி நினைவிடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தளச் செங்கல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மட்டும் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பொது மக்களும், கட்சித் தொண்டர்களும் அதன் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

    அண்ணா சமாதி வழியாக உள்ளே நுழைந்து இடது புறமாக சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வலது புறமாக வெளியில் வரும் வகையில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். இந்த வழியாக மட்டுமே பொதுமக்களும், கட்சியினரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வெள்ளை நிறத்தில் சிறிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.


    கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே பொதுமக்கள் திரண்டனர். 7 மணி அளவில் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தி.மு.க.வினரும், பொது மக்களும் சாரை சாரையாக திரண்டு வந்து சமாதியில் விழுந்து வணங்கினர். பூக்கள் மற்றும் பழங்களால் கருணாநிதி நினைவிடம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பூ அலங்காரத்தில் செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

    கருணாநிதி சிரித்தபடி இருக்கும் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான முரசொலி நாளிதழும் சமாதியில் வைக்கப்பட்டிருந்தது.

    இன்று தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வந்து அஞ்சலி செலுத்தினர். பெரும்பாலான பெண்கள் கருப்பு சேலை அணிந்து வந்திருந்தனர். ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பெண்கள் பலர் கதறி அழுதனர்.


    பச்சையம்மாள் என்ற பெண் சமாதியை விட்டு செல்லும் வரையில் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். எங்களை விட்டு போய் விட்டீர்களே அப்பா. தாங்க முடியவில்லையே அப்பா. அப்படியே படுத்திருந்தால் கூட தலைவர் இருக்கிறார் என்று இருந்திருப்போமே அப்பா என்று அவர் கண்ணீர் விட்டு கதறினார். உடன் வந்திருந்த தி.மு.க.வினர் அவரை ஆறுதல் படுத்தினார்கள்.

    கருணாநிதி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த தொண்டர்கள் சிலர் சமாதியின் அருகில் மண்டியிட்டு வணங்கி பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். பொது மக்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து குடும்பத்தோடு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

    பொது மக்கள் அதிக அளவில் கூடுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலையில் உதவி கமி‌ஷனர்கள் முத்து வேல்பாண்டி, ஆரோக்கிய பிரகாசம், அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஷிப்டு முறையில் கருணாநிதி நினைவிடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு ஷிப்டிலும் 2 உதவி கமி‌ஷனர்கள், 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 80 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

    நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை தினம் என்பதால் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அதிக அளவில் கருணாநிதி நினைவிடத்தில் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு 2 நாட்களும் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #DMKLeader #Karunanidhi #RIPKarunanidhi
    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சமாதியின் அருகில் கருணாநிதி படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடியும் கட்டப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    இன்று கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து இன்று காலை கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

    கட்சித் தொண்டர்கள் கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கருணாநிதியின் சமாதி அருகே பொதுமக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் பெண் ஊழியர்கள் 2 பேர் உள்ளனர். தொண்டர்கள் கொடுக்கும் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை அவர்கள் வாங்கிச் சென்று சமாதியில் வைக்கிறார்கள்.


    சமாதியில் அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் அதன் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். பெண் தொண்டர்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    ஆஸ்பத்திரியிலும் அவரை பார்க்க முடியவில்லை. ராஜாஜி ஹாலிலும் பார்க்க முடியவில்லை. அஞ்சலியாவது செலுத்தலாம் என இங்கு வந்துள்ளோம் என்று அவர்கள் கூறி விட்டு சென்றனர்.

    கருணாநிதி சமாதியில் தி.மு.க. தொண்டர் ஒருவர் மொட்டை போட்டுக்கொண்டார். அவரது பெயர் வினோத் கண்ணா. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மொட்டை போட்ட பிறகு கருப்பு சட்டை அணிந்தபடி அவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-


    நான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர். எனக்கு கருணாநிதி மீது பற்று அதிகம். அவர் மறைவால் மனதுக்கு கஷ்டமாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தேன். காவேரி ஆஸ்பத்திரியில் காத்திருந்த நான் நேற்று காலையில் ராஜாஜி ஹாலுக்கு வந்தேன். ஒரு தொண்டனாக நான் அவருக்கு எதுவும் செய்யவில்லை. எனவே மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தி மனதை தேற்றிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கருணாநிதி சமாதிக்காக நேற்று பள்ளம் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே மண் குவிக்கப்பட்டிருந்தது. இன்று அவை பொக்லைன் மூலம் சமதளமாக்கி சீரமைக்கப்பட்டன. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    ×