search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paddy procurement centers"

    தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்.

    மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படவில்லை. சட்டப்பூர்வ விதிகள் காரணமாகத்தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    மத்திய அரசின் முகவராக இருந்து கொண்டுதான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறோம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்படும். மேலும் அக்டோபர் மாதத் தில் புதிய ஆதார விலை அறிவிக்கப்படும். இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நடைமுறைதான்.

    அதே நேரத்தில் வட்ட தலைநகரங்களில் உள்ள பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். மேலும் நடப்பாண்டில் வெளிப்பகுதிகளில் நெல்லுக்கான விலை குறைத்து வழங்கப்படுவதால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களை நாடி வருகிறார்கள்.

    எனவே எந்தெந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதோ, அங்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்படும்.

    இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பது விவசாயிகளை அழிக்கும் செயல் என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது; உழவர்களுக்கு இதைவிட மோசமான துரோகத்தை இழைக்க முடியாது.

    தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஆண்டு எனப்படுவது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ந்தேதி நெல் கொள்முதலுக்கான விலை அறிவிக்கப்பட்டு, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் தொடங்கப்படுவது வழக்கம்.

    குறுவை நெல் அறுவடை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பா அறுவடை முடிந்த பிறகு கொள்முதல் அளவு குறைந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் மாதம் வரை இயங்கும். அறுவடை நடக்காவிட்டாலும் உழவர்கள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்படும்.


    ஆனால், நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டதன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    ஆகஸ்ட் 31-ந்தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கி விட்டு நெல் கொள்முதல் நிலையங்களை மூடும்படி தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அச்சமடைந்துள்ள உழவர் அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதுபற்றி விளக்கம் அளிக்காமல் அமைதி காப்பது சரியல்ல.

    இந்தியாவில் உழவர்களின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதன் ஒரு கட்டமாக வேளாண்மை விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலைகளை நிர்ணயம் செய்தது.

    அது போதுமானதல்ல என்று உழவர்கள் கூறி வரும் நிலையில், ஒட்டுமொத்த கொள்முதலையே நிறுத்தும்படி மத்திய அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒருபுறம் கொள்முதல் விலையை உயர்த்திவிட்டு, மறுபுறம் கொள்முதலை நிறுத்துவது பசியில் வாடும் மனிதனுக்கு உணவைக் கொடுத்து விட்டு, உயிரைப் பறிக்கும் கொடுமைக்கு இணையானதாகும்.

    மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்தே நேரடி கொள்முதலையும், பொதுவினியோகத் திட்டத்தையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் நேரடி பயன் மாற்றத் திட்டம் ஆகும்.

    உணவு மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் இந்த திட்டத்தை பல மாநிலங்களில் சோதனை அடிப்படையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. நியாய விலைக்கடைகளில் மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்த பயனாளிகளுக்கு, புதிய முறைப்படி பணமாக மானியம் வழங்கப்படும் என்பதால் நியாயவிலைக் கடைகளே தேவையிருக்காது.

    அதனால் வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டியிருக்காது. இத்திட்டத்தை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் நோக்குடன் தான் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

    நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை தனியார் வணிகர்களிடம் தான் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு நெல் உள்ளிட்ட விளைபொருட்ளை அடி மாட்டு விலைக்கு வாங்குவர்.

    அதேநேரத்தில் அரசு நெல் கொள்முதல் செய்யாவிட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசி கிடைக்காது. இதனால் நியாயவிலைக் கடைகளை மூட வேண்டியிருக்கும். அத்தகைய நிலை ஏற்பட்டால் பொதுமக்களும், விவசாயிகளும் வாழவே முடியாமல் போய்விடும். அதனால் தான் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதை விவசாயிகளை அழிக்கும் சதி என்று குற்றஞ்சாற்றுகிறேன்.

    நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசே அவ்வாறு ஆணையிட்டிருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே அதன் சொந்த செலவில் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும்; அவற்றை பொது வினியோகத் திட்டத்தின்படி நியாய விலைக்கடைகளில் வழங்கி உழவர்களையும், மக்களையும் காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss
    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. #TNGovernment
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சம்பா, குறுவை, தாளடி பருவங்கள் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நெல்லை விவசாயிகள் நேரடியாக எடுத்துச்சென்று அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஏதுவாக தமிழகம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

    குறிப்பாக, நெல் அதிகம் உற்பத்தியாகும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகள் வாங்குவதற்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து பாதி தொகையும், மாநில அரசின் தொகுப்பில் இருந்து பாதி தொகையும் என நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது, நெல் கொள் முதல் நிலையங்களில் குவிண்டால் (100 கிலோ) ஒன்றுக்கு ரூ.1,750 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், இந்த உயர்த்தப்பட்ட விலை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், பழைய விலையான ரூ.1,550 என்ற விலையிலேயே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது குறுவை சாகுபடி நெல் அறுவடை தொடங்கி உள்ளது. இந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய விவசாயிகள் தீர்மானித்து இருக்கின்றனர்.

    இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி வரை கொள்முதல் செய்த நெல்லை அரைத்து அரிசியாக தந்துவிட்டு, நெல் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் அன்னப்பன்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி முதல் 59 நெல் கொள்முதல் நிலையங்களும் திடீரென மூடப்பட்டன. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 49 நெல் கொள்முதல் நிலையங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 15 கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன.

    எந்தவித முன்அறிவிப்பும் இன்றி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால், தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும், விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படாது என்றும், தொடர்ந்து செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

    தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அவர்கள் விளைவித்த நெல்லை அரசே கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். தங்குதடையில்லாமல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.

    மேலும் இதுகுறித்து அவர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை தொடர்ந்து, விவசாயிகளின் நெல்லை தங்கு தடையின்றி கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.



    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பொறுத்தவரை நாம் மத்திய அரசின் முகவராகத்தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். இதில் சில விதிமுறைகள் இருக்கிறது. செப்டம்பர் மாதம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதாவது அக்டோபர் 1-ந் தேதி முதல் நெல்லுக்கு புதிய ஆதார விலை கொடுக்கப்படும். இதற் காக ஒரு மாத பராமரிப்பு காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எல்லா ஆண்டுகளிலும் மூடப்பட்டு இருக்கும். தாலுகாக்கள் உள்ள தலைமை இடங்களில் மட்டும் திறந்து இருப்பார்கள்.

    இந்த ஆண்டு வெளிமார்க்கெட்டில் நெல் விலை குறைவாக இருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் அவசியம் கூடுதலாக உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் தேவை ஏற்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்த பகுதியில் எல்லாம் குறுவை அதிகமாக இருக்கிறதோ? எங்கெல்லாம் நெல்வரத்து அதிகம் இருக்கிறதோ?. அங்கெல்லாம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.  #TNGovernment
    ×