search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Murugar Worship Special Pujas"

  • முருகர் பார்வதிதேவியிடம் இருந்து வேல் பெற்ற நாளே தைப்பூச விழா.
  • அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

  தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்தநாள். தமிழர்கள் இந்த நன்னாளை தைப்பூச விழாவாக கொண்டாடுகிறார்கள். இது, ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பவுர்ணமியும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். கேரளாவில் இந்த விழா `தைப்பூசம்' என்று அழைக்கப்படுகிறது.

  சூரபத்மனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தனது தாயார் பார்வதிதேவியிடம் இருந்து வேல் பெற்ற நாளே தைப்பூச விழாவாக கொண்டாடப்படுவதாக பெரும்பாலான வரலாற்று பதிவுகள் மற்றும் புராணங்கள் கூறுகின்றன.

  தமிழகத்தில் பழங்காலம் முதலே முருகன், சிவன் கோவில்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவார பதிகங்களில் குறிப்புகள் உள்ளன. திருஞானசம்பந்தர் தனது பாடலில் தைப்பூசம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோவில்களில் கூத்துகள் நடத்தப்பட்டன.

  தைப்பூச தினமான இன்று அதிகாலையில் பக்தர்கள் எழுந்து குளித்துவிட்டு முருகப்பெருமானை வேண்டி வழிபடுவார்கள். முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் காவடி எடுத்துச் சென்றும், பால்குடம் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

   அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் தைப்பூச விழா இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள்.

  அவர்கள் பலநாட்கள் விரதமிருந்து மயில் காவடி, மச்சக்காவடி, தீர்த்தக்காவடி, பால் காவடி, பறவைக்காவடி என பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வருகிறார்கள். பலர் அலகு குத்தி வருகிறார்கள். காவடி எடுப்பவர்கள் வழிநெடுக பாடி வரும் பாடல்கள் காவடிச்சிந்து என்று அழைக்கப்படுகிறது.

  கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து காவடி எடுத்து பாதயாத்திரையாக வருகிறார்கள்.

  வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தன்றுதான் ஒளியானார். இதையொட்டி கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள ஞானசபையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

  தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜையும், திருக்கல்யாணமும் மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது.

  தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் தமிழர்கள் தைப்பூச விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

   மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவில், இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் முக்கியமானது ஆகும். சுண்ணாம்பு பாறைகளாலான புகழ்பெற்ற இந்த மலைக்கோவிலுக்கு செல்ல 272 படிகள் உள்ளன. இந்த மலையையொட்டி சுங்கை பத்து என்ற ஆறு ஓடுகிறது.

  இங்கு நடைபெறும் தைப்பூச விழா உலகப்புகழ் பெற்றது. தைப்பூசத்தின் போது மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து அதிகாலை முதல் பக்தர்கள் பத்துமலைக்கு ஊர்வலமாக நடந்து வருவார்கள். ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நோத்திக்கடன் செலுத்துவார்கள்.

   மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் அருகே உள்ள தண்ணீர் மலை கோவிலிலும் தைப்பூச விழா ஆண்டு தோறும் 3 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

  இதேபோல் குனோங் சீரோ என்ற இடத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் நடைபெறும் தைப்பூச விழாவில் ஏராளமான சீனர்களும் கலந்து கொள்கிறார்கள்.

   இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும் தத்தம் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

  சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தைப்பூச விழாவை மிகவும் எழுச்சியுடன் கொண்டாடுகிறார்கள். இங்குள்ள முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் எழுந்தருளி லயன் சித்தி விநாயகர் கோவில் வரை பவனி சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். பக்தர்கள் தேரை இழுத்துச்செல்வார்கள். அப்போது பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியபடியும் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சீனர்கள் கூட முருகப்பெருமானை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

   மொரீஷியசில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.

  தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் உள்ள ஸ்ரீ சிவா சுப்பிரமணியர் கோவிலில் தமிழர்கள் காவடி எடுத்து தைப்பூச விழாவை கொண்டாடுகிறார்கள். கேப்டவுன் நகரிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

  இதேபோல் பிஜி தீவில் வசிக்கும் தமிழர்கள் நாடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழாவை கொண்டாடுகிறார்கள்.

   ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகமும், தேரோட்டமும் நடைபெறும். பக்தர்கள் பால் குடம் எடுப்பார்கள். அன்னதானமும் வழங்கப்படும்.

  ×