search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meghalaya coal mine"

    மேகாலயா மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் 350 அடி ஆழத்தில் வேலை செய்தபோது ஆற்று நீர் உள்ளே புகுந்ததால், 15 தொழிலாளர்கள் 15 நாட்களாக சிக்கி தவிக்கிறார்கள். #Meghalayacoalmine
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

    சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த 13-ந் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது.

    இதனால், சுமார் 15 தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டனர். அவர்கள் எலி பொந்து பகுதியில் இருப்பதாக தெரிகிறது. அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    சுரங்கத்துக்குள் வெள்ள நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 அடி வரை மட்டுமே நீருக்குள் இறங்க முடியும். எனவே, அந்த அளவுக்கு நீரை வெளியேற்ற முயன்றபோது, குறைந்த சக்தி கொண்ட மோட்டார்களால் தண்ணீரை வேகமாக வெளியேற்ற முடியவில்லை. அத்துடன், மழையும் பெய்ததால் கடந்த திங்கட்கிழமை மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

    அதிக சக்திவாய்ந்த மோட்டார்களை அனுப்பி வைக்குமாறு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த தகவல் 26-ந் தேதிதான் கோல் இந்தியாவுக்கு கிடைத்தது. இதையடுத்து, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார்கள், சாலைமார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இவை சம்பவ இடத்துக்கு வந்து சேர இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றுடன் 15 நாட்கள் ஆனநிலையில், மீட்புப்பணி இன்னும் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 நீச்சல் வீரர்கள் சுரங்கத்துக்குள் சென்றனர். அங்கு அழுகிய வாடை வீசுவதாக அவர்களில் ஒருவர் தெரிவித்தார். எனவே, தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்களா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    ஆனால், வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் தேங்கி கிடப்பதால், துர்நாற்றம் வீசி இருக்கலாம் என்று மீட்புப்பணி மேற்பார்வையாளர் சந்தோஷ் சிங் என்பவர் கூறினார்.

    தொழிலாளர்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அனுமதி பெறாத சுரங்கம் என்பதால், அதன் வரைபடமும் இல்லை. தொழிலாளர்களிடம் உயிர் காக்கும் சாதனங்கள் இருக்கிறதா? என்றும் தெரியவில்லை.#Meghalayacoalmine
    மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் 15 நாட்களாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க தவறிய மோடி கேமராவுக்கு போஸ் கொடுப்பதில் அக்கறை காட்டுவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #RahulurgesModi #Rahul #Modi
    புதுடெல்லி:

    மேகாலயா மாநிலம், கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தில், மலையடிவாரத்தில் அமைந்துள்ள லும்தாரி கிராமத்தில் ஜேம்ஸ் சுக்லியன் என்பவருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் உள்ளது.

    அந்த சுரங்கத்தில் கடந்த 13-ம் தேதி 300 அடி ஆழத்தில் இருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் 13 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அருகாமையில் உள்ள லைடெய்ன் ஆற்றில் திடீரென்று பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை கடந்து நிலபரப்பில் பாய்ந்த வெள்ளம் எதிர்பாராத விதமாக அந்த நிலக்கரி சுரங்கத்திற்குள் பெருக்கெடுத்து பாய்ந்தது.

    சுமார் 70 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கிய நிலையில் தொழிலாளர்களை காக்க அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பேரில் கவுகாத்தியில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


    அங்கு தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இச்சம்பவம் நிகழ்ந்து 15 நாட்கள் ஆகியும் உள்ளே இருந்து இதுவரை ஒருவர்கூட மீட்கப்படவில்லை.

    போதிய உபகரணங்கள் இல்லாததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்படுவதாக அரசு அதிகாரிகள் கூறிவரும் சமாதானம் பொதுமக்களை ஆத்திரம் அடைய செய்துள்ளது.

    இந்நிலையில், இந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் அக்கறை காட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வலியுறுத்தியுள்ளார்.

    அசாம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற போகிபீல் பாலம் திறப்பு விழாவுக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அந்த பாலத்தின் மீது சிறிது தூரம் நடந்து சென்றும், பாலத்தின் அடியில் எட்டிப்பார்த்தும் மக்களை பார்த்து கை அசைப்பது போல் ஏராளமான புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.


    இதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, ‘கேமராவுக்கு போஸ் கொடுத்தது போதும் பிரதமரே, உயிருக்கு போராடும் தொழிலாளர்களை காப்பாற்றுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

    ‘15 தொழிலாளர்கள் வெள்ளம் சூழ்ந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் சிக்கி 15 நாட்களாக மூச்சுக்காற்று கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதேவேளையில், அவர்களை காப்பாற்ற வேண்டிய பிரதமர் பாலத்தின்மீது கேமராக்களுக்கு போஸ் கொடுப்பதில் அக்கறை காட்டுகிறார்.

    உயிருக்கு போராடும் தொழிலாளர்களை மீட்க சக்திவாய்ந்த தண்ணீர் பம்புகளை தர அவரது அரசு மறுக்கிறது. பிரதமரே! அவர்களை காப்பாற்றுங்கள்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Stopposing #posingforcameras #minerstrapped #Meghalayamine #RahulurgesModi #Rahul #Modi 
    ×