search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kottai Girls School"

    • சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கூறினாலும் அவர் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கூறினாலும் அவர் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரி மோகன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:-

    பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்வாணி சக ஆசிரியர், ஆசிரியர்களையும், மாணவிகளையும் தர குறைவாக நடத்துகிறார். பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்தது. இதனைப் பார்த்த நாங்கள் அந்த குடிநீரை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தோம். இது தொடர்பாக புகார் தெரிவித்த மாணவிகள் சிலரை தலைமை ஆசிரியை அறையிலேயே முட்டி போட வைத்து அவமானப்படுத்தினார்.

    கழிவறைகளும் அசுத்தமாக உள்ளதால் அதையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே எங்களின் அடிப்படை வசதியை நிறைவேற்றாத தலைமை ஆசிரியை தமிழ்வாணியை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

    வேறு தலைமை ஆசிரியையை இப்பள்ளிக்கு அரசு நியமிக்க வேண்டும். விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாணவிகள் போராட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், குடிதண்ணீரில் புழுக்கள் இருப்பதாக மாணவிகள் புகார் கூறினர். உடனடியாக ஆய்வு செய்த நான் தண்ணீரில் புழுக்கள் இல்லை என்று கூறினேன். மேலும் கழிவறையையும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நான் எந்த மாணவி களையும் அவர்களது பெற்றோரையும் மிரட்டவில்லை. வேண்டுமென்று எனக்கு எதிராக சில ஆசிரியர்கள் மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள், வருவாய்துறையினர் மற்றும் போலீசார் தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியை தமிழ்வாணி மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×