search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jail"

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பொதுமக்கள் தங்கள் வாகனங்களை 3-ம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு போக்கு வரத்துத்துறை துணை ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி மோட்டார் வாகன சட்டம் 1988 விதி எண் 146-ன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் 3-ம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பதிவு செய்யப்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களும் தனது 100 சதவீத 3-ம் நபர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் பல மோட்டார் வாகனங்கள் 3-ம் நபர் காப்பீடு இல்லாமல் தொடர்ந்து இயங்குகின்றன. இது சட்டத்திற்கு முரண்பாடானது.

    எனவே 3-ம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 196-ன் படி அபராதம் விதிக்கவேண்டும். அதாவது முதல் முறை குற்றத்திற்கு ரூ.2 ஆயிரம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும், குற்றம் தொடர்ந்தால் ரூ.4 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே பொதுமக்கள் தங்கள் வாகனங்களை 3-ம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
    • இந்தியா அணி வெற்றி பெற்றால், ஜூன் 5 ஆம் தேதி நான் மீண்டும் வெளியே வருவேன்.

    மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீன் பெற்று சில நாட்கள் ஆன நிலையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்களிடம் (ஏஏபி) அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துகளை தெரிவித்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி அவர் சரண் அடைய வேண்டும்.

    இந்நிலையில், "நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு ஜூன் 5-ஆம் தேதி திகார் சிறையில் இருந்து திரும்புவேன்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

    மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    திகாரில் உள்ள எனது அறைக்குள் இரண்டு சிசிடிவி கேமராக்கள் இருந்தன. அதனை 13 அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த சிசிடிவி காட்சிகள் பிரதமர் அலுவலகத்திற்கும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி என்னைக் கண்காணித்து வருகிறார். எனக்குத் தெரியவில்லை. மோடிக்கு என் மீது என்ன வெறுப்பு என்று..

    நான் குளியலறைக்குச் செல்வதற்காக இரவில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறேன் என்பதையும் அவர்கள் கண்காணிப்பார்கள்.

    பிரதமர் மோடி, கெஜ்ரிவால் உடைந்துவிட்டாரா இல்லையா என்பதைப் பார்க்க விரும்பினார். கெஜ்ரிவால் மனச்சோர்வடையவில்லை. எனக்கு ஹனுமானின் ஆசீர்வாதம் இருப்பதாக நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். கெஜ்ரிவால் இப்படி உடைப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் செய்யமாட்டார். மோடி ஒன்றும் கடவுள் இல்லை.

    ஜூன் 2ம் தேதி திகார் சிறைக்கு திரும்பினாலும், ஜூன் 4ம் தேதி சிறைக்குள் தேர்தல் முடிவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.

    நான் கடினமாக உழைத்தால், இந்தியா அணி வெற்றி பெற்றால், ஜூன் 5 ஆம் தேதி நான் மீண்டும் வெளியே வருவேன். ஆனால் இப்போது கடினமாக உழைக்காவிட்டால் மீண்டும் எப்போது சந்திக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர்.
    • மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    மதுரை:

    பல்வேறு குற்றங்கள் புரிந்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு சிறைக்கு வரும் கைதிகளின் மறுவாழ்வுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதில் சிறைவாசிகளின் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பில் உள்ள பெட்ரோல் நிலையம், சிறைச்சந்தை ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக சிறைச் சந்தை காணப்படும். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.

    மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட்டு பின் மத்திய சிறையில் செயல்பட்டுவரும் சிறை சந்தையை பார்வையிட்டனர். அதன் பின் அங்கு காலை உணவு அருந்திவிட்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜையின் அருகே ஒரு கைப்பை இருந்தது. அதைக்கண்ட சிறை சந்தையில் பணிபுரியும் தண்டனை சிறைவாசி கார்த்திக் அந்த கைப்பையை எடுத்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    அதில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. அதில் அவர்களுடைய ஆதார் தவிர தொடர்பு எண்கள் இல்லாததால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து சிறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே தனது கைப்பையை எங்கு தவறவிட்டோம் என்று தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு சென்ற சிம்டா சீனிவாஸ் கடைசியாக மதுரை மத்திய சிறை சந்தைக்கு வந்தனர். அவர்களிம் உரிய விசாரணைக்கு பிறகு மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கைப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக் கொண்ட சுற்றுலாவாசிகள் மற்றும் சிறை அதிகாரிகள் சிறைவாசி கார்த்திக்கின் நேர்மையை பாராட்டினர். உரியவரிடம் ஒப்படைத்த காட்சி.

    • சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
    • அரவிந்த் கெஜ்ரிவாலை திகாரில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பதிவியில் இருந்து விலகாத நிலையில், சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்ததாகவும், அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நான் அரை மணி நேரம் சந்தித்தேன். அப்போது, "மக்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார். "அவர் வலிமையானவர்" என்றும் "டெல்லி மக்களின் ஆசீர்வாதத்துடன் தனது போராட்டத்தை தொடருவேன்" என்றும் அவர் கூறினார். 

    • வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், வீ.கே. புதூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு போலீசார் வாகன சோதனையின்போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த இடையர்தவனை ஐயப்பன் (வயது 37), தாயார் தோப்பு சேர்மலிங்கம்(50), மோசஸ் ராஜ்குமார்(44), சங்கரன்கோவில் மணிகண்டன்(57), ராஜபாளையம் வீரபாண்டியன்(57) மற்றும் ராஜபாண்டியை சேர்ந்த ராஜேந்திரன்(52) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த அப்போதைய வீ.கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசாருக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    • சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார்.
    • ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சாரலப்பள்ளியில் உள்ள ஜெயிலில் முகமது ஷேக் (வயது 32) என்ற கைதி அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனை அறிந்த ஜெயில் வார்டன் முகமது ஷேக்குக்கு ஜெயில் டாக்டரிடம் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் வயிற்று வலி குறையவில்லை.

    இதையடுத்து முகமது ஷேக்கை ஐதராபாத்தில் உள்ள காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் முகமது ஷேக் வயிற்றை டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.

    இதில் முகமது ஷேக்கின் வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. இரப்பை குடல் துறை தலைவர் டாக்டர் ஷ்ரவன் குமார் தலைமையிலான டாக்டர்கள் முகமது ஷேக் வயிற்றில் இருந்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் 45 நிமிடங்களில் 5 அங்குலம் நீளமுள்ள 9 ஆணிகளை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து கைதியிடம் விசாரித்த போது அவர் தற்கொலை செய்துவதற்காக ஆணிகளை விழுங்கியதாக தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர்.
    • அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள ஷ்ரூஸ்பெரி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவுர்மன் சிங் (வயது 23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவுர்மன் சிங்கை கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் அடித்துக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் (24) ஜக்தீப் சிங் (23), ஷிவ்தீப் சிங் (27) மற்றும் மன்ஜோத் சிங் (24) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவுர்மன் சிங் கொலை வழக்கு ஷ்ரூஸ்பெரி நகர கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் அர்ஷ்தீப் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் 122 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் அவுர்மன் சிங்கை ரகசியமாக கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுக்மந்தீப் சிங்குக்கு (24) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    • காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித்சிங் என்பவர் தாக்கி காயப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.
    • பின்னர் அவர் ஜல்வர்த் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இந்திய தூதரகம் முன்பு போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் மேற்கு பகுதியில் உள்ள சவுத்ஹாலில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி இந்திய சுதந்திரதின விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர். அப்போது ஆஷிஷ் சர்மா மற்றும் நானக் சிங் ஆகிய 2 இந்திய வம்சாவளியினரை காலிஸ்தான் ஆதரவாளர் குர்பிரித்சிங் என்பவர் தாக்கி காயப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.

    இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இச் சம்பவம் தொடர்பாக குர்பி ரித் சிங்கை இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜல்வர்த் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 28 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    • 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது.
    • காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    லண்டன்:

    பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலை உள்ளது. 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது. சோதனையின்போது சிறை வளாகத்தில் ரேடான் என்னும் கதிரியக்க தனிமத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

    இதனால் காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறைச்சாலையில் இருந்து 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு வேறுசிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைவளாகத்தில் பரவி இருக்கும் ரேடான் அளவை குறைக்கும் பணி நடந்து வருகிறது.

    • 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
    • வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.

    மதுரை:

    சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக தேசிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ள மன் பிரகாஷ் என்பவரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். பின்னர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய அவரை மதுரை ரெயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கினர்.

    அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில், போதைப்பொருள் 30 கிலோ மதிப்பிலான மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள் மதுரை ரெயில்வே பாதுகாப்புபடை போலீசில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் பிரகாஷ் சென்னை கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருடன் தொடர்புகொண்ட ஜேசுதாஸ் என்பவர் போதை பொருளை ரெயிலில் மதுரைக்கு கொண்டு வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.180 கோடியாகும்.

    மேலும் 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.

    இதையடுத்து பிரகாசின் மனைவி மோனிஷா ஷீலாவை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வந்தனர். நேற்று முழுவதும் அவரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவில் போதைப்பொருளை கடத்த உத்தரவிட்ட ஜேசுதாஸ் என்பவரும் கைதானார்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரகாஷ், அவரது மனைவி மோனிஷா ஷீலா ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இருவரும் சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

    • ரூ.15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
    • தீர்ப்பை தொடர்ந்து எஸ்.வி.சேகர் அபராத தொகையை செலுத்தினார்.

    நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    "சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று நீதிபதி ஜி.செயவேல் உத்தரவிட்டுள்ளார்.

    உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்திவைப்பு. அபராத தொகையை செலுத்தினார்.

    • லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.
    • சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினர் ஆகலாம், மேலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மற்றும் வீடியோக்களில் விளம்பரம் பார்த்தால் தினமும் சராசரியாக ரூ.5 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை பார்த்த லட்சக்கணக்கானோர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பல கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மோசடிக்கு வாய்ப்பு இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் சக்தியானந்த் என்ற சக்தி ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஒண்டிப்புதூர் அருகே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் நிறுவன இயக்குனர் சக்தி ஆனந்தன் மற்றும் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் என ஏராளமானோர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது சக்தி ஆனந்தன் உள்ளிட்டடோர், எங்கள் நிறுவனத்துக்கு எதிராக ஒருசிலர் சமூகவ லைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் இடையே தேவையற்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் போலீஸ் கமிஷனர் முக்கிய ஆய்வுக்கூட்டத்தில் உள்ளார். எனவே எங்களிடம் மனுவை வழங்குங்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் சக்தி ஆனந்தன் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் போலீஸ் கமிஷனரை கண்டிப்பாக சந்திக்க வேண்டுமென கூறியதுடன், அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சக்தி ஆனந்தன் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் சக்தி ஆனந்தன் மீது போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்ப திவுசெய்து, பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு சிலர் திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக வந்த சிலரை போலீசார் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கோவை தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இன்றும் பலர் வ.உ.சி பூங்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து போராட்டம் நடத்தலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோவை தனியார் நிறுவனத்தின் இணையதள செயலியை மாநகர போலீசார் ஏற்கனவே முடக்கம் செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த செயலி மீண்டும் தற்போது செயல்பட தொடங்கி உள்ளது. இருப்பினும் அந்த இணைய செயலி மூலம் வாடிக்கையாளர் மேலும் சேர முடியாத வகையில் அவற்றின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

    ×