search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government bus Collide"

    தஞ்சை அருகே அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவையாறு:

    தஞ்சை அருகே உள்ள மணக்கரம்பையைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மகன் ஸ்டாலின்ராஜ் (வயது27). கூலி தொழிலாளி.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மகன் இளையராஜா (26).

    இந்நிலையில் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தஞ்சை கடை வீதிக்கு வந்திருந்தனர். பின்னர் கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு மணக்கரம்பைக்கு திரும்பினர். அப்போது மணக்கரம்பையை நோக்கி அம்மன்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே தஞ்சையை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின்ராஜ், மற்றும் இளையராஜா பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் 2 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தஞ்சை நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில் அருகே அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வங்கி பெண் ஊழியர் பலியானார். வங்கி ஊழியர் உடல் பஸ்சின் சக்கரத்தில் சிக்கியிருந்ததால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் வெள்ளாளர் நகரை சேர்ந்தவர் குமாரவேல். இவரது மனைவி குமாரி. இந்த தம்பதியின் மகள் இந்து (வயது 22).

    எம்.காம். பட்டதாரியான இந்து, நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வேலைபார்த்த வங்கியில் இருந்து ஓய்வூதியம், உதவித்தொகை பெறுபவர்கள் வசிக்கும் வீரநாராயணமங்கலம், தாழக்குடி உள்பட சில பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பணத்தை வழங்கி வந்தார்.

    இந்த பயனாளிகளின் கைரேகைகளை பதிவு செய்ய வங்கி நடவடிக்கை எடுத்தது. இதைதொடர்ந்து அவர்களின் கைரேகைகளையும் இந்து பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    வீரநாராயணமங்கலம் அருகே கண்டமேட்டு காலனி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு உள்ளவர்களும் வங்கியில் இருந்து உதவித்தொகை பெற்று வருகிறார்கள். இவர்களிடம் கைரேகை பதிவு செய்வதற்காக இன்று காலை இந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.

    திருப்பதிசாரம், வீரநாராயணமங்கலம் வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஆரல்வாய் மொழியில் இருந்து தாழக்குடி, வீரநாராயண மங்கலம் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை டிரைவர் கிரிதர் என்பவர் ஓட்டி வந்தார். அந்த சாலையில் உள்ள வளைவில் வந்த போது எதிரில் பஸ் வருவதை பார்த்ததும் இந்து தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி பஸ்சுக்கு வழிவிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் இந்து மீது மோதியது.

    மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த தென்னந்தோப்பில் புகுந்தது. அங்கு உள்ள மரத்தில் மோதி அந்த பஸ் சரிந்த நிலையில் நின்றது. இதில் பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய இந்து இழுத்துச் செல்லப்பட்டு சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்சில் இருந்த பயணிகளும் பயத்தில் கூச்சலிட்டனர். விபத்து நடந்ததும் பஸ்சின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    காலை நேரத்தில் நடந்த இந்த விபத்தை பார்த்ததும் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு திரண்டு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்துவின் உடல் பஸ்சின் சக்கரத்தில் சிக்கியிருந்ததால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.


    மதுரையில் அரசு பஸ் மோதியதில் வக்கீல் உயிரிழந்த சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை விளாங்குடி, நேரு நகர், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 52). வக்கீலான இவர் மதுரை மாவட்ட கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜானகி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.

    நேற்று இரவு ஜெயசங்கர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். திருப்பரங்குன்றம் அருகே உள்ள மூலக்கரை தியாகராஜர் மில் காலனி முன்பு வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெயசங்கரை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    ×