search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வங்கி பெண் ஊழியர் பலி
    X

    நாகர்கோவில் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வங்கி பெண் ஊழியர் பலி

    நாகர்கோவில் அருகே அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வங்கி பெண் ஊழியர் பலியானார். வங்கி ஊழியர் உடல் பஸ்சின் சக்கரத்தில் சிக்கியிருந்ததால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் வெள்ளாளர் நகரை சேர்ந்தவர் குமாரவேல். இவரது மனைவி குமாரி. இந்த தம்பதியின் மகள் இந்து (வயது 22).

    எம்.காம். பட்டதாரியான இந்து, நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வேலைபார்த்த வங்கியில் இருந்து ஓய்வூதியம், உதவித்தொகை பெறுபவர்கள் வசிக்கும் வீரநாராயணமங்கலம், தாழக்குடி உள்பட சில பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பணத்தை வழங்கி வந்தார்.

    இந்த பயனாளிகளின் கைரேகைகளை பதிவு செய்ய வங்கி நடவடிக்கை எடுத்தது. இதைதொடர்ந்து அவர்களின் கைரேகைகளையும் இந்து பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    வீரநாராயணமங்கலம் அருகே கண்டமேட்டு காலனி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு உள்ளவர்களும் வங்கியில் இருந்து உதவித்தொகை பெற்று வருகிறார்கள். இவர்களிடம் கைரேகை பதிவு செய்வதற்காக இன்று காலை இந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.

    திருப்பதிசாரம், வீரநாராயணமங்கலம் வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஆரல்வாய் மொழியில் இருந்து தாழக்குடி, வீரநாராயண மங்கலம் வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை டிரைவர் கிரிதர் என்பவர் ஓட்டி வந்தார். அந்த சாலையில் உள்ள வளைவில் வந்த போது எதிரில் பஸ் வருவதை பார்த்ததும் இந்து தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி பஸ்சுக்கு வழிவிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் இந்து மீது மோதியது.

    மேலும் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த தென்னந்தோப்பில் புகுந்தது. அங்கு உள்ள மரத்தில் மோதி அந்த பஸ் சரிந்த நிலையில் நின்றது. இதில் பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய இந்து இழுத்துச் செல்லப்பட்டு சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்சில் இருந்த பயணிகளும் பயத்தில் கூச்சலிட்டனர். விபத்து நடந்ததும் பஸ்சின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    காலை நேரத்தில் நடந்த இந்த விபத்தை பார்த்ததும் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு திரண்டு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்துவின் உடல் பஸ்சின் சக்கரத்தில் சிக்கியிருந்ததால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.


    Next Story
    ×