search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesh Festival"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வினாயகர் சதுர்த்திக்காக தெர்மோகோல் மீதான தடையை தளர்த்த முடியாது என மும்பை ஐகோர்ட் இன்று தெரிவித்துள்ளது. #BombayHC #thermocolban #Ganeshfestival
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பைகள், ஸ்பூன், பிளேட், பெட் பாட்டில் மற்றும் தெர்மோகோல் ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு அம்மாநில அரசு கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவு வெளியான மூன்று மாதங்களுக்குள் (ஜூன் 23) தங்களிடம் உள்ள தடை விதிக்கப்பட்ட தயாரிப்புகள் அனைத்தையும் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் அழித்துவிட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் காலக்கெடு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்வரும் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வினாயகர் சிலைகள் வைக்கப்படும் பந்தல்களில் அலங்கார வேலைப்பாடு செய்வதற்காக சில நாட்களுக்கு மட்டும் தெர்மோகோல் மீதான தடையை தளர்த்த வேண்டும் என பந்தல் அலங்கார வேலைப்பாட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



    இந்த தடையை தளர்த்தாவிட்டால் தெர்மோகோல் விற்பனை பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் கடும் பண இழப்பை சந்திக்க நேரிடும். எனவே, தடையை தளர்த்தி அனுமதி அளித்தால் பயன்படுத்தப்படும் தெர்மோகோல் தயாரிப்புகளை நாங்களே பாதுகாப்பாக அகற்றி, அழித்து விடுகிறோம் என அவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

    இவ்வழக்கு இன்று நீதிபதிகள் ஏ.எஸ். ஒக்கா, ரியாஸ் சாக்லா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தினந்தோறும் 1200 டன் அளவிலான பிளாஸ்டிக், தெர்மோகோல் கழிவுகள் தூக்கி வீசப்படுகின்றன. இவற்றை அறிவியல்பூர்வமாக அழிக்கவோ, மறுசுழற்சி செய்யவோ வழியில்லை. எனவே, இந்த தடையை நீக்க கூடாது என அம்மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தடையை தளர்த்த முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    மாநில அரசு விதித்திருந்த காலக்கெடு முடிந்தும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பது தெரிந்தும் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்துகொண்டு தற்போது தடையை தளர்த்துமாறு வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். #BombayHC #thermocolban #Ganeshfestival

    ×