என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election strategy"

    • எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் மோடி பாராட்டி பேசினார்
    • 2024ல் அதிமுக தோற்றால் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பலாம் என்கின்றனர் விமர்சகர்கள்

    அடுத்த சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 2023 செப்டம்பர் மாத இறுதியில் பா.ஜ.க.வுடன் கொண்டிருந்த கூட்டணி, முறிவுக்கு வந்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

    இந்நிலையில் இன்று, தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள மாதப்பூரில், பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

    அவர் தனது உரையில், அ.தி.மு.க.வின் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் தனித்தனியே பெயரை குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.

    தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுடன் கூட்டணி வைக்க இயலாத சூழ்நிலையில் பா.ஜ.க. இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் உரை சில சந்தேகங்களை எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


    பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி தரப்பில் எவரையும் இதுவரை குறிப்பிட இயலவில்லை.

    2016ல் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை குறித்து ஏதும் கூறாமல் "ஜெயலலிதாவின் ஆட்சிதான் தமிழகத்தில் கடைசியாக நிலவிய நல்லாட்சி" என கூறியதன் மூலம், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளான அ.தி.மு.க. வாக்காளர்கள் மனதில், "நடைபெற போவது பிரதமருக்கான தேர்தல். அதில் அ.தி.மு.க.விற்கு வேட்பாளர் இல்லை என்பதால் மோடிக்கே வாக்களித்தால் என்ன?" எனும் சிந்தனை ஓட்டத்தை விதைக்க முனைகிறாரா என சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    தனது உரையில் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டா விட்டாலும், விமர்சிக்கவும் இல்லை என்பதை சுட்டி காட்டும் சில விமர்சகர்கள் மோடியின் வியூகம் இரண்டு விதமாக இருக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர்.


    ஒன்று, கூட்டணிக்கான கதவு இன்னமும் திறந்துதான் உள்ளது என உணர்த்தி அ.தி.மு.க.வை கூட்டணிக்கு அழைக்கும் முயற்சியாக இது இருக்கலாம்.

    மற்றொன்று, தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வை அ.தி.மு.க. ஆதரிக்கலாம் எனும் கருத்தை விதைப்பதன் மூலம் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அ.தி.மு.க.விற்கு கிடைப்பதை தடுத்து, தி.மு.க.விற்கே செல்ல வழிவகுத்து இத்தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைய வியூகம் வகுக்கிறாரா என சந்தேகம் எழுப்புகின்றனர்.

    இவ்வாறு நடந்தால் சட்டசபை, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என தொடர் தோல்வியை கண்ட எடப்பாடி பழனிச்சாமி மக்களவை தேர்தலிலும் தோல்வியடைந்தால், அவருக்கு எதிராக கட்சியில் எதிர்ப்பு கிளம்பி, அவர் பதவி விலக நேரிட்டு வேறொரு பா.ஜ.க. ஆதரவாளர் பதவி ஏற்கலாம், அல்லது கட்சியில் பிளவு ஏற்படலாம்.

    இதன் மூலம் அ.தி.மு.க. தேயத் தொடங்கலாம்.

    2026ல் தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. மட்டுமே என சட்டசபை தேர்தல் களம் அமைய வழி பிறக்கலாம்.

    இவையனைத்தும் விமர்சகர்களின் கணிப்புகள்தான் என்றாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே பிரதமர் மோடி தமிழகத்தில் காய் நகர்த்த தொடங்கி விட்டதாகவே சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம்
    • நேற்று முன் தினம் விஜய்யை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது.

    ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தேர்தல் வியூக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய த.வெ.க. தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா த.வெ.க.-வில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே நேற்று முன் தினம் விஜயை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார். அப்போது, த.வெ.க.-வில் ஆதவ் அர்ஜுனா இணைவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகத் தெரிகிறது.

    இந்நிலையில் த.வெ.க. கட்சியில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் சிறப்புப் பிரிவு பதவி வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    தலைவர், பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா இருப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    ×