search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devotees shock"

    • மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
    • இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் புகழ் பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகு திகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்ப ணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.

    இந்த நிலையில் தற்போது அக்னி தீர்த்தகடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் 400 வரை வசூலிக்கப்படும் எனவும். அதில் இருந்து ரூ.80, 160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னோர்களுக்காக திதி கொடுக்க கட்ட ணம் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேசுவரம் அக்னி தீர்த்தத்ததில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்ட பூஜை செய்யக்கூட கோவில் நிர்வாகத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

    நம் முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற தி.மு.க. அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இந்த முறையற்ற உத்தரவை உடனடியாக திரும்பப்பெற்று இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களை தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் எனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் அதற்கான விலையை தி.மு.க. அரசு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சட்ட விதிகளின்படி கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயிக்கலாம். ஆனால் கடற்கரையில் தனிமனித பூஜைக்கு எப்படி கட்டணம் வசூலிக்க முடியும். இது பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் அதிக கட்டண வசூலிக்கும் வழிவகுக்கும். எனவே அரசின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.

    உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் அம்மன் சன்னதி கோபுர கும்பகலசம் சாய்ந்துள்ளதால் கோபுர கலசத்தை விரைந்து சரிசெய்ய கோரி சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.

    எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள் அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிறது.

    புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    தஞ்சை பெரிய கோவிலில் பெரியநாயகி அம்மன் சிலை 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி காலங்களில் பெரிய நாயகி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட தனி சன்னதியில் அம்மன் எழுந்தருளியுள்ளார். வேறு எங்கும் இந்த அளவில் உயரமான அம்மன் சிலையை காண முடியாது.

    ஒரே கல்லால் செய்யப்பட்ட கருங்கல் தொட்டி சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சன்னதியின் வாயிலில் மட்டும் பல்வேறு கோயில்களின் வரலாற்று சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிபிரகாரத்தில் பள்ளியறை அமைந்துள்ளது. பெரிய கோவிலை பற்றி மகாத்மா காந்தி எழுதிய கருத்து பற்றிய கல்வெட்டு அம்மன் சன்னதிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. பெரிய நாயகி அம்மன் சன்னதியில் தான் கோவில் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

    இக்கோயிலை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த பெரிய கோவில் பெரிய நாயகி அம்மன் சன்னதியின் கோபுர கலசம் காற்று, மழையால் சாய்ந்துள்ளது இன்று தெரியவந்தது. அதனை கண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், பொது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கேட்டபோது, அம்மன் சன்னதியின் கோபுர கலசம் சாய்ந்து விட்டது. கோவில் நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரிய நாயகி அம்மன் சன்னதியில் சாய்ந்துள்ள கோபுர கலசத்தை விரைந்து சரிசெய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×