search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை பெரியகோவிலில் அம்மன் சன்னதி கோபுர கும்பகலசம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
    X

    தஞ்சை பெரியகோவிலில் அம்மன் சன்னதி கோபுர கும்பகலசம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

    உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் அம்மன் சன்னதி கோபுர கும்பகலசம் சாய்ந்துள்ளதால் கோபுர கலசத்தை விரைந்து சரிசெய்ய கோரி சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்.

    எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள் அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்து வைத்திருக்கிறது.

    புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    தஞ்சை பெரிய கோவிலில் பெரியநாயகி அம்மன் சிலை 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி காலங்களில் பெரிய நாயகி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட தனி சன்னதியில் அம்மன் எழுந்தருளியுள்ளார். வேறு எங்கும் இந்த அளவில் உயரமான அம்மன் சிலையை காண முடியாது.

    ஒரே கல்லால் செய்யப்பட்ட கருங்கல் தொட்டி சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சன்னதியின் வாயிலில் மட்டும் பல்வேறு கோயில்களின் வரலாற்று சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிபிரகாரத்தில் பள்ளியறை அமைந்துள்ளது. பெரிய கோவிலை பற்றி மகாத்மா காந்தி எழுதிய கருத்து பற்றிய கல்வெட்டு அம்மன் சன்னதிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. பெரிய நாயகி அம்மன் சன்னதியில் தான் கோவில் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

    இக்கோயிலை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த பெரிய கோவில் பெரிய நாயகி அம்மன் சன்னதியின் கோபுர கலசம் காற்று, மழையால் சாய்ந்துள்ளது இன்று தெரியவந்தது. அதனை கண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள், பொது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கேட்டபோது, அம்மன் சன்னதியின் கோபுர கலசம் சாய்ந்து விட்டது. கோவில் நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரிய நாயகி அம்மன் சன்னதியில் சாய்ந்துள்ள கோபுர கலசத்தை விரைந்து சரிசெய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×