search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinnasamy"

    அண்ணா தொழிற்சங்க நிதி கையாடல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். #ADMK #Chinnasamy
    சென்னை:

    அண்ணா தொழிற்சங்க பேரவை நிதியில் கையாடல் செய்தது தொடர்பான வழக்கில் தொழிற்சங்க பேரவையின் முன்னாள் மாநில செயலாளர் சின்னசாமி (வயது 70) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தபோதே அவரது தொழிற்சங்க பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். தற்போது அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார்.

    இந்நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சின்னசாமி நீக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


    கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.சின்னசாமி (அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சிங்காநல்லூர் தொகுதி) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. . #ADMK #Chinnasamy 
    அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கத்தின் வரவு செலவு கணக்குகளில் ரூ.8 கோடி முறைகேடு செய்திருப்பதாக கைது செய்யப்பட்ட சின்னசாமியை 27-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. #ADMK #Chinnasamy
    கோவை:

    அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளராக இருந்தவர் சின்னசாமி (வயது 70). காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி.யில் இருந்த இவர் 2006-ம் ஆண்டு, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இரட்டை இலை சின்னத்தில் நின்று சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின்னர் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    ஜெயலலிதா இவரை 2016-ம் ஆண்டு அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில செயலாளராக அறிவித்தார். அப்போது தொழிற்சங்க நிதியில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சின்னசாமி தொழிற்சங்கத்தில் யாரையும் மதிக்காமல் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்தன. போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட போது சில இடங்களில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினர் அட்டையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சின்னசாமியின் செயல்பாடு சரியில்லாததே இதற்கு காரணம் என கட்சி தலைமைக்கு புகார்கள் சென்றன. சின்னசாமி மீது அடுக்கடுக்கான புகார் கூறப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் அவரை கட்சி பதவியில் இருந்து அ,தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் அதிரடியாக நீக்கினர்.


    அ.தி.மு.க.வின் முக்கிய துணை அமைப்பான அண்ணா தொழிற்சங்கத்தில் அதன் செயலாளரே நீக்கப்பட்டது முக்கிய நடவடிக்கையாக கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது. இதையடுத்து தினகரன் அணியில் சேர்ந்தார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார்.

    இதற்கிடையே, அண்ணா தொழிற்சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது அதில் ரூ.8 கோடி கையாடல் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜக்கையன் எம்.எல்.ஏ. உள்பட பலர் சென்னை மாநநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    தொழிற்சங்க நிதி கையாடல் புகார்களின் பேரில் விசாரணை நடத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், சின்னசாமி அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த போது பல்வேறு முறைகேடுகள் மூலம் ரூ.8 கோடி வரை கையாடல் செய்தது ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

    இதையடுத்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் கோவை சென்று சின்னசாமியை அவரது வீட்டில் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர். அவர் மீது ஏமாற்றுதல், நிதிமுறைகேடு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைதான சின்னச்சாமி இன்று காலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 27-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சின்னச்சாமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சின்னசாமி பதவி வகித்த காலத்தில் பொறுப்பில் இருந்த பல முன்னாள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளையும் பிடித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே மேலும் சிலர் சிக்குவார்கள். #ADMK #AnnaUnion #Chinnasamy
    ×