search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buses attacked"

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 60க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டன. #KeralaShutdown #SabarimalaHartal
    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

    இந்நிலையில், நேற்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

    சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தின்போது பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.



    முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. பத்தனம்திட்டா பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்காமல் பேருந்துகளை இயக்கியதால் போராட்டக்காரர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    60க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தி வைப்பதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. போராட்டக்காரர்களின் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #KeralaShutdown #SabarimalaHartal
    குமரியில் பஸ்கள் மீது கல்வீச்சு தாக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி தரிசனம் செய்யச் சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் அவமதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள அரசை கண்டித்து நேற்று குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் சீராக நடைபெறவில்லை. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    முழு அடைப்பு போராட்டத்தின்போது நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் 12 அரசு பஸ்கள் மற்றும் ஒரு கல்லூரி பஸ் கல்வீசி தாக்கப்பட்டது. இதுதொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்களில் பம்மம் சிறிய காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (26), ராஜேஷ் (38) ஆகிய ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மார்த்தாண்டம் பம்மம், உண்ணாமலைக்கடை பகுதியில் பஸ்களை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரும் பா.ஜனதா பிரமுகர்கள் ஆவர். அவர்களை போலீசார் குழித்துறை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கல் வீச்சு தொடர்பாக மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பஸ் உடைக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் 8 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. #BharathBandh #PetrolDieselPriceHike
    நாகர்கோவில்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், திருவட்டார், தக்கலை, குளச்சல் என பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மட்டும் திறந்து செயல்பட்டன.

    அதேசமயம் அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் இரவில் நிறுத்தப்படும் பஸ்கள் அந்தந்த டெப்போக்களுக்கு கொண்டு வரப்பட்டன. காலை 5 மணிக்கு பிறகு பஸ்கள் டெப்போக்களில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையங்களுக்கு வந்தன. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.



    பஸ் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் என மாவட்டம் முழுவதும் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். போலீசார் ரோந்து வாகனங்களில் சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பலத்த பாதுகாப்பையும் மீறி குமரி மாவட்டத்தில் 8 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.

    தேங்காய்பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற 2 அரசு பஸ்கள் புதுக்கடை பகுதியில் மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டன. இதேபோல தக்கலை பகுதியில் 3 பஸ்களும், மார்த்தாண்டம், கொற்றியோடு, குலசேகரம் ஆகிய பகுதியில் தலா ஒரு பஸ்களும் என மொத்தம் 8 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசப்பட்டது தொடர்பாக அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் கண்டக்டர்கள் புகார் செய்தனர்.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசு பஸ்கள் இன்று களியக்காவிளை பஸ்நிலையத்துடன் நிறுத்தப்பட்டன. கேரள அரசு பஸ்கள் எதுவும் குமரி மாவட்டத்துக்கு இயக்கப்படவில்லை.

    நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் முன்பு காங்கிரஸ், தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இன்றைய போராட்டத்துக்கு கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் துறைமுகத்திலேயே விசைப்படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். குளச்சல் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    குமரியில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. பஸ்கள் சரியான நேரத்துக்கு வராததால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளானார்கள். ஏராளமானோர் தங்கள் பெற்றோரின் வாகனங்களில் பள்ளிக்கு வந்த னர். இதேபோல அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike
    ×