search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலை பகுதியில் கல்வீசி உடைக்கப்பட்ட அரசு பஸ்
    X
    தக்கலை பகுதியில் கல்வீசி உடைக்கப்பட்ட அரசு பஸ்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: குமரியில் 8 பஸ்கள் மீது கல்வீச்சு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் 8 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. #BharathBandh #PetrolDieselPriceHike
    நாகர்கோவில்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், திருவட்டார், தக்கலை, குளச்சல் என பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு பெட்டிக்கடைகள், டீக்கடைகள் மட்டும் திறந்து செயல்பட்டன.

    அதேசமயம் அரசு பஸ்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் இரவில் நிறுத்தப்படும் பஸ்கள் அந்தந்த டெப்போக்களுக்கு கொண்டு வரப்பட்டன. காலை 5 மணிக்கு பிறகு பஸ்கள் டெப்போக்களில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையங்களுக்கு வந்தன. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.



    பஸ் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் என மாவட்டம் முழுவதும் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். போலீசார் ரோந்து வாகனங்களில் சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பலத்த பாதுகாப்பையும் மீறி குமரி மாவட்டத்தில் 8 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன.

    தேங்காய்பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற 2 அரசு பஸ்கள் புதுக்கடை பகுதியில் மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டன. இதேபோல தக்கலை பகுதியில் 3 பஸ்களும், மார்த்தாண்டம், கொற்றியோடு, குலசேகரம் ஆகிய பகுதியில் தலா ஒரு பஸ்களும் என மொத்தம் 8 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசப்பட்டது தொடர்பாக அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் கண்டக்டர்கள் புகார் செய்தனர்.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசு பஸ்கள் இன்று களியக்காவிளை பஸ்நிலையத்துடன் நிறுத்தப்பட்டன. கேரள அரசு பஸ்கள் எதுவும் குமரி மாவட்டத்துக்கு இயக்கப்படவில்லை.

    நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் முன்பு காங்கிரஸ், தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இன்றைய போராட்டத்துக்கு கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் துறைமுகத்திலேயே விசைப்படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். குளச்சல் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    குமரியில் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கின. பஸ்கள் சரியான நேரத்துக்கு வராததால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளானார்கள். ஏராளமானோர் தங்கள் பெற்றோரின் வாகனங்களில் பள்ளிக்கு வந்த னர். இதேபோல அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். #BharathBandh #PetrolDieselPriceHike
    Next Story
    ×