என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bardru Hari Mahatab"
- சபாநாயகருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 240 எம்.பி.க்களுடன் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாரதீய ஜனதா இந்த தடவை ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காததால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள தெலுங்கு தேசம், 12 எம்.பி.க்கள் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து இருக்கிறது. நரேந்திர மோடி கடந்த 9-ந்தேதி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.
அவருடன் மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். இந்தநிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபா நாயகரை தேர்வு செய்யவும் பாராளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கூடியது. இன்றும், நாளையும் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர்.
முன்னதாக இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாராளுமன்ற தற்காலிக சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 7 தடவை தொடர்ந்து வெற்றிபெற்ற எம்.பி.யான பா.ஜனதா எம்.பி. பர்த்ரு ஹரி மகதாப் பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இந்த எளிய விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு தற்காலிக சபாநாயகர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்துக்கு வந்தார்.
இதையடுத்து புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா தொடங்கியது. பர்த்ருஹரி மகதாப் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இன்றைய கூட்டத்தை தொடங்கினார். முதலில் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பாராளுமன்ற ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் எம்.பி.யாக பதவி ஏற்க பிரதமர் மோடிக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று முதல் நபராக பிரதமர் மோடி எம்.பி.யாக பதவி ஏற்றார்.
இதைத் தொடர்ந்து தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்கு 5 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக் கப்பட்டது. அந்த குழுவில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோ பாத்யாய, பா.ஜ.க.வை சேர்ந்த ராதாமோகன் சிங், பகன்சிங் குலஸ்தே ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
பாராளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களுக்கும் தற்காலிக சபாநாயகரால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது என்பதால் அவருக்கு உதவ இந்த 5 எம்.பி.க்கள் குழு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3 எம்.பி.க்கள் அந்த குழுவில் இடம் பெற மறுத்துவிட்டனர்.
இதையடுத்து தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப்பும், பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய மந்திரிகள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு புதிய எம்.பி.க்களாக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இன்று மாலை வரை புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய எம்.பி.க்கள் பதவிஏற்பு தொடர்ந்து நடைபெறும். நாளையுடன் அனைத்து எம்.பி.க்களும் பதவி ஏற்று விடுவார்கள். அதற்கேற்ப மாநிலம் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்