search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anirudha"

    • டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன்.
    • டோனிபோல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.

    நெல்லை:

    டி.என்.பி.எல். போட்டியில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய திருச்சி வாரியர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது.

    முரளி விஜய் 16 பந்தில் 34 ரன்னும் (6 பவுண்டரி ,1 சிக்சர் ), அமித் சாத்விக் 21 பந்தில் 26 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அஸ்வின் கிறிஸ்ட் 2 விக்கெட்டும், மோகன் பிரசாத், எம். முகமது, லட்சுமி சத்யநாராயணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    துஷ்கர் ரகேஜா 26 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்பிரமணியன் ஆனந்த் 26 பந்தில் 35 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எம். முகமது 15 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். சரவணகுமார் 3 விக்கெட்டும், மதிவாணன் 2 விக்கெட்டும், பொய்யாமொழி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    திருப்பூர் தமிழன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 14.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன் என்ற பரிதாப நிலையில் இருந்தது.

    7-வது விக்கெட்டான துஷ்கர் ரகேஜா-எம்.முகமது ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தது. இந்த வெற்றி குறித்து திருப்பூர் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அணிருதா கூறியதாவது:-

    டோனி தலைமையில் ஐ.பி.எல். போட்டியில் நான் விளையாடிய போது அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன். அவரைப்போல் நான் அமைதியான அணுகுமுறையை எனது தலைமையில் பின்பற்றத் தொடங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற எஸ்.முகமது கூறும்போது, "எந்த சூழலிலும் நான் நெருக்கடியை உணரவில்லை இறுதிவரை களத்தில் நின்றால் வெற்றி பெற முடியும் என்று உறுதியோடு நம்பினோம். அதற்கான பலன் எங்களுக்கு கிடைத்தது" என்றார்.

    திருச்சி அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ராஹில் ஷா கூறும்போது, "எங்களது பேட்டிங்கில் இன்னும் 15-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம். அதே நேரத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றிக்கான தருணத்தை நாங்கள் தவறவிட்டு விட்டோம்" என்றார்.

    நெல்லையில் டி.என்.பி.எல். ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும்.

    30-ந் தேதியில் இருந்து திண்டுக்கல்லில் போட்டிகள் நடக்கிறது. அன்று நடைபெறும் ஆட்டங்களில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் (மாலை 3.15), மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன. * * * திருச்சி அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் தன்னை அவுட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் எம்.முகமதுவை பாராட்டினார்.

    ×