என் மலர்
கோவில்கள்
- இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.
- இந்த கோவில் வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.
திருச்சியிலுள்ள முக்கியமான அம்மன் கோவில்களில் புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலும் ஒன்று. திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ளதாலும், இந்த கோவிலின் குட்டிகுடி திருவிழா இந்த பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதாலும் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதி காவல்தெய்வமும் இதுவே ஆகும்.
கோவில் வரலாறும் திருவிழாவும்:
நாயக்கர்கள் காலத்தில், புத்தூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்கள் நிலத்தை வெட்டி உள்ளனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டது. எனவே தெய்வ வாக்கு கேட்டபோது, வன தெய்வம் காளி அங்கு குடியிருப்பதாகக் கூறியது. எனவே அங்கு காவல் தெய்வமாக இந்த அம்மனை வைத்து வழிபடத் துவங்கினர். இதற்கு இடையில் ஒரு மலையாள மந்திரவாதி அம்மனின் சக்தியை அடக்க சில ஏவல் வேலைகள் செய்தான். இதனால் பயந்துபோன கிராம மக்கள் அருகிலுள்ள இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி கோவிலில் அருள்வாக்கு கேட்டனர். அந்த கருப்புசாமி கடவுளும் தனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்தினால், அந்த மந்திரவாதியை அழிப்பதாகச் சொல்ல, அவர்களும் விழா எடுத்தனர். மந்திரவாதியும் அழிந்தான். அது முதல் இந்த கோவிலுக்கு "குட்டி குடி திருவிழா" என்று நடத்தப் படுகிறது.
கிராம மக்கள் குழி வெட்டும்போது இந்த அம்மன் தோன்றியதால் குழுமாயி அம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள். ( சற்று ஆராய்ந்து பார்த்தால், குளுமையான இந்த இடத்தில் அமர்ந்த அம்மன் , குளுமையான அம்மன் என்று பெயர் பெற்று குளுமாயி எனத் திரிபடைந்து, குழுமாயி என மாறி இருக்கலாம் என்பது எனது கருத்து)
ஆபத்தான ஆறுகள்:
இந்த கோவில் இருக்கும் இடத்தில் உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் ஒரே இடத்திலிருந்து பிரிகின்றன. இந்த ஆற்றில் இறங்க உள்ளூர் மக்களே அஞ்சுவர். நீர்ச்சுழலும் பாதுகாப்பற்ற சூழலுமே இங்கு நிலவுகிறது. கோவிலுக்கு மேலே மேற்கே உள்ள ஆற்றங்கரையானது பக்கவாட்டு சுவர் இல்லாமல் செல்கிறது. ஆற்றில் சிக்கி நிறையபேர் இறந்து இருக்கிறார்கள். எனவே கோவிலுக்குச் செல்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மீது கவனம் தேவை.
கோவில் அமைந்துள்ள இடம்:
திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப் பகுதியில் இந்த குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
- இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது.
- இந்த கோவில் ராகுவின் அம்சமாக விளங்குகிறது.
நவக்கிரக நாயகர்களின் பெயர் வரிசையில் எட்டாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது "திருத்தொலை வில்லிமங்கலம்" தெற்கு கோவில். இது ராகுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது.
மூலவர் பெயர்: சீனிவாச பெருமாள்.
உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாக தேவர்பிரான் பெருமாள்.
தாயார்: அலர்மேல் மங்கை தாயார், பத்மாவதி தாயார்.
விமானம்: குமுத விமானம்.
தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி.
கோவில் விருட்சம்: விளா மரம்.
கோவில் வரலாறு:
முற்காலத்தில் சுப்பரர் என்ற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவர். அவருக்கு ஒரு முறை பெரும் யாகம் செய்ய ஆசை ஏற்பட்டது. அந்த யாகத்தை நடத்துவதற்கு தகுந்த இடம் தேடி அலைகிறார் முனிவர். அந்த வேளையில் தான் தாமிரபரணியின் கரையில் தென்றல் தவழ்ந்து, அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கிய சோலையாக திகழ்ந்த ஒரு இடத்தை கண்டு அதனை யாகம் செய்ய ஏற்ற இடமாக தேர்வு செய்கிறார் சுப்பரர். அவர் மனது மகிழ்ச்சியடையும் படியே அனைத்து சிறப்புக்களையும் கொண்டு திகழ்ந்த அந்த இடத்தில் முதலில் தான் தங்குவதற்கு ஒரு குடில் அமைத்தார்.
பின்னர் வேள்விச்சாலை அமைப்பதற்காக அந்த இடத்தை கொத்தி சீர் செய்தார். அப்போது ஓர் இடத்தில் மண்ணை கொத்திய போது, அங்கு ஓர் தராசும், வில்லும் கிடைக்கிறது. அதனை தன் கைகளால் முனிவர் வெளியே எடுக்க, அப்போது அந்த தராசு ஓர் அழகிய ஆண் மகனாகவும், வில் ஓர் அழகிய பெண் மகளாகவும் மாறிட, முனிவரோ அதிசயித்து நின்றார். அப்போது அந்த ஆணும், பெண்ணும் தம்பதியாக முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கி நிற்கின்றனர். அவர்களை ஆசிர்வதித்த முனிவர், அவர்களிடம் தாங்கள் யார்? எப்படி இங்கு வந்தீர்கள் எனக் கேள்வி எழுப்ப, அதற்கு அந்த ஆண் மகனாக இருந்தவர் தான் ஒரு தேவகுமாரன் என்றும் தன் பெயர் வித்யாதரன், இந்த பெண் என் மனைவி, நாங்கள் இருவரும் தேவலோகத்தில் மகிழ்ச்சியாக இருந்த போது அங்கு வந்த குபேரனை மதிக்காமல் அவமரியாதை செய்த காரணத்தால், அவரால் சபிக்கப்பட்டு இந்த பூ உலகில் தராசாகவும், வில்லாகவும் மாறி வீழ்ந்தோம் என்றும், பின் தங்கள் தவற்றை உணர்ந்து குபேரனிடம் மன்றாடியதன் பலனாக, அவர் மனம் இறங்கி நீங்கள் இருக்கும் பூ உலகில் ஒரு தவ முனிவர் வருவார், அவர் கைகளால் நீங்கள் தீண்டப்படும் போது சாப விமோசனம் பெற்று சுய உருவை பெறுவீர்கள் என அருளினார் என்றும் அதன்படி தாங்கள் எங்களை தொட்டு தீண்டியதால் விமோசனம் பெற்றோம் எனக்கூறி முடித்தார்.
இதனைக் கேட்ட முனிவர் அகம் மகிழ்ந்து அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு, அந்த இடத்தில் முறைப்படி வேள்விச் சாலை அமைத்து, பல்வேறு யாகங்களை மேற்கொண்டார். யாகத்தில் இருந்து தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்பாகத்தையும் முறைப்படி அவர்களுக்கு பகிர்ந்து அளித்த அந்த முனிவரின் யாகத்தின் பலனாக இறுதியில் மகாவிஷ்ணு சீனிவாசனாக காட்சி அளித்து அந்த முனிவருக்கு அருளை வாரி வழங்கினார்.அந்த யாகத்தில் தேவர்களின் சார்பாக இருந்து அவிர்பாகங்களை ஏற்று பகிர்ந்து அளித்ததால் இத்தல பெருமாள் தேவர்பிரான் என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறார்.
மூலவர் சீனிவாச பெருமாள்:
கருவறையில் மூலவராக நின்ற கிருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் சீனிவாச பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபயம் காட்டியும், இடது கரத்தை தொடையில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார்.இங்கு தாயார்களுக்கென தனி சன்னதி இல்லை. அலர்மேல் மங்கை தாயார் மற்றும் பத்மாவதி தாயார் தனி உற்சவத் திருமேனிகளாகவே இங்கு எழுந்தருளி உள்ளார்கள்.
உற்சவர் தேவர்பிரான் சிறப்பு:
இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு தேவர்பிரானாக ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு:
தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையை ஒட்டி இரட்டை திருப்பதியின் ஒரு கோவிலான தேவர்பிரான் கோவில் அமையப்பெற்றுள்ளது. இது இரட்டை திருப்பதி என வழங்கப்படும் இரண்டு கோவில்களுள் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோவிலில் கோபுரங்கள் எதுவும் கிடையாது. உள்ளே சென்றால் முன் மண்டபத்தில் பலிபீடமும், கொடிமரமும் அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தில் உற்ச வராகிய தேவர்பிரான் பெருமாள், ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவி உடன் சேவை சாதிக்கிறார். பின்னால் கருவறையில் நின்ற கோலத்தில் சீனிவாச பெருமாள் காட்சி தருகிறார். உள்பிரகாரத்தில் பன்னிரு ஆழ்வார்களுக்கு சன்னதி இருக்கிறது. இங்கு தாயார்களுக்கு தனி சன்னதி கிடையாது. வெளிப் பிரகாரம் முழுவதும் நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது.
கோவில் சிறப்புக்கள்:
இங்கு பத்மாவதி தாயார் தன் மார்பில் மகா விஷ்ணுவை தாங்கி கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த கோவிலில் வழங்கப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது தீராத பல நோய்களையும் தீர்த்து வைப்பதாக ஐதீகம். நம்மாழ்வார் இத்தலத்தில் பதினொரு திருவாய்மொழி பாசுரமங்கள் (3371 முதல் 3281 ம் பாடல் வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.
இரட்டைத் திருப்பதி என வழங்கிவரும் இங்கு ஒரே இடத்தில் அருகருகே இரண்டு தனிக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளது. அதில் இக்கோவில் தெற்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது.
துலை எனப்படும் தராசும், வில்லும் இங்கு சாப விமோசனம் பெற்றதால் துலைவில்லிமங்கலம் என்ற பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படும் இக் கோவிலின் புராணப் பெயர் திருத்தொலைவில்லிமங்கலம் ஆகும்.
முக்கிய திருவிழாக்கள்:
கார்த்திகை மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் ஐந்தாம் நாள் இரட்டை கருட சேவை சிறப்பாக நடைபெறும்.
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல தேவர்பிரான் பெருமாள் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார். இதுதவிர ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்:
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருவைகுண்டத்தில் இருந்து தென் கிழக்கே சுமார் 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருத்தொலைவில்லிமங்கலம் எனும் இரட்டை திருப்பதி.நெல்லை புதியபேருந்துநிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் ஸ்ரீவைகுண்டம் சென்று, அங்கிருந்து தனியார் வாகனங்களில் இக்கோவிலை சென்றடையலாம்.
- சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.
- இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.
கோ" என்றால் பசு, அதே போல் "சே" என்றால் மாடு என்று பொருள். அதனால் சேவூரில் ஆட்சி செய்யும் இறைவனை ஆன்மிக சான்றோர் பலரும்
"மாட்டூர் அரவா" என்றே போற்றுகின்றனர். சேவூரின் புராண பெயர் ரிஷாபபுரி(மாட்டூர்) அதாவது மாடும் புலியும் ஒன்றாக விளையாடும் புண்ணிய பூமி இது. மேலும் சேவூர் கொங்கு நாட்டின் தலைநகர் என்பதை இத்திருக்கோவில் வரலாறு மூலம் அறியலாம்.
சோழர்களின் புகழ்பெற்ற அரசன் "கரிகாலன்" தான் இழந்த சோழநாட்டை சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் சோழநாட்டை(கோனாட்டை) கைப்பற்றி அரசன் ஆனான். அதேபோல் கிஸ்கிந்தாவை இழந்த வாலியும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்த பின்பே மீண்டும் கிஸ்கிந்தாவை கைப்பற்றி அரசன் ஆனான். ஆகையால் ஆட்சி கட்டில் இருபவர்களும் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களும் சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அரச பதவிகள் தேடி வரும் என்பதும் உண்மை.
இராமாயணம் நடந்த காலம் ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் என்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டு 4 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதியிலும் நடந்திருக்கலாம் என்றும் பல கருத்துகள் உள்ளன. ஆகையால் இத்திருத்தலம் சுமார் 7000 ஆண்டுகள் பழமை வாய்த்த திருத்தலம் என்று கருதப்படுகிறது.
வாலியும், சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள், கிஸ்கிந்தா பகுதியை ஆண்டு வந்த வாலி மிகவும் பலசாலி, வாலி இராவணனை எக்காலத்திலும் வென்றவன். இராவணனோ எமனை வென்றவன். இராவணனை வென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் ஒருவன் கார்த்தியவீயர்ஜுன், இன்னொருவன் வாலி. மாயாவி ஏன்ற அசுரன் கிஸ்கிந்தா பகுதி மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க முடிவு செய்த வாலி அவனிடம் போருக்கு தன் தம்பியுடன் சென்றான்.
அவனை இருவரும் துரத்தி சென்ற போது வாலியின் பலத்தை கண்டு அஞ்சி ஓடிய அரக்கன் ஒரு நீண்ட குகைக்குள் சென்று புகுந்துகொண்டான். சுக்ரீவனை விட வாலி வலிமையாலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதால் வாலி தன் தம்பி சுக்ரீவனை பார்த்து "தம்பி வேறு எந்த அரக்கனும் உள்ளே நுழையாதபடி நீ இங்கே வாசல் முன்பு நின்று பார்த்துக்கொள்" என்று கூறி விட்டு வாலி உள்ளே சென்று மாயாவியுடன் போரிட்டான். ஒரு ஆண்டு வரை சண்டை நடக்கிறது, அவர்களின் இரத்தம் குகை வாயில் வரை வந்து விட்டது, இதை பார்த்த சுக்ரீவன் வாலி இறந்திருக்கக் கூடும் என்று நினைத்து, மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என்று எண்ணிய சுக்ரீவன் கோபத்தில் அவசர அவசரமாக குகையை மூடி விட்டு கிஸ்கிந்தா திரும்பி சென்று விட்டான்.
வாலி மாயாவியை கொன்று விட்டதன் காரணமாக வாலிக்கு பிரம்மஹத்தி தோஷம் எற்பட்டது. வெளிய வந்த வாலி அடைக்கப்பட்ட கல்லை பார்த்து அதிர்ச்சி அடைந்தான், ஆனால் அவன் மிகுந்த பலசாலி என்பதால் கல்லை நகர்த்திவிட்டு வெளியே வந்தான். அவன் கிஸ்கிந்தா செல்லும் முன்பு அவனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று எண்ணினான். அப்போது வாலி வசிஷ்ட முனிவரிடம் சென்று வணங்கி தனக்கு எற்பட தோஷத்தை நிவர்த்தி செய்யுமாறு வேண்டினான். அதற்கு வசிஷ்டர் நீ இந்த வனத்தின் வழியாக செல் அங்கே ஒரு கடம்ப வனம் வரும் அதில் எந்த இடத்தில் மாடும் புலியும் ஒன்றாக விளையாடுகிறதோ அந்த இடம் தெய்வ தன்மை நிறைந்த இடம் ஆகும் அங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உனது தோஷம் அனைத்தும் நீங்கும் என்று அருளினார்.
அது போல வலி இங்கு வரும்பொழுது மாட்டின் முதுகின் மேல் புலி விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து இது இவ்வளவு புண்ணிய பூமியா என்று மிகவும் ஆச்சரியம் அடைந்தான். அதன்பின், இங்கு ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து தனது பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டான், அதன் பிறகு வசிஷ்டரும் நாரதரும் நமது புண்ணிய பூமிக்கு வந்து வாலி நதி என்ற தீர்த்ததை உண்டு பண்ணி வைத்தனர். புலியும் மாடும் ஒன்றாக விளையாடியதால் இது ரிஷாபபுரி என்று போற்றப்பட்டும் என்றும் உபதேசம் செய்தனர். அவ்வாறு வாலினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடமே நமது திருத்தலம் ஆகும். ஆகையால் இத்திருத்தலத்தின் மூலவர் வாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மேலும் இப்பகுதில் கபாலிக சைவ வழிபாட்டு முறை வழக்கத்திலிருந்த காரணத்தினால் இத்தலத்தின் மூலவரை கபாலிஸ்வரர் என்றும் அழைக்கபட்டார். அதுமட்டுமில்லாமல் இத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை விளக்கும் வண்ணம் இத்தலத்தின் முந்தைய அமைப்பு ஆவுடையராக இருந்தது. அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை அம்மனுக்கு என்று தனி சன்னதிகள் கிடையாது, சிவனையும் பார்வதியையும் லிங்கம் மற்றும் ஆவுடை என்ற ஒரே அமைப்பில் வழிபட்டு வந்தனர். இத்திருத்தலம் திருப்பணி செய்யும் முன்பு இந்த அமைப்பிலேயே இருந்த காரணத்தினால் இத்திருத்தலம் 7000 ஆண்டுகள் பழமையானது என்பதை அறியலாம்.
- மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் கருவறைக்குள் என்று ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கலாம்.
- ஏழு முறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் கிடைக்கும்.
ஜோதிர்லிங்கங்கள் இயற்கையாக, தானாகத் தோன்றுபவை. இவை மனிதனால் உருவாக்கப்படாத அதிசயங்கள். ஜோதிர்லிங்கங்கள் உயிரினங்களில் ஒளிந்து இருக்கும் இறைநிலையை பிரகடனப்படுத்துபவை. பூஜிப்பவர்களுக்கு ஆத்மபோதனை அளிப்பவை. வேதாந்த பிரம்மஞான தத்துவத்தை சூட்சுமமாக உணர்த்துபவை. விஞ்ஞான மெய்ஞான ரகசியங்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கும் எளிய பக்தி சாதனங்கள் இவை.
பல யுகங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ஸ்ரீ ராமனால் ராமலிங்கேஸ்வரர் என்ற ஜோதிர்லிங்கம் உருவாகியது. அதே போல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் அமைந்திருக்கும் சென்னப்பமலைத் திருத்தலத்தில் 2002-ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று பிரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகளின் அருளால் 'ஸ்ரீ பொன்முடி சூர்ய நந்தீஸ்வரர்' ஜோதிர்லிங்கம் பூமியிலிருந்து தானாக தோன்றியது. பல யுகங்களாகத் தொடர்ந்து வரும் உத்பவ வரிசையில் இது 13-வது ஜோதிர்லிங்கமாகும். இது தமிழ்நாட்டின் இரண்டாவது ஜோதிர்லிங்கம்.
தோற்றத்தில் நமக்குப் பழக்கப்பட்ட லிங்கத்தைப் போல உருவ ஒற்றுமை கொண்டிருந்தாலும், ஜோதிர்லிங்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் தோற்றம் கொள்பவை. ஏற்கனவே உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தால் இந்த உண்மை தெரியும். ஜோதி வடிவில் காட்சி தர பரமனே ஜோதிர்லிங்கங்களில் நிரந்தரமாக குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த உலகம் தோன்றிய நாள் முதல் கொண்டு இந்தியாவில் ஏற்கனவே பன்னிரெண்டு திருத்தலங்களில் ஜோதிர்லிங்கங்கள் தோன்றியுள்ளன.
பாற்கடலை தேவர்களும் அசுரர்களும், வாசுகி சர்ப்பத்தை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது வெளிவந்த அமிர்தத்தை, அசுரர்கள் பறித்துச்சென்றார்கள். அப்படி செல்லும்போது பூமியில் சிதறிய அமிர்தத் துகள்களே பின்னர் ஜோதிர்லிங்கங்களாக வெவ்வேறு கால கட்டங்களில் தோன்றின என்று புராணங்கள் கூறுகின்றன. அந்தந்த ஸ்தல புராணங்கள் ஜோதிர்லிங்கங்களின் பெருமைகளை பறைசாற்றினாலும், அவற்றில் பல ரகசியங்களும் மறைந்துள்ளன. ஆனாலும் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்ட தகவல்களை சுமந்து ஜோதிர்லிங்கங்கள் இப்போதும் மனித குலத்துக்கு வழிகாட்டியாக உள்ளது.
இத்தகைய அதிசய ஜோதிர்லிங்கம்தான் இந்த பூவுலகின் 13-வது ஜோதிர்லிங்கமாக சென்னப்பமலையில் 2002-ம் ஆண்டு உருவாகியது. இயற்கையாக, பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில், தானாக, தன்னிச்சையாக, ஏற்கனவே நிர்மாணம் செய்யப்பட்ட இடத்தில், உலகமே வழிபடும் மகாசிவராத்திரி அன்று குறிப்பிட்ட புண்ணிய திதியில், சர்வ வேதநியமங்களோடு, யாகங்களும், ஹோமங்களும், மந்திரங்களும் முழங்க, சூட்சும ரூபத்தில் முப்பத்துமுக்கோடி தேவர்கள் வணங்க, பரம்பொருளே சித்தனாகி, சித்தனே சிவமாகி, அருவமே உருமாகி, குருவாகி, விண்ணும் மண்ணும் ஜோதியாக இணைந்து, நீரோட்டம் கொண்ட கல் உயிரோட்டம் பெற்று, பூமியிலிருந்து மேலெழுந்து ஜோதிர்லிங்கமாக வெளிவந்தது. இதை 'லிங்கோத்பவம்' என்கிறோம்.
ஸ்ரீ பொன்முடி சூர்யநந்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட இந்த ஜோதிர்லிங்கம், ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியான ஆத்ம லிங்கம் இது. முடிவேயில்லாத ஆனந்தத்தையும், எல்லையில்லாத அமைதியையும், பிறவிப் பயன்தரும் பிரம்மஞானத்தையும் அள்ளித்தரும் கோடிலிங்கம். ஜென்ம ஸாபல்யம் தரும் அமிர்தலிங்கம். இந்த தெய்வீக அனுபவத்தை அனைவரும் இங்கே உணரலாம்.
தல வரலாறு
பரமேஸ்வரனின் உடலில் அங்கம் வகிக்கும் அகிலாண்டேஸ்வரி (அம்பிகை) முன்னொரு காலத்தில், 'தென் கைலாயம்' என்று போற்றப்படும் பனங்காட்டு பிரதேசமாக விளங்கிய இந்த சென்னப்பமலை திருத்தலத்தில் தவமிருந்தாள். சூரியன், சந்திரன், தேவேந்திரன், குபேரன் போன்ற தேவர்களுக்கும், இந்த பூவுலகில் உள்ள 84 லட்சம் ஜீவராசிகளுக்கும், சாப விமோசனம் அளிக்கும் வகையில் சென்னப்பமலை திருத்தலத்தில் அருள்பாலிக்க பரமேஸ்வரனிடம் வேண்டினாள்.
அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று, இதே தலத்தில் பின்னொரு காலத்தில் பிரம்மகுரு ஒருவரால் மகா சிவராத்திரி அன்று 'தானே ஜோதிர்லிங்கமாக இங்கே உத்பவமாகி, தன்னை வழிபடும் அனைத்து உயிரினங்களும் ஜென்ம சாப விமோசனம் பெறலாம்' என்று பரமன் வரம் அருளினார் என்று தலபுராணம் கூறுகிறது.
அதன்படி 2002-ம் ஆண்டு மகா சிவராத்திரி அன்று இத்தல ஜோதிர்லிங்கமாக தோன்றி, அனைத்து உயிரினங்களுக்கும் சாப விமோசனம் அளிக்கும் தலமாக மாறியது. அனைத்து உயிரினங்களோடு தேவர்களையும், தேவகணங்களையும் இங்கே பாகுபாடின்றி இணைத்து சாப விமோசனம் அளிப்பது இந்த தலத்துக்கு மேலும் சிறப்பு.
ஒவ்வொரு ஜோதிர்லிங்க திருவாலயமும் அதன் தலத்துக்கு ஏற்றவகையில் சிறப்பு வழிபாட்டு முறைகள், நியதிகள் கொண்டவை. அந்தவகையில் சென்னப்பமலை ஜோதிர்லிங்க வழிபாட்டு வழிமுறைகளும் எங்கும் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தவை. இங்கே உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஏழை-பணக்காரன், கற்றவன்-கல்லாதவன், ஆண்-பெண், குழந்தைகள், வயோதிகர்கள், ஜாதி, மதம் போன்ற எந்த பேதமும் இல்லாமல், அனைத்து உயிரினங்களும் ஆனந்தம், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெற்று 'நாளும், பொழுதும்' வளமும் பெற இறைவன் வரம் தரும் திருத்தலம் இது. மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் கருவறைக்குள் என்று ஜோதிர்லிங்கத்தை தொட்டு வணங்கலாம். ஏழு முறை தொட்டு வழிபடுவோருக்கு ஜென்ம சாப விமோசனம் கிடைக்கும்.
ஸ்ரீ பொன்முடி சூரியநந்தீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகையை தொழுபவர்களுக்கு, வித்யா (கல்வி, தொழில்) பாக்கியம், மாங்கல்ய (திருமணம்) பாக்கியம், சந்தான (குழந்தை) பாக்கியம் கிடைக்கும். முயல்வோருக்கு முக்தியும் கிடைக்கும்.
-வெ.நாராயணமூர்த்தி, வேலூர்.
- இந்த கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கிடையில் 18 கை வனதுர்க்கை உள்ளது.
- வன்மீக நாதசாமி கோவிலின் தல விருட்சம் நெல்லி மரம்.
சிவாலயங்களுக்கு பிரசித்தி பெற்ற தஞ்சை மாவட்டத்தில் குடமுருட்டி ஆற்றங்கரையோரம் நீங்கா புகழுடன் பக்தர்கள் மனதில் நிலையாக இடம் பிடித்துள்ள கோவில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவில்.
தஞ்சை மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்தபோது பல பகுதிகளில் சிவாலயங்கள் பலவற்றை கட்டி அதற்கு வழிபடும் முறைகளையும் வகுத்தனா்.
பண்டைய சோழ மன்னர்களும் அவர்களோடு இணைந்த வேத ஆராய்ச்சியாளர்களும் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன சிறப்புகள் என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் கோவில்களை அமைத்து அவற்றை சிறப்பாக பராமரித்து பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்தனர்.
அந்த வகையில் கட்டப்பட்டிருந்த பல்வேறு கோவில்கள் சிதிலம் அடைந்திருந்த போதிலும், பின்னர் அவற்றுக்குரிய சிறப்புகளை அறிந்து அவற்றை சீரமைத்து தினசரி வழிபாட்டுக்குரிய வகையில் இந்து சமய அறநிலைத்துறையும் மற்றும் ஆன்மீக பெரியோர்களும் செய்து வந்துள்ளனர்.
ஜோதிட வல்லுனர்கள்
சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய தஞ்சைக்கு அருகில் பல்வேறு சிவன் கோவில்களை எழுப்பி உள்ளதை நம்மால் அறிய முடிகிறது. அந்த வகையில் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தில் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வன்மீக நாதர் கோவில். ஒன்பத்துவேலி கிராமத்தின் வடகிழக்கில் சோமகலா அம்பாளுடன் வன்மீகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
ஒன்பத்துவேலி என்ற பெயர் ஒரு அபூர்வமான பெயராகும். ஜோதிட வல்லுனர்களும், கணித மேதைகளும் பண்டைய காலத்தில் வாழ்ந்த தலமே ஒன்பத்துவேலியாகும். தற்போதும் நவாம்சம், நவநீதிகள், நவபாஷாணம், நவ மூலிகைகள், நவசாரம், நவகற்கள், நவஜோதிகள், நவசக்திகள் என்பதாக ஒன்பது வகையான நவ சாதனங்கள் ஆன்மிக ரீதியாக பொங்கி பொழியும் தலம் என்பதால் ஜோதிடர்களும், குறிப்பாக எண்கணித ஜோதிடர்களும், நாடி கைரேகை ஜோதிடர்களும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம் வன்மீகநாதசுவாமி கோவில் ஆகும்.
நினைவாற்றல் பெருகும்
இங்கிருந்து வான்வெளிநட்சத்திர கோள் தரிசனங்களை பெறுதல் நல்ல நினைவாற்றலை பெற்றுத்தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், புற்றில் இருந்து தோன்றிய சிவலிங்கம் என்பதால் வன்மீகநாதசாமி என பெயர் வந்தது. வன்மீகம் என்பதற்கு புற்று என்று பொருள். அம்பாள், சோமகலா அம்பாள். இவர் சந்திரனின் அம்சத்தை பெற்று விளங்குபவராக அமைந்து அருள் வழங்கி வருகிறார். கோவில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளனர்.
வன்மீக நாத சாமி கோவிலின் தல விருட்சம் நெல்லி மரம். நெல்லிமரத்தின் அடியில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவற்றிற்கு அபிஷேகம் நடந்து வருகிறது. முற்காலத்தில் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் இருந்து குதிரையில் ஒன்பத்துவேலிக்கு வந்து முன்னிரவில் வானில் நட்சத்திர தரிசனங்களை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பிறந்த நாளில் வழிபாடு
ஒன்பத்து வேலி வன்மீகநாத சாமி கோவிலில் இருந்து வானில் விசேஷமான முறையில் நட்சத்திர தரிசனங்களை அந்த காலத்தில் பக்தர்கள் பெற்றார்கள் என்பது செவிவழி வந்த செய்தியாக அறியப் படுகிறது. ஒன்பத்துவேலியில் அருள்பாலிக்கும் வன்மீகநாதர், வான் மேகநாதர் என்றும் அழைக்கப்படுகிறாா்.
பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாளில் ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் ஒன்பத்துவேலி வன்மீகநாதர் வளமான வாழ்வை அருளும் வன்மீகநாதர் என அழைக்கப்படுகிறார். மேலும் உடலில் ஏற்படும் சரும நோய்கள் தீர்க்க வன்மீகநாதரை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும்.
9-ந் தேதி பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும். 9 என்பது செவ்வாய்க்கு உரிய எண் ஆகும். இதனால் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி உள்ளவர்கள் ஒன்பத்து வேலி வன்மீகநாதரை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும். இக்கோவிலில் தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைதிறந்து இருக்கும். இந்த கோவில் குடமுழுக்கு கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி நடந்தது.
18 கை வனதுர்க்கை
இந்த கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கிடையில் 18 கை வனதுர்க்கை உள்ளது. வனதுர்க்கையை எலுமிச்சை தோலில் விளக்கேற்றி வழிபட்டு வர பில்லி சூனியம், செய்வினை கோளாறுகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் வேறு எங்கும் 18 கை உடைய வனதுர்க்கை சன்னதி இல்லை, இத்திருக்கோவிலில் மட்டும் 18 கை வனதுர்க்கை உள்ளது. 18 கை வனதுர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் பூஜை நடந்து வருகிறது.
கோவிலுக்கு செல்வது எப்படி?
சென்னையில் இருந்து ஒன்பத்துவேலி வன்மீகநாதா் கோவிலுக்கு வர வரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பஸ்சில் பயணித்து பாம்பாலம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.
தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கூறிய பஸ் வழித்தடத்தில் பயணித்து கோவிலுக்கு செல்லலாம்.
- தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 206-வது தேவாரத்தலம் ஆகும்.
- இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன்பூண்டி விளங்குகிறது
மூலவர் - திருமுருகநாதஸ்வாமி, திருமுருகநாதர், முருக நாதேஸ்வரர்
அம்மன் - முயங்கு பூண்முலை வல்லியம்மை, ஆலிங்க பூஷணஸ்தனாம்பிகை, ஆவுடை நாயகி, மங்களாம்பிகை
தீர்த்தம் - சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
கோவில் வரலாறு:
புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 206-வது தேவாரத்தலம் ஆகும்.
சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகபூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று தனது தேவாரப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே என்று நிந்திப்பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார்.
இதற்குச் சான்று கூறும் வகையில் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று ஆக இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள். "இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன்பூண்டி விளங்குகிறது".
இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.
கோவில் அமைப்பு:
நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய தலம் திருமுருகன் பூண்டி. மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் 2 பிராகாரங்களுடன் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் சுமார் 2 1/2 அடி உயரம் உள்ளதாக தரிசனம் தருகிறார். மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.
கருவறை விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. உட்பிராகாரத்தில் நிருதி விநாயகர், 63 நாயன்மார்கள், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள் சந்நதிகள் உள்ளன. மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கம் 5 முகங்களும், பின்பக்கம் ஒரு முகமும் உடையதாக அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை வல்லியம்மையின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் 5 பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
கோவிலுக்கு உள்ளே பிரகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்த பிரமை பிடித்தவர்களை இந்த்ச் சிவஸ்தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிழா: மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
- ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவில் ஏழுநிலை கொண்ட கம்பீரமான ராஜகோபுரமாகும்.
- பூவராக சுவாமி மூலவராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
மூலவர் : ஸ்ரீ பூவராகன்
உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன்
தாயார் : அம்புஜவல்லி
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : நித்யபுஷ்கரணி
ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் பெற்றார்
ஸ்தல வரலாறு :
ஒருசமயம், இரண்யாட்சன் என்ற அசுரன் பூலோகத்தை கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனால் தேவர்கள் மிகவும் அச்சமுற்று பிரம்மாவை நாடினர். பூலோகத்தை மீட்பதற்காக தியானம் செய்தார். அப்போது அவருடைய வலது நாசியில் இருந்து பன்றி ரூபம் வெளிப்பட்டது. அந்த திவ்யமான பன்றி ரூபம் தன் உருவத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது. பகவான் விஷ்ணு பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என்று அனைவரும் உணர்ந்தனர்.
கடலுக்குள் சென்ற வராகபகவான் ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எந்த சிறு இடரும் ஏற்படாவண்ணம் சாதுர்யமாக தூக்கியபடி நீரிலிருந்து வெளிப்பட்டார். இதைக்கண்ட இரண்யாட்சன் கோபம் கொண்டு வராகமூர்த்தியைத் தாக்க, இருவருக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. இறுதியில் அசுரனை வீழ்த்தி பூமியைக் காத்தருளினார். பிரம்மாவும் தேவர்களும் வராக மூர்த்தியை வாழ்த்தித் துதித்தனர்.
மீண்டும் வைகுண்டம் திரும்பிச் செல்ல வராகர் எண்ணியபோது பூதேவி தன்னுடன் தங்கியிருக்கும்படி பகவானை வேண்டிக் கொண்டதாக நாரதர் புராணம் கூறுகிறது. பூமிதேவியின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீ முஷ்ணம் திருத்தலத்திலேயே பகவான் கோவில் கொண்டதாக ஐதீகம்.
ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவில் ஏழுநிலை கொண்ட கம்பீரமான ராஜகோபுரமாகும். திருக்கோவிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரைத் தரிசிக்கும் முன்பாக, தனி சந்நிதியில் அமைந்தருளும் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். கோவிலின் தென் கிழக்குத் திசையில் நித்ய புஷ்கரணி அமைந்துள்ளது. இதில் ஸ்நானம் செய்து அருகிலேயே சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணரின் தரிசனம் பெறுவது சிறப்பு.
இவ்வாலயத்தில் பூவராக சுவாமி மூலவராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தம் இடுப்பில் இருக்கும் சங்கு, சக்கரத்தைத் தன் இரு திருக்கரங்களால் மறைத்தவண்ணம் திருமேனி மேற்கு திசையை நோக்கியும் திருமுகம் தெற்கு திசையை நோக்கியும் அமையப்பெற்று அருள்காட்சி அருள்கிறார். உற்சவ மூர்த்தி யக்ஞ வராகர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயாருக்கு அம்புஜவல்லி என்பது திருநாமம்! தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லி தாயார்.
பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில், அவ்வூர் வழியாகச் சென்றார், மத்வ மதத்தைச் சார்ந்த யாத்ரிகர் ஒருவர். அவர், முஷ்ணத்திற்கு சென்று பூவராக ஸ்வாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் அவருக்கு நவாப்பற்றி தெரியவரவே, சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க, நவாப் பூரண குண மடைந்தாராம்.
அது முதல் நவாப், பூவராகப் பெருமானிடம் பக்தி கொண்டு, அவருக்குத் தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்கு சுவாமி எழுந்தருளும் போது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை நிர்மானம் செய்து, அங்கு உற்சவம் சிறப்பாக நடைபெற ஏராளமான நிலபுலன்களை எழுதி வைத்தார். இதனைத் தொடர்ந்து பரிபாலிக்க தர்ம ஸ்தாபனம் ஒன்றையும் ஏற்படுத்தினார்.
இன்றும் முஷ்ணம் தலத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்ம உற்சவத்தில் பூவராக சுவாமி தீர்த்தவாரிக்கு கிழக்கு சமுத்திரத்திற்கு எழுந்தருளும்பொழுது, முகமதியர்கள் வசிக்கும் தைக்கால் கிராமத்தின் உள்ளே நுழைந்து வீதியில் ஊர்வலமாக வருவது வழக்கம். அப்பொழுது கிராமவாசிகள் சீர்வரிசைகளுடன் எதிர்கொண்டு அழைத்து நவாப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியின் மேல்புறம் வாசல் எதிரில் சுவாமியை நிறுத்தி மாலை அணிவித்து சர்க்கரை, பழம் நைவேத்தியம் கொடுத்து கற்பூர தீபாரதனை செய்விக்கின்றனர். பின்னர் சுவாமி கோவில் சிப்பந்திகள் கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்துச் சென்று வலம் வருகிறார்கள்.
கோவில் சிறப்புகள் :
திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். திருப்பதி – திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.
பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் யக்ஞவராகர் என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திருமகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர்.
வட இந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் மும்மூர்த்தியும் தானே என்ற நிலையில் சுயம்பு மூர்த்தியாக திகழ்ந்து பெருமை சேர்க்கிறார்.
தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது. அங்கே பிரகன் நாயகி சமேத நித்தீஸ்வரர் வீற்றிருக்கும், பழங்கால சிவாலயம் ஒன்றும் இருக்கிறது.
பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன.
ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராகசுவாமி கோவில் சிறப்பு முஸ்தா சூரணம் என்கிற கோரைக்கிழங்கு பிரசாதம். ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் பன்றி அவதாரம் எடுத்துள்ளார். இதன் காரணமாக அவரது அவதாரத்திற்கு கோரைக்கிழங்கு மிகவும் பிடித்தமான உணவு என்பதால் கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகிய க்ஷேத்திரங்களுடன் இணைந்து, ஸ்ரீமுஷ்ணம் எட்டு முக்கிய சுயம்பு க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
அருணகிரிநாதர் தரிசித்த தலம் ஸ்ரீமுஷ்ணம். இது புகழ்பெற்ற ஆதிவராகப்பெருமாள் கோவில் கொண்டுள்ள அருமையான தலம். வைஷ்ணவர்கள் இதை "ஸ்வயம்வ்யக்த ஸ்தலம்" – தானாகவே தோன்றி விளங்கும் தலம் என்று கொண்டாடுகிறார்கள். இவ்வாறு எட்டுத் தலங்கள் உள்ளன. இங்கெல்லாம் லக்ஷ்மியே பெருமாளைப் பூஜித்ததாக வரலாறு. இங்குள்ள பெருமாள் மூர்த்தம் இயற்கையாகவே எழுந்த சாளக்ராமத்தால் அமைந்
இங்கு வந்த அருணகிரிநாதர், இங்கு நித்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருகனைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இரண்டு திருப்புகழ்ப் பாடல்கள் கிடைத்துள்ளன. பெருமாளைப் போற்றும் நம் ஸ்வாமிகள், ஆதிவராகப் பெருமாளையும் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
அமைவிடம் :
இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை – மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.
முகவரி:
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோவில்,
ஸ்ரீமுஷ்ணம்- 608 703
கடலூர் மாவட்டம்.
- இந்த கோவில், மூன்று நிலை ராஜ கோபுரத்தை கொண்டது.
- இந்த கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது தனி சிறப்பாகும்.
- இந்த கோவில் சனியின் அம்சமாக விளங்குகிறது.
நவதிருப்பதி எனப்படும் ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஏழாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஆறாவதாகவும் விளங்கும் கோவில் "திருக்குளந்தை". இது சனியின் அம்சமாக விளங்குகிறது.
திருக்குளந்தை என்னும் வரலாற்று பெயரை கொண்ட இத்தலம் தற்போது "பெருங்குளம்" என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
கோவில் வரலாறு:
முற்காலத்தில் தடாகவனம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் வேதசாரன் என்னும் அந்தணன் தன் மனைவி குமுதவல்லியோடு வாழ்ந்து வந்தான். இவர்களின் இல்லறம் நல்லறமாகவே சென்றாலும் இவர்களுக்கு மக்கள் பேறு இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது. இதனால் தம்பதியர் மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்தனர். தங்கள் குறைகள் நீங்க இவர்கள் பல்வேறு கோவில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டனர்.
இவர்களின் பக்திக்கு இறங்கிய பெருமாள், தன்னு டன் இருந்த மகாலட்சுமியை அழைத்து அவர்களின் குறையை போக்க குழந்தையாக அவதரிக்கும்படி கூறுகிறார். மகாலட்சுமியும் இதற்கு சம்மதிக்க இவர்களின் கருணையினால் குமுதவல்லி கர்ப்பம் தரிக்கிறாள். சரியாக பத்தாவது மாதம் குமுதவல்லிக்கு குழந்தை பிறக்கிறது. மகாலட்சுமியே குழந்தையாக வந்து அவதரித்தாள். அந்த குழந்தைக்கு கமலாவதி என்று பெயர் சூட்டி பாலூட்டி, சீராட்டி, பாசமழை பொழிந்து வளர்த்து வருகின்றனர் அந்த தம்பதியினர்.
பருவம் எய்திய கமலாவதி பேரழகியாகவும், கல்வியில் சிறந்த மங்கையாகவும் வளர்ந்து வந்தாள். இவளின் அழகில் மயங்கி பக்கத்து ஊர்களிலிருந்து நிறைய பேர்கள் பெண் கேட்டு வந்தனர். ஆனால் கமலாவதியோ சதா சர்வ காலமும் ஆண்டாளை போல பரந்தாமனை நினைத்தபடியே வாழ்ந்து வந்தாள். இந்நிலையில் கமலாவதிக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்ய, கமலாவதி பரந்தாமனை நினைத்தபடியே தன்னை வந்து ஆட்கொள்ளுமாறு வேண்டி கொண்டிருந்தாள்.
கமலாவதியை ஆட்கொள்ள செவிசாய்த்த பெருமாளும் ஒருநாள் மாய கண்ணன் தோற்றத்தில் திருக்குளந்தை ஊருக்கு வருகிறார். அவரை கண்ட கமலாவதி அவர் திருமுகத்தில் இருந்த தெய்வீக ஒளியை கண்டு அவரை கண்ணபிரானாக உணர்கிறாள். இப்படியிருக்க ஒருநாள் கமலாவதி தன் தோழியர்களுடன் குளத்திற்கு சென்று குடத்தில் நீர் நிரப்பி திரும்பி வருகையில் பெருமாள், கமலாவதி முன் தோன்றி அவளை ஆட்கொண்டார்.
அவருடைய திருமுகத்தை கண்ட நொடியில் கமலாவதியும் அவருடன் சென்று தற்போது கோவில் சன்னதி அமையப்பெற்ற இடத்துக்கு சென்று மறைந்துவிட்டனர். இதனை கண்ட தோழியர்கள் பதறியபடியே ஊருக்குள் சென்று நடந்ததை கூற, வேதசாரன் தன் மனைவியை அழைத்து கொண்டு ஊர் மக்கள் புடை சூழ அந்த இடத்திற்கு வந்து தன் மகள் கமலாவதியை தேடுகிறான்.
அங்கு பெருமாளும், கமலாவதியும் அர்ச்சாவதார திருமேனியாய் காட்சியளிக்க, அப்போது வானத்தில் இருந்து பெருமாள் அசரீரியாக., வேதசாரனே உன் பக்திக்கு இறங்கி மகாலட்சுமியையே உமக்கு குழந்தையாக பிறக்க செய்தோம், தற்போது அவள் என்னை சேரும் நேரம் வந்ததால் யாமே அவளை ஆட்கொண்டோம் எனக் கூறியருளினார். இதனைக் கேட்ட ஊர் மக்களும், வேதசாரன் மற்றும் அவன் மனைவி குமுதவல்லியும் அளவில்லா மகிழ்ச்சி கொண்டு பெருமாளை துதித்தார்கள்.
அசுமசாரன் மீது கூத்தாடிய வரலாறு:
முற்காலத்தில் அசுமசாரன் என்னும் அரக்கன் ஒரே சமயத்தில் ஆயிரம் பெண்களை மணம் முடிக்க ஆவல் கொண்டு ஒவ்வொரு பெண்களாக கடத்திச் சென்று இமயமலையில் சிறை வைக்கிறான். ஒருவழியாக 998 பெண்களை சிறைபிடித்த பின்னர், மீதமுள்ள இரண்டு பெண்களை தேடி வான் வழியே சஞ்சரிக்கும் போது, வேதசாரனின் மனைவி குமுதவல்லியை காண்கிறான். அவளின் அழகில் மயங்கிய அசுமசாரன் அவளையும் கடத்திச் சென்று இமயமலையில் சிறை வைத்தான்.
இங்கு வேதசாரன் தன் மனைவியை காணாமல் பெருமாளிடம் முறையிட, பெருமாள் வேதசாரனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நேராக இமயமலைக்கு சென்று குமுதவல்லியையும் மற்ற 998 பெண்களையும் மீட்டு அனுப்பி வைத்துவிட்டு, திருக்குளந்தை சேர்கிறார். அப்போது இந்த விஷயத்தை அறிந்து கொண்ட அரக்கன் அசுமசாரன் திருக்குளந்தைக்கு வந்து பெருமாளுடன் போரிடுகிறான். அப்போது பெருமாள் விசுவரூபம் எடுத்து அசுமசாரனின் பாதங்களை பிடித்து தலைகீழாக அவனைத் தூக்கி தரையில் அடித்து அவனை கீழே கிடத்தி அவன் தலை மீது ஏறி கூத்தாடினாராம். இதனால் தான் இத்தல பெருமாளுக்கு மாயகூத்தன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
வியாழ பகவான் சாப நிவர்த்தி பெற்ற வரலாறு:
முற்காலத்தில் தேவர்களின் குருவாக விளங்கிய பிரகஸ்பதி என்னும் வியாழ பகவான், பெண்ணாசையால் ஏற்பட்ட மோகத்தால் சாபம் பெற்றுவிட, அந்த சாபம் தீர இங்கு பெருமாளை வழிபட்டு சாப நிவர்த்தியும் பெற்றுள்ளார். அப்படி அவர் முன் பெருமாள் காட்சியளிக்கும் போது முன்னர் அசுமசாரன் அரக்கனை அழித்து அவன் மீது மாயக்கூத்தாடிய அந்த நடன கோலத்தை தனக்கு காட்டியருள வேண்டும் என கேட்க, அவருக்கு மாயக்கூத்தாடிய கோலத்தில் பெருமாள் காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கருடனின் ஆணவத்தை நீக்கிய வரலாறு:
முன்பு குமுதவல்லியை அசுமசாரன் கடத்தி சென்ற போது, அவளை மீட்க செல்ல பெருமாள் ஆயத்தமாக கருடனை தன் ஓர கண்ணால் பார்க்க, கருடனோ தன்னை விட்டால் பெருமாளை சுமக்க யாரும் இல்லை என்ற நினைப்பில் ஆணவத்தோடு மெதுவாக புறப்பட தயாராக, அதனை அறிந்த பெருமாள் உடனே தன் முதுகில் கருடனை சுமந்தபடி இமயமலைக்கு பயணித்தாராம். இதனால் மனம் வருந்தி தனது ஆணவம் நீங்கி பெருமாளின் பாதங்களில் சரணடைந்தாராம் கருடாழ்வார். எனவே கருடனின் ஆணவம் தீர்ந்ததாக ஒரு வரலாறும் இங்கு கூறப்படுகிறது.
மூலவர் வேங்கடவாணன்:
கருவறையில் மூலவராக நின்ற கிருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் வேங்கடவாண பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபயம் காட்டியும், இடது கரத்தை தொடையில் வைத்தபடி திருப்பதியில் உறையும் பெருமாளை போன்றே காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு சீனிவாசப் பெருமாள் என்ற பெயரும் வழங்கி வருகிறது.
தாயார்கள் குளந்தைவல்லி, அலர்மேலு மங்கை:
இங்கு தாயார்களுக்கு என தனி சன்னதி இல்லை. கருவறையில் பெருமாளுக்கு முன் அலர்மேலுமங்கை தாயாரும், இங்கு பிறந்து வளர்ந்து பெருமாளை மணாளனாக பெற்ற கமலாவதி என்னும் குளந்தைவல்லி தாயார் பெருமாளின் மார்போடு ஐக்கியமான கோலத்திலும் வேங்கடவாண பெருமாளோடு சேர்த்தியாக காட்சி அளிக்கிறார்கள்.
மாயக்கூத்தன் கோவில் உற்சவர் சிறப்பு என்ன?
இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு மாயக்கூத்தர் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார். இவருடன் இங்கு கருடாழ்வரும் இரு கரங்கள் கூப்பியபடி உற்சவராக காட்சி தருவது சிறப்பம்சம். மாய கண்ணனாக வந்து கமலாவதியை ஆட்கொண்டதாலும், அசுமாசூரனை வதைத்து அவன் மீது ஏறி கூத்தாடியதாலும் இவர் மாயக்கூத்தர் என்று போற்றப்படுகிறார்.
நவக்கிரக சன்னதி:
பொதுவாகவே வைணவ கோவில்களில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி என்பது இருக்காது. ஆனால் இங்கு திருக்குளந்தை மாயக்கூத்தர் கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது தனி சிறப்பாகும். இங்குள்ள பிற நவ திருப்பதி கோவில்களிலும் கூட நவக்கிரக சன்னதி கிடையாது.
கோவில் அமைப்பு:
தாமிரபரணி ஆற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ள இந்த கோவில், மூன்று நிலை ராஜ கோபுரத்தை கொண்டது.
இந்த ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் உள்ளே கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் கருவறைக்கு நேர் எதிரே கருடன் சன்னதி உள்ளது.
அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தில் உற்சவர் மாயக்கூத்தர், ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாகவும், இருகரம் கூப்பிய கருடாழ்வாருடனும் காட்சிதருகிறார். அவருக்கு பின்புறம் கருவறையில் மூலவர் சீனிவாச பெருமாள் நெடிது உயர்ந்த நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார்.
கோவில் பிரகாரத்தில் வைணவ திருக்கோவிலின் பரிவார மூர்த்திகள் சன்னதிகளும் உள்ளன. இதுதவிர முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.
வடக்கு திருச்சுற்றில் பரமபத வாசலும், அதற்குரிய மண்டபமும் அமையப்பெற்றுள்ளன.
கோவில் சிறப்புக்கள்:
இங்கு கருவறையில் உள்ள பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதியை போன்றே திருக்கோலம் காட்டியருளுகிறார். இக்கோவில் விமானமும் திருப்பதியே போன்றே ஆனந்த நிலைய விமானம் என்றே அழைக்கப்படுகிறது.
திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் நாச்சியார் பூ உலகில் பிறந்து, வளர்ந்து, ரங்கநாதனை மணமுடித்ததை போலவே இந்த திருக்குளந்தை தலத்திலும் கமலாவதி நாச்சியார் பூ உலகில் பிறந்து, வளர்ந்து, பரந்தாமனை மணமுடித்தாள், மேலும் இங்கு திருவில்லிப்புத்தூரைப் போலவே பெருமாளுடன் கருடாழ்வாரும் உற்சவராக இருப்பதும் இரண்டு தலத்திற்கும் உள்ள ஒற்றுமை ஆகும்.
நம்மாழ்வார் இத்தலத்தில் ஒரு திருவாய்மொழி பாசுரம் (3361) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.
நவதிருப்பதி கோவில்களுள் இந்த திருக்குளந்தை தவிர்த்து வேறெந்த கோவில்களிலும் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை.
இந்த தலத்தில் நம்மாழ்வார் தன்னைக் காதலியாகவும், மாயக்கூத்தனை காதலனாகவும் பாவித்து பாசுரங்கள் படைத்துள்ளார். அந்த அளவுக்கு இந்த பெருமாள் மாயகூத்தர் அழகுற காட்சியளிக்கிறார்.
இக்கோவில் மடப்பள்ளியில் இருந்து கழனி தண்ணீர் வெளியேறும் இடத்தில் கழனி தொட்டியான் என்னும் திருநாமம் கொண்டு ஒரு காவல் தெய்வமானவர் காட்சித் தருகிறார். இந்த திருக்குளந்தை தலத்தை பூர்வீகமாக கொண்ட பல குடும்பங்களுக்கு இவர் குல தெய்வமாக விளங்கி வருகிறார். இவருக்கு தை மாதம் கடை வெள்ளி அன்று திருவிழா நடைபெறுகிறது.
மாயக்கூத்தன் திருக்குளந்தை கோவிலின் முக்கிய திருவிழாக்கள் என்ன?
பங்குனி மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் இறுதியில் நடைபெறும் தெப்ப திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல பெருமாள் மாயக்கூத்தர் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார்.
இது தவிர ஆடி பூரம், ஆடி சுவாதி, ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு விமரிசையாக நடைபெறும்.
அமைவிடம்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருவைகுண்டத்திலிருந்து கிழக்கே 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருக்குளந்தை.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் திருவைகுண்டம் சென்று, அங்கிருந்து நகரப் பேருந்துகளில் இந்த கோவிலை சென்றடையலாம்.
- இத்தல இறைவன் சதுர வடிவ ஆவுடையார் மீது வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
- தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.
தஞ்சாவூரின் தென்பகுதியில் கோனூர்நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ளது, கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். அகத்திய மாமுனி வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. 'அகம்' என்பதற்கு 'மனம்' என்றும் பொருள் உண்டு. மனதை நல்வழிபடுத்தும் இறைவன் என்பதால், இவருக்கு 'அகத்தீஸ்வரர்' என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இன்றைய நவீன உலகில், மனக்கவலை இல்லாதவர்கள் எவரும் இல்லை. கோடீஸ்வரர்களுக்கும் கூட மன நிம்மதி இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் துன்பம் நீக்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி, மனக்கவலையை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவராக கோனூர்நாடு அகத்தீஸ்வரர் விளங்குகிறார்.
இத்தல இறைவனான அகத்தீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் மீது வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு. சித்தர்கள் வழிபட்ட கோவில்களில்தான், சிவபெருமான் இத்தகைய அமைப்பில் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது. இத்தல இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெரிய நாயகி என்று அழைக்கப்படும் இத்தல அம்பாள், தெற்கு நோக்கி காட்சி தருகிறாா். இறைவனைப் போலவே, இத்தல அம்பாளும், பெண்களின் மன உறுதியை மேம்படச் செய்யும் சக்தி படைத்தவராக திகழ்கிறார்.
அகத்தீஸ்வரர் கோவிலின் வலதுபுறம் வளவன்ட அய்யனார் கோவிலும், இடதுபுறம் மகா மாரியம்மன் கோவிலும் இருக்க, நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டின் போது நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம். திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ச்சியாக 21 பிரதோஷ நாட்களில், நந்தியம் பெருமான், ஈசன், அம்பாள் ஆகியோருக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு களித்து வழிபாடு செய்தால் விரைவில் திருமண யோகம் வாய்க்கும். குழந்தைச் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு இத்தல இறைவன், இறைவி, நந்தியம்பெருமான் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நின்று வழிபடும் வகையில் சன்னிதிகள் அமையப்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள். தொடர்ச்சியாக 21 திங்கட்கிழமைகள் இத்தல இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்குவதோடு, யோகம் மிகுந்த வாழ்க்கை அமையும் என்கிறார்கள். தொடர்ந்து 48 நாட்கள், கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, 21 தீபம் ஏற்றி, அடி பிரதட்சணம் செய்து இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான தீராத நோய்களும் தீரும்.
இந்த ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, ஜாதிபத்திரி, ஜாதிக்காய் ஆகியவற்றை இறைவனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால், கல்வியிலும் தொழிலிலும் மேன்மை வந்து சேரும்.
தேய்பிறை அஷ்டமி அன்று இத்தலத்தில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றால் தனித்தனியாக 3 தீபம் ஏற்றி, மிளகு மாலை சாற்றி வழிபட்டால், எப்பேர்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும் அகலும். மேலும் தீராத பகை நீங்குவதோடு, குடும்ப பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
இந்தக் கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் பின்புறத்தில் லிங்கோத்பவர் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். தவிர தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கோடி விநாயகர், பிரகார மூர்த்திகள், பிரம்மா, துர்க்கை, சூரியன், பைரவர், நவக்கிரகங்களும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இவ்வாலயத்தில் கார்த்திகை மாத சோமவார பூஜைகள், பிரதோஷம், மகா அன்னாபிஷேகம், மகா சங்காபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், தேய்பிறை அஷ்டமி, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி, ருத்ராட்ச மாலை பந்தல் தரிசனம் போன்ற சிறப்பு நிகழ்வுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி வழிபாட்டின் போது நான்கு கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம், ருத்ரயாகம், சங்காபிஷேகம், அன்னதானம் நடைபெறும். அன்றைய தினத்தில் இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தருவார்.
ருத்ராட்ச பந்தல்
சிவபெருமானின் கண்ணீரே, ருத்ராட்சமாக உருவானதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பந்தலை, இந்த ஆலய இறைவன் அகத்தீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் சன்னிதிகளில் பொருத்தியுள்ளனர். சிவ ஆலயங்களில் ருத்ராட்ச பந்தல் அமைந்திருப்பது அரிதான ஒன்று. ருத்ராட்ச பந்தலில் காட்சி தரும் சிவனை வழிபட்டால் பிறவி பலனை அடையலாம் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பை கொண்டுள்ள கோனூர்நாடு அகத்தீஸ்வரரை வணங்கினால் பாவங்களும், தீராத ஜென்ம தோஷங்கள் தீரும் என்கிறாா்கள்.
அமைவிடம்
தஞ்சாவூரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஒரத்தநாட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் ரெயில்நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பழைய பஸ் நிலையம் சென்று, கோனூர்நாடு செல்வதற்கான பஸ்களில் ஏறி கோவிலை அடையலாம்.
-சண்முகம், தஞ்சாவூர்.
- கடல் வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள், நகரத்தார்.
- நகரத்தாரின் 9 ஆலயங்கள் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப, கடல் வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள், நகரத்தார். காவிரிப்பூம்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த இவர்கள், ஆழிப்பேரலை மற்றும் வேறு சில மாறுதல்களின் காரணமாக, பாண்டிய நாட்டிற்கு வந்தனர். அவர்கள் வசிப்பதற்கு பாண்டிய மன்னர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கொடுத்தார். நெடுங்காலம் காரைக்குடியில் வசித்த நகரத்தார், நாளடைவில் ஒன்பது ஊர்களுக்கு பிரிந்தனர். அவை காரைக்குடியைச் சுற்றியுள்ள, இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன் கோயில், நேமங்கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, பிள்ளையார்பட்டி, இரணியூர் ஆகும். இங்கிருக்கும் ஒன்பது ஆலயங்கள், நகரத்தார் ஆலயங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
இளையாத்தன்குடி
இங்கு மிகவும் பழமையான கயிலாயநாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் பாண்டிய மன்னரால் கி.பி. 707-ல் கட்டப்பட்டிருக்கிறது. தேவர்கள் அனைவரும் அசுரர்களுக்கு பயந்து பல இடங்களில் மறைந்து வாழ்ந்தனர். அப்போது தேவர்களுக்கு மனநிம்மதியை வழங்கிய இடம் இது. எனவே அங்கு மணலில் ஒரு சிவலிங்கம் செய்து வழிபட்டனர். சிவனருளால், பைரவர் தோன்றி அரக்கர்களை அழித்து, தேவர்களை காத்தார். தேவர்களை இளைப்பாறச் செய்த காரணத்தால், இந்த ஊர் 'இளையாற்றங்குடி' என்று பெயர் பெற்றது. அதுவே 'இளையாத்தன்குடி' ஆனது. இவ்வாலய இறைவனின் திருநாமம், கயிலாயநாதர். அம்பாளின் திருநாமம், நித்யகல்யாணி. வெளிப் பிராகாரத்தில் சிறிய சன்னிதியில் தனியாக அரசமங்களேஸ்வரர் மற்றும் மங்களாதேவி பிரதிஷ்டையாகி இருக்கிறார்கள். இந்த ஆலயம் காரைக்குடியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.
இரணியூர்
காரைக்குடியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது, இரணிக் கோயில். இங்கு ஆட்கொண்டநாதராக இறைவனும், சிவபுரந்தேவியாக அம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர். ஐந்து நிலை கொண்ட கோபுரம் உள்ளது. இவ்வாலயத்தின் சிற்ப வேலைப்பாடுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அழகு. கோவில் மேல் உத்திரத்தில் மூலிகைச்சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள், அம்மன் சன்னிதி முன் நவதுர்க்கைகளும் தூண்களில் அணிவகுத்து நிற்கும் கோலம் போன்றவை கண்கொள்ளாக் காட்சிகளாகும். பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.
பிள்ளையார்பட்டி
இங்கு மூலவராக விநாயகர் அருள்பாலிக்கிறார். கற்பக விநாயகர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார். கருவறையில் இரண்டு கரங்களில் ஒன்றில் லிங்கத்தையும், மற்ெறாரு கரத்தால் இடுப்பு கச்சையையும் பிடித்தபடி இருக்கிறார். துதிக்கை, வலது பக்கம் சுழன்று உள்ளது. இது ஒரு குடவரைக்கோவில். விநாயகர் சிலை, அந்த குகை பாறையோடே செதுக்கப்பட்டுள்ளது. விநாயகரை அடுத்துள்ள சிவபெருமான், திருவீசர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். ஆவணி மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா, இங்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
நேமங்கோயில்
காரைக்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நேமநாதர் ஆலயம். இது கி.பி. 714-ம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுவாமியின் பெயர் நேமநாதர், ஜெயங்கொண்ட சோழீசர் என்பதாகும். அம்பாள் திருநாமம் சவுந்திரநாயகி. இக்கோவில் ஐந்துநிலை கொண்ட கோபுரத்துடன் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் விநாயகர் பல்வேறு கோலங்களில் காட்சி தருகிறார். நின்ற திருக்கோலம், நடன கணபதி, வல்லப கணபதி, தசபுஜ கணபதி என்று விநாயகரின் வித்தியாசமான சிற்பங்களை இங்கே தரிசிக்கலாம். அதேபோல் ஆறுமுகப்பெருமானும் பன்னிரு தோள்களுடன் பல ஆயுதங்களைத் தாங்கி அருள்பாலிக்கிறார்.
வேலங்குடி
காரைக்குடியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது, இந்த ஊர். வேல மரங்கள் அதிகமாக உள்ளதால் இப்பெயர் வந்தது. சுவாமியின் திருநாமம் கண்டீசர். அம்பாளின் பெயர், காமாட்சி. இந்த ஆலயம், மூன்று நிலைகள் கொண்ட சிறிய கோபுரத்துடன் உள்ளது. இங்கே மாணிக்கவாசகரும், அவருக்கு அருகில் யோக தண்டமும் உள்ளது. இந்த தண்டம், நகரத்தார்களுக்கு உபதேசம் கொடுக்கும் குருவிற்கு உரியதாம். இதற்கு இன்றும் பூஜை செய்யப்படுகிறது. பைரவருக்குத் தனிச் சன்னிதி இருக்கிறது.
மாத்தூர்
காரைக்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, மாத்தூரில் உள்ள அதோதீஸ்வரர் கோவில். இது 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ஐந்து நிலைகள் கொண்ட நெடுங்கோபுரம் நம்மை வியந்து பார்க்க வைக்கிறது. ஆலய கொடி மரத்தருகே நந்தியம் பெருமான் சிம்ம பீடத்தில் அமர்ந்திருப்பது எங்குமே காணமுடியாத ஒன்று. இத்தல இறைவனின் திருநாமம் அதோதீஸ்வரர். அம்பாள் - பெரிய நாயகி. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடத்துடன் காட்சி தருவது அரிதானது. இங்குள்ள நந்தியம்பெருமானுக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்வதாக நேர்ந்து கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
சூரக்குடி
காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்த இடம். மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. சூரை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இத்தலத்திற்கு சூரக்குடி என்ற பெயர் வந்தது. சுவாமியின் திருநாமம், தேசிகநாதர். அம்பாளின் திருநாமம், ஆவுடைநாயகி. மாமரம் ஆலய தல விருட்சமாக உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி இரண்டு சிங்கங்களுடன் காட்சி தருகிறார். அவர் அமர்ந்திருக்கும் கல்லால மரம், அதன் கிளைகள், அதிலுள்ள இலைகள், மலர்கள் என எல்லாப் பகுதிகளுமே ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை. பைரவருக்கு தென் பகுதியில் தனிச் சன்னிதி உள்ளது.
வைரவன்பட்டி
காரைக்குடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்தின் இறைவன் பெயர், வளிஒளிநாதர். அம்பாளின் திருநாமம் வடிவுடைநாயகியம்மை. அசுரர்களுக்கு அஞ்சி பூலோகம் வந்த தேவர்கள், ஒரு வனத்திற்குள் புகுந்தனர். அங்கு அவர்களுக்கு ஆனந்தம் கிடைத்தது. அங்கு ஈசனும், அம்பாளும் கோவில் கொண்டிருப்பதை கண்டு மகிழ்ந்தனர். திருவண்ணாமலையில் தீப்பிழம்பாய் காட்சி தந்த ஈசனே, இங்கு வளர்ஒளிநாதராக இருப்பதை தேவர்கள் உணர்ந்தனர். வளர்ஒளிநாதர் என்பதே வளிஒளிநாதர் என்றானது. இங்கு பைரவருக்கு தனிச்சன்னிதி உள்ளது. தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருளும் அவர், நான்கு கரங்களில் சூலம், கபாலம், டமருகம், நாகபாசம் ஆகியவற்றை தாங்கியிருக்கிறார். காசிக்கு சமமானதாக இந்த தலம் போற்றப்படுகிறது. காசியில் இறந்தால் முக்தி. அதே போல் இங்கு இறப்பவர்களை, கயிலாயத்திற்கு அனுப்பிவைப்பாராம், இங்கு அருளும் பைரவர்.
இலுப்பைக் குடி
இதுவும் காரைக்குடியில் இருந்து 5 கிலோமீட்டரில்தான் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த இடம் இலுப்பைக் காடாக இருந்ததால், இந்தப் பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இத்தல இறைவனின் பெயர் சுவயம்பிரகாசர், தான்தோன்றீஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி. இங்கு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. இந்த இடம் பிரம்மதேவன் பூஜை செய்த இடம் என்றும், நான்கு வேதங்களும் பூஜித்த தலம் என்றும் சொல்கிறது தல வரலாறு. இரண்டு திசைகளிலும் முகத்தை திரும்பிய வண்ணம் இரண்டு நாய்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.
- ஸ்ரீராமர் கோவில் என்பதால் இங்கு தேவியாருக்கு தனி கோவில் இல்லை.
- புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவமும் நடைபெறுகிறது.
குழந்தை இல்லா தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அருளும் வைணவ கோவில்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நீங்கா புகழுடன் விளங்குவது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவில்.
மழலை செல்வம் இன்றி தவிப்பர்கள் கட்டாயம் வந்து செல்ல வேண்டிய முக்கிய தலமாக கருதப்படும் நீடாமங்கலம் சந்தானராமரை மனமுருகி வேண்டினால் நிச்சயம் மழலை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புத்திர பாக்கியம்
தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மர் கி.பி.1761-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சந்தானராமர் கோவில் காசிவிஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களையும், சத்திரம் ஒன்றையும் கட்டினார். நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலுக்கு மாலை அணிவித்தது போல் வெண்ணாறு, கோரையாறு ஆகிய ஆறுகள் கோவில் அருகே உள்ளன.
நீடாமங்கலம் நகரில் மையப்பகுதியில் உள்ள இந்த கோவில் இறைவன், மன்னர் தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் அருளினார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் பாடல் பெற்ற இக்கோவிலின் எதிரில் தெப்பக்குளம் ஒன்றும் உள்ளது.
கொடிமரம்
கோவிலுக்கு உள்ளே சென்றால் அழகாக கட்டப்பட்ட முன் மண்டபம், அதற்கடுத்து மூன்று கண்களை உடைய கோபுர வாயில், உள்பிரகாரத்தின் கிழக்கில் கொடி மரம், தென்கிழக்கில் மடப்பள்ளி, வடகிழக்கில் யாகசாலை, மேற்கில் அகலமான சன்னதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர்(ராமானுஜர்) ஸ்ரீமந்நிகமாந்த தேசிகன் ஆகியோர்(விக்கிரகங்களும்) எழுந்தருளியிருக்கிறார்கள்.
அதற்கு அருகில் வாகன மண்டபம், கச்சேரி மண்டபம் உள்ளது. கோவிலின் உள்ளே பெருமாள் சன்னதிக்கு முன்பு நடுவில் மகாமண்டபம் உள்ளது. அதற்கு தெற்கிலும், கிழக்கிலும் வாசல்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன
அனுமன் சன்னதி
இந்த மண்டபத்தில் கருடன், பெருமாளுக்கு நேர் எதிரிலும், அனுமார், சேனை ஆகியோர் சன்னதிகள் வடக்கிலும், தெற்கிலும் உள்ளன.
தெற்கு நோக்கிய அனுமார் நினைத்ததை கொடுக்கக் கூடியவர் என்பது சிறப்பாகும். மூலஸ்தானத்தில் சந்தானராமசுவாமி, சீதை, லெட்சுமணர், அனுமார், சயன சந்தான கோபாலன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். விமானத்துக்கு வெளியில் தெற்கில் தும்பிக்கையாழ்வார், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் உள்ளனர். கோவிலுக்குள் 2 பிரகாரங்களும், வெளியில் தேரோடும் வீதியும் உள்ளது.
கோவிலில் அனுமனுக்கு தனி சன்னதி உள்ளது. இதற்கு காரணம் சந்தானராமசுவாமி குழந்தை பாக்கியம் அருளுவதாலும், ராம பக்தர்களுக்கு அனுமானே குரு என்பதாலும் இங்கு அனுமன் பரமபாகவத அனுமான், தாச அனுமான், சத்குரு அனுமான் என்ற பாவத்தில் தனி சன்னதியில் உள்ளாா். ஸ்ரீராமர் சன்னதிக்கு செல்லும் முன்பு சத்குரு அனுமான் வணக்கத்துடன் செல்வது எந்த ராமர் கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.
தசரத மன்னன்
நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் மூலவர், தசரத மன்னனுக்கு புதல்வராக தோன்றியதாலும், தஞ்சையை ஆட்சி புரிந்த பிரதாபசிம்மராஜாவுக்கு புத்திர பாக்கியம் கொடுத்த காரணத்தாலும் சந்தானராமசுவாமி என்ற பெயருடன் விளங்குகிறார். கோலவல்லி ராமன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. மகாராஜாவின் மனைவி யமுனாபாய் அம்மாள், வழிபட்டு பிரதிஷ்டை செய்தது ஸ்ரீராமர் கோவில் என்பதால் இங்கு தேவியாருக்கு தனி கோவில் இல்லை.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும் சிறப்பு வாய்ந்த திவ்யமூர்த்தி எழுந்தருளிய இந்த கோவில் பெருமையை மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை-பூவினுள் பதுமம் போலும், புருடருள் திருமால் போலும், காவினுள் கற்பம் போலும், கலைகளுள் ஞானம் போலும், ஆவினுள் சுரரான் போலும், அறத்துள் இல்லறம் போலும், நாவினுள் மெய்நா போலும், நாட்டினுள் சோழநாடு போலும் என்ற பெருமையுடைய வெண்ணாறு, கோரையாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் யமுனாம்பாள்புரம் என்கிற நீடாமங்கலத்தில் இக்கோவில் அமைந்துள்ளது என பாடியுள்ளாா்.
நீராடுமங்கலம்
இந்த பகுதியில் பறவை கூடுகள் அதிகம் இருந்ததாலும், நீராடுவதால் மங்களம் உண்டாகுவதாலும் நீராடுமங்கலம் என்ற பெயர் நீடாமங்கலமாயிற்று. மகாராணி யமுனாம்பாள் இவ்வூர் தோட்டத்தில் மா மரத்தில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். இன்று வரை அந்த இடம் புனிதமாக பாதுகாக்கப்பட்டு அம்மையாருக்கு தனி கோவில் அமைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
தை மாத கடைசி வெள்ளியன்று யமுனாம்பாள் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. இந்திய தலைமை தேர்தல் முன்னாள் ஆணையர் கோபாலசுவாமி உதவியுடன் சந்தானராமர் கோவிலுக்கு திருப்பணிகள் நடந்து குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
சந்தானகோபால ஹோமம்
மாதந்தோறும் ஆழ்வார் திருநட்சத்திரத்தில் சேவாகாலம் சாற்றுமுறை, தி்ருமஞ்சனம், புனர் பூச நட்சத்திரத்தில் திருமஞ்சனம், மூல நட்சத்திர வழிபாடு, சுவாதி நட்சத்திர வழிபாடு, சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை, ஆயில்யம் வழிபாடுகள், ரோகிணியில் அந்தந்த சன்னதிகளில் திருமஞ்சனம், ரோகிணி நட்சத்திரத்தில் புத்ர சந்தானகோபால ஹோமம் நடைபெறுகிறது. வியாழக்கிழமைகளில் சந்தானகோபால ஜெபம் செய்து சந்தானராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் அடையலாம் என்பது ஐதீகம்.
கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள்
இந்த கோவிலில் நாள்தோறும் காலை 6.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதம் அட்சய திருதியையன்று கருடசேவையும், வைகாசி விசாகத்தில் நம்மாழ்வார் திருமஞ்சனமும், ஆடி மாதத்தில் ஆடிப்பூர தெப்ப உற்சவமும், ஆவணிமாதம் பவித்ர உற்சவமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவமும் நடைபெறுகிறது.
ஐப்பசி மாதத்தில் தீபாவளி உற்சவமும், கார்த்திகை மாதம் குடமுழுக்கு தினத்தில் 108 கலச திருமஞ்சனமும், திருக்கார்த்திகை உற்சவமும், மார்கழியில் தனுர் மாத பூஜைகளும், அனுமன் ஜெயந்தி, வைகுண்டஏகாதசி திருஅத்யயன உற்சவம் 20 நாட்கள் நடைபெறுகிறது. தைமாதம் சங்கராந்தி பொங்கல் விழா நடைபெறுகிறது.
கோவிலுக்கு செல்வது எப்படி?
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்து அங்கிருந்து தஞ்சை செல்லும் பஸ்சில் நீடாமங்கலத்துக்கு வந்து சந்தானராமரை தரிசிக்கலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர் செல்லும் பஸ் அல்லது ரெயிலில் பயணித்து நீடாமங்கலத்தில் இறங்கி சந்தானராமரை தாிசிக்கலாம்.
- காவல் தெய்வமாகவும், எல்லை தெய்வமாகவும் திகழ்கிறாள்.
- இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூருக்கு அருகில் வல்லம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது ஏகெளரியம்மன் திருக்கோவில். சோழர்கள் காலத்துக் கோவில். கரிகாற் சோழன் காலத்துக் கோவில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். சோழரின் கட்டிடக் கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோவிலின் கருவறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
பெண் என்றால் இளப்பமாகப் பார்ப்பது' இந்தக் காலத்தில்தான் என்றில்லை… அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. தஞ்சாசுரன் எனும் கொடிய அரக்கனும் அப்படித்தான் நினைத்தான். தஞ்சாசுரனின் இந்த நினைப்பு, சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ய வைத்தது. தவத்தின் பலனாக வரம் கிடைக்கவேண்டும் என விரும்பினான். சிவபெருமானும் வரம் தர முன்வந்தார். அவனும் வரம் கேட்டான். 'சிவபெருமானாகிய நீங்கள், மகாவிஷ்ணு, பிரம்மா என மூவராலும் எனக்கு மரணம் வரக்கூடாது. மேலும் எந்த ஆணாலும் எனக்கு உயிர் போகக்கூடாது. பெண்ணைத் தவிர யாராலும் எதுவாலும் நான் மாண்டு போகக்கூடாது. இந்த ஊர் என் பெயரால் அழைக்கப்பட வேண்டும்' என்று வரம் கேட்டான். அப்படியே தந்தார் சிவனார்.
அவ்வளவுதான். பேயாட்டம் ஆடினான் தஞ்சாசுரன். தேவர்கள் கலங்கினார்கள். முனிவர்கள் நடுங்கினார்கள். மக்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு கதறினார்கள். தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவை சந்தித்து முறையிட்டார்கள். மகாவிஷ்ணுவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள். பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் சிவபெருமானை சந்தித்து வணங்கினார்கள். 'எந்த ஆணாலும் உயிர் போகக் கூடாது என்றும் நம் மூவராலும் உயிர் போகக் கூடாது என்றும் அவன் வரம் கேட்டான். நீங்களும் கொடுத்துவிட்டீர்களே… இது நியாயமா? என்ன செய்வது?' என்று வேண்டினார்கள். சிவபெருமான், உமையவளைப் பார்த்தார். அழைத்தார். பார்வதிதேவி புரிந்துகொண்டார்.
தன் வாகனமான சிங்கம் கர்ஜித்து வந்தது. அதில் அமர்ந்துகொண்டாள். கௌரி காளியானாள். எண்கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, ரத்தச் சிவப்பேறிய கண்களுக்குள் கோபம் கொப்பளிக்க, தஞ்சன் முன்பு தோன்றினாள். தஞ்சன் வெறிபிடித்து அலறினான். யுத்தத்துக்குத் தயாரானான். வில் வளைத்து மழையாகப் பாணங்களை தொடுத்தான். தேவி தன் சிறு அசைவால் அந்த பாணங்களைப் புறந்தள்ளினாள். சிம்மத்தின் மீதேறி அமர்ந்து கர்ஜித்தாள். தஞ்சனின் மார்பு மீது கதையால் அடித்து உதைத்துத் தள்ளினாள். மாய உருவங்கள் எடுத்து அம்பிகையை தாக்கினான் தஞ்சன். இறுதியில் தன் மூதாதையர் போல எருமை உருகொண்டு ஆக்ரோஷமாக தேவி மீது பாய்ந்தான். சிறிதும் தயங்காமல் ஏகௌரியானவள் தஞ்சாசுரனின் தலையை சீவி எறிந்தாள். தேவர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள்.
தஞ்சனை வதைத்த பின்னும் சீற்றம் குறையாத தேவி, வனமெங்கும் அலைந்தாள். அவளுடைய வெப்பத்தால் நீர் நிலைகள் வறண்டன. தேவர்களும், மனிதர்களும் சிவனிடம் முறையிட்டனர். ஈசனும் 'ஏ, கௌரி, சாந்தம் கொள்' என்று கேட்டுக் கொண்டார். அமைதியடைந்த தேவி நெல்லிப் பள்ளம் என்று அழைக்கப்பட்ட வல்லத்தில் அமர்ந்தாள். சீற்றம் குறைந்து கருணை கொண்டாள். அண்டி வந்தவர்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுத்தாள். அசுரன் கேட்டுக் கொண்டபடி அவன் பெயராலேயே அவ்வூருக்கு தஞ்சாவூர் என பெயரிட்டார்கள். அம்மன், ஏகெளரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள்.
தீராத கடன் பிரச்சினை, தீராத நோய், தீராத பகை என்று கலங்கித் தவித்து மருகியவர்கள், ஏகெளரியம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டால், விரைவில் கடன் பிரச்சினை தீரும், தீராத நோயும் குணமாகும், பகை அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு எருமைக்கன்று வழங்கி, தங்கள் பிரார்த்தனையை, நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில், தஞ்சாவூருக்கு அடுத்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஏகெளரியம்மன் கோவில். இங்கே சந்நிதியில், உக்கிரமாகவும் அதேசமயம் சாந்தசொரூபினியாகவும் வீற்றிருக்கிறாள் ஏகெளரியம்மன்.. இந்த அம்மன் எட்டு திருக்கரங்களுடன் பத்ம பீடத்தில் காட்சியளிக்கிறாள். காவல் தெய்வமாகவும்,எல்லை தெய்வமாகவும் திகழும் இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம். அந்தக் காலத்தில், போருக்குப் புறப்படுவதற்கு முன்பு ஆயுதங்களை இவளின் திருவடியில் வைத்து பூஜைகள் போடப்பட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம் என்கிறார்கள்.






