என் மலர்tooltip icon

    கோவில்கள்

    குழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.
    தமிழ்நாட்டில் ஏழு பெண்களை தெய்வமாக பாவித்து வழிபடும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வழிபாடு சோழ மன்னர்கள் காலத்தில் கிராமிய வழிபாடாக மாறியதால், அவர்கள் ஊருக்கு வெளியே வடக்கு திசையில் சப்தமாதர் கோவில்களை உருவாக்கினர்.

    சிந்து சமவெளி நாகரிகம் முதல் நம் நாட்டில் இருந்து வந்துள்ள வழிபாட்டு முறைகளில் ஒன்று, சப்த மாதர் வழிபாடு. பல்லவர் காலத்தில் சப்த மாதர்களை ஒரே கல்லில் வடிவமைத்து வழிபட்டு வந்துள்ளனர். சோழ மன்னர்கள் காலத்திலும், சாணக்கிய மன்னர்கள் காலத்திலும் சப்த மாதர் வழிபாடு மிகச்சிறப்பாக நடந்து வந்துள்ளது.

    நவராத்திரியின்போது சப்த மாதர்களை 7 நாட்கள் தனித்தனியே வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. சப்த மாதர்கள் தோன்றிய வரலாற்றை புராணம் கூறும் விதம் பிரசித்தமானது.

    கொடிய அரக்கனான மகிஷன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்து, பலம் வாய்ந்த வரத்தைப் பெற்றான். அதனால் ஏற்பட்ட தலைக்கனத்தால், தேவர்களை துன்புறுத்தினான். அரக்கர்களது தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரம்மா ‘அந்த அசுரன் ஒரு பெண்ணால் மரணமடைவான்’ என்றார்.

    பின்னர் பார்வதி தேவியை நோக்கி பிரார்த்தனை செய்தார் பிரம்மா. அவர் முன் தோன்றிய பார்வதி தேவியிடம் ‘மகிஷன் அழிய வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

    அவரது கோரிக்கையை உடனே நிறைவேற்ற தன் உடலில் இருந்து பிராம்மி, வைஷ்ணவி, இந்திராணி, மகேஷ்வரி, கவுமாரி, வராகி என 6 தேவிகளை உருவாக்கினாள் பார்வதிதேவி. 6 பேரும் மகிஷனுடன் போரிட்டனர். கடுமையான போர். எனினும் அந்த அரக்கனை வெல்ல அவர்களால் இயலவில்லை. இதை கண்ட சிவபெருமான் கோபம் கொண்டார். தன் நெற்றிக்கண்ணை திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்டவளே சாமுண்டி. அவள் பார்வதியை பணிந்து மகிஷனை அழிக்க அருளும்படி வேண்டி நின்றாள்.

    பார்வதி கருணை ததும்பும் கண்களுடன் சாமுண்டியைப் பார்த்தாள். பின், ‘சாமுண்டி! உனக்கு என் அருள் என்றும் உண்டு. நீயே இந்த 6 பேருக்கும் தலைவியாக இருந்து அசுரனை அழிப்பாய். இந்த உலகையும், தேவர்களையும் காப்பாய். இன்று முதல் நீங்கள் 7 பேரும் சப்தமாதர் என அழைக்கப்படுவீர்கள்’ என அருள்புரிந்தாள்.

    முதலில் இவர்களை எதிர்க்க ரக்த பீஜன் என்பவன் வந்தான். அவனுடன் சப்தமாதர் போரிட்டனர். அவன் சிந்திய ரத்தம் முழுவதையும் சாமுண்டி பருகினாள். ரக்த பீஜன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து முடிவில் மகிஷனையும் வதம் செய்தனர், சப்த மாதர்.


    செல்லாண்டி அம்மன்

    சிவபெருமான் சப்த மாதர்களை பாதாள உலகிற்கு அனுப்பி விடுமாறு பைரவருக்கு கட்டளையிட்டார். அங்கே சென்ற சப்த மாதர்களுக்கு கடும் பசி. அசுர ரத்தத்தை அவர்கள் பருகி இருந்ததால், அந்த உக்கிரமும் சேரவே கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்து உண்டார்கள். இதை கண்ட நரசிம்மர் அந்த சப்த மாதர்களின் உக்கிர குணங்களையெல்லாம் தான் ஏற்றுக்கொண்டார். அவர்களை கருணை காட்டும் தெய்வங்களாக மாற்றி பூவுலகிற்கு அனுப்பினார். இதுவே சப்தமாதர் பற்றிய புராணக்கதை என்று சொல்லப்படுகிறது.

    சப்த மாதர்களுக்கான ஆலயம் ஒன்று திருச்சிக்கு அருகே உள்ள துவாக்குடி என்ற கிராமத்தில் உள்ளது. ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய வாசலுக்கு முன்பாக வலதுபுறம் விநாயகர் அருள்பாலிக்கிறார். உள்ளே நுழைந்ததும் திருச்சுற்றில் தலவிருட்சமான வேப்ப மரம் உள்ளது.

    அடுத்து சப்பாணி கருப்பு, மதுரை வீரன், பட்டவன், சந்தன கருப்பு, முனியாண்டவர், சன்னாசி கருப்பு, சாம்புவன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தொடர்ந்து மகாமண்டபத்தின் கிழக்கு திசையில் சங்கிலி கருப்பு தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் பிரமாண்டமான சுதை வடிவ துவாரபாலகர் திருமேனிகள் அலங்கரிக்கின்றன.

    அடுத்துள்ள கருவறையில் சப்த மாதர் வரிசையாக காட்சித்தர, நடுவே உள்ள இந்திராணி ‘செல்லாண்டி அம்மன்’ என்ற திருநாமத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். செல்லாண்டி அம்மனுக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை விளங்குகிறாள்.

    மாதப்பிறப்புகள், ஆண்டின் முதல் நாள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், பொங்கல், ஆடிப் பெருக்கு நாட்களில் அன்னைக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. சிவராத்திரி அன்று அன்னைக்கு நான்கு கால பூஜைகள் நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு மாவிளக்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கொழுக்கட்டை, மொச்சை, தட்டைப்பயறு, சர்க்கரைப்பொங்கல் முதலியன பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    குழந்தைபேறு, திருமண வரம் கேட்டு வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளித் தரும் வரப்பிரசாதியாக செல்லாண்டி அம்மன் திகழ்கிறாள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் துவாக்குடி எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். திருச்சியில் இருந்து நகரப்பேருந்து வசதி உள்ளது. 
    மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு. அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர்.
    மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு. அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத்தோடு தொடர்புடைய இத்தலத்தில், வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

    மிகவும் பழமையான இந்த ஆலயம், ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

    யாருக்கு மறுபிறவி இல்லையோ, அவர்கள்தான் இந்தக் கோவிலுக்கு வர முடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்கிறார்கள். இத்தல இறைவனை தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

    மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சன்னிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல், உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சி. அம்பாள், பக்தர்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையை வணங்கினால், கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். மேலும் அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்கிறார்கள்.

    அம்பாள் சன்னிதிக்கு அருகில் இரண்டு பைரவர் திருமேனிகள் உள்ளன. ‘சாந்த பைரவர்’ என்ற பெயரில் சிறிய உருவிலும், ‘மகா பைரவர்’ என்ற பெயரில் 5 அடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சன்னிதியில் இந்த பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

    பைரவர் சன்னிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்? என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    சனி பகவானின் பார்வையில் இருந்து சிவபெருமான் கூட தப்பியதில்லை. ஈசனை சனீஸ்வரன் பிடிப்பதற்கான நேரம் நெருங்கியது. அதுபற்றி அம்பாளிடம், ‘தாயே! நான் ஈசனை நாளை காலை ஏழேகால் நாழிகைப் பொழுது வரை பிடிக்கப்போகிறேன்’ என்றார்.

    அதைக் கேட்ட பார்வதிதேவி, சனி பகவான் வரும் நேரத்தில் கயிலாயத்தில் உள்ள ஒரு அரச மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும்படி கூறினார்.

    குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமானைப் பிடிக்க வந்த சனீஸ்வரன், ஈசன் அரச மரத்தின் பின்னால் நிற்பதை அறிந்துகொண்டார். அரச மரத்தைப் பார்த்தபடியே நின்றார். சரியாக ஏழேகால் நாழிகை கழிந்ததும், அங்கிருந்து புறப்பட்டார்.

    அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து, ‘என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?” என்றார்.

    அதற்கு சனி பகவான், இடுப்பில் இடக்கையை வைத்து சற்று ஒய்யாரமாக நின்றபடி ‘தாயே! நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்ததல் லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்’ என்றார். அவரது பேச்சில் எடுத்த காரியத்தை முடித்துவிட்டோம், ஈசனையே பிடித்துவிட்டோம் என்ற ஆணவம் கலந்திருந்தது.

    அந்த ஆணவப் பேச்சைக் கேட்டதும், அரச மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்ட ஈசன், மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார். இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான், ‘சுவாமி! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகிவிடுவார்கள். இருப்பினும் ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இத்தலத்தில் உள்ள ஆணவம் நீங்கிய சனி பகவானை வணங்கினால், சனி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

    மகா மந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, அம்பிகை நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தார். இதனால் அம்பாள் ‘வேதாந்த நாயகி’ என்று பெயர் பெற்றார்.

    அப்போது அங்கு வந்த நாரதர், ‘ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒரு சேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்’ என்றார்.

    உடனே ஈஸ்வரன், பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.



    ‘பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்’ என்று நாரதர் சொன்னார்.

    பன்னிரு ஜோதிர் லிங்கங்களில், ஒரு லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் இத்தலத்திலேயே தங்கிவிட்டார். அந்தச் சன்னிதி மகாமண்டபத்திற்கு தென்கிழக்கு மூலையில் உள்ளது.

    இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்தியர், ஸ்ரீவிஸ்வநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால், அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார்.

    இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ‘மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்’ என்றார்.

    மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ‘பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்’ என்று சாபமிட்டார்.

    யாழி முகத்துக்கு மாறிய மகரிஷி, ‘மாமுனிவரே! இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது’ என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

    சாந்தமடைந்த அகத்தியர், ‘மகரந்த ரிஷியே! நான் கொடுத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தை அடைவீர்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

    மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் வந்து விஸ்வநாத சுவாமியை பூஜித்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை மலரால், ஐம்பது ஆண்டுகள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலை அறுந்து, லிங்கத்தின் மீது விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்தில் இருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, இறைவன் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார்.

    22 ஆயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து, இத்தல இறைவனுக்கு கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் மட்டும் அணிவிக்கிறார்கள்.

    இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள்கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதியர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத்திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சன்னிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

    குறைகள் தீர்க்கும் நந்தி :

    இந்த ஆலயத்தின் மகா மண்டபத்தில் இருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால், நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலது காது இல்லை. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். அப்போது பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி, இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலது காது மடங்கி உள்நோக்கிச் சென்றது.

    இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ‘நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலது காதின் பக்கத்தில் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்’ என்றாராம்.

    இத்தல நந்தியின் வலது காதுக்கான பகுதியில், பக்தர்கள் தங்களது குறைகளைத் தெரிவித்தால் அது விரைவில் நிவர்த்தி ஆவதாக சொல்கிறார்கள்.

    அமைவிடம் :

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் அருகில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது தேப்பெருமாநல்லூர் திருத்தலம். 
    சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ளது குஞ்சு காளியம்மன் ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.
    சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில், சின்னக் கடைத் தெருவில் அமைந்துள்ளது குஞ்சு காளியம்மன் ஆலயம். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.

    திருமணி முத்தாறு கரையில் சலவைத் தொழிலாளர்கள் சலவை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சலவைத் தொழிலாளியின் மகள், கரையில் இருந்த குடையை எடுக்க முடியாமல் திணறினார். குடையை தூக்க முடியாததன் காரணத்தை எண்ணி அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.

    அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘நான் தான் அம்மன் வந்திருக்கிறேன். எனக்குக் குஞ்சன் காட்டிற்குச் செல்லும் வழியைக் காட்டு’ என்றது அந்தக் குரல். சலவைத் தொழிலாளியின் மகள் கொஞ்சம் திகைத்தாளும், அம்மனின் கூற்றை ஏற்று குஞ்சன்காடு வந்து சேர்ந்தாள்.

    இதற்கிடையில் மகளைக் காணாது சலவைத் தொழிலாளி ஊர் மக்களுடன் தேடி அலைந்தார். அப்போது அடர்ந்த காட்டில் ஓரிடத்தில் கழுகுகள் கூட்டமாக வட்டமிட்டிருந்ததைக் கண்டனர். அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சலவைத் தொழிலாளியின் மகள், தன்னிலை மறந்து நின்றிருந்தாள். அவளை ஊர் மக்கள் சகஜ நிலைக்கு கொண்டு வந்து, ‘என்ன நடந்தது?’ என்று கேட்டனர்.

    உடனே அவள் நடந்த அனைத்தையும் ஊர் மக்களிடம் கூறினாள். அதே நேரத்தில் அங்கு அசரீரி ஒலித்தது. ‘நான் இங்கு எழுந்தருளியுள்ளேன். இங்கே எனக்கு ஆலயம் எழுப்புங்கள்’ என்றது அந்தக் குரல்.

    அந்தப் பகுதியில் பெரியவரான ஒருவர் ‘இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தாய். நகர்புறத்தில் உனக்கு பெரிய ஆலயம் எழுப்புகிறேன்’ என்றார்.

    ஆனால் அம்மனோ, ‘நான் இங்குதான் நிரந்தரமாக வாசம் செய்ய விரும்புகிறேன்’ என்றாள். மேலும் சலவைத் தொழிலாளியின் மகளது கணவரே தனக்கு பூஜை செய்யட்டும்’ என்றும் கூறினாள்.

    அம்மனின் ஆசைப்படியே அங்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அம்மன் ‘குஞ்சுக் காளியம்மன்’ என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

    சேலத்தில் பிரசித்தி பெற்றதான, கோட்டை மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்ததாக, இந்த ஆலயத்தில் நிறைய பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் இருந்து தான் அனைத்து ஆலயங்களுக்கும் சக்தி அழைப்பு என்னும் நிகழ்வு நடைபெறுகிறது.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயக் கருவறையில் அம்மன் அமர்ந்த கோலத்தில் இரு கரங்களுடன், புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறார். கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கின்றார். சிரசில் அக்னி சூலை ஏந்தி அருள்பாலிக்கிறார். குஞ்சுக் காளியம்மன், குஞ்சு மாரியம்மன் இருவரும் ஒரே சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிப்பது இவ்வாலய சிறப்பு அம்சமாகும்.

    ஒரு தோட்டக்காரர் கனவில் வந்து, தோட்டத்தில் உள்ள தன்னை குஞ்சுக் காளியம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு அருளியதன் அடிப்படையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரும் இந்த ஆலயத்தில் இருக்கிறார்.

    இவ்வாலயத்தில் உள்ள அரசு மற்றும் வேம்பு மரத்தடியில் ராகு மற்றும் கேது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ராகு- கேது தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வணங்கி பூஜை செய்து பலனடைகின்றனர்.

    விநாயகர் சன்னிதியில் வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் நாணயம் வைத்து வழிபட மக்களுக்கு ஏற்படும் விஷக் காய்ச்சல் தீருகிறது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். திருமணத்தடை விலக, தொழிலில் மேன்மை பெற, நினைத்த காரியம் நிறைவேற, குழந்தை பாக்கியம் கிடைக்க, அம்மனை மனமார வேண்டி காரிய வெற்றியடைகின்றனர்.

    இந்த ஆலயத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தும் நிகழ்வு, முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. அம்மனுக்கு ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தி, அம்மனுக்கு அணிவித்த வளையல்களை, குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பெண்களிடம் கொடுத்து அணியச் செய்கிறார்கள்.

    இத்தலத்தில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் அபிஷேகத்தில் 108 கிலோ மஞ்சள்பொடி உபயோகப்படுத்தப்படுகிறது.

    இந்த ஆலயத்தின் தல விருட்சமாக அரசு மற்றும் வேம்பு மரங்கள் உள்ளன.

    இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்தக் கோவில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். 
    மணமக்களின் பிணக்கு தீர்க்கும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, எதிர்கொள்பாடி என்னும் மேலைத் திருமணஞ்சேரி திருத்தலம்.
    ‘தந்தையாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார்
    வந்து நம்மோ டுள்ள ளாவிவான நெறிகாட்டுஞ்
    சிந்தையீரே நெஞ்சீனிரே திகழ்மதி யஞ்சூடும்
    எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்ப தடைவோமே’

    -சுந்தரர் பாடிய தேவாரம்

    திருமணஞ்சேரியில் பார்வதியை மணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, எதிர் கொண்டு அழைத்த தலம், இந்திரன் மற்றும் ஐராவதம் பெற்ற சாபத்தை நீக்கிய திருக்கோவில், பெண்களுக்கு நல்ல வரன் அமைய உதவும் தலம், மணமக்களின் பிணக்கு தீர்க்கும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, எதிர்கொள்பாடி என்னும் மேலைத் திருமணஞ்சேரி திருத்தலம்.

    புராண வரலாறு :

    இந்த ஆலயத்தின் புராண வரலாறு, இத்தலத்தைச் சுற்றியுள்ள தலங்களையொட்டி அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி, தேரழுந்தூரில் ஈசனை வழிபட்டாள். பிறகு திருக்கோழம்பத்திற்கு வந்து வழிபாடு செய்தாள். அப்போது பசுவின் குளம்படி சிவலிங்கத் திருமேனியில் பட்டு வடு ஏற்பட்டது. தொடர்ந்து திருவாடுதுறையில் அன்னையின் சாபம் நீங்கியது.

    இதையடுத்து அத்தலத்திலேயே பரத்வாஜ முனிவர் நடத்திய யாகத்தில் குழந்தையாக தோன்றி அன்னை வளர்ந்து வந்தாள். அன்னையானவள் பருவம் அடைந்ததும், திருமணஞ் சேரியில் திருமணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, மாமனாரான பரத்வாஜ மகரிஷி எதிர்கொண்டு வரவேற்ற தலம், எதிர்கொள்பாடி என்று பெயர்பெற்றது. திருமண வேள்வி நிகழ்ந்த தலம் திருவேள்விக்குடி. திருமணம் நடந்த தலம் திருமணஞ்சேரி என புராணம் கூறுகிறது.

    இந்திரன் சாபம் :

    காசியில் சிவதரிசனம் முடிந்து திரும்பிய துர்வாச முனிவர், எதிரே இந்திரனும், ஐராவதமும் வருவதைக் கண்டான். அப்போது தன்னிடம் இருந்த இறைவனை பூஜித்த மலர் மாலையை, இந்திரனுக்கு பரிசளித்தார், துர்வாச முனிவர். அதனைப் பெற்றுக்கொண்ட இந்திரன், அதை அலட்சியமாக தான் பவனி வந்த ஐராவதம் யானையின் தலை மீது வைத்தான். மலரில் வண்டுகள் மொய்த்ததால், ஐராவதம் அம்மலரை வீசி கீழே தள்ளியது. இதனால் கோபம் கொண்ட முனிவர், இந்திரனுக்கு நோய் பீடிக்கவும், ஐராவதம் காட்டு யானையாகவும் மாற சாபமிட்டார்.

    இதனால் மனம் வருந்திய இருவரும் பல்வேறு சிவாலயங்களைத் தரிசித்துவிட்டு இறுதியாக எதிர்கொள்பாடி திருத்தலத்திற்கு வந்தனர். இங்கே காட்டு யானை தீர்த்தம் உருவாக்கிட, இந்திரனும் யானையும் சேர்ந்து ஈசனை வழிபட்டனர். இதையடுத்து இந்திரனின் சாபம் நீங்கியது. காட்டுயானை மீண்டும் ஐராவதமாக மாறியது. அதன் காரணமாக இத்தல இறைவன் ஐராவதத்தின் பெயரைத் தாங்கி ‘ஐராவதீஸ்வரர்’ ஆனார்.


    ஐராவதீஸ்வரர், மலர்குழல் நாயகி

    ஆலய அமைப்பு :

    இக்கோவிலை மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கருங்கல்லால் கட்டியவர், கீரனூர் கிழவன் அரசுக் குடியான் திருநீலகண்ட சேரமான் சோழன் ஆவார். மூன்று நிலை ராஜகோபுரம் அமைத்தவர் தொண்டை மண்டலத்து குன்றத்தூர் நாராயண முதலியார் மகன் வயிர முதலியார் ஆவார்.

    மேற்கு நோக்கிய மூன்றுநிலை ராஜகோபுரத்தை இங்கு தரிசிக்கலாம். ஆலயத்தின் உள்ளே கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி, நேர்எதிரே ஐராவதீஸ்வரர் சதுரவடிவ ஆவுடையாரில் மேற்கு முகமாய் காட்சி அருளுகின்றார். இவருக்கு மத்யானேஸ்வரர் என்ற திருப்பெயரும் உள்ளது.

    நந்தியின் இடதுபுறம் கஜலட்சுமி வீற்றிருக்கிறார். அவருக்கு அருகில் அன்னை மலர்க் குழல்நாயகி தெற்கு முகமாய் காட்சி தருகிறார். இந்த அன்னை யானவள், சுகந்த குந்தளாம்பிகை, பெருங் கருணை பிராட்டியார் எனப் பலவாறு போற்றப்படுகின்றாள். இது தவிர வழித் துணை விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலசரஸ்வதி, தாமரை பீடத்தில் துர்க்கை, சண்டிகேஸ் வரர், சொர்ண பைரவர் திருமேனிகளும் உள்ளன. இந்த ஆலயத்தின் தல விருட்சம் பன்னீர் மரமாகும்.

    லச்சிறப்பு :

    இத்தலம், பெண்ணைப் பெற்றவருக்கு, நல்ல வரன் கிடைக்க வரம் தந்துதவும் திருத்தலமாக விளங்குகிறது. அதே போல, மணமக்கள் பிணக்கு தீர்க்கும் திருக்கோவிலாகவும், பதவியை இழந்தவர்களுக்கு மீண்டும் பதவியைப் பெற உதவும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. காவிரியின் வடகரைத் தலங்களில் 24-வது தலமாக இந்தக் கோவில் போற்றப்படுகிறது. ஆலயத்தின் தலத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

    சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை, மாசியில் மகா சிவராத்திரி, திருக்கல்யாணம் மற்றும் அனைத்து பிரதோஷங்களும் இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக நடத்தப்படுகின்றன. கி.பி. 1879-ம் ஆண்டு அருணாசலம் பிள்ளை குமாரர்கள், இந்த ஆலயத்திற்கு 35 ஏக்கர் நிலங்களை எழுதி வைத்து குடமுழுக்கு நடத்தி வைத்துள்ளனர். அது முதல் ஆறு தலைமுறைகளாக இன்றும் அந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களே அறங் காவலர்களாக இருந்து வருகின்றனர்.

    இந்த ஆலயத்தில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம் :

    நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டத்தில், மயிலாடுதுறை குத்தாலம் வழித் தடத்தில், குத்தாலத்தில் இருந்து அஞ்சலாறு வழியே மேலைத் திருமணஞ்சேரி செல்லலாம். புகழ்பெற்ற திருமணஞ்சேரி கோவிலுக்கு மேற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது எதிர்கொள்பாடி எனும் மேலைத் திருமணஞ்சேரி.

    திருமணஞ்சேரி செல்பவர்கள் இலைமறை காயாக அருள் வழங்கும் மேலைத் திருமணஞ்சேரி சென்று அருள் பெறலாம். 
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது, திருவித்துவக்கோடு திருத்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது, திருவித்துவக்கோடு திருத்தலம். இதனை திருமித்தக்கோடு என்றும் அழைக்கின்றனர். இ்ங்கு பஞ்சபாண்டவர்களால் நிறுவப்பட்ட நான்கு விஷ்ணு சிலைகளைக் கொண்ட நான்கு சன்னிதிகளுடன், சிவபெருமானுக்கும் ஒரு சன்னிதி சேர்ந்து அமைந்த ‘அஞ்சுமூர்த்திக் கோவில்’ இருக்கிறது.

    தல வரலாறு :

    நபாகணன் என்ற மன்னனின் மகனான அம்பரீஷன் முக்தி பெறுவதற்காக, மகாவிஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் செய்தான். அவனைச் சோதித்துப் பார்க்க விரும்பிய விஷ்ணு, அவன் முன்பாகத் தேவேந்திரன் வடிவில் தோன்றினார். அதனைக் கண்ட அம்பரீஷன், “நான் தேவேந்திரனைக் காண இத்தவத்தைச் செய்யவில்லை, மகாவிஷ்ணுவைக் காணும் என் முயற்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம்” என்று பணிவோடு சொன்னான்.

    அவனுடைய உண்மையான பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவனுக்குத் தனது உண்மையான தோற்றத்தைக் காண்பித்தருளினார். அம்பரீஷன் அவரிடம், தனக்கு எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், மகாவிஷ்ணுவே தெரிந்திட வேண்டுமென்று வேண்டினான். விஷ்ணுவும் அவன் விரும்பியபடி, வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் எனும் நான்கு தோற்றங்களில் தனது வியூகத் தோற்றத்தைக் காட்டியருளி, அவனுக்கு முக்தியும் அளித்தார்.

    பிற்காலத்தில், பஞ்சபாண்டவர்கள் வனவாசத்திற்காக இப்பகுதிக்கு வந்தனர். அங்கே, அவர்களுக்கு மகாவிஷ்ணுவின் வியூகத் தோற்றம் தெரிந்தது. அதனைக் கண்டு மகிழ்ந்த பஞ்சபாண்டவர்கள் அவ்விடத்தில் ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்தனர். அங்கு முதலில், அர்ச்சுனன் ஒரு மகாவிஷ்ணு சிலையினை நிறுவி வழிபட்டான். அவனைத் தொடர்ந்து, தருமர், பீமன் ஆகியோர் தனித்தனியே விஷ்ணு சிலைகளை நிறுவ, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சேர்ந்து ஒரு விஷ்ணு சிலையை நிறுவி வழிபட்டனர்.

    பஞ்சபாண்டவர்கள் நிறுவி வழிபட்ட நான்கு விஷ்ணு சிலைகளில், அர்ச்சுனன் நிறுவி வழிபட்ட விஷ்ணு சிலையே இக்கோவிலில் மூலவராக இருக்கிறது. மற்ற மூன்று விஷ்ணு சிலைகளும் தனித் தனிச் சன்னிதிகளில் இடம் பெற்றிருக்கின்றன என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.

    விஷ்ணுவுக்கு அமைந்த சிறப்புமிக்க இக்கோவிலில், சிவபெருமான் சன்னிதி ஒன்றும் தனியாக அமைந்திருக்கிறது. அதுபற்றிச் சுவையான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் வசித்து வந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று, அங்கேயேத் தங்கிச் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இந்நிலையில், அவரது தாயின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர், தன் தாயைக் காண்பதற்காகக் காசியில் இருந்து திரும்பி வந்தார். அவர் பயணத்திற்காகக் கையில் எடுத்துக் கொண்டு வந்த தாழங்குடையில், அவர் வழிபட்டு வந்த காசி விசுவநாதரும் அவருக்குத் தெரியாமல் அமர்ந்து கொண்டு வந்தார்.

    அந்த முனிவர், பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட விஷ்ணு சிலைகள் அமைந்த கோவில் பகுதிக்கு வந்த போது, தான் கொண்டு வந்த குடையைக் கீழே வைத்துவிட்டு, அருகிலிருந்த ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார். அவர் குளித்துவிட்டு வந்த போது, அங்கிருந்த குடை வெடித்துச் சிதறியது. பின்னர், அவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அதன் பிறகு, அம்முனிவர், அங்கு சிவபெருமானுக்கு தனிச் சன்னிதி ஒன்றை அமைத்தார் என்று சொல்கின்றனர்.

    கோவில் அமைப்பு :

    இக்கோவிலில் அர்ச்சுனன் நிறுவிய விஷ்ணு மூலவராக இருக்கிறார். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த விஷ்ணுவை, சமஸ்கிருதத்தில் ‘அபயப்பிரதான்’ என்றும், தமிழில் ‘உய்ய வந்த பெருமாள்’ என்றும் அழைக்கின்றனர். இச்சன்னிதிக்கு வலதுபுறம், தருமர் நிறுவிய விஷ்ணு சிலையுடனான சன்னிதி, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரால் நிறுவப்பட்ட விஷ்ணு சிலையுடனான சன்னிதி என்று இரண்டு சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இடதுபுறம் சிறிது பின்புறமாக, பீமன் நிறுவிய விஷ்ணு சிலையுடைய சன்னிதி இருக்கிறது.

    பஞ்சபாண்டவர்கள் நிறுவிய நான்கு விஷ்ணு சிலைகளும் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையைக் கொண்ட நான்கு கைகளுடன் அமைந்திருக்கின்றன. இங்கு தாயாருக்குத் தனிச் சன்னிதியோ, சிலையோ இல்லை. இங்குள்ள இறைவன் உய்யவந்த பெருமாள் மார்பில், தாயார் இருப்பதாக நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தாயார் நாச்சிவல்லி, பத்மபாணி நாச்சியார் என்று இரு பெயர்களால் அழைக்கப் பெறுகிறார்.

    இக்கோவிலில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, நாகர், பகவதி ஆகியோருக்கும் தனியாகச் சன்னிதிகள் இருக்கின்றன.

    வழிபாடுகள் :

    இக்கோவிலில் விஷ்ணுவுக்குரிய சிறப்பு நாட்களில் நான்கு விஷ்ணு சன்னிதிகளிலும், சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களில் சிவன் சன்னிதியிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் மலையாள நாட்காட்டியின்படி, மேடம் (சித்திரை) மாதம் ஆண்டுத் திருவிழா, இடவம் (வைகாசி) மாதம் மிருகசீருடம் நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் குரு பூர்ணிமா நாள், சிங்கம் (ஆவணி) மாதம் கிருஷ்ணர் தோற்றம் (கோகுலாஷ்டமி) நாள், கன்னி (புரட்டாசி) மாதம் வரும் நவராத்திரி நாட்கள், விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கார்த்திகை தீபத்திருநாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் மற்றும் கும்பம் (மாசி) மாதம் சிவராத்திரி நாளை ஒட்டி நான்கு நாட்கள் இக்கோவிலில் விழாநாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    வழிபாட்டுப் பலன்கள் :

    இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இங்குள்ள காசி விசுவநாதர் சன்னிதிக்குச் சென்று வழிபடுகின்றனர். அதன் பின்னர், மூலவரான உய்ய வந்த பெருமாள் மற்றும் பிற சன்னிதிகளில் உள்ள விஷ்ணுவையும் தீபம் ஏற்றித் துளசி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இங்கு வழி படுபவர்களுக்கு மனதில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர்.

    திருமணத்தடை, வேலைத்தடை உடையவர்கள் இக் கோவிலில் சிறப்புக் கட்டணம் செலுத்தி, அர்ச்சகர் மூலம் ரிக் வேத சுலோகங்களைச் சொல்லச் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும், வேலை கிடைக்கும் என்று இங்கு வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    பத்து நதிகள் இணைந்த பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில் காசி விசுவநாதர் சன்னிதி அமைந்திருப்பதால், இக்கோவிலில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) செய்வது அதிக அளவில் நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் அதிக அளவில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) நடைபெறுவது இங்குதான் என்று சொல்கின்றனர்.

    பாரதப்புழா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இக் கோவில் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    கோவில் சிறப்புகள் :

    * இக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் 67-வது திருத்தலமாக இருக்கிறது.

    * குலசேகராழ்வார் இக்கோவில் இறைவனைப் போற்றிப் பத்துப் பாசுரங்கள் பாடியுள்ளார்.

    * இறைவன் விஷ்ணு, மன்னன் அம்பரீஷனுக்குத் தனது நான்கு வடிவங்களைக் கொண்ட வியூகத் தோற்றம் காண்பித்து முக்தியளித்த தலம் இது.

    * பஞ்சபாண்டவர்கள் வனவாசக் காலத்தில் பெரும்பான்மையான நாட்கள் இங்கேதான் தங்கியிருந்தனர் என்றும், இக்கோவிலில் அவர்கள் தொடர்ந்து பல வழிபாடுகளைச் செய்து, அவர்களது பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றனர்.

    * இக்கோவில் மூலவர் பக்தர்களுக்கு ஏற்படும் துயரங்கள் அனைத்தையும் களைந்து, அவர்களுக்கு அபயமளிப்பவராகவும் இருப்பதால், அபயப்பிரதான் (தமிழில் உய்ய வந்த பெருமாள்) என்று அழைக்கப்படுகின்றார்.

    * காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலில் இருக்கும் காசி விசுவநாதரை வழிபட்டு, அதற்கான பலன்களை அடையலாம்.

    * இக்கோவில் சைவம், வைணவம் என்று இரு பிரிவினரும் வழிபடும் கோவில்களில் ஒன்றாக இருக்கிறது.

    அம்பரீஷனின் சிறப்பு :

    மன்னனான அம்பரீஷன் ஒவ்வொரு அமாவாசை நாளிலும், இறைவன் விஷ்ணுவை நினைத்து விரதமிருந்து வந்தான். அந்நாட்களில் தனது விரதம் முடிந்து, விஷ்ணுவுக்கு வழிபாட்டுப் பாடல்கள் பாடிப் போற்றிய பின் ஒரு பக்தருக்கு உணவளித்த பின்னரே உணவு உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். ஒருநாள், துர்வாச முனிவர் அவனது விரதம் முடியும் வேளையில் அங்கு வந்தார். அவரை வரவேற்ற அம்பரீஷன், அவரைத் தானளிக்கும் உணவை ஏற்கும்படி வேண்டினான். அவர் அருகிலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு வந்து அவனளிக்கும் உணவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிச் சென்றார்.

    அவர் துவாதசி முடியும் வரை திரும்பி வரவில்லை. தன் விரதத்தை முடிக்க வேண்டிய நிலையில், அம்பரீஷன் சிறிது நீர் பருகித் தன் விரதத்தை முடித்தான். இதனையறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தன் தவ வலிமையால் ஒரு அரக்கனை உருவாக்கி, அம்பரீஷனைக் கொல்ல ஏவினார். அம்பரீஷன் அந்த அரக்கனிடமிருந்து காப்பாற்றும்படி இறைவன் விஷ்ணுவை வேண்ட, அவர் தன் சக்கரத்தை அனுப்பி அந்த அரக்கனைக் கொன்றார். அதன் பிறகே, துர்வாச முனிவருக்கு அம்பரீஷனின் சிறப்பு தெரிந்தது. அவரும் அவனை வாழ்த்திச் சென்றார்.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் கள்ளிக்கோட்டைக்கு இடையில் அமைந்திருக்கும் பட்டாம்பி என்னும் இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருவித்துவக்கோடு (திருமித்தக்கோடு) எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, ஷோரனூர் மற்றும் பட்டாம்பி ஆகிய இடங்களில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    பக்தனின் பசியை நீக்க படிக்காசு வழங்கிய சொர்ணபுரீஸ்வரர், தன்னை நம்பி வரும் அன்பர்களின் வறுமையைப் போக்கி வளமையைக் கூட்டுவார் என்பது திண்ணம்.
    தென்னை தாலாட்டித் தென்றல் தவழும் சோலைகளுக்கிடையே உள்ள ராஜகோபுரம் ‘வாருங்கள்’ என்று நம்மை வரவேற்கிறது.

    சோழநாட்டிற்குச் சொந்தமான காவிரியின் வளத்தால் செழிக்கும் பச்சை வயல்களுக்கு இடையே கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருத்தலம்தான் அரிசில் கரைப்புத்தூர். அரிசலாற்றின் தென்கரையில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

    கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. நாச்சியார்கோவில் என்னும் சைவ- வைணவத் தலத்தில் இருந்து வடமேற்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அழகாபுத்தூர் என்னும் அரிசில் கரைப்புத்தூர். பெயருக்கேற்ப நகர நாகரிகம் இன்னும் தொற்றிக் கொள்ளாத அழகிய சிற்றூர்.

    மேற்கு நோக்கி நிற்கும் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், பலிபீடம், கொடி மரம், நந்தி தேவர் அவரின் உத்தரவைப் பெற்று சென்றால், மிகப் பெரிய மண்டபத்தில் மூலவர் முக்கண்ணன் சுயம்பு லிங்கமாகத் தனிச் சன்னிதியில் மேற்கு திசை பார்த்து எழுந்தருளியுள்ளார். அதிலும் தாமரை போன்ற ஆவுடையாரில் லிங்கம் தோன்றுவது கண்ணுக்கு விருந்தாகும்.

    இத்தல இறைவனான சொர்ணபுரீஸ்வரர், பொன்னை அள்ளித்தரும் வள்ளலாக விளங்குகிறார். இந்தப் பெருமானுக்கு ‘படிக்காசுநாதர்’ என்ற சிறப்பு பெயரும் உண்டு.

    அதென்ன படிக்காசு நாதர்...

    திருவீழிமிழலை என்ற சிவத்தலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அப்பருக்கும், சம்பந்தருக்கும் படிக்காசு வழங்கியதும் ‘வாசி தீரவே காசு நல்குவீர்’ என்று ஆளுடைப்பிள்ளை பதிகம் பாடியதும் நாமறிந்த கதை தான்.

    வைத்தீஸ்வரன் கோவிலிலும் ஒரு ஏழைப் புலவனுக்கு படிக்காசு தந்ததாக வரலாறு உண்டு. அதனால் அவர் படிக்காசுத் தம்பிரான் என்றே அழைக்கப்பட்டார்.

    ஆனால், அரிசில் கரைப்புத்தூரில், ஆதி சைவர் குலத்தில் எழுந்த அடியவர் ஒருவர், தினமும் ஆகம முறைப்படி சிவபெருமானுக்குப் பூஜை செய்து வந்தார்.

    அக்காலத்தில் பஞ்சம் வந்து மக்கள் பசி நோயால் மிகவும் துயரமுற்றனர். அப்படி இருக்க, இந்த ஏழை பக்தர் மட்டும் செல்வத்தில் செழிப்பாரா என்ன?

    அடியாரும் பசியும், பட்டினியும் ஆட்கொள்ள மிகவும் மெலிவுற்றார். இருந்தும் ஈசன் பணியை இடையறாது செய்து வந்தார்.

    நீர் கொண்டுவந்து சிவனை அபிஷேகம் செய்து மணமிக்க மலர்களால் அர்ச்சித்து, நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தினார். தான் உணவின்றி உடல் தளர்ந்த போதும், உள்ளம் தளராமல் சிவத் தொண்டு புரிந்து வந்தார்.

    பசியால் அவரால் நடக்கவே முடியவில்லை. தள்ளாடித் தள்ளாடி தண்ணீர் குடத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து சிவலிங்கம் மீது முழுக்காட்டும் போது, கைகளில் வலு இல்லாமையால் குடத்தை சிவ சிரசின் மீது போட்டு விட்டு மயக்கமடைந்து விட்டார்.

    பிறகு உணர்வு வந்து மெல்லக் கண் விழித்தபோது சிவன் தலையில் குடத்தைப் போட்டு விட்டதை எண்ணிக் கலங்கினார்.

    கருணை கடலான பரமன், ‘அன்பனே! விரைவில் மழை பொழிந்து நாடு செழிப்புறும், அதுவரை உமது பஞ்சம் தீர, நாள் தோறும் இங்கே ஒரு காசு வைப்போம். அதைக் கொண்டு ஜீவனம் செய்து கொள்’ என்றார்.

    சொன்னது போலவே இறைவனது பீடத்தின் கீழ் ஒரு பொற்காசு இருக்கக் கண்டு, அதனால் தானும் பசிதீர்த்து, மற்றவர்களுக்கும் உதவி செய்து வந்தார். சிவதொண்டையும் விடாமல் செய்து வந்தார்.



    பல ஆண்டுகள் வாழ்ந்து பூஜைகள் செய்து அங்கேயே முக்தி அடைந்தார்.

    அந்த அடியவர் வேறு யாருமல்ல.. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ‘புகழ்த்துணை நாயனார்.’

    இவரைப்பற்றி பெரியபுராணம் கீழ்க்கண்ட பாடலால் விளக்குகிறது.

    ‘அகத் தடிமைசெய்யும் அந்தணன்தான்
    அரிசில்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
    மிகத்தணர் வெய்திக் குடந்தையும் நும்
    முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்
    வகுத்தவனுக்கு நித்தற் படியும்
    வருமென்றொரு காசினை நின்றநன்றிப்
    புகழ்த்துணை கைப்புகச் செய்து தந்தீர்
    பொழியார் திருப்புத்தூர்ப் புனிதரே’ என்கிறது அந்தப் பாடல்.

    சிவலிங்கத்தின் உச்சியில் குடம் விழுந்த தழும்பு காணப்படுகிறது.

    இத்திருக் கோவிலின் மண்டபத்தில் இறைவன் சன்னிதி அருகே, புகழ்த்துணை நாயனார் கூப்பிய கரங்களுடன் சிலை வடிவில் இருந்து பக்தியைப் பறைசாற்றுகின்றார்.

    இதே மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் இறைவி ‘அழகிய நாயகி’ என்ற நாமம் தாங்கி அருள்கிறார். இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, பைரவர், நால்வர், நவக்கிரகங்கள் சிலைகளாக அருள்பாலிக்கின்றனர்.

    வில்வ மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட இந்த புனிதப்பதிக்கு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரும் எழுந்தருளி தரிசித்து ஒவ்வொருவரும் ஒரு பதிகம் பாடியுள்ளதால் மூவரின் தேவாரப் பாடல் பெற்ற தலமாகப் பெருமை பெருகிறது.

    சங்கு சக்கர முருகன்


    பொதுவாக சில திருக்கோவில்களில் முருகனை வேல் தாங்கிய வராகவும், தண்டாயுதம் தரிந்தவராகவும், சில கோவில்களில் வில் ஏந்தியவராகவும் தரிசித்திருக்கிறோம். ஆனால் இத்திருக் கோவிலின் வெளிச்சுற்றில் வடமேற்கில் தனிக்கோவிலில் ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தில் ஆறு முகங்களுடன், முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார்.

    அவர் கையில் மாமன் திருமாலைப் போல சங்கு சக்கரம் ஏந்தி தோன்றுவது எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். அங்கே வள்ளி- தெய்வானை இருபுறமும் இருக் கின்றனர். திருமணம் வரம் கேட்பவர்கள், குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் சங்கு சக்கர ஆறுமுகப்பெருமானை வழிபட்டால் காரியம் கைகூடும் என்பது அன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    பக்தனின் பசியை நீக்க படிக்காசு வழங்கிய சொர்ணபுரீஸ்வரர், தன்னை நம்பி வரும் அன்பர்களின் வறுமையைப் போக்கி வளமையைக் கூட்டுவார் என்பது திண்ணம். 
    அனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது.
    அனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது. பசுமையான வயல் வெளிகளுக்கு இடையே இயற்கை சூழலில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் பாலாம்பிகை என்பதாகும்.

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து இடது புறம் பிள்ளையாரும், வலதுபுறம் துர்க்கை திருமேனிகளும் உள்ளன. அடுத்து மகா மண்டபமும், அர்த்த மண்டபமும் காணப்படுகின்றன. தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன், வைத்தியநாத சுவாமி கீழ்திசை நோக்கி லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

    இறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி இருக்கிறது. பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.வடக்கு பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வ மரம் உள்ளது. அதனடியில் சிறிய அளவிலான சி வலிங்கம், நாகர், நந்தி திருமேனிகள் உள்ளன. இங்கே சனி பகவான் தனி சன்னிதியில் வீற்றி ருந்து அருள்கிறார். சண்டீஸ்வரர் சன்னிதியும் இங்கு உள்ளது. கிழக்கு பிரகாரத்தில் சூரியன், பைரவர் ஆகியோர் இருக்கிறார்கள்.

    தீர்த்தமான சூரிய புஸ்கரணி ஆலயத்தின் எதிர் திசையில் அமைந்திருக்கிறது. தினசரி காலை சாயரட்சை, அர்த்த சாமம் என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. ஆலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    வைத்தீஸ்வரன் கோவிலுக்கு முந்தைய ஆலயமாக இது கருதப்படுகிறது. சனி பகவானுக்கு இங்கு தனி சன்னிதி உள்ளதால், நவக்கிரகங்கள் இங்கு இல்லை. சனிக்கிழமை அன்றும், கிரகப் பெயர்ச்சி நாட்களிலும் இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சனிப் பார்வையால் துன்பப்ப டுவோர் இங்குள்ள சனி பகவானை வேண்டிக் கொண்டு பாதிப்பின் வேகம் குறைய, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி நிம்மதி பெறுகின்றனர். எள் சாத நைவேத்தியம் செய்து அனை வருக்கும் வினியோகம் செய் கின்றனர். சனிப் பெயர்ச்சி காலங்களில் இங்கு பக்தர் கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை யான ஒன்றாகும்.


    பாலாம்பிகை, வைத்தியநாத சுவாமி

    இந்த ஆலயத்தில் பிரதோஷ நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் பல்வேறு சிவ விசேஷ நாட்களில் இறை வனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    அரிச்சந்திரன் இத்தலத்து இறைவனை வேண்டி பிராத் தனை செய்ததால் தனது கடன் தொல்லைகளில் இருந்து நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. எனவே, அதை நினைவுபடுத்தும் விதமாக சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை கடன் நிவர்த்தி பூஜை இங்குள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் நடத்தப்படுகிறது. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் பக்தர்கள், இந்த பூஜையில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள். மேலும், அன்று முதல் மூன்று நாட்களுக்கு கோவிலுக்கு அருகே அரிச்சந்திரன் வரலாற்றை நாடகமாக அரங்கேற்றி, அதைப்பார்த்து மக்கள் மகிழ்வது இன்றும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

    சகல விதமான சரும நோய்களை தீர்க்க வல்லவர், இத்தலத்து இறைவன் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சூரிய புஸ்கரணி தீர்த்தத்தில் நீராடி, நீலோத்பவ மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் ரோக நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம்.

    நள மகாராஜன், கார்கோடன் என்ற நாகத்தால் தீண்டப்பட்டான். இதனால் அந்த மன்னனின் உருவம் மாறியது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான் நளன். அப்போது ஒரு முனிவரின் வழிகாட்டுதல்படி இந்த ஆலயத்திற்கு வந்தான். பின் இங்குள்ள இறைவனையும், இறைவியையும் ஆராதித்தான். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், நள மகாராஜனுக்கு அவனது பழைய உருவத்தை திருப்பி வழங்கியதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    பொதுவாக தங்களை கடன் பிரச்சினைகளில் இருந்து மீட்டு, நல்ல வழியை இத்தலத்து இறைவன் காட்டுவார் என பக்தர்கள் நம்புவது நிஜமே.

    அமைவிடம் :

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை - காளி பேருந்து மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது பாண்டூர் என்ற இந்த தலம். மயிலாடுதுறையில் இருந்தும், காளியில் இருந்தும் இத்தலம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
    ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, அதற்கு அதிபதியான தலம் என்ற சிறப்பை பெற்றது திருக்காமேஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, அதற்கு அதிபதியான தலம் என்ற சிறப்பை பெற்றது திருக்காமேஸ்வரர் கோவில். இந்த ஆலயம் திருச்சியில் இருந்து குணசீலம் செல்லும் சாலையில், முசிறிக்கு கிழக்கில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளூரில் அமைந்துள்ளது.

    தட்சன் யாகம் :

    ‘ஈசனை விட, தானே உயர்ந்தவன்’ என்கிற செருக்கு கொண்டு, பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மகளான தாட்சாயினி (பராசக்தி) யின் கணவர் சிவபெருமானுக்கு, இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. வேண்டுமென்றே ஈசனை, தட்சன் தவிர்த்தான். ஆனால் தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால், யாகசாலைக்கு சென்ற பராசக்திக்கு அவமானமே மிஞ்சியது.

    கணவனின் சொல் கேட்காமல் வந்ததற்கு இது தேவைதான் என்று எண்ணிக்கொண்ட தாட்சாயினி, தந்தையின் யாகம் அழிந்துபோக சாபம் கொடுத்து விட்டு வந்தார். ஆனாலும், தனது சொல் கேட்காமல் சென்ற காரணத்தால், ஈசனின் கோபத்திற்கு ஆளானார். தான் பெரும் தவறு செய்துவிட்டதை உணர்ந்த தாட்சாயினி, பூலோகத்தில் மீண்டும் பிறப்பெடுத்து சிவபெருமானை அடையும் நோக்கில் தவம் இருந்தார்.

    திருக்காமேஸ்வரர் :

    இறைவனும் இறைவியும் பிரிந்த காரணத்தால், உலக சிருஷ்டி தடைபட்டது. சிவனையும், சக்தியையும் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் கூடி விவாதித்தனர். சின்முத்திரையுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சிவபெருமானை விழிக்கச் செய்து, பார்வதியின் மீது ஈர்ப்புவர மன்மதனை அம்பு எய்தும்படி தேவர்கள் கூறினர். அதற்கு மன்மதன் மறுப்பு தெரிவித்தான். ஈசன் மேல் அம்பை தொடுப்பது எனக்கு நானே அழிவை தேடிக்கொள்வதற்கு சமம் என்று தேவர்களிடம் வாதாடினான். இதனால் தேவலோகமே ஒன்று திரண்டு மன்மதனுக்கு சாபமிட முயன்றதால், வேறு வழியின்றி ஈசன் மீது காம பாணம் தொடுக்க மன்மதன் ஒப்புக்கொண்டான்.

    உலகம் இவ்வாறுதான் இயங்க வேண்டும் என்று அனுமானித்த ஈசனால், நடக்கப்போவதை கணிக்க முடியாதா என்ன? பல மைல் தூரத்தில் இருந்து காம பாணம் எய்திய, மன்மதனை தனது நெற்றிக் கண்ணை லேசாக திறந்து பார்த்தார் ஈசன். அதன் வெப்பம் தாங்காமல் மன்மதன் சாம்பலாகி போனான். அப்போது ஈசனுக்கு தன்னை நோக்கி தவம் செய்யும் பார்வதி தேவியின் எண்ணம் வந்து அவருடன் கூடி திருக்காமேஸ்வரராகவும், அன்னை பார்வதி தேவி சிவகாம சுந்தரியாகவும் காட்சியளித்தனர்.

    மன்மதனுக்கு அருளல் :

    இந்த நிகழ்வை சித்திரிக்கும் புடைப்புச் சிற்பம் கோவிலில் காணப்படுகிறது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன் மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவி ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திருப்பி தர வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே நேரம் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு அற்றுப்போய், உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார் சிவபெருமான். அதோடு, ‘மன்மத மதன களிப்பு மருந்து’ எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார். இந்த மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.

    ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிரகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னிதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.

    தல பெருமை:

    பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த அமுதம் அசுரர் களுக்கு கிடைக்காமல் இருக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியை பார்த்து, சிவபெருமான் மோகித்தார். இதையறிந்த மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறினாள். மேலும் இதுபற்றி சிவனிடம் கேட்டறிய அவரை அழைத்தாள். ஆனால் சிவபெருமான் வரவில்லை.

    இதனால் பூலோகத்துக்கு சென்று வெள்ளூரில் ஈசனை நோக்கி தவம் செய்தாள். அப்போதும் சிவன் வரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன்பின் ஈசன், மகாலட்சுமி முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்த மாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது.

    வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெள்ளூர் எனப்பெயர்பெற்றது.வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.

    ஐஸ்வர்ய மகாலட்சுமி :

    தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற தலம் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு தரும். வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோவிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி வீற்றிருக்கிறாள்.

    சிவபோக சக்கரம் :

    திருக்காமேஸ்வரர், திருச்சன்னிதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்து, அதில் அமர்ந்து தவம் செய்வதாக நம்பப்படுகிறது. சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னிதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால், போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோவிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.
    உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோவில் அமைப்பு :

    திருவெண்காடு கோவில் அந்த ஊருக்கு நடுநாயகமாய் அமைந்து விளங்குகிறது. கோவில் திருமதிலைச் சுற்றி மடவளாகமும், அதனைச் சுற்றி நான்கு அகன்ற தேரோடும் திரு வீதிகளும் அமைந்துள்ளன.

    கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரமும், மேற்கே ஐந்து நிலை கோபுரமும் அமைந்துள்ளது. இக்கோவில் கிழக்கு மேற்காக 792 அடி நீளமும், வடக்கு தெற்காக 310 அடி அகலமும் கொண்டு அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்திலிருந்து உட்பிரகாரம் செல்லும் கிழக்கு மேற்கு வாயில் களிலும் இரண்டு மூன்று நிலைக்கோபுரங்கள் உள்ளன. இக்கோவில் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது.

    கீழக்கோபுரம் வழியே உள்ளே நுழைய வேண்டும். கொடி மரத்துப் பிள்ளையார், பலிபீடம், கொடிகம்பம் நந்தி இவை களை வழிபட வேண்டும். இந்த இடத்திற்குத் தெற்கே அக் கினி தீர்த்தமும், அதன் கிழக்கே அக்கினீசுவரர் கோவிலும் உள்ளன.

    அக்கினி தீர்த்தக் கரையில் ஊஞ்சல் மண்டபமும், மெய்கண்டார் சன்னதியும் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரம் வழியே செல்கையில் சூரியன் கோவிலையும், சூரிய தீர்த்தத் தையும் காணலாம். வெளிப்பிரகாரத்தின் தென் மேற்கில் கோவில் அலுவலகம், களஞ்சியம், நந்தவனம் ஆகியன அமைந்துள்ளன.

    மேற்கு வெளிப்பிரகாரத்தில் மேற்கே ஐந்து நிலைக் கோபுரத்திற்கு உட்புறம் வடபால் ஆறுமுகப் பெருமான் கோவில் தனியாக பெரிய சன்னதியுடன் அமைந்துள்ளது. அதனுடன் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது. நூற்றுக் கால் மண்டபம் சமயச் சொற்பொழிவுகள், இன்னி சையரங்குகள், சிவாகமச் சித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் முதலியவை நடைபெறப் பயன்படுகின்றது. முருகன் கோவிலுக்கு மேற்கே வீரபாண்டியன் என்னும் சிவலிங்கம் உள்ளது.

    வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் பிரம்ம வித்யாம்பிகை அம்மன் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிறிய கோபுரத்துடன் தனி உட்பிரகாரத்துடன் உள்ளது. அம்மன் கோவிலிலுள்ள முன் மண்டபம் முழுவதும் கருங்கல் திருப்பணியாகும்.

    அம்மன் கோவில் மண்டபத்தின் இடது புறம் புதனுக்குத் தனி கோவில் உள்ளது. அதற்கு இடப்பகுதியில் பிரம்மசாது சமாதியும், ஸ்தலவிருட்சம் வில்வம், திருவெண்காட்டு நங்கை நந்தவனமும் உள்ளன.

    அதன் அருகில் சிறப்பு ஹோமங்கள் செய்வதற்கான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அம்மன் சன்னதிக்கு எதிரில் சந்திர தீர்த்த திருக்குளம் அமைந்துள்ளது. அதன் தென்கரையில் கொன்றை மரமும், கீழ்ப்பால் வடவாலவிருட்சமும், சந்திரேசுவர் கோவிலும் உள்ளன.

    கோவிலின் வடகிழக்கில் அரசும் வேம்பும் இணைந்துள்ள மேடை உள்ளது. நூற்றுக் கணக்கான நாகர் சிலைகள் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அம்மன் கோவிலுக்கு மேற்கே ருத்ர பாதம் மற்றும் சம்பந்த விநாயகர் கோவில் உள்ளது. வடகிழக்கு மூலையில் யாகசாலை இருக்கிறது.

    கிழக்கு வெளிப்பிரகாரத்தில் இருந்து உட்பிரகாரம் செல்வதற்கு முன் வடக்கே அலங்கார மண்டபமும், வாகன மண்டபமும் உள்ளது. மூன்று நிலைக்கோபுரத்தை ஒட்டி அழகிய திருக்கல்யாண மண்டபமும் அமைந்துள்ளது. அதன் வழியாகத் திருக்கோவிலின் உள்ளே நுழைந்தால் திருக்கல்யாண மண்டபத்தில் நடராஜரின் பல்வேறு ஆடல்களைக் சித்திரமாக எழுதியுள்ளனர்.

    உட்பிரகாரத்தின் தென் பகுதியில் பெரியவராணப் பிள்ளையாருக்கும், சோமாஸ்கந்தருக்கும் தனித்தனிச் சன்னதிகள் உள்ளன. தென் திருமாளிகைப் பத்தியில் அறுபத்துமூவர், பத்திரகாளி, வீரபத்திரர், இடும்பன், சுகாசனமுர்த்தி, சோலையப்ப முதலியார், மந்திரி ஆகிய மூர்த்திகள் உள்ளன.

    மேற்குத் திருமாளிகைப் பத்தியில் நாகேசுவரர், விநாயகர், யோகமாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆவுடையார் பத்திரபீடம், விசுவேசுவரர், விசா லாட்சி, அங்காள பரமேஸ்வரி, சுவேதவன பெருமாள், பஞ்சலிங்கம் பாலசுப்பிரமணியர், அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, சரஸ்வதி, தனி விநாய கர் முதலிய சன்னதிகள் உள்ளன.

    மேற்கு உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய ஸ்ரீநடராஜ சபை உள்ளது. வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீஅகோரமூர்த்தி மூவருக்கும், உற்சவருக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. காட்சி நாயனார், சண்டேசுவரர், சுவேதலிங்கம் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. கிழக்கு உட்பிரகாரத்தில் பைரவர், காசித்துண்டி விநாயகர், துர்க்கை நவக்கிரகங்கள் முதலியன உள்ளன. நவக்கிரகங்கள் மற்ற தலங்களில் இருப்பது போன்ற அமைப்பில் இல்லாமல் வரிசையாக இருக்கின்றன.

    நடுவில் சுவேதாரண்யேசுவரர் திருச்சன்னதி உள்ளது. நிருத்த மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபங்களுடன் கூடிய பெரிய சன்னிதி இது. இதன் வாயிலில் துவார பாலகர் களும் கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா ஆகியோரும் உள்ளனர். தெற்கு கோஷ்டத்தில் சட்டைநாதர் சுதை வடிவிலும், ஐராவதமும் சிவப்பிரியரும் புடைப்புச்சிற்பமாகவும் உள்ளனர். மூலஸ்தானத்தில் திருவெண்காடர் மகாலிங்கமூர்த்தமாக எழுந்தருளி உள் ளார்.

    திருவெண்காடு தலத்துக்கு செல்வது எப்படி?

    திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது. வெளியூர்களில் திருவெண்காடுக்கு செல்ல விரும்புபவர்கள் சீர்காழியை சென்றடைய தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பஸ், ரெயில் வசதிகள் உள்ளன.

    சீர்காழியில் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய லாட்ஜ் வசதிகள் உள்ளன. அங்கு தங்குவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் அருகில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது. அங்கு அறைகள் கிடைக்காதபட்சத்தில் மயிலாடுதுறைக்கு செல்லலாம். மயிலாடுதுறையில் நிறைய லாட்ஜ் வசதிகள் இருக்கின்றன. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப அங்கு தங்கும் விடுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
    மயிலாடுதுறையில் தங்குவதில் மற்றொரு பலனும் இருக்கிறது. அங்கிருந்து திருவெண்காடு தலத்துக்கு மட்டுமல்ல மற்ற பாடல் பெற்ற தலங்களுக்கும் மிக எளிதாக சென்று வரலாம்.

    சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் நகர்ப்பேருந்து எண்கள் - 5, 5பி, 5சி. சீர்காழியிலிருந்து பொறையாறு செல்லும் ஒரு பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.

    மயிலாடுதுறையிலிருந்து நாங்கூர் செல்லும் பேருந்து எண்.28, மங்கைமடம் செல்லும் பேருந்து எண்.12, பெருந்தோட்டம் செல்லும் பேருந்து எண்.34 (ஆனந்த்) ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் திருவெண்காட்டின் வழியாகச் செல்கின்றன.

    நாகையிலிருந்து வருவோர் கருவி முக்கூட்டில் இறங்கி திருவெண்காட்டிற்கு வரும் பேருந்தில் வரவேண்டும். பூம்புகார் மேலையூரில் இறங்குவோர் திருவெண்காடு வழியாகச் செல்லும் பேருந்துகளில் வரலாம்.

    சென்னையில் இருந்து செல்ல விரும்புபவர்கள் சீர்காழி சென்றடைய ஏராளமான அரசுப் பேருந்துகள் உள்ளது. சீர்காழியில் இறங்கி அங்கிருந்து வாடகை கார் பிடித்து சென்று வரலாம். சென்னையில் இருந்து காரில் செல்லும் வசதி உடையவர்கள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் கடந்து சீர்காழியை அடையலாம் காரில் செல்பவர்கள் சீர்காழி நகருக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

    நாகை-காரைக்கால் பைபாஸ் சாலையில் சென்று திருவெண்காடுக்கு எளிதில் செல்லலாம். பஸ்சில் செல்பவர்கள் திட்டமிட்டு பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும். சென்னையில் இருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டால் 11 மணிக்கெல்லாம் சென்று சேர்ந்து விடலாம். மதியம் 1 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    அதற்குள் வழிபாடுகளை முடித்து விட்டு, மதியம் ஆலயத்தில் சற்று ஓய்வு எடுத்து விட்டு பிற்பகலில் புறப்பட்டால் இரவில் சென்னை வந்து சேர்ந்து விடலாம். ஆனால் பயணத்துக்கான திட்டமிடல் சரியாக இருத்தல் வேண்டும்.

    திருப்பணிகள்

    முதலாம் இராசராச சோழன் காலத்தில் (கி.பி. 985-1014) கல்வெட்டு இங்குள்ளதால் இக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்றளியாகி இருத்தல் வேண்டும். அதற்கு முன் செங்கல் கோவிலாக இருந்திருத்தல் வேண்டும். மூலஸ்தானமும் சுற்றுக்கோவில்களும் கருங்கல்லால் கட்டப்பெற்றவை. மூலஸ்தான விமானம் ஒரே கருங்கல்லால் ஆனது. திரிபுவனச் சக்ரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்தில் வைத்தியச் சக்ரவர்த்தி என்பவர் அரசன் பெயரால் வீரபாண்டீச்சுரம் உடையார் கோவிலும் வேயனதோளி நாச்சியார் கோவிலும் கட்டியதை ஒரு கல்வெட்டால் அறிகிறோம். விக்கிரமசோழன் மண்டபம் விக்கிர சோழனால் கட்டப்பட்டிருக்கலாம்.

    தஞ்சாவூர் மகாராட்டிர மன்னர் துக்கோஜி காலத்தில் (கி.பி. 1730) ஸ்ரீ தண்டாயுதபண்டாரம் என்பவர் பெரிய நாயகி அம்மன் கோவிலின் மதில்சுவரைக் கட்டி உள்ளார். தருமை ஆதீனத்தைச் சேர்ந்த வெள்ளியம்பல வாணத்தம்பிரான் சுவாமிகளால் நடராச சபை கட்டப்பெற்றுள்ளது. தேவக்கோட்டை மு.இராம.சுப.சுப்ரமணியன் செட்டியார் அவர்களால் பெரியநாயகி அம்பாள் திருக்கோவில் திருப்பணி 21.6.1937 அன்று தொடங்கப் பெற்று அவர்களுடைய குமாரர்கள் வெங்கடாசலம் செட்டியார், சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர்களால் நிறைவு செய்யப் பெற்றுள்ளது. 16.6.1940-ல் திருக் குடமுழுக்கு நடத்தப்பெற்றுள்ளது. பிற கோவில்களும் விமானங்களும் புதுப்பிக்கப் பெற்ற குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

    1959-ல் திருக்கல்யாண மண்டபம் ரூ. 26,000 செலவில் கட்டப்பெற்றது. 1961-ல் அகோரமூர்த்தி உற்சவருக்கும் மெய்கண்டாருக்கும் கோவில்கள் கட்டப்பெற்றன. 26.3.1991-ல் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

    இராசகோபுரங்களைத் திருப்பணி செய்து அனைத்து சன்னதிகளையும் செப்பணிட்டு மீண்டும் குடமுழுக்கு 13-7-86 அன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2016-ல் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    வழிபாடு செய்வது எப்படி?

    1. முதலில் ஐந்து நிலைகளையுடைய கிழக்கு வாசல் ராஜகோபுரத்தை தரிசனம் செய்து, இருகரம் கூப்பி வணங்கி, நிலைப்படி யில் சூடம் வைத்துத் தொட்டு வணங்கி ஆலயத் தின் உள்ளே நுழைய வேண்டும்.

    2. பிறகு தெற்குப் பக்கத்திலுள்ள அக்கினி தீர்த்தத்தில் நீராடி, பிறகு கரையில் உள்ள விநாயகரிடம் வழிபட்டுப் பணிவுடன் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும். “எனது இந்த பரிகார வழிபாடு நல்ல முறையில் அமைய அருள் புரிய வேண்டும்!” என வேண்டி, அடுத்து அங்குள்ள அக்கினி பகவானையும், மெய்கண்ட தேவரையும் வழிபட வேண்டும்.

    3. அடுத்தபடியாகச் சூரிய பகவானை வேண்டி, சூரிய தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

    4. பிறகு மேலக் கோபுர வாயிலில் உள்ள ஆறுமுகப் பெருமானை வணங்கிட வேண்டும்.

    5. பின் அம்பாள் சந்நிதியில் உள்ள பிள்ளையிடுக்கி அம்மனை வழிபட்டு, பள்ளியறைக்கு வந்து தாலாட்டுப் பாடித் தொட்டிலை ஆட்டிவிட்டு வணங்கி வெளியே வர வேண்டும்.

    6. இதன்பின் கிழக்குக் கோபுர வாயிலின் வலது பக்கம் உள்ள தீர்த்தக் கிணறு தீர்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு, எதிரே உள்ள கொடி மரத்தை தொட்டு வணங்கி, அடுத்துள்ள பலிபீடத்து முன் சென்று நமது அகந்தை, கோபம், ஆசை என்னும் மும்முலங்களையும் இங்கு பலியிடுகிறேன் என சங்கல்பம் செய்து கொண்டு, அடுத்து நந்திதேவரிடம் வணங்கி, பணிவாக அவரது இடது காதில், ‘உள்ளே செல்ல அனுமதி அளியுங்கள்!’ என்று கேட்டு, ஓம் என்னும் மந்திரத்தை ஓதி உள்ளே செல்ல வேண்டும்.

    7. அதன்பிறகு இடது பக்கம் திரும்பி நாயன்மார் அறுபத்து மூவர், பெரியவாரணப் பிள்ளையார்,சோமஸ்கந்தர், பத்திரகாளி, திருமால், லட்சுமி, சரசுவதி, அகோரமூர்த்தி, நடராஜர் தரிசனம், அகோரமூர்த்தி உற்சவர், நடராஜர் சன்னிதியில் ஸ்படிக லிங்கம், சிதம்பர ரகசியம் முதலியவற்றை தரிசித்து, பின் சுவேதலிங்கம், துர்கை அம்மன், நவக்கிரகம் முதலியவற்றை வேண்டி வழிபட்டு வர வேண்டும்.

    8. இதன் பின் மூலவர் சன்னதிக்குச் சென்று இரு பக்கத்திலும் உள்ள துவார பாலகர்களை வழிபட்டு, உள்ளே சென்று மேலே கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோரை வழிபட்டு, தெற்கு பகுதியில் மேலே, கோஷ்டத்தில் அதே வடிவில் உள்ள சட்டைநாதரையும் வழிபட வேண்டும்.

    9. இதன்பின் சந்திர குளத்தில் நீராடி விட்டு, பின் மேற்கு நோக்கி உள்ள மூலவர் அவேதாண் யேசுவரரை அபிஷேகம், அர்ச்சனை செய்வித்து, அதன் பிறகு அம்பாள் சன்னதிக்குச் சென்று பிரம்ம வித்யாம்பிகைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்விக்க வேண்டும். அதற்கு முன் அங்குள்ள விநாயகரையும் வழி பட்டுக் கொள்ள வேண்டும்.

    10. இதன் பிறகு பிரம்மா சமாதி, வில்வ தலமரம், கொன்றை தல மரம் வழிபட்டு, சந்திர பகவான் வழிபட்ட சோமேச லிங்கத்தை வழிபட்டு, அங்குள்ள விநாயகரையும் வழிபட்டு, தலமரமாகிய வடவால் மரத்தை வலம் வந்து, ருத்ர பாதத்தையும் வழிபட வேண்டும்.

    11. பின் புதன் பகவானின் தந்தையாகிய சந்திர பகவானை வழிபட்டு விட்டு, இறுதியாக நாம் பரிகாரம் செய்ய வேண்டிய புதன் பகவானை வழிபடுதல் வேண்டும், அவருக்கு அபிஷேக ஆராதனை செய்வித்து, அவருக்குரிய பரிகாரங்களையும் செய்வித்து, புதன் பகவானை மனம் குளிர வழிபட வேண்டும்.

    12. பிறகு புதன் பகவானுக்கு 17 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.17 தடவை வலம் வர வேண்டும்.

    13. அடுத்ததாகச் சண்டீசுவரரை வழிபட்டு விடை பெற வேண்டும்.

    14. அடுத்தபடியாகக் கிழக்கு வாசல் முன்பு வந்து, கொடி கம்பத்தின் முன்பாக, வடக்கு பக்கம் தலை வைத்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    15. பின்னர் ஆலயத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து, விநாயகர், இறைவன், அம்பாள், நடராஜர், சந்திர பகவான், புதன் பகவான், அகோரர் போன்ற அங்குள்ள அனைத்து கடவுள்களையும் தியானித்து நம் வேண்டுகோளை ஏற்று, நமது குறைகளை போக்கி, அருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

    16. இதன் பிறகு கிழக்குக் கோபுர வாசலை விட்டு வெளியே வந்து அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்தளவு தான, தர்மங்கள் செய்து, நமது தோஷங்கள் யாவும் நீங்கியதாக மன நிம்மதியுடன் ஆலயத்தை விட்டு வர வேண்டும்.

    பக்தர்கள் கவனத்திற்கு

    திருவெண்காடு ஆகிய இத்திருத்தலம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. சீர்காழிக்குத் தென் கிழக்கே 17 கி.மீ. தூரத்திலும், பூம்புகாருக்கு மேற்கே 10 கி.மீ. தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து தென்கிழக்கே 11 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. மயிலாடு துறையில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்ப கோணத்தில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    மூன்று தல விருட்சங்கள்

    பழங்காலத்தில் மக்கள் மரங்களின் அடியிலேயே தெய்வங்களை வைத்து வழிபட்டனர். பின்னர் களிமண், செங்கல், மரம் இவைகளால் கோவில் அமைத்தனர். அவை அழிந்துபோகும் பொருள்கள் என்பதால் கற்பாறைகளைக் குடைந்து கோவில் அமைத்தனர்.

    அந்தகுடை கோவில்களையே குகைக்கோவில்கள் என்று அழைக்கலாயிற்று நாளடைவில் கற்பாறைகளை உடைத்து அவைகளைக்கொண்டு கருங்கற்கள் கொண்டு கோவில்கள் கட்டினர்.

    மரங்களின் அடியில் ஆதியில் கோவில்கள் ஏற்பட்டதால் அந்த மரங்களைப் புனிதமாகக்கருதி அவைகளைத்தலவிருட்சங்கள் எனப்பெயரிட்டு அழைத்தனர். அந்த மரங்களின் பெயர்களாலேயே பல தலங்களின் பெயர்களும் ஏற்பட்டன.

    தில்லைவனம் (சிதம்பரம்), கடம்பவனம் (மதுரை), சண்பகவனம் (திருமுருகன்பூட்டி), வேணுவனம் (திருநெல்வேலி), திருஆலங்காடு, கச்சி நெறிக்காரைக்காடு, பனங்காடு, பனையூர், வேற்காடு முதலியவை அத்தகையன. திருவெண்காட்டு தலத்துக்கும் வில்லவனம் என்ற ஒரு பெயருண்டு.

    சாதாரணமாக, பெரும்பாலான தலங்களில் ஒரே ஒரு தலவிருட்சம்தான் இருக்கும். ஆனால் திருவெண்காட்டில் மூன்று தலவிருட்சங்கள் உள்ளன. அவை வடவால், கொன்றை, வில்வம் அகியவையாகும். இந்த மூன்று தல விருட்சங்களில் உள்ள சிறப்புகள் வருமாறு:-

    வடவால் விருட்சம்: சந்திர தீர்த்தத்தின் அருகில் இந்த தல விருட்சம் இருக்கிறது. தழைத்து நிழல் பரப்பி அழகுடன் விளங்குகிறது. கயாசேத்திரத்திலுள்ளது போலவே இது அஷயவடம் என்னும் அழியாத ஆலமரம். கயாவை விஷ்ணுபாதம் என்றும் திருவெண்காட்டில் உள்ளதை ருத்ரபாதம் என்றும் கூறுவர். இந்த ஆலமரத்தின் அடியில் இருக்கும் இருபாதங்கள் பக்கத்தில் ருத்ரபாதம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இம்மரத்தடியில் மக்கள் பிதிர்க்கடன் செய்து செல்கின்றார்கள்.

    வில்வமரம்: அம்பிகை கோவிலுக்கு வடக்கேயுள்ள பிரம சமாதியின் அருகே இருக்கிறது. கொன்றை மரம்: வெளிப் பிரகாரத்தில் அகோரமூர்த்தியின் பின்புறம் சந்திர தீர்த்தத்தின் தென்கரையில் இருக்கிறது.

    பிள்ளையிடுக்கி அம்மன்

    திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்க ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி அம்மா என்று அழைத்தார். அது கேட்டுப் பெரிய நாயகி அம்மை அங்குத் தோன்றி ஆளுடைய பிள்ளையை இடுப்பில் கோவிலுக்கு எடுத்து வந்தார். பிள்ளையைத்தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்மவித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் கூப்பிட்டான் குளம் என்பர், அது இன்று கேட்டான் குளம் என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகரின் பெயர் ஞானசம்பந்த விநாயகர்.

    விலங்கு தறித்த விநாயகர்

    இத்தொல்பதியின் தென்மேற்குத் திசையில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ விலங்கு தறித்த விநாயகர். துறவி பூண்ட பட்டினத்தடிகள் தம் சொத்துக்களை ஊரார் எடுத்துச் செல்லும்படி நிதியறையைத் திறந்துவிடுமாறு தம் கணக்கர் சேந்தனாருக்கு ஆணையிட்டார். அதன்படிச் செய்த சேந்தனாரை, இழந்த பொருட்களுக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்று கூறி, அரசன் விலங்கு பூட்டிச் சிறையில் அடைத்தான். சேந்தனாரின் மனைவி மக்கள் அதனைப் பட்டினத்தடிகளிடம் சென்று கூறினர். பட்டினத்தடிகள் வெண்காட்டு இறைவனிடம்,

    மத்தளைத் தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்நித்தமும் தேடிக்காணா நிமலனே யமலமுர்த்தி செய்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கியென் முன் காட்டு வெண் காட்டுளானே என வேண்டினார்.

    சிவபெருமான் கட்டளைப்படி விநாயகர் சேந்தனாரின் விலங்கைத் தறித்து (உடைத்து) அவரைச் சிறையினின்று விடுவித்தார். அதனால் விலங்கு தறித்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார். இன்றும் பட்டினத்தடிகள் சிவதீட்சைக்காகத் திருவெண்காட்டிற்கு எழுந்தருளும்போது விலங்கு தறித்த விநாயகரை வந்து வணங்கிச் செல்லுகிற விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    எல்லாமே மூன்று  :

    இத்தலத்தின் சிறப்பு மூன்று மூர்த்திகள், மூன்று சக்திகள், மூன்று தல விருட்சங்கள், மூன்று தீர்த்தங்கள் என்பனவாகும். ‘சுவேதாரண்யர்’, ‘அகோரர்’, ‘நடராசர்’ என்பவர் மும்மூர்த்திகள். ‘பிரம்மவித்யா நாயகி’, ‘துர்க்கை’, ‘காளி’ என்பவை மூன்று சக்திகள். வடஆலமரம், கொன்றை, வில்வம் என்பன மூன்று தல விருட்சங்கள். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் மூன்று தீர்த்தங்கள்.

    ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை :

    மாசி மாதம், கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூர நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை, இரவு 12 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டு தோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல், இரண்டாங் கால முடிவில், அகோர பூசை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாகப் பூசை நடைபெறுகிறது.

    ஆலயத் திருவிழாக்கள் :

    சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை 12 மாதங்களிலும் திருவிழா கொண்டாடும் சிறப்புடைய திருத்தலம் இது. அதன் விவரம் இதோ:
    சித்திரை மாதம்:- திருவோண நட்சத்திரத்தில் நடராஜர் அபிஷேகம்.

    வைகாசி மாதம்:- அமாவாசையில் சிவப்பிரியர் மணிகர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.

    ஆனி மாதம்:- உத்திர நட்சத்திரத்தில் நடராசருக்கு அபிஷேகம்.

    ஆடி மாதம்:- பட்டினத்தார் சிவ தீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல். சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல்.

    சிவபூஜை செய்வித்தல், இரவு ரிஷப வாகனராய்க் காட்சி தருதல், அம்பாளுக்கு ஆடிப்பூரம் பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்குச் சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.

    ஆவணி மாதம்:- வளர்பிறை சதுர்த்தசியில் நடராசருக்கு அபிஷேகம். கோகுலாஷ்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் அன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

    புரட்டாசி மாதம்:- வளர்பிறைச் சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம். நிறைபணி. தேவேந்திர பூசை. நவராத்திரி விழா. விஜயதசமியன்று சுவாமி மணிகர்ணிகை தீர்த்தக் கரையில் அம்பு போடல். அம்பாளுக்கு லட்சார்ச்சனை முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.

    ஐப்பசி மாதம்:- அசுவினி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம். வளர்பிறை பிரதமை தொடங்கி கந்தசஷ்டி விழா முதலியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    கார்த்திகை மாதம்:- ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் ஸ்ரீஅகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், பூசையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறன்று மகாருத்ராபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமவாரம் (திங்கள்கிழமை) தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். பரணி, கார்த்திகை தீப விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

    மார்கழி மாதம்:- தனுர்மாத பூஜை, சதயத்தன்று மாணிக்க வாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் ஸ்ரீநடராஜர் தரிசனம் நடைபெறும்.

    தை மாதம்:- சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டைச் செல்லுதல். ஐயனாருக்குப் பத்து நாட்கள் விழா, பிடாரிக்குப் பத்து நாட்கள் விழா.

    மாசி மாதம்:- முதல் நாள் இந்திரப் பெருவிழா, வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம். 2-ம் நாள் திருவிழா. 3-ம் நாள் திருவிழா. சுவேகேதுவைப் பிடித்த எமனை எரித்தல். பூ வாகனம் மொட்டைச் சப்ரம். 4-ம் நாள் திருவிழா மகம் பவுர்ணமி திதியில் காவிரி சங்கமத்துறைக்குச் சுவாமி எழுந்தருளல். 5-ம் நாள் திருவிழா. பூர நட்சத்திரம், ஸ்ரீஅகோரமூர்த்தி எழுந்தருளல். இரவு மருத்துவாசுர சங்காரம் ரிஷப வாகனக் காட்சி, தெருவடைச்சான்.

    6-ம் நாள் திருவிழா யானை வாகனம். 7-ம் நாள் திருவிழா திருக்கல்யாணம். புஷ்ப பல்லக்கு. 8-ம் நாள் திருவிழா பிட்சாடனர் விழா. அறுபத்து மூவர் வீதி உலா. 9-ம் நாள் திருவிழா. திருத்தேர். 10-ம் நாள் திருவிழா காலை ஸ்ரீநடராஜர் வீதியுலா. முக்குளத்தீர்த்தம் கொடுத்தல் மாலை பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் மணிகர்ணிகைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல். 11-ம் நாள் திருவிழா தெப்பத் திருவிழா.
    பங்குனி மாதம்:- சுக்லபட்சப் பிரதமையில் ஸ்ரீஅகோரமூர்த்திக்கு லட்சார்ச்சனை ஆரம்பம். பங்குனி உத்திரத்தில் (பவுர்ணமியில்) பூர்த்தி, மறுதினம் விடையாற்றி.

    தினமும் 50 பேருக்கு அன்னதானம்

    தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்ற முதுமொழிக்கேற்ப நன் கொடையாளர்கள் பங்கேற் புடன் கூடிய மதிய உணவு வழங்கும் அன்னதானத் திட்டம் தமிழக முதல் வரின் ஆணைக்கிணங்க இத் திருக்கோவிலில் 15-2-2002 முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தினமும் சுமார் 50 பக்தர்களுக்குக் குறையாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டச் செலவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.1000 செலுத்தித் தாங்களும் இத்திட்டத்தில் நன்கொடையாளராய்ப் பங்கேற்று அன்னதானம் செய்யலாம்.

    இதனையே நிரந்தர வைப்பு நிதியாக ஒருமுறை ரூ.15000-ம் முதலீடு செய்து கட்டளை ஏற்படுத்தி தாங்கள் விரும்பும் நாட்களில் பிறந்த நாள், திருமண நாள் என வாழ்நாளின் முக்கிய நாட்களில் ஏதேனும் ஒருநாளில் அன்னதானம் செய்து மன நிறைவும், இறையருளும் பெறலாம்.
    அன்னதானத்திட்டத்திற்கு மளிகைப் பொருட்களாகவோ, அரிசியாகவோ, காய்கறியாகவோ, ரொக்க மாகவோ, வங்கி வரை வோலை-காசோலையாகவோ வழங்கலாம். தாங்கள் வழங்கும் தொகைக்கு (சட்டப்பிரிவு 80ஜி) படி வருமானவரி விலக்கு பெறப்பட்டுள்ளது.

    நித்திய பூஜைகள்

    திருவெண்காடு கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. அவையானவை

    1. திருப்பள்ளி எழுச்சி    காலை    6.00    - 7.00
    2. காலசந்தி    காலை    8.30    - 10.00
    3. உச்சிகாலம்    பகல்    11.00    - 12.00
    4. சாயரட்சை    மாலை    5.30    - 6.30
    5. இரண்டாம் காலம்    இரவு    7.30    - 8.30
    6. அர்த்தசாமம்    இரவு    8.30    - 9.30

    கோவில் நடைமுறையில் உள்ள கட்டணங்கள்

    1. அஷ்டோத்திரம் - ரூ. 5.00
    2. சகஸ்ரநாமம் - ரூ. 3.00
    3. புதன் கவசம் சார்த்த - ரூ. 100.00
    4. ஸ்ரீஅகோரமூர்த்தி கவசம் சார்த்த - ரூ. 500.00
    5. அருள்மிகு புதன் கட்டளைஅர்ச்சனை (ஒரு வருடம்) - ரூ. 600.00
    6. அருள்மிகு புதன் பால் அபிஷேகம் - ரூ. 300.00
    7. அருள்மிகு புதன் பரிகாரம் - ரூ. 200.00
    8. அருள்மிகு புதன் ஹோமம் - ரூ. 2000.00
    9. அருள்மிகு புதன் திரவிய அபிஷேகம் - ரூ. 750.00
    10. அருள்மிகு ஸ்ரீஅகோரமூர்த்தி அபிஷேகம் - ரூ. 1500.00
    11. திலஹோமம் - ரூ. 500.00
    12. திதி கட்டணம் - ரூ. 100.00
    13. தர்ப்பன கட்டணம் - ரூ. 100.00
    14. வஸ்திர கட்டணம் - ரூ. 5.00
    15. அன்னதானம் 100 நபருக்கு நாள் ஒன்றுக்கு கட்டணம் - ரூ. 2000
    16. அன்னதான கட்டளை (நிரந்தர முதலீடு) - ரூ. 20000.00
    17. ஒருமுறை அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்ப - ரூ. 50.00
    18. 10 வாரம் அர்ச்சனை செய்ய - ரூ. 500

    நித்ய ஆராதனை கட்டளை திட்டம்

    இத்திருக்கோவிலில் நித்ய ஆராதனையில் பலரும் பங்கேற்கும் வகையில் நித்திய ஆராதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க ரூ.2,000, ரூ.5,000, ரூ.10000 அல்லது அதற்கு மேலும் நிதியாக அளித்து இத்திட்டத்தில் பங்கேற்கலாம். தாங்கள் விரும்பும் நாளில் சுவாமிக்கு ஆராதனை அர்ச்சனை செய்து விபூதி, குங்குமம் பிரசாதம் தபால் மூலம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி :

    செயல் அலுவலர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவில்
    திருவெண்காடு-60-9 114.
    சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்,
    போன் : 04364 - 256424
    வேளாண்குடி மக்கள் நிறைந்த இடத்தில் கோவில் கொண்டவர் நிரஞ்சனேஸ்வரர். இக்கோவில் கொண்ட ஊரை சுற்றி காவல்தெய்வங்களும், பல குடும்பங்களின் குலதெய்வங்களும் காவல் பணியில் இருக்கின்றனர்.
    வேளாண்குடி மக்கள் நிறைந்த இடத்தில் கோவில் கொண்டவர் நிரஞ்சனேஸ்வரர். இக்கோவில் கொண்ட ஊரை சுற்றி காவல்தெய்வங்களும், பல குடும்பங்களின் குலதெய்வங்களும் காவல் பணியில் இருக்கின்றனர்.

    தெய்வாம்சம் பொருந்திய அந்த ஊரில், இயற்கை அளித்த கொடையால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மக்களை 2 அரக்கர்கள் துன்புறுத்தி வந்தனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் தான், இயற்கையும் தெய்வாம்சமும் நிறைந்த ஊரைக் காண்பதற்காக காசிப முனிவர் இந்தப் பகுதிக்கு வந்தார்.

    அவரிடம் அந்தப் பகுதி மக்கள், அசுரர்களால் தங்களுக்கு நிகழும் துன்பங்களை எடுத்துக் கூறி காப்பாற்றும்படி வேண்டினர். தேவர்களும் கூட பொதுமக்களுக்காக காசிப முனிவரிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி, மாபெரும் யாகம் செய்தார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் ‘எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா?’ என்றபடி, காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக குண்டங்களை உடைத்தெறிந்தனர்.

    இதையடுத்து காசிப முனிவர், தேவர்கள், பக்தர்கள் அனைவரும் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கும் நிரஞ்சனேஸ்வரரிடம் சென்று முறையிட்டனர்.

    அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்’ என்றது.

    தேவர்களும் மக்களும் அங்கிருந்து சென்றனர். பின்னர் முருகப்பெருமான், மயில் வாகனத்துடன் சென்று இரண்டு அரக்கர்களையும் துரத்தினார். அவர்கள் மக்கள் நடமாட்டமும், கொக்குகள் நிறைந்த குளக்கரையுமான இடத்தில் மறைந்திருந்தனர். அவர்கள் இருப்பிடத்தை அறிந்து கொண்ட முருகப்பெருமான், முதலில் மலையனை தன்னுடைய வேலாயுதத்தால் வதம் செய்தார். அந்த இடம் தற்போதும் ‘மலையான்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. மாயன், இனி மக்களுக்கு துன்பம் இழைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தப்பி ஓடினான். முருகப்பெருமான், நிரஞ்சனேஸ்வரரிடம் திரும்பி வந்தார். தங்களின் கட்டளையை நிறைவேற்றியதாக கூறிவிட்டு, வேலாயுதத்தை ஓரிடத்தில் ஊன்றினார். அந்த இடமே ‘வேலூர்’ என்றானதாக தல வரலாறு சொல்கிறது.

    வடநாடு சென்று வெற்றி வாகை சூடி, திரும்பிக்கொண்டிருந்தான், ராஜேந்திர சோழன். வழியில் இயற்கை வளமும், இறையருளும் நிரம்பிய வேலூர் கிராமத்தை அவன் கண்டான். அதன் அழகை ரசித்துக் கொண்டே வந்தவனுக்கு ஒரு அசரீரியின் ஒலி கேட்டது. ‘நீ பார்க்கும் இடத்தில் தெய்வாம்சம் பொருந்திய கொம்பு ஒன்று கிடைக்கும். அதனை எடுத்துச் சென்று தீவு போன்ற பகுதியில் உள்ள குளத்தின் கிழக்குப் பகுதியில் குடிகொண்டிருக்கும் ஈசனின் முன்பாக நட வேண்டும்’ என்றது அந்தக் குரல்.

    அப்போது இருள் சூழும் நேரமாகிவிட்டதால், மன்னன் தன் படை, பரிவாரங்களுடன் ஓரிடத்தில் தங்கி கண்ணயர்ந்தான். கண் விழித்துப் பார்த்தபோது, அங்கே ஒரு கொம்பு துளிர்விட்டு, இலையுடன் காணப்பட்டதைக் கண்டு வியந்தார். பின்னர் அசரீரி சொன்னதைப் போலவே அதை குறிப்பிட்ட இடத்தில் நட்டு, அங்கு ஒரு பெரிய ஆலயத்தை எழுப்பினார். மன்னன் நட்ட கொம்பு, துளிர்த்து மரமாக வளரத் தொடங்கியது. அது தான் இன்றும் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

    கோவில் அமைப்பு :

    ஆலயத்தைச் சுற்றி நான்கு புறமும் மதில் சுவர் அமைந்துள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு திசையில் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கிறது. நுழைந்தவுடன் கோவில் வலபுறத்தில் தனிக் கோவில் கொண்டுள்ள சுந்தர விநாயகரை தரிசனம் செய்யலாம். பின்னர் கிழக்கு நுழைவு வாசலின் உள்ளே நுழைந்தால், கருவறையின் இரு புறமும் துவார பாலகர்கள், ஈசனுக்கு காவலாக நிற்கின்றனர். முன்னதாக வலதுபுறத்தில் கணபதியையும், இடதுபுறத்தில் முருகப்பெருமானையும் தரிசனம் செய்யலாம்.



    கருவறையில் நிரஞ்சனேஸ்வரரை வீற்றிருந்து, தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறைகளை களைந்தும், வேண்டுதல்களை நிறைவேற்றியும் அருள்பாலிக்கிறார். ஈசனின் முன்பாக இருக்கும் நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொன்னால் அது விரைவில் நிறைவேறும் என்கிறார்கள்.

    கருவறை கோஷ்டத்தில் மகா கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், லிங்கேத்பவமூர்த்தியையும் மூல வருக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பிரம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம். அடுத்ததாக தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நீலாயதாட்சினி அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும். தெற்கு வாசலை கடந்து வெளியே வந்தவுடன், கோவிலை சுற்றி வரும் வழியில் கால பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் நவக்கிரக சன்னிதி காணப்படுகிறது.

    அடுத்ததாக நாம் தரிசிப்பது, பல நூற்றாண்டுகளாக இருக்கும் தல விருட்சமான அரச மரம். ஆலய புஷ்கரணியின் அருகில் இந்த மரம் காணப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் திருநாள், பிரதோஷம், தமிழ்புத்தாண்டு, ஆனி மாத தேய்பிறை, ஏகாதசி, சிவராத்திரி, மாசி மகம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பெரியோர் சாபம், பொய் சாட்சி சொன்னதால் ஏற்பட்ட பாவங்கள் உள்ளிட்டவை விலகும்.

    தல விருட்ச வழிபாடு :

    இந்த ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் அருகில் தலவிருட்சமாக அரச மரம் உள்ளது. வியாழக்கிழமையில் வரும் அமாவாசை அன்று புஷ்கரணியில் நீராடினால், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தல விருட்சமான அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மனும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், கிளை மற்றும் இதரப் பகுதிகளில் சிவனுமாக மும்மூர்த்திகளும் இந்த மரத்தில் வாசம் செய்வதாக ஐதீகம்.

    இந்த ஆலய தல விருட்சத்தை வணங்கினால், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், செல்வம் பெருகும் என்கிறார்கள். காலை வேளையில் கர்ப்பிணி பெண்கள் அரச மரத்தை வலம் வந்தால், சுக பிரசவம் நிகழும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொட அனுமதி உள்ளது. மற்ற நாட்களில் தொடக்கூடாது. இந்த மரத்தின் குச்சி மற்றும் மரப்பொருட்களை யாகம் செய்யும்போது மட்டுமே எடுத்து தீயில் போட்டு எரிக்கிறார்கள். விரதமிருந்து 108 முறை மரத்தை சுற்றினால், மன ஆரோக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்.

    ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    பாவங்களை நீக்கும் தலமாக விளங்கும் நீலாயதாட்சினி சமேத நிரஞ்சனேஸ்வரர் கோவிலுக்கு சென்று அருள் பெறுவோம்.

    அமைவிடம் :

    திருவள்ளூர் அடுத்த பொன்னேரி அருகே உள்ளது வேலூர் கிராமம். மீஞ்சூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலும், பொன்னேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது திருவெள்ளைவாயல். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் வேலூர் நிரஞ்சனேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். 
    தென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது.
    காக்கும் கடவுளான திருமால் எடுத்த அவதாரங்களில் தசாவதாரம் முக்கியமானது. அவை தவிர பெருமாள் என்ற பெயரில் அவர் அருள்பாலிக்கும் 108 திவ்ய தேசங்கள் நாடெங்கும் பக்தி மணம் பரப்பி வருகின்றன. திருப்பதி, உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீரங்கம் என்று ஏராளமான விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

    தென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது. கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த தலம். இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியே ‘கல்யாண வேங்கடரமண சுவாமி’ எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார்.

    இந்த விஷ்ணு தலம் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்குன்று மேல்புறம் உயர்ந்தும், கீழ்புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது. மூலஸ்தானத்தின் மேல் கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.

    ஒரு சமயம் திருப்பாற்கடலில் திருமால், லட்சுமிதேவியுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். வாசலின் வெளியே ஆதிசேஷன் காவல் இருந்தார். அப்போது வாயுபகவான் இறைவனை சேவிக்க உள்ளே நுழைய முயன்றார். ஆதிசேஷனோ, வாயுபகவானை தடுத்து நிறுத்தினார். அதனால் இருவருக்குமிடையே யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டது. வெளியே வந்த பகவான், இருவரிடையே சமசரம் செய்து இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார்.

    ஆதிசேஷன் திருவேங்கடமலையை தனது உடலால் அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயுதேவன் அதை தனது பலத்தால் அசைத்து பிடுங்க வேண்டும். இதுதான் போட்டி. ஆதிசேஷன், மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான், தனது முழு பலத்தையும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது மலை சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன. அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தான்தோன்றிமலை என்று கூறப்படுகிறது.

    இம்மலையில் வேங்கடவன் எவ்வாறு வந்து அமர்ந்தார் என்பதைப் பார்ப்போம்..

    கரூரை தலைநகராக கொண்டு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் டங்கணாச்சாரி என்பவர் வசித்து வந்தார். இவர் அரசவையின் சிறந்த சிற்பியாகவும், சைவப் பற்றாளனாகவும் திகழ்ந்தார். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறை வாட்டியது.

    ஒரு நாள் டங்கணாச்சாரி, அரசவைக்கு சென்றிருந்தார். சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது தெருவில் ‘கோவிந்தா... கோவிந்தா...’ எனும் சப்தம் கேட்டது. அவள் ஓடோடி வந்து தெருவை பார்த்தாள். அப்போது ஒரு கூட்டம் கோவிந்தா... கோவிந்தா... என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.

    கூட்டத்தில் ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து சுந்தராம்பிகை விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி, ‘அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பெரு மாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம்’ என்றாள்.

    இதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டிய காலம். இதுவரை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள் சுந்தராம்பிகை.

    கோபத்தில் கொந்தளித்தார் டங்கணாச்சாரி. ‘சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்’ என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள்.

    குண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, ‘ஏனம்மா அழுகிறாய்?’ என்று கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள்.

    அதைக் கேட்ட குண்டலாச்சாரி, ‘அம்மா நீ அழாதே!. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்’ என்றான்.

    மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான்.

    மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டு இருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, ‘குழந்தாய்! இங்கு வந்து என்ன செய்கிறாய்?’ என்று கேட்டார். குண்டலாச்சாரி, ‘நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமாளை அழைக்க போகிறேன்’ என்று கூறினான்.


    கல்யாண வேங்கடரமணர்

    இதனை கேட்ட சந்நியாசி, ‘உன்னால் இக்காரியம் முடியக்கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா!’ என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான். எப் போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார்.

    அங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ‘ஒரேநாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே! மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரே’ என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார்.

    மன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான். டங்கணாச்சாரி, கடும் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார்.

    கோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார்.

    அதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார்.

    அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, ‘கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்’ என்று கூறினார்.

    அதைக்கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு ‘நான் துளசியை கையால் தொடமாட்டேன்’ என்றார்.

    இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து ‘இந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்ல’ என்று சொல்லவும், அரைமனதுடன் துளசியை பறித்துக்கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி.

    அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றிப் புகழ்ந்தனர்.

    சுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான்.

    அதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்து விட்டார்.

    குகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. ‘குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று கூறியது பெருமாள் இல்லாமல் வேறு யாராக இருக்கும்.?

    கருணை வள்ளலாக கரூர் தான்தோன்றிமலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வரும் கல்யாண வேங்கடரமண சுவாமியை வணங்கி வாருங்கள். உங்கள் இல்லத்தில் இன்பம் தேடி வரும்! 
    நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது சுமார் 1200 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இத்தல இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். இறைவியின் திரு நாமம் மீனாட்சி. திருவண்ணாமலை யார் அருள் வழி காட்ட குபேரனின் புதல்வர்கள், பொன்வில் சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஆலயம் இது.

    சுற்றிலும் தோப்புகளும் வயல் வெளிகளும் உள்ள சூழலில் அமைதி தவழ அமைந்துள்ளது ஆலயம். சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தைச் சுற்றி, உயரமான மதில் சுவர்கள் உள்ளன. மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் முன் உள்ள முகப்பைக் கடந்ததும் நீண்ட நடைபாதையும், அடுத்து இன்னொரு முகப்பும் உள்ளது.

    அதையடுத்து அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் உள்ளன. நந்தியும் பீடமும் மகாமண்டபத்தின் நடுவே அமைந்திருக்கிறது. அடுத்துள்ள அர்த்த மண்டபம் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ் வரர் லிங்கத்திருமேனியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்தடி உயரத்தில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் இறைவன் வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

    ஆம். இத்தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் ஆனது. எனவே இத்தல லிங்கம் ‘மரகத லிங்கம்’ என்றே அழைக்கப்படுகிறது. அர்ச்சகர் கற்பூர தீபாரதனை காட்டும் போது அந்த ஒளி இறைவனின் திருமேனியில் பட்டு, இறைவன் திருமேனி பளபளவென ஜொலிக்கும். இந்த அழகைக் கண்டு நம் மனம் வியந்து பக்திப் பரவசப் படுவதை தவிர்க்க இயலாது. அந்த கரும்பச்சை மரகத மேனியால் ஆன மரகத லிங்கத்தின் முன் நின்று நாம் தரிசனம் செய்யும் போது மெல்லிய அதிர்வலைகள் நம் மனதிற்குள் ஏற்படுவதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.

    மகா மண்டபத்தின் இடதுபுறம் இறைவி மீனாட்சி அம்மனின் சன்னிதி உள்ளது. முன் கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் கொண்டு, கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்து நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள் அன்னை மீனாட்சி.

    மகா மண்டபத்தில் இருந்து இறைவனையும், இறைவியையும் நாம் ஒரு சேர தரிசிக்கலாம்.

    ஆலயத்தின் தல வரலாறு என்ன? :

    பொன்னாலாகிய மூன்று வில்வ தளங்களை உடைய பொன் வில்வ சாரம் எந்த தேவலோகத் திலும் கிடைக்காத அருமை பெருமைகளை உடையது. எந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதி ஒரு முறை அர்ச்சித்து வழிபட்டால் உடனே அது பன்மடங்காகப் பெருகி பிரகாசித்து நிறைந்த செல்வத்தைத் தரும் அற்புதம் உடையது.

    யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர் களைத் தவிர, இந்த பொன்வில்வ சாரம் எவர் கண்களுக்கும் தென்படாது. எவர் கரங்களிலும் நிலைத்து நிற்காது. இவ்வளவு மகிமையுடைய பொன் வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இரு வரிடமும் அளித்து, பூலோகம் எங்கும் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளிடம் வைத்து வழிபட்டு இதன் மகிமையை அறிந்து வரும்படி கட்டளையிட்டார்.

    சுயம்பு லிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்கள் குபேரனின் குமாரர்கள். சிறந்த சிவ சேவகர்கள். எனவே அவர்கள் கண்களில் பொன் வில்வ சாரம் பட்டது. கரங்களில் நிலைத்து நின்றது. இதைக் கண்ட குபேரனுக்கு ஏக மகிழ்ச்சி.

    மணிக்ரீவன், நளகூபன் இருவரும் புறப்பட்டனர். பொன்வில்வ சாரம் எந்த சிவாலயத்தில் பல மடங்கு ஒளி வீசும் என்ற தேவ ரகசியத்தை அறிய வேண்டுமே.

    பூலோகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளின் மீது வைத்து குபேரனின் குமாரர்கள் வழிபட்டனர். இந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது.

    பல நூறு ஆண்டுகள் தல யாத்திரை மேற்கொண்ட அவர்கள், பலநூறு சுயம்பு லிங்க மூர்த்திகளை தரிசித்தனர். பின்னர், பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதினர். இதன் மகிமையையும் தெய்வீக ரகசியத்தையும் தங்களுக்கு உணர்த்துமாறு வேண்டி நின்றனர்.


    சுந்தரேஸ்வரர், லட்சுமி நாராயணர், மீனாட்சி

    அண்ணாமலையாரிடம் வில்வதளம் சொர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் வழி காட்டினார். குமாரர்கள் இருவரும் தென் திசை நோக்கி பயணமானார்கள். சோழ நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். திருத்தவத்துறை எனப் பெயர் கொண்ட தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடினர்.

    நீராடி எழுந்த அவர்கள் தாங்கள் வேறொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்து போனது கண்டு பதறினர். எழுந்து அந்த ஆலயத்தின் கருவறை நோக்கிச் சென்றனர்.

    அங்கே அவர்கள் ஓர் அதிசயத்தைக் கண்டனர். கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத் திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன் வில்வசாரம் பொங்கிப் பொங்கி பன் மடங்காகப் பெருகி ஒளிவீசக் கண்டனர். இருவரும் மெய் சிலிர்த்து ‘ஓம் நமசிவாய’ என ஓதி அர்ச்சிக்க அது மேலும் மேலும் பொங்கி பன்மடங்கு ஒளி வீசத் தொடங்கியது. புதல்வர்கள் இருவரும் மனம் நிறைந்து மனம் நிறைய பூரிப்போடு தேவலோகம் சென்றனர்.

    தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும், தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். தனக்கு கிட்டாத பாக்கியம் தன் புதல்வர்களுக்கு கிடைத்ததை எண்ணி மெய்சிலிர்த்தார். சோழநாட்டில் உள்ள சென்னி வள நாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார். பவுர்ணமி அன்று இந்த ஆலயம் வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வழிபடும் பக்தர்கள், சகல நன்மைகளையும், பொருட்களையும் பெற குபேரன் அருள்பாலிக்கிறார்.

    கருவறை தேவக் கோட்டத்தில் துர்க்கா தேவியும், தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கில் பெருமாள் ஆலயம் உள்ளது. லட்சுமி நாராயணப் பெருமாள் ஒரு சன்னிதியிலும், வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் இன்னொரு சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர். அடுத்து முருகன் வள்ளி-தெய்வானையுடன் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தைப் பூசத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    வடக்கு பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர். ஒருவர் கடாசனத்திலும், மற்றவர் அர்த்த பத்மாசனத்திலும் தெற்கு மேற்காக வீற்றிருக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக் கிரக சன்னிதியும், மேற்கில் செவி சாய்த்த விநாயகர் சன்னிதியும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சம் பொன் வில்வ மரம். இதன் இதழ்கள் மூன்று பிரிவுகளைக் கொண்டதாக அதிசயமாக காட்சி தருகிறது. வடக்கு பிரகாரத்தில் உள்ளது இந்த தல விருட்சம்.

    பவுர்ணமி அன்று தலவிருட்சமான பென்வில்வ மரத்திற்கு, அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன், இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்.

    சிவபெருமானுக்கு சிவகாம முறைப்படியும், லட்சுமி நாராயணருக்கு வைகானஸ ஆகம முறைப்படியும் தினசரி இங்கு இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஏகாதசி, பிரதோஷம், ஆடி, தை வெள்ளி, வைகுண்ட ஏகாதசி, மகாசிவராத்திரி போன்ற உற்சவங்கள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.

    சென்னிவாய்க்கால் கோவில்


    பிரம்மாவுக்கு ஐந்து முகங்கள் இருந்தபோது, இங்கு வந்து தனது ஐந்து முகங்களால் சிவனை வழிபட்டார். சிவபெருமான் தன்னுடைய ஐந்து முகங்களான சத்யோஜாதம், அகோரம், வாமனம், ஈசானம், தத்புருஷம் ஆகியவற்றுடன் பிரம்மாவுக்கு காட்சி தந்து அவரை மோட்சம் பெறச் செய்தார். ஐந்து முகங் களுடைய சிவனை, பிரம்மா தன் ஐந்து தலைகளால் (சென்னி) வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தல இறைவன் ‘சென்னி சிவம்’ என்று அழைக்கப்பட்டார். இந்தப் பகுதியும் ‘சென்னி வளநாடு’ என அழைக்கப்பட்டு, தற்போது ‘சென்னிவாய்க்கால் கோவில்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.

    அமைவிடம்

    திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் இருக்கிறது, இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 80A என்ற நகரப்பேருந்து லால்குடி வழியாக ஆனந்தி மேடு செல்லும். இந்த பேருந்தில் ஏறி சென்னிவாய்க்கால் சிவன் கோவில் என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அருகேயே உள்ளது ஆலயம். லால்குடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயம் செல்ல ஆட்டோ வசதியும் உண்டு. 
    ×