search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viswanatha swamy temple"

    மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு. அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர்.
    மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு. அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத்தோடு தொடர்புடைய இத்தலத்தில், வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

    மிகவும் பழமையான இந்த ஆலயம், ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

    யாருக்கு மறுபிறவி இல்லையோ, அவர்கள்தான் இந்தக் கோவிலுக்கு வர முடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும் என்கிறார்கள். இத்தல இறைவனை தரிசித்ததும், பக்தர்களுக்குப் பிரசாதமாக வில்வதளத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

    மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை நோக்கி தனிச் சன்னிதியில் வேதாந்த நாயகி அருள்புரிகிறாள். இந்த அம்பாள் வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போன்ற தோற்றத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் நம்முடன் பேசுவதுபோல், உதடுகள் குவிந்த நிலையில் உள்ளன. இது வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சி. அம்பாள், பக்தர்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பாவனையோடு இருப்பதாகச் சொல்கின்றனர். இந்த அன்னையை வணங்கினால், கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். மேலும் அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்கிறார்கள்.

    அம்பாள் சன்னிதிக்கு அருகில் இரண்டு பைரவர் திருமேனிகள் உள்ளன. ‘சாந்த பைரவர்’ என்ற பெயரில் சிறிய உருவிலும், ‘மகா பைரவர்’ என்ற பெயரில் 5 அடி உயரத்தில் பெரிய உருவிலும் ஒரே சன்னிதியில் இந்த பைரவர்கள் காட்சி தருகின்றனர்.

    பைரவர் சன்னிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனைப் பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். இவர் ஏன் ஒய்யாரமாக நிற்கிறார்? என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    சனி பகவானின் பார்வையில் இருந்து சிவபெருமான் கூட தப்பியதில்லை. ஈசனை சனீஸ்வரன் பிடிப்பதற்கான நேரம் நெருங்கியது. அதுபற்றி அம்பாளிடம், ‘தாயே! நான் ஈசனை நாளை காலை ஏழேகால் நாழிகைப் பொழுது வரை பிடிக்கப்போகிறேன்’ என்றார்.

    அதைக் கேட்ட பார்வதிதேவி, சனி பகவான் வரும் நேரத்தில் கயிலாயத்தில் உள்ள ஒரு அரச மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும்படி கூறினார்.

    குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமானைப் பிடிக்க வந்த சனீஸ்வரன், ஈசன் அரச மரத்தின் பின்னால் நிற்பதை அறிந்துகொண்டார். அரச மரத்தைப் பார்த்தபடியே நின்றார். சரியாக ஏழேகால் நாழிகை கழிந்ததும், அங்கிருந்து புறப்பட்டார்.

    அப்போது அன்னை சனி பகவானைப் பார்த்து, ‘என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?” என்றார்.

    அதற்கு சனி பகவான், இடுப்பில் இடக்கையை வைத்து சற்று ஒய்யாரமாக நின்றபடி ‘தாயே! நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது. ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க நேர்ந்ததல் லவா? அந்த நேரமே நான் அவரைப் பிடித்த நேரம்’ என்றார். அவரது பேச்சில் எடுத்த காரியத்தை முடித்துவிட்டோம், ஈசனையே பிடித்துவிட்டோம் என்ற ஆணவம் கலந்திருந்தது.

    அந்த ஆணவப் பேச்சைக் கேட்டதும், அரச மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்ட ஈசன், மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார். இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான், ‘சுவாமி! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன். நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகிவிடுவார்கள். இருப்பினும் ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இத்தலத்தில் உள்ள ஆணவம் நீங்கிய சனி பகவானை வணங்கினால், சனி தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

    மகா மந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, அம்பிகை நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தார். இதனால் அம்பாள் ‘வேதாந்த நாயகி’ என்று பெயர் பெற்றார்.

    அப்போது அங்கு வந்த நாரதர், ‘ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை ஒரு சேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்’ என்றார்.

    உடனே ஈஸ்வரன், பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.



    ‘பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்’ என்று நாரதர் சொன்னார்.

    பன்னிரு ஜோதிர் லிங்கங்களில், ஒரு லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் இத்தலத்திலேயே தங்கிவிட்டார். அந்தச் சன்னிதி மகாமண்டபத்திற்கு தென்கிழக்கு மூலையில் உள்ளது.

    இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்தியர், ஸ்ரீவிஸ்வநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார். அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால், அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார். மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார்.

    இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ‘மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்’ என்றார்.

    மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர், ‘பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்’ என்று சாபமிட்டார்.

    யாழி முகத்துக்கு மாறிய மகரிஷி, ‘மாமுனிவரே! இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது’ என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

    சாந்தமடைந்த அகத்தியர், ‘மகரந்த ரிஷியே! நான் கொடுத்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தை அடைவீர்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

    மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் வந்து விஸ்வநாத சுவாமியை பூஜித்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை மலரால், ஐம்பது ஆண்டுகள் பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலை அறுந்து, லிங்கத்தின் மீது விழுந்தது. அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்தில் இருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, இறைவன் காட்சி கொடுத்தார். ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார்.

    22 ஆயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து, இத்தல இறைவனுக்கு கவசமிடப்படுகிறது. ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் மட்டும் அணிவிக்கிறார்கள்.

    இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் தன் பத்தினிகளுடன் முருகப்பெருமான் அருள்புரிகிறார். ஆலயத்தின் வடக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு காட்சி தருகிறார். இவர், நவராத்திரி விழாவின்போது தன் மாப்பிள்ளையான சிவபெருமானையும் தன் தங்கையான வேதாந்த நாயகியையும் சீர்வரிசை கொடுத்து, தன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வாராம். இந்தச் சிவாலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் உள்ளது. இந்தப் பெருமாள்கோவிலில் நவராத்திரி விழா நடைபெறும் பொழுது, கடைசி நாள் சிவதம்பதியர் அங்கே வருகை தருவது வழக்கமாம். அவ்வாலயத்திலுள்ள பெருமாள் இங்கு வந்து சீர்வரிசை கொடுத்து அழைத்ததன் அடையாளமாக இங்கு வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவருக்கு அருகில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு அருகில் கோஷ்டத்தில் நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சன்னிதியின் பின்புறம் வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க நிலையில் நின்று வடமேற்கு திசையை நோக்கிக் காட்சி தருகிறார்கள்.

    குறைகள் தீர்க்கும் நந்தி :

    இந்த ஆலயத்தின் மகா மண்டபத்தில் இருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால், நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலது காது இல்லை. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். அப்போது பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி, இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலது காது மடங்கி உள்நோக்கிச் சென்றது.

    இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ‘நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலது காதின் பக்கத்தில் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்’ என்றாராம்.

    இத்தல நந்தியின் வலது காதுக்கான பகுதியில், பக்தர்கள் தங்களது குறைகளைத் தெரிவித்தால் அது விரைவில் நிவர்த்தி ஆவதாக சொல்கிறார்கள்.

    அமைவிடம் :

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் அருகில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது தேப்பெருமாநல்லூர் திருத்தலம். 
    ×