என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும்.
- கீழ்கண்ட வாஸ்து முறைகளை கடைபிடித்தால் வெற்றி பெறலாம்.
வியாபாரம், தொழில் நிறுவனங்களில் கீழ்கண்ட வாஸ்து கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என்று ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அது பற்றி பார்ப்போம்:-
பூஜை இடம்: கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் ஈசான்ய மூலையில் கடவுள் படங்களையோ அல்லது விக்ரகத்தையோ வைக்கக் கூடாது. தென்மேற்கு, தென் கிழக்கு,வடமேற்கு ஆகிய திசைகளில் ஒன்றில் அவற்றை வைத்து தினமும் வழிபட்டு வியாபாரத்தைத்தொடங்க வேண்டும்.
வாசற்படி: கடைகளில் வாசற்படியை கடையின் முழு அகலத்திற்கு அமைக்கலாம். கிழக்கு பார்த்த கடையில் படிகளை வடகிழக்கு மூலையில் அமைக்க வேண்டும். மேற்கு பார்த்த கடைகளில் படிகளை வட மேற்கில் அமைக்க வேண்டும். தெற்கு பார்த்த கடையில் தென் கிழக்கு மூலையில் படிகளை அமைக்கலாம். வடகிழக்கு அல்லது கிழக்கு பார்த்த கடைகளில் வட்டம் அல்லது அரை வட்டம் வடிவமும் கடை தோற்றம் அல்லது படிகள் அமைக்கக் கூடாது.
கதவுகள்: கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷட்டர்கள் இருக்கும் போது கீழே கொடுக்கபட்ட விதிகளின் படி அவற்றைக்கையாள வேண்டும்கிழக்கு பார்த்த கடைகளில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறாக அமைக்கக் கூடாது. இரண்டு ஷட்டர்களும் வேண்டுமானால் திறந்திருக்கலாம்.
கிழக்கு பார்த்த கடை: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணபெட்டி காசாளரின் இடது பக்கம் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் அமரக் கூடாது.
மேற்கு பார்த்த கடை : வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கைபுறம் பணபெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணபெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக்கூடாது.
வடக்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.
தெற்கு பார்த்த கடை: வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.
தெற்கு பார்த்த கடைகளில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். இந்த நியதிக்கு எதிர்மாறாகச் செய்யக் கூடாது. மேற்கு பார்த்தகடைகளில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். தென் மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது. வடக்கு பார்த்த கடைகளில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர்கள் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். இதற்கு மாறாக செய்யக் கூடாது.
- திருப்பதி திருமலையில் ஏராளமான தீர்த்தங்கள் காணப்படுகின்றன.
- தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.
சுவாமி புஷ்கரிணி: ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத் துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.
குமார தீர்த்தம்: மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.
தும்புரு தீர்த்தம்: இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு 'தும்புரு தீர்த்தம்' என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.
ஆகாச கங்கை: தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரைமாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிக விஷேசம்.
பாண்டு தீர்த்தம்: வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.
பாபவிநாசன தீர்த்தம்: இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.
- சிலருக்கு அடிக்கடி விரைய செலவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
- இந்த பரிகாரத்தை செய்து வந்தால், வீண் விரைய செலவுகள் குறையும்.
வெட்டி செலவு, தண்ட செலவு, விரைய செலவு என்று நம்முடைய வருமானத்திலிருந்து ஒரு தொகை கண்டிப்பாக செலவாகும். இப்படிப்பட்ட வீண் விரைய செலவுகளை குறைக்க நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பார்க்கலாம்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு. படிகாரம், மைசூர் பருப்பு. ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய கட்டி படிகாரத் துண்டு வைத்து விடுங்கள். ஒரு கைப்பிடி மைசூர் பருப்பையும் வைத்துவிட்டு, முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை, விரைய செலவு ஆகும் குறிப்பிட்ட அந்த பொருளுக்கு சுற்றி போட வேண்டும்.
உதாரணத்திற்கு உங்க பைக் அடிக்கடி செலவு வைப்பதால், அந்த பைக்கை இந்த சிவப்பு முடிச்சியை கொண்டு சுத்தி போடுங்க. வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லையா. அவர்களுக்கு கிழக்கு பார்த்துவாரு அமர வைத்து அவர்களுடைய தலையை 3 முறை சுற்றி விடுங்கள். உங்களுடைய வீட்டுக்கே நேரம் சரியில்லையா. உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களுமே வீண் விரைய செலவுகளை கொடுக்கிறதா. உங்களுடைய நிலை வாசல் படிக்கு வெளியில் நின்று உங்கள் வீட்டிற்கே திருஷ்டி கழிப்பது போல, இந்த முடிச்சை வைத்து திருஷ்டி கழித்து விடுங்கள்.
ஒரே முடிச்சு எல்லா பொருட்களுக்கும் சுற்றக்கூடாது. தனித்தனியாக ஒவ்வொரு பொருளுக்கு திருஷ்டி கழிக்க ஒவ்வொரு முடிச்சு தயார் செய்து கொள்ள வேண்டும். திருஷ்டி கழித்த இந்த சிவப்பு முடிச்சு உள்ளே இருக்கும் பொருட்களை ஓடும் தண்ணீரில் விட வேண்டும். அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாக கால் படாத இடத்தில் கொண்டு போய் இந்த இரண்டு பொருட்களையும் போடலாம். வீட்டின் அருகில் ஏதாவது கிணறு இருந்தால் கூட துணியை எடுத்து விட்டு உள்ளே இருக்கும் படிகாரம் பருப்பை மட்டும் அந்த கிணற்றுக்குள் போட்டு விடுங்கள்.
இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமையில் செய்யலாம். மாலை நேரத்தில் பரிகாரம் செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால் அமாவாசை தினத்தில் செய்யலாம். மாதம் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து வந்தால், வீண் விரைய செலவுகள் குறையும்.
- இந்த பரிகாரம் செய்தால் பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.
- பைரவருக்கு இந்த பரிகாரம் செய்தால் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.
கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந் தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு அப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்தியம் இடவும்.
ஒரு தலை வாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பரப்பி அதன் மீது ஒரு தலை வாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ணபைரவரை வழிபடலாம்.
இந்த வழிபாட்டை செய்யும்போது பைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீ பைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வச் செழிப்பைப்பெறலாம். பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.
பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.
இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது. மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம். நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.
ஸ்ரீ ஸ்வர்ண பைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால் பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம். பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.
- கர்நாடக மாநிலம் பெனர்கட்டா என்ற ஊரில் உள்ளது இந்த கோவில்.
- இந்த கோவிலில் செய்யும் பரிகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ளது பெனர்கட்டா என்ற ஊர். இவ்வூர் பஸ்நிலையத்தின் அருகில் ஒரு மாரியம்மன் ஆலயம் உள்ளது. இதனை 'குன்றிமணி மாரியம்மன்' என்று அழைக்கிறார்கள்.
இந்த கோவிலில் அம்மன் சன்னிதிக்கு அருகில் ஒரு சிறிய அளவிலான அம்மன் சிலை உள்ளது. இதனை குன்றி மணி நிரம்பிய ஒரு தாம்பாளத்தில் வைத்துள்ளனர்.
அங்கு வரும் பக்தர்கள், தங்களின் பிரச்சினைகளை அம்மனிடம் சொல்லி, குன்றி மணிகளை இரு கை நிறைய அள்ளி எடுத்து, அம்மன் மீது அபிஷேகம் செய்வது போல மூன்று முறை போட்டு வழிபடுகிறார்கள். இப்படி செய்வதால் அவர்கள் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
- பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது.
- இந்த கோவிலில் ஸ்ரீ சக்கரம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் எழில் மிகு இயற்கை சூழலில் மூலிகைகள் நிறைந்த தாடகை மலை அடிவாரத்தில் அமைந் துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரவர், சரபேஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சித்த வழிபாட்டு முறையை பின்பற்றும் இத்திருக்கோவிலில் அருஉருவமாய் இருக்கும் சித்தர் நடராஜ யாகவ குருவின் வழிகாட்டுதலின்படி பூஜைகள் நடைபெறுகிறது.
இக்கோவிலில் சித்தர் நடராஜ யாகவர் அருஉருவமாய் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும், சித்த புருஷர்களின் இருப்பை உணர முடிவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். இக்கோவிலின் மூலக்கோவிலானது ஆத்மநாதவனத்தில் இருந்து சுமார் 5.கி.மீ. தொலைவில் கோட்டூர் மலையாண்டி பட்டினத்தில் ஜோதி வடிவாக காட்சி தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
அருள்மிகு சமுக்தியாம்பிகை
அத்திருக் கோவிலின் முதன்மை தெய்வம் "அருள்மிகு சமுக்தியாம்பிகை". 9 அடி உயரத்திலான அழகிய சிலா ரூபத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு அம்பிகை க்கு நித்யபடி நடைபெறும் அபிஷேகங்கள் யாரும் காண முடியாத வண்ணம் திரையிட்டே நடத்தப்படுகிறது. இங்கு அம்பிகைக்கு வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் 6 சிறப்பு மஹா அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. கார்த்திகை மாதம் வளர்பிறை தசமி திதியில் பழச்சாறுகளைக் கொண்டு நடத்தப்படும் மானசாபி ஷேகம் மட்டுமே பக்தர்களால் காண முடியும். இங்கு அம்பிகைக்கு தேங்காய் மாலை வழிபாடு பக்தர்களால் நடத்தப்படுகிறது. இவ்வழிப்பாட்டின் மூலம் திருமணத்தடை நீக்கி, குழந்தையின்மை நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
கால சம்ஹார பைரவர்
இக்கோவிலின் பைரவ மூர்த்தியானவர் 8 அடி உயரத்தில் 8 கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எங்கும் காணமுடியாத வண்ணம் பைரவரின் நாய் வாகனமானது சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பாகும். இங்கு பிரதிமாதம் தேய்பிறை அஷ்டமி அன்று காலை 11 மணிக்கும் மற்றும் 4 மணிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெறுகிறது.
அஷ்டமி இரவு 7.50-க்கு நடைபெறும் அர்த்த ஜாம பூஜையின் போது சித்தர்கள் வருவதாகவும் அதனை அங்கு பரவும் நறுமணம் மூலம் உணர்வதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். தேய் பிறை அஷ்டமியன்று திரளாக பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை மாதம் வரும் காலாஷ்டமி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
கோரிக்கை தேங்காய் வழிபாடு
தேய்பிறை அஷ்டமியன்று மட்டையுடன் கூடிய முழுத் தேங்காயை பைரவரிடம் சமர்பித்து தங்களது கோரிக்கையை பிரார்த்திக்கின்றனர். பின்னர் அத்தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அக் கோரிக்கை நிறைவேறிய பின்பு அந்த தேங்காயை மீண்டும் கோவிலில் செலுத்தி வேண்டு தலை நிறைவேற்று கின்றனர்.
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது. இவ்விக்கிரகம் போல் வேறு எங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். நீரால் சூழப்பட்டுள்ள சிறு கரு வறையில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஒரு சிறு பாலத்தின் வழியே அர்ச்சர்கள் சென்று பூஜை செய்கின்றனர். உடல், மனநோய் மற்றும் கெட்ட சக்திகளின் தொல்லையில் இருந்து விடுபடவும் பவுர்ணமி இரவில் பல மூலிகைகளால் ஆன அவுஷதா அபிஷேகம் நடைபெகிறது.
இந்த அவுஷதா அபிஷேகம் இக்கோவிலில் மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு கோவிலிலேயே தயாரிக்கப்படும் பச்சை நிற குங்குமம் அம்பிகையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி, ஜாம பூஜை மற்றும் பவுர்ணமியன்று வழங்கப்படும் சித்த மூலிகை தீர்த்தம் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் மற்றும் கோட்டூர் செல்லும் பஸ்களின் மூலம் அங்கலக்குறிச்சி சென்று அங்கிருந்து ஆட்டோ, கார் மற்றும் நடைப்பயணம் மூலம் ஆத்மநாதவனத்தை அடையலாம்.
ஆலய தொடர்புக்கு- 94895 09305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த கோவிலில் ஸ்ரீ சக்கரம் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்கரத்தை வணங்கினால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
- வாஸ்துவில் திசைகள் என்பது மிக மிக முக்கியமானது.
- மீன் தொட்டியை எந்த திசையில் வைப்பது நல்லது என்று பார்க்கலாம்.
வாஸ்து என்பது வேத கால அறிவியல். வாஸ்து முறைப்படி வீடு அமையாவிட்டால் ஏற்படும் துன்பங்களை சரி செய்வதற்கு பல வழிகள் உண்டு. அவற்றில் ஒன்று வீட்டில் மீன் வளர்ப்பது. மீன்கள் தீய அதிர்வுகளை தனக்குள் இழுத்து வெளியேற்றும் ஆற்றல் உண்டு. இனி வீட்டில் மீன் தொட்டியை எங்கு வைப்பது, அதில் என்னென்ன வாஸ்து மீன்கள் வளர்க்கலாம், அதனால் அடையும் பயன் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
வீட்டின் வரவேற்பறையில் தென்மேற்கு மூலையில் மீன் தொட்டியை வைப்பது சிறப்பு . வாஸ்துவில் திசைகள் என்பது மிக மிக முக்கியமானது. மீன் தொட்டி வீட்டை அலங்கரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. விருந்தினர்களின் மகிழ்ச்சியை கூட்டுகிறது. மீன்களுக்கு உணவிடும் போது நம் கர்மாவை கழிப்பதோடு மன அமைதியை அளிக்கிறது. மீன்கள் வீட்டில் மட்டும் அல்ல பள்ளிகள், அலுவலகங்களிலும் வளர்க்கலாம்.
வீட்டில் வளர்க்கும் வாஸ்து மீன்கள் பற்றி பாப்போம்.
டிராகன் மீன் (Dragon Fish)
டிராகன் மீன் வாஸ்து மீன்களில் முதன்மையானது மற்றும் வாஸ்து மீன் தொட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான மீனாகும். வாஸ்து மீன்களிலேயே மிகவும் விரும்பப்படும் மீனாகும். இதை வீட்டில் வளர்த்தால் அதிகாரம், வளமை, மகிழ்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் தருக் கூடிய ஆற்றல் உள்ளது. இது மற்ற மீன்களை விட விலை உயர்வானது.
கோல்ட் மீன் (Gold Fish)
கோல்ட் மீனும் டிராகன் மீனுக்கு இணையானது. இது விலையும் குறைவு; அதிக எண்ணிக்கையில் வளர்க்கப் படும் மீனாகும். இந்த வாஸ்து மீன் அழகு மற்றும் நல்லிணக்கத்தின் வடிவமாகும். இது வீட்டில் வளர்க்கும் போது குடும்பத்தில் நல்லிணக்கத்தை உண்டு பண்ணக்கூடியது. கோல்ட் மீன்களை பார்க்கும் போதே மனக் கவலைகள் பறந்து போகும்; மனதில் அமைதி பிறக்கும்.
பிளாக் மூர் (Blackmoor)
கட்டாயம் வாஸ்து மீன் தொட்டியில் இந்த பிளாக் மூர் இருப்பது மிகவும் முக்கியம். காரணம் வாஸ்து மீன்களை வளர்ப்பதே தீய சக்திகளை வெளியேற்றத் தான். பிளாக் மூர் தீய சக்திகளை இழுத்துக் கொண்டு நல்ல சக்திகளை வெளியிடக் கூடியது. இந்த மீன் வீட்டில் இருந்தால் நல்ல சக்திகள் வீடு முழுவதும் பரவி இருக்கும் என்பது உறுதி.
பட்டர்ப்ளை கொய் (Butterfly Koi)
பட்டர்ப்ளை கொய் கடுமையான நீரோட்டத்தை எதிர்த்து நீந்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இது வெற்றி மற்றும் சாதனைகளின் வடிவமாகும். உங்கள் வீட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருந்தால் நிச்சயம் இந்த மீன் வீட்டில் இருக்க வேண்டும். இம்மீனை அவர்கள் பார்க்கும் போதெல்லாம் தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்கள் உருவாகும் என்பதில் ஐயம் இல்லை. குடும்பத்தில் உள்ளளவர்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும் இந்த பட்டர்ப்ளை கொய் மீன்.
பிலோவேர் ஹார்ன் மீன் (Flower Horn Fish)
அழகு என்றால் அது பிலோவேர் ஹார்ன் மீன் தான்.இந்த மீன் அதிர்ஷ்டத்தையும் அன்பையும் ஒன்றாகத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதோடு ஆரோக்கியத்தையும் தரும். நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மை சந்திப்பவர்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும். எனவே வீடிற்கு வரும் விருந்தினர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள், இதனால் உறவுகள் மேம்படுவதோடு, கிளைத்து வளர்வதும் உறுதி.
ஒரு வாஸ்து மீன் தொட்டியில் குறைந்தது 9 வாஸ்து மீன்களாவது இருக்க வேண்டும். அதில் 8 மீன்களில் மேலே சொன்ன 5 மீன்கள் இடம் பெற வேண்டும். இவற்றில் பிளாக் மீன் (Black Fish) இடம் பெறலாம், இடம் பெறாமலும் இருக்கலாம்.
வாஸ்து மீன்கள் வளர்ப்பதால் பெரும் நன்மைகள்.
மீன் தொட்டி தீய சக்திகளை இழுத்துக் கொண்டு நல்ல சக்திககளை உற்பத்தி செய்கிறது. மிகவும் உற்சாகமான ஆரோக்கியமான மீன்கள் அபரிமிதமான செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும் ஈர்க்க உதவும்.
நீங்கள் பசியோடு உள்ள மீன்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் உங்களுக்கும் புண்ணியம் வந்து சேரும்.
மீன் தொட்டியை வேடிக்கை பார்ப்பது, நண்பர்களோடு பழகுவது போன்றதாகும்; அவை உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள மிக மிக உறுதுணையாக இருக்கும்.
உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் அது தொடர்பான திசையில் மீன் தொட்டி வைத்தால் அந்த பிரச்சனை விலகும்.
இறுதியாக, மீன் தொட்டி உங்கள் வீட்டை அழகாகவும் அற்புதமாகவும் ஆக்கும் என்பது உறுதி.
நாள் முழுவது உழைத்து களைப்போடு வீட்டில் நுழைந்ததும் ஓடி விளையாடும் குழந்தைகளைப் பார்ப்பது போல அங்கும் இங்கும் நீந்தும் இந்த மீன்களை பார்த்தால் உடல் மன களைப்பு பறந்து போவது உறுதி. இவ்வளவு நன்மைகளை அளிக்கும் வாஸ்து மீன்களை நம் வீட்டில் வளர்த்து நன்மையையும் மகிழ்ச்சியும் அடைவோம்.
- கர்மவினைகள் நீங்க, சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பல உபாயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கு தக்க பலனுண்டு.
- கர்மவினைகளில் மூன்று வகைகள் உண்டு.
மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருதல் இயற்கை. இதில் இன்பம் வரும்போது மகிழ்ச்சியடையும் மனம் துன்பம் ஏற்படும் போது தடுமாறுகிறது. இதன் வெளிப்பாட்டின் உச்ச கட்டமாக "கடவுளுக்கு கண் இல்லையா?', "எல்லாம் என் தலைவிதி', "என்ன பாவம் செய்தேனோ?' எந்த பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது" என பலவாறு புலம்புவதுண்டு. இது பலருடைய ஆதங்கம்.
தர்மசாஸ்திர நியதிப்படி ஒருவர் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலனுண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலனுண்டு. ஆக கர்ம வினைக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அரசன்முதல் ஆண்டிவரை அனைவருக்கும் பொருந்தும். ஒரு மனிதன் இந்த பூமியிலே பிறப்பதற்கு காரணம் முற்பிறவியிலே செய்த பாவ, புண்ணியமாகும். அதை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான்.
அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம, கர்ம" பூமி என்று பெயர். ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ செய்ய நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்திலேயே செய்து விடுகிறார்கள். வேறு சிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. இதற்கு பிறந்த நேரமே காரணம் என்று நடைமுறையிலே சிலர் பேச பார்க்கிறோம்.
ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் மூலமே உயர்வானதை அடைய முடியும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும். அந்த ஒன்பதாம் இடத்தில் சுய ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார். எண்ணியதை அடைந்து விடுகிறார். ஒன்பதில் அசுப கிரகங்களின் சம்பந்தம் இருக்கப் பிறந்தவர்கள் தடுமாறுகிறார், போராடுகிறார், அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். இதுதான் "ஜோதிட ரகசியம்".
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை எனப்படும்.ஒருவர் அறிந்தோ அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினை தான் தோஷம் எனும் வினைப்பதிவு. இந்த தோஷம் உருவாகக் காரணம் பிறருடைய "கோபம்" மற்றும் "சாபம்" இதில் "கோபம்" என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை.
பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக சொன்னால் ஏமாந்தவர் ஏமாற்றியவர் மீது வெளிப்படுத்தும் உணர்வு.
"சாபம்" என்பது கோபத்தின் உச்சகட்டமாகும். சாபம் என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் கண்ணீருடன் சபிப்பது தான் சாபம். அந்த கோபமோ சாபமோ நியாயமானதாகவோ நியாயமற்றதாகவோ இருக்கும்.
திரிகோண அதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோப, சாபத்தில் பெரிய நியாயம் இருக்காது. அது ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மறைவு ஸ்தான அதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோப,சாபத்தில்நியாயம் இருக்கும். பாதிக்கப்பட்டவரின் இயலாமையின் வெளிப்பாடு மிகுதியாக இருக்கும். இது ஜாதகருக்கு மீள முடியாத தாக்கத்தை உருவாக்கும்.
ஜோதிட ரீதியாக சனி, செவ்வாய் ராகு கேது, மாந்தி போன்ற கிரகங்களுடன் சம்பந்தம் பெறும் கிரகங்கள் ஒருவர் பெற்ற கோபம் மற்றும் சாபத்தின் விளைவுகளை உணர முடியும். ஒருவரின் கர்மாவை ராகு (தந்தை வழியிலும்), கேது (தாய் வழியிலும்), பனிரெண்டாம் அதிபதி சுட்டிக் காட்டும்.ஆறாம் வீட்டையும் குருவின் நிலையும் கொண்டு இந்த பிறவியில் எவ்வளவு தீர்க்கப்போகிறார் என்பதையும் அறியலாம்.ஒரு ஆத்மா தன்னுள் நிறுத்தும் கர்மா சொத்து, காமம், காசு என்ற மூன்று வழியாகவே உருவாகுகிறது.
இந்த மூன்றும் தந்தை, தாய் வழி கர்ம வினை மற்றும் முன் பிறப்பின் கர்ம வினை மூலமாக ஒரு ஆன்மாவினில் இயங்குகிறது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்ம வினை தாக்கத்தால் வருபவை.
இதை தீர்க்க பரிகாரம் உள்ளதா? என்பதே இந்த கட்டுரையின் சாராம்சம்.
கர்மவினைகள் நீங்க,சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பல உபாயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எந்த வகையான கர்மவினை பாதிப்பு ஒருவர் ஜாதகத்தில் உள்ளது, எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை செய்து வந்ததால் நலம் பெற முடியும். மனிதர்களைத் தொடரும் கர்மவினைகளில் மூன்று வகைகள் உண்டு.அவை வருமாறு:-
1. த்ருத கர்மா
(தெரிந்தே செய்த பாவம்)
சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 போன்ற பாவகங்கள் மூலம் அனுபவிக்கும் தீர்க்க முடியாத கர்மாவாகும். பஞ்சமகா பாதகம் என சாஸ்திரங்களில் கூறப்பட்ட மிகக் கடுமையான, கொடூரமான பாவங்களின் வினைப்பதிவு. சென்ற பிறவியில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய குற்றங்களான பிறர் சொத்தை அபகரித்து ஒருவரை துன்புறுத்துவது, கற்பழிப்பு, பணத்துக்காகக் கொலை, தாய் தந்தையரை பராமரிக்க தவறுவது, கணவன் மனைவிக்கு துரோகம் செய்வது, மனைவி கணவனுக்கு துரோகம் செய்வது, பெற்ற பிள்ளையை முறையாக கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைப்பது, நம்பிக்கை துரோகம்போன்றவைகள் இதில் அடங்கும்.
அதாவது தெரிந்தே பாவங்களைத் தொடர்ந்து செய்வதால் அதற்கு மன்னிப்பே கிடையாது. இது போன்ற பாவங்களை செய்தவர்களின் குடும்பத்தில் முன்னோர் வழிபாடு செய்யும் வழக்கம் இருக்காது அல்லது முன்னோர்களை வழிபட்டால் ஏதாவது பிரச்சினை உருவாகும். இவர்களுக்கு குல தெய்வ வழிபாடும் இருக்காது. இவர்களுக்கு இந்த ஜன்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும் பலிக்காது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குருவின் தொடர்போ, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. சுய ஜாதகத்தில் ராகு, மாந்தி, 9-ம் அதிபதியின் நிலையை வைத்தே இவர்களுக்கு தெளிவான தீர்க்கமான முடிவை சொல்ல முடியும். இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க இந்த ஜென்மத்தில் வாழும் காலம் வரை சுப பலனை அனுபவிக்க பித்ருக்கள் வழிபாடு, திலஹோமம், அன்னதானம் , சிவ வழிபாடு தொடர்ந்து செய்யவேண்டும்.
2. த்ருத அத்ருத கர்மா:
சுய ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 வலிமை பெற்ற ஜாதகம். மன்னிக்கக்கூடிய குற்றங்களை, முற்பிறவியில் செய்த குற்றமாகும். அதாவது, தெரிந்து செய்த தவறு. அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது. இதற்கு இந்த ஜென்மத்தில் ஜாதக ரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி ஓரளவு நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள் தொடர்ந்து வராது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வையிருக்கும். இவர்கள் தங்கள் மனோவிருப்பங்கள் நிறைவேற சாந்தி மந்திரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
சாந்தி மந்திரம் மிக வலிமையானது. ஏனென்றால் எவ்வளவுதான் செல்வம், புகழ் இருந்தாலும், குடும்பத்தில், மனதில் நிம்மதி அமைதி இல்லாவிட்டால் பயனில்லை.விதிமுறைப்படி சாந்தி மந்திரம் பிரயோகித்தால் இல்லத்தில், மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நல்ல சூழலையும் மலரச்செய்யமுடியும். இவர்கள் பாக்கியஸ்தானத்தை வலுப்படுத்த பித்ருகளுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை முறைப்படுத்தினால் கைமேல் பலன் கிடைக்கும்.
அத்துடன் தனது சொந்த புத்தியின் விகாரங்களான அதீத காமம், அதீத கோபம், அதீத பேராசை போன்றவற்றை கைவிட வேண்டும். அதன் பிறகு கீழ்காணும் சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வந்தால் நன்மை உண்டாகும்.
ஓம் சக நாவவது சக நவ் புனக்து சக வீர்யம்
கரவாவகை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவகை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
3. அத்ருத கர்மா:
சுய ஜாதகத்தில் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் முழுமையயாக பலன்தர கூடிய அமைப்பில் இருக்கும். முன்னோர்கள் நல்லாசி, குல தெய்வகடாட்சம் நிரம்பியவர்கள். மிகவும் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்கள் தெரியாமல் செய்வது. போன்ற வினைகள் இவர்களுடைய பதிவில் இருக்கும். இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் பிரார்த்தனை செய்வதே போதுமானது. இந்த வகை ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருக்கும்.
ஒருவர் தன் வாழ்நாளில் நற்பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ வைக்கும் முயற்சியாகவே நம் முன்னோர்கள் ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை உபதேசித்து இருக்கிறார்கள். தவறு செய்வது மனித இயல்பு.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு தவறு செய்தாலும் "என் மனதால் கூட யாருக்கும் எந்த கெடுதலும் செய்தது இல்லை" என்பதையே கூறுகிறார்கள்.இதற்கு தான் செய்வது தவறு என்ற அறியாமையும் ஒரு காரணம். தன் தவறை யாரும் பார்க்கவில்லை, சாட்சி இல்லை என்று தவறை மறைக்க முயற்சி செய்வது மற்றொரு காரணம். தவறை மறைக்க முயற்சிப்பவர்களுக்கு எந்த பரிகாரமும், வழிபாடும் பலன் தராது. சிறு தவறு முதல் பெரும் குற்றங்கள் வரை மனித வாழ்வின் அனைத்து சம்பவங்களும் கால பகவான் எனும் கண்காணிப்பு கேமராவால் படம் பிடிக்கப்பட்டு காலப் பதிவேட்டில் பதியப்படும் என்பதை உணர்ந்தவர்கள் சரணாகதி அடைந்து இறைவனின் அருட் கருணையால் கர்ம வினை நீங்கி சுப வாழ்வு வாழ்கிறார்கள்.
முன் வினைகளின் விளைவுகள் தான் மனிதர்களை துரத்திக் கொண்டே வருகின்றன. மனிதன் முக்தி அடைவதற்கும் பிறவாப் பெருநிலை அடைவதற்கும் சஞ்சித கர்மா முற்றிலும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும். பிறவி எடுத்து சரி செய்வது முடியாத காரியம். சரணாகதி எனும் வழிபாடே சஞ்சித கர்மாமிற்கு முற்று புள்ளி வைக்க பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட அருட்கொடை.
அது போலத்தான் கடந்தகால 'கர்மாவை' ஒட்டியே, தற்போதைய வாழ்வும் அமைந்து விடும். அதனால் நமது செயல்கள் நன்மையை விளைவிப்பதாக இருக்க வேண்டும். நன்மையை விளைவிக்கும் செயல்களைச் செய்வதற்கு, முதலில் இறைவன் மேல் அன்பைச் செலுத்த வேண்டும். இரண்டாவதாக பாவச் செயல்களை செய்வதற்கு பயப்பட வேண்டும். இறுதியாக நாம் வாழுகின்ற சமூகத்தில் ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும்.
இந்த மூன்றையும் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், புதிய கர்ம வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க முடியும். கடவுளின் மீதான அன்பு , பாவச் செயல்களைத் தவிர்த்தல்-ஒழுக்கம், இவை மூன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவைகள். இவைகளைக் கடைப்பிடிப்பதற்கு, இறைவனின் மீதான பக்தியே உதவி செய்யும்.கால சக்கரத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் பிடியில் இருந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் விதிப்பயனை மீறி சில திட்டமிடுதலை செய்து வெற்றி பெற சாஸ்திரத்தில் சில வழிபாட்டு பூஜை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆர்வம் மற்றும் ஈடுபாட்டுடன் வழிபாட்டு முறைகளை கையாண்டால் பரிபூரண பலன் கிடைக்கும். அந்த வகையில் அன்றாட வாழ்வில் அநேகர் சந்திக்கும் முக்கிய தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தினால் விரைவில் தீர்வு கிட்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
- திண்டுக்கல் மேலக்கோட்டையில் ‘தலை வெட்டி பிள்ளையார்’ அருள்பாலித்து வருகிறார்.
திருவாரூரில் திருமஞ்சன வீதியும், காரைக்காட்டு தெருவும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து அருள்புரிந்து வருகிறார் 'பெருநாட்டு பிள்ளையார்.' இந்தக் கோவில் தினமும் மாலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை தான் திறந்திருக்கும். இந்தக் கோவிலின் சிறப்பே அரை மணிநேரத்திற்கு நடக்கும் அபிஷேகம் தான். அதைக் கண்டு தரிசித்தால் தொழில் அபிவிருத்தி, குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, திருமணம் கைகூடுவது என்று அனைத்து வேண்டுதல்களும் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது, மேலக்கோட்டை. இங்கு 'தலை வெட்டி பிள்ளையார்' அருள்பாலித்து வருகிறார். கல்யாணத் தடையால் கலங்கி தவிப்பவர்கள், இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா மற்றும் சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும். மேலும் பச்சரிசி, எள், வெல்லம் கலந்த கலவையை கீழே சிந்தியபடி விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டும். விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டு, திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரன் தேடி வரும் என்பது ஐதீகம்.
திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ளது, தீவனூர் கிராமம். இங்குள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் ஆலயத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின் கரையில் வீற்றிருக்கிறார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ள ஆண், பெண் யாராக இருந்தாலும், இந்தக் கோவிலுக்கு வந்து கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும். அரளி, சிவப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இதேபோல் வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும்.
நெல்லை காந்திமதி அம்மன் ஆலயத்தில் அருள்புரியும் பொல்லாப்பிள்ளையாரை வேண்டிக்கொண்டு தினமும் அவரை மனதில் தியானம் செய்தால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை நிச்சயம் பிறக்கும். குழந்தை பிறந்ததும் இங்கு சன்னிதிக்கு வந்து, குழந்தையை இங்குள்ள ஜன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கிக்கொள்ளும் சம்பிரதாயம் இன்றும் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் 108 விநாயகர்கள் கோவில் இருக்கிறது. எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும் இங்கு வந்து திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்து நன்மை அடைந்தவர்கள் ஏராளம். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு தயிர் அபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் பெறலாம். விநாயகரின் 32 வடிவங்களில் ஒன்று 'உச்சிஷ்ட கணபதி'. ஒரு பெண்ணை அணைத்தபடி உள்ள வடிவம்தான் 'உச்சிஷ்ட கணபதி' வடிவமாகும். இந்த உச்சிஷ்ட கணபதியை வணங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
சிதம்பரம் நகரின் தெற்கு தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னிதியை நோக்கியவாறு சக்தி பாலவிநாயகர் உள்ளார். சிதம்பர ரகசிய ஓலைச் சுவடியில் 64-ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. நடராஜர் கோவில் அமைந்தபோது, இவ்விநாயகர் கோவிலும் இருந்தது என்பதால், இவரை 'ஆதி விநாயகர்' என்கிறார்கள். குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அமிர்த கலசமும், வலது கையில் மோதகமும் வைத்துள்ளார். மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு அருளும் சக்திபெற்றவர் இவர்.
- தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
- சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களை தரும்.
* மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.
* தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.
* துவாதசி பன்னிரண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான் என நம்பப்படுகிறது.
* மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் போய் உரிய பலன்களை கொடுக்கும்.
* பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களை தரும்.
* மகாளாய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.
- பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்காது.
- குழந்தைப் பாக்கியம் இருக்காது.
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.
பித்ரு தோஷத்தக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?
பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.
எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?
கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும்.
ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.
ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.
ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் பித்ரு தோஷம் வருவது ஏன்?
ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும்.
இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம்.
- அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
திருச்சி தென்னூரில் சோழ மன்னர்களால் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, பின்னர் கிராம தேவதையாக மக்களை காத்துவரும் உக்கிர மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
உக்கிர மாகாளியம்மன் கோவிலின் தல விருட்சம் வன்னி மரமாகும். மேலும், இங்கு திருவோடு மரம் இருப்பது தனிச்சிறப்பு. இந்தக் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்து இருக்கும். முற்கால சோழ அரசர்களால் வெற்றியின் தெய்வமாக நிர்மாணிக்கப்பட்டு திருவிழாக்கள் பல எடுத்து வழிபட்ட உக்கிரகாளியம்மன் தான் இங்கே தென்னூரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு சான்றாக இவ்விரு கோவில்களிலும் கருவறையில் காட்சியளிக்கும் அம்பிகையின் ஒரே மாதிரியான உருவமைப்பு முன் வைக்கப்படுகிறது. மேலும், சோழ அரசர்களால் வழிபட்ட உக்கிரமாகாளியம்மன் சிலை காலப்போக்கில் ஆற்றில் அடித்துவரப்பட்டு தென்னூரில் கரை ஒதுங்கியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அம்மனுக்கு கோவில் அமைத்து கடந்த 5 தலைமுறைகளாக வழிபட்டு வருகிறார்கள்.
உக்கிர மாகாளியம்மனை மனமுருகி வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் தொல்லை நீங்கும். கண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தீர்ந்தவுடன் அம்மனுக்கு புடவை சாத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.
மேலும், தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஒரு சில பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபாடு செய்வார்கள். அமாவாசை, பவுர்ணமி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படாது. சித்ரா பவுர்ணமியையொட்டி உக்கிர மாகாளியம்மனுக்கு தென்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், தீர்த்தக் குடம் மற்றும் அக்னி சட்டியுடன் ஊர்வலமாக வந்து வழிபடுவார்கள்.






