search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    போதைப்பொருள் கடத்தி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ததாக கூறி புதுச்சேரி பா.ஜனதா பிரமுகருக்கு போனில் மிரட்டல்
    X

    மர்மநபர்கள் அனுப்பிய போலி எப்.ஐ.ஆர்.பதிவு

    போதைப்பொருள் கடத்தி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ததாக கூறி புதுச்சேரி பா.ஜனதா பிரமுகருக்கு போனில் மிரட்டல்

    • போலீஸ் நிலையத்தில் எவ்வாறு ‘வயர்லெஸ்’ சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது.
    • தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை “ஸ்கைப் காலில்” பேசசொன்னார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை பா.ஜனதா மாவட்ட தலைவர் தண்டபாணி. இவர் லாஸ்பேட்டை அவ்வை நகரில் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் உள்ளிட்ட தொழில்களையும் நடத்தி வருகிறார்.

    நேற்று காலை 8.13 மணிக்கு கர்நாடக மாநில பதிவு பெயர் கொண்ட தொலைபேசி எண்ணில் இருந்து தண்டபாணிக்கு போன் வந்தது.

    எதிர் முனையில் பேசியவர் நீங்கள் பெட்எக்ஸ் கொரியர் மூலம் அனுப்பிய போதை பொருளை மும்பையில் கைப்பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. உங்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடத்தல் மூலம் நீங்கள் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு பட்டியல் வந்துள்ளது.

    எனவே நாங்கள் சொல்வது நீங்கள் கேட்டால் உங்களை வழக்கில் இருந்து விடுவிப்போம் என பேசினார். இதைக் கேட்ட பா.ஜனதா பிரமுகர் தண்டபாணி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    எதிர்முனையில் பேசிய நபர் உடனே தண்டபாணியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது போல் ஒரு கடிதத்தை அனுப்பினார்.

    அந்த எப். ஐ. ஆரில் சி.பி.ஐ. எப்படி வழக்கு பதிவு செய்திருக்குமோ அதே போல் இருந்தது.

    தொடர்ந்து மற்றொருவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக பேசினார்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் எவ்வாறு 'வயர்லெஸ்' சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது. தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை "ஸ்கைப் காலில்" பேசசொன்னார்.

    எதிரே பேசியவரின் உருவம் ஸ்கைப் காலில் தெரியாததால் சந்தேகம் அடைந்த தண்டபாணி சுதாரித்து பதில் தர ஆரம்பித்தார். அடுத்தடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் விடாமல் பேசிய அந்த நபர் தண்டபாணியின் வங்கி கணக்கு எண் அவருடைய பண பரிமாற்றம் உள்ளிட்டவையை கூறி மோசடியில் ஈடுபட முயற்சித்தார்.

    பின்னர் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி போனை துண்டித்து இதுகுறித்து கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரி என பேசிய போலி நபரின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். புதுவையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரமுகர்களை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரி என கூறி போலி ஆசாமிகள் தொடர்ந்து மிரட்டி வருவதால் பா.ஜனதாவினர் கலக்கத்தில் உள்ளனர்.

    ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரி என கூறி கல்யாணசுந்தரம், சிவசங்கர் எம்.எல்.ஏ.விடம் சிக்கிய போலி அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×