என் மலர்
மற்றவை
- யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை.
- 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா
நாகேஷ் ஒரு முறை நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!
முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!
முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!
நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!
'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!
'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?' 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'
-இரா.இராஜகோபாலன்
- பெண்களுக்கு அதற்கு பதிலாக அன்பும் அரவணைப்பாலுமே உந்தப்படுவார்கள்.
- ஆண்கள் பெண்களை விட பலவீனமானவர்கள்.
பெண்களுக்கு காமம் என்பது ஓர் ஆண் அவளை கட்டித்தழுவி கொஞ்சும் போதே ஆரம்பமாகின்றது. ஆனால் ஆணுக்கு அது இயல்பாகவே உள்ளது.
பெண்களை பொருத்தவரை காமம் ஒரு விசயமே அல்ல. ஆண்களுக்கு தான் காமம் என்றால் ஓர் அலாதி பிரியம் இயல்பாகவே உள்ளது. பெண்களுக்கு அதற்கு பதிலாக அன்பும் அரவணைப்பாலுமே உந்தப்படுவார்கள்.
எந்த பெண்ணையுமே காம ஆசைக்காட்டி எந்த ஓர் ஆணாலும் வெல்ல முடியாது. அதனால் தான் பெரும்பாலான பெண்கள் தனது காதலனிடமே தனது கற்பை இழந்து நிற்கின்றார்கள்.
காதல் வழியாக மாத்திரமே ஒரு ஆணால் ஒரு பெண்ணின் உடலை அடைய முடியும். ஆனால் ஆணுக்கு அப்படியல்ல, அவனுக்கு ஓர் பெண்ணில் பிரதானமானது காமம் தான். பின்புதான் மற்றவை.
இதுவே ஓர் பெண்ணுக்கு ஒரு ஆணின் காதல் தான் பிரதானமானது. பின்பு தான் மற்றவைகள். அதனால் பெண்ணுக்கு காமத்தை அடக்க வேண்டிய தேவையே இல்லை. காமத்தை அடக்க வேண்டிய தேவை ஆண்களுக்கே உள்ளது. அந்த வகையில் ஆண்கள் பெண்களை விட பலவீனமானவர்கள்.
-திருமேனி
- ஆராய்ந்த ஆய்வுகள் ஒரு 15% கேஸ்களில் இப்படி ஏற்படும் வாய்ப்பு உண்டு என்கின்றன.
- உடலின் பல உறுப்புக்களிலும் சேமிக்கப்படலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மனிதனின் நினைவுகள் எங்கே சேமிக்கபடும்? மூளையில். ஆனால் மூளை எனும் உறுப்பு இல்லாத மிக தொன்மையான உயிரினங்கள் உலகில் உள்ளன. ஜெல்லிமீன், ஸ்டார் ஃபிஷ் மாதிரி. அவற்றுக்கும் நினைவுகள் இருக்கவேண்டும். நினைவுகள் இருந்தால் தான் எதை சாப்பிடலாம், கடலில் எது ஆபத்தான பகுதி என்பது மாதிரி விசயங்கள் தெரியவரும்.
ஆக அவற்றின் நினைவுகள் செல்லுலர் அளவில் உடலில் சேமிக்கபட்டு இருக்கலாம். மனிதனும் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய உயிரினங்களின் வம்சாவழிதான். ஆக அவன் உடலிலும் மூளையை தவிர வேறு எங்காவது நினைவுகளை சேமித்து வைக்கும் அந்த மெகானிசம் இருக்குமா?
ஆம் என்கிறது அறிவியல். இதற்கு காரணம் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பின்னர் பலரின் வாழ்வில் நடந்த மாற்றங்கள். க்ளேர் சில்வியா எனும் பெண்ணின் கேஸ் மிக பிரபலம். நடனகலைஞராக இருந்த க்ளேருக்கு இதயத்தில் பிரச்சனை இருந்ததால் அவருக்கு பைக் விபத்தில் இறந்த ஒரு 18 வயது இளைஞனின் இதயத்தை பொருத்தி சிகிச்சை தரப்பட்டது. அதன்பின் திடீரென அவருக்கு பியரும் கே.எப்.சி சிக்கனும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன் அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. நடையும் ஆணை போல மாறியது. இதய தானம் செய்த பையனின் குடும்பத்தினரை தொடர்பு கொள்கையில் அவர்கள் தம் மகனுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்றார்கள்.
இப்படி இதயமாற்று சிகிச்சை பெற்ற பலரும், கிட்னி, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த பலரும் தாம் முன்பின் சந்தித்திராத உறுப்புதானம் செய்தவர்களுக்கு பிடித்த உணவுகளை உண்பது, தொழிலையே மாற்றிக்கொள்வது என இருப்பது பரவலாக காணப்படும் விஷயம். இதை ஆராய்ந்த ஆய்வுகள் ஒரு 15% கேஸ்களில் இப்படி ஏற்படும் வாய்ப்பு உண்டு என்கின்றன.
நினைவுகள் வெறுமனே மூளையில் மட்டும் சேமிக்கபடுவதில்லை, செல்லுலர் அளவில் உடலின் பல உறுப்புக்களிலும் சேமிக்கப்படலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
- நியாண்டர் செல்வன்
- வீடுகளில் உயரத்தில் அமைக்கப்படும் ஓர் கட்டுமான வசதி.
- உயர் குடியேற்றம், மாட வீடுகளால் நிறைந்த நகரம், கோவில் கோபுரம்.
ரகசியம் சரி, அதென்ன "பரம ரகசியம்"?
பரம - என்ற தமிழ்ச்சொல் பலபொருள் கொண்டது. மேலான, சிறந்த, மிகுந்த, மிகவும், தெய்வீகமான பண்புகளைக் குறித்த உரிச்சொல்லாகும்.
பரம எதிரி = முதல் எதிரி.
பரம ஏழை = மிகவும் ஏழை.
பரம திருப்தி = மிகுந்த திருப்தி.
பரம ரகசியம் - என்றால் மிகவும் மேலான ரகசியம்.
புர் / புர > பர் / பர - ஆகிய மூலங்களில் இருந்து தோன்றிய சொற்கள் பொதுவாக - உயரிய, மேன்மையான, அனைத்திலும் சிறந்த பண்புகளுடன் தொடர்புடைய பொருள்படுபவற்றினைக் குறித்து அமைந்தவையாகும்.
பரம்பொருள் = மிக மேலான பண்புகளைக் கொண்டு, எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும், எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் பொருள்தான் பரம்பொருள்.
பரம்பொருள், பரமசிவன் - ஆகியன இறைவனை - அவனின் உச்ச பண்புகளைப் பாராட்டியமைந்த அழகான தமிழ்ப்பெயர்கள்.
பரம + ஆனந்தம் = பரமானந்தம்.
பரன் - என்றால் எல்லாவற்றிலும் மேலானவன் = சிவன் ; கடவுள்.
பரம்பரை - நம் மூதாதையர் வரிசையில் முதலான மேல்நிலை.
பரண் - வீடுகளில் உயரத்தில் அமைக்கப்படும் ஓர் கட்டுமான வசதி.
பருந்து - மிக உயரத்தில் பறக்கும் திறனுள்ள பறவை.
பறை (ஞானம்) - ஆன்றோர்களிடத்திலோ தெய்வம் மூலமாகவோ பெறப்படும் பெரும்பேறு.
பறை + ஐயன் = பறையன். மூப்பன், முன்னோடி , வழிகாட்டி, தலைவன், மேலானவன்.
புரவி - உயர்ந்த மதில்களை தாண்டும் திறனுள்ள விலங்கு (குதிரை).
புரிசை - மிக உயரமான மதிலமைப்பு.
புரம் - உயர் குடியேற்றம், மாட வீடுகளால் நிறைந்த நகரம், கோவில் கோபுரம்.
-சமரன் நாகன்
- மேலே இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் கடவுள்.
- வேறு வழியில்லை. கடவுள், கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
ஒரு கோவில் மண்டபம். அங்கு, கடவுளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் சாமியார் ஒருவர். நிறையப் பேர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதை, மேலே இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் கடவுள். 'இந்த மனிதர்கள் எப்பவும் நம்மைப் பற்றியே பேசுகிறார்களே!' என்று நினைக்கும் போது கடவுளுக்குப் பெருமையாக இருந்தது.
'சரி... நேரில் போய் அவர்களைப் பார்த்து விட்டு வரலாம்' என்று அங்கிருந்து புறப்பட்டார்.
சாமியார் பேசிக் கொண்டிருந்த கோவில் மண்டபத்தின் அருகே வந்து சேர்ந்தார். ஆலயத்தின் வெளியே இருந்த ஓர் அரச மரத்தின் அடியில் நின்றார்.
அப்போது, வெளியே வந்த பக்தர் ஒருவர், ''வேஷப் பொருத்தம் பிரமாதமா இருக்கு!'' என்றார் கடவுளைப் பார்த்து.
கடவுளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ''ஐயா, நான்தான் உண்மையான கடவுள்!'' என்றார்.
உடனே, ''என்கிட்டே சொன்னதோட வெச்சிக்க. வேற யார்கிட்டேயும் சொல்லிடாத. பிறகு, உன்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில கொண்டு போய் விட்டுடுவாங்க!'' என்றார் பக்தர்.
''நான் சொல்றதைக் கொஞ்சம்...''
கடவுள் ஏதோ சொல்லத் துவங்குவதற்குள், அவரை இடை மறித்த பக்தர், ''ஒண்ணும் சொல்ல வேணாம். முதல்ல இடத்தைக் காலி பண்ணு. கூட்டம் முடிஞ்சி, சாமியார் வெளியே வர்ற நேரம் இது... அதுக்குள்ளே போயிடு!'' என்று கூறிச் சென்றார்.
வெளியே வந்த பக்தர்கள் எல்லாம் இவரைப் பார்த்துவிட்டு, சந்தேகத்தோடு விலகிப் போக ஆரம்பித்தார்கள். கடைசியாக சாமியார் வந்தார். பார்த்தார்.
''ஏம்பா... இப்படி இங்கே வந்து கலாட்டா பண்றே? பேசாம போயிடு!''
''என்னைப் பற்றி பிரசங்கம் பண்ற உனக்குமா என்னை அடையாளம் தெரியலே?''
எதுவும் அவர்கள் காதில் விழவில்லை. கடைசியாக, கடவுளை ஓர் அறையில் தள்ளிப் பூட்டி விட்டுப் போய் விட்டார்கள்.
வேறு வழியில்லை. கடவுள், கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
நள்ளிரவு நேரம். கதவைத் திறந்து கொண்டு மெள்ள உள்ளே வந்தார் சாமியார்.
''கடவுளே! என்னை மன்னிச்சிக்குங்க... நீங்கதான் கடவுள்னு எனக்கு அப்பவே தெரியும்!''
''அப்புறம் என்ன... அந்த ஜனங்கள்கிட்டே சொல்ல வேண்டியதுதானே!''
''சொல்லி இருந்தா, என்னையும் பைத்தியம்னு சொல்லி உள்ளே தள்ளி இருப்பாங்க!''
கடவுள் சிந்திக்க ஆரம்பித்தார்.
'இந்த மனிதர்களுக்கு, இருக்கிற கடவுளைக் காட்டிலும் இல்லாத கடவுள் மீதுதான் அதிக நம்பிக்கை இருக்கிறது!' என்று மனதுக்குள் எண்ணியவர் அங்கிருந்து மறைந்து போனார்.
-தென்கச்சி கோ. சுவாமிநாதன்
- பிருந்தாவனத்தில் கிருஷ்ணரின் மூலவர் சிலை சாளக்கிராமத்தால் ஆனது.
- தஞ்சை புன்னைநல்லூர் கோதண்டராமர் ஆலய மூலவர் சிலை சாளக்கிராமத்தினால் ஆனது.
சாளக்கிராமம் என்பது முதுகில் கருங்கல் போன்ற பொருளுடன் பிறந்து, வளரும் உயிரினம். இது நத்தை, சங்கு, பவழம், ஆகியன தன் உடலில் ஒரு கூட்டை உருவாக்குவது போல, முதுகில் கல்லை கொண்டுள்ளது.
நர்மதை நதியில், பாணலிங்கம் தெய்வத்தன்மையுடன் உருவாதல் போல, கண்டகி நதியில் உற்பத்தியாகும் சாளக்கிராமங்கள் வைணவ சமயத்தினரால் தெய்வத்தன்மை கொண்டதாக வழிபாட்டுக்கு உகந்தவையாக போற்றப்படுகின்றன.
இவை இமயமலையில் கண்டகி நதியில், சாளக்கிராமம் எனும் பகுதியில் தோன்றி உருவாவதால், இவை "சாளக்கிராமம்" என்றே பெயர் பெற்று விளங்குகிறது.
சாளக்கிராமம் என்பது நெல்லிக்கனி அளவு முதல் ஆறடிக்கு மேல் உயரம் கொண்டுள்ளதாக வளர்வதாகும்.
இந்தக் கல்லின் மேற்புறம் முதல் நடுப்பகுதி வரை ஒரு மெல்லிய துளை இருக்கும். உட்புறம் சங்கு, சக்கரம், தாமரை, ஆகிய விஷ்ணுவின் சின்னங்களைக் கொண்டதாக இருக்கும்.
பிருந்தாவனத்தில் கிருஷ்ணரின் மூலவர் சிலை சாளக்கிராமத்தால் ஆனது.
தஞ்சை புன்னைநல்லூர் கோதண்டராமர் ஆலய மூலவர் சிலை சாளக்கிராமத்தினால் ஆனது.
-கருணா மூர்த்தி
- வெயில் காலத்தில் அருகே இருக்கும் கிணறுகள் வறண்டுவிடும்.
- வீட்டில் தனி அறை உண்டு, உணவு, பிற செலவுகளை கவனித்துக்கொள்வார்கள்.
மகாராஷ்டிர மாநிலம், தெங்கன்மால் கிராமம் (Denganmal). மும்பையில் இருந்து 185 கிமி தொலைவில் உள்ளது. 500 பேர் தான் வசிக்கிறார்கள். மிக வறட்சியான கிராமம். வெயில் காலத்தில் அருகே இருக்கும் கிணறுகள் வறண்டுவிடும். ஆறு மணிநேரம் நடந்து சென்றுதான் தண்ணீர் பிடித்துவர வேண்டும். ஒரு ட்ரிப்புக்கு 30 லிட்டர் தண்ணீர் கொண்டுவரலாம்.
ஆண்களுக்கு நாள் முழுக்க வயலில் வேலை. பெண்களுக்கு வீட்டு வேலை. அதனால் ஊரில் எல்லாரும் கூடிபேசி "தண்ணீர் பிடித்துவர ஆண்கள் இரண்டாம் தாரம் கட்டிக்கலாம்" என தீர்மானம் போட்டார்கள். கிராமத்து விதவை பெண்கள், திருமணம் ஆகாதவர்களை எல்லாம் மணந்துகொண்டார்கள்.
இந்த இரண்டாம் தாரங்களுக்கு "பானி பாய்" அல்லது "தன்ணீர் மனைவி" என பெயர். இவருக்கு சொத்தில் பங்கு எல்லாம் இல்லை. வீட்டில் தனி அறை உண்டு, உணவு, பிற செலவுகளை கவனித்துக்கொள்வார்கள். தினம் தண்ணீர் கொண்டுவருவதும், மழை காலங்களில் வீட்டு வேலைகளுக்கு உதவியாகவும் இருப்பார்.
இரன்டாம் தாரத்துக்கு நடக்க முடியாமல் வயதானால், உடம்பு சரியில்லாமல் போனால் மூன்றாம் தாரம், நாலாம் தாரத்துக்கெல்லாம் அனுமதி உண்டு. யாரையும் விட்டை விட்டு விரட்டுவது இல்லை.
குடும்ப அமைப்பில் இத்தனை குழப்பம் பண்றதுக்கு பதில் ஒரு தண்ணி லாரியை வாங்கி விடலாம்னு யாருக்கும் தோணலை என்பதுதான் வியப்பாக உள்ளது. அந்த ஊரில் பிசினஸ் பிஸ்தாக்கள் யாரும் இல்லையா?
- நியாண்டர் செல்வன்
- அனைத்து மனிதகுலமும் கற்ற பாடம்.
- எந்த ஒன்றும் தோன்றுவதற்கு இயற்கை மூலகாரணமாக இருக்கிறது.
வெல்ல முடியாத பராக்கிரமம் மிக்க எதிரியை அணுகும்போது, சொல்லொண்ணா இழப்புகள் தவிர்க்க இயலாது.
உயிரோடு இருப்பவர்களை காப்பாற்றிக் கொள்ள, எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும், அடங்கி நடக்க வேண்டும்; சரணாகதி ஆக வேண்டும்; பேச்சைத் தவிர்க்க வேண்டும்; கைகட்டி வாய்ப்பொத்தி நிற்க வேண்டும்.
மட்டுமல்ல...
வணங்கியேத்த வேண்டும்.
இதுவே, எஞ்சியுள்ள கூட்டத்தினரைக் காவந்து செய்வதற்கும், மேலும் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கும், இவற்றுக்கும் மேலாக, மன அமைதி பெறுவதற்குமான உத்திகள்.
இதுவே அனைத்து மனிதகுலமும் கற்ற பாடம்.
ஒட்டு மொத்த மனித குலத்துக்கு முன் எழுந்த பராக்கிரமம் மிக்க எதிரி யார் ?
இயற்கை!
வெல்ல முடியாத, சீரழிவுகளை அளித்துக் கொண்டு இருக்கும் இயற்கையின்பால் பட்ட பயத்தைப் போக்குவதற்காக மனிதன் வெளிப்படுத்திய செய்கை ...
'வணங்குதல்'.
வணங்குதலினால் இவனது எதிர்ப்பார்ப்புகளை இயற்கை நிறைவேற்றுகிறதோ, இல்லையோ – இவன் மன அமைதி பெறுகிறான். இதுவே வழிபாட்டின் அடிப்படை உந்து சக்தி.
இயற்கை'னா என்ன?
பிறிதொன்றால் உருவாக்கப்படாது, தனது இயல்பில் மாறாது இருப்பது
எந்த ஒன்றும் தோன்றுவதற்கு இயற்கை மூலகாரணமாக இருக்கிறது. அதே சமயம் இயற்கைக்கான மூல சக்தி ஏது? தெரியாது..
அந்த மூல சக்தியின் பண்புகள் மற்றும் குணங்கள் தெரியும். ஆனால், இயற்கையின் மூல சக்தி எதுவென கேட்டால் எவருக்கும் தெரியாது.
பண்புகள் மற்றும் குணங்கள்?
இயற்கையின் தொழிற்பாடுகள் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கும். எனவே அது அழிவில்லாதது. அதன் ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றிக் கொள்ளுமே அல்லாமல் ஆக்கவோ அழிக்கவோ செய்யாது.
"நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"
- தொல்காப்பியர்
ஆதிமனிதன் ஐம்பூதங்களாலும் ஏற்பட்ட அழிவுகளால் தன்னைவிட அவற்றுக்குச் சக்தி அதிகம் என்பதை உணர்ந்தான். எனவே நிலநடுக்கம், எரிமலை, கடற் காற்று, மழை வெள்ளம், சூரியவெப்பம், இடி முழக்கம் போன்றவற்றின் சக்தியைக் கண்டு பயந்தான்.
அந்தப் பயமே பக்திக்கு வழிவகுத்துக் கொடுத்தது. அதனாலேயே பயபக்தியுடன் வழிபடவேண்டும் என்று இன்றும் சொல்கிறோம்.
-மானெக்ஷா
- நாட்டுக்கென்று போரிட்ட வீரர்களின் நடுகற்களை வழிபடுவது மரபு.
- நடுகற்களே கடவுள், வேறு எதுவும் கடவுள் இல்லை என்றும் கொண்டாடுவார்கள்.
'புல்லானாலும் புருசன், கல்லானாலும் கணவன்' என்பது பழமொழி.
'ஃபுல் ஆனாலும் புருசன், கள் ஆனாலும் கணவன்' என்பது புதுமொழி!
போரில் இறந்து கணவன் நடுகல் ஆகிவிட்டாலும் அவன் கணவனே என்று மயிற்பீலி சூட்டி வழிபடுவர்.
நாட்டுக்கென்று போரிட்ட வீரர்களின் நடுகற்களை வழிபடுவது மரபு. நடுகற்களே கடவுள், வேறு எதுவும் கடவுள் இல்லை என்றும் கொண்டாடுவார்கள்.
காக்கை போன்ற பறவைகளை விரட்டப் புற்களும் வைக்கோலும் கொண்டு செய்யப்படும் பொம்மை புல் ஆள் - புல்லாள் என்று அழைக்கப்படும். அப்படிப்பட்டவனாய் இருந்தாலும் (புல்லானாலும்) அவன் கணவன் தானே என்று பழமொழி விளக்கம் கூறுவர்.
- ஆ அரிமாப்பாமகன்
- பெரும் உணவு என்பது உடல் நிறைய சாப்பிடுவது.
- சத்துக்களின் விகிதம் உணவுக்கு ஏற்ப மாறுபடும்.
நாம் நலமாக வாழ மூன்று வகை உணவுகள் அவசியம் தேவை. அவை பெரும் உணவு, நுண்ணுணவு, நுட்ப உணவு என்பவையாகும்.
பெரும் உணவு என்பது உடல் நிறைய சாப்பிடுவது. காற்றை தான் அதிகம் சாப்பிடுகிறோம். நீரிலும் காற்றுதான் அதிகம் உள்ளது. மூக்கால் மட்டுமல்ல தோல் மூலமும் சுவாசிக்கிறோம். வாயால் மட்டுமல்ல தோல் மூலமும் நீரை உறிஞ்சுகிறோம். இவற்றை எப்போதும் இயற்கையிடம் இருந்து பெற்றுக்கொண்டே இருக்கிறது உடல். இதனால் தான் பெரும் உணவு எனப்பட்டது.
வாய் வழியாக சாப்பிடும் சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற திட உணவுகள் நுண்ணுணவு எனப்படும். இந்த உணவில் கரிமம், பிராணன், ஹைட்ரஜன், தாது உப்புக்கள், வைட்டமின்கள், கொழுப்பு நார்ச்சத்து போன்றவை இருக்கும். இந்த சத்துக்களின் விகிதம் உணவுக்கு ஏற்ப மாறுபடும்.
மூன்றாவது நுட்ப உணவு. எல்லா விலங்குகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உணவு தான் காரணம். அது மேக்னட்டிக் எனப்படும் காந்த சக்தியாகும். இந்த உலகம் அளப்பெரிய காந்த சக்தியை கொண்டுள்ளது. உடலிலும் காந்த சக்தி உள்ளது. இது குறைந்தால் பூமியிலிருந்து கிரகித்து கொள்ளும் உடல். இதற்கு நிலத்துடன் தொடர்பு இருக்க வேண்டும்.
ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு எவ்வளவு முக்கியமோ அது போன்று மனிதனுக்கு பூமியே தாய். அளப்பறிய ஆற்றல் மிக்க அதன் தொடர்பில் இருந்தால் நுட்ப உணவு எனப்படும் காந்த சக்தி தாராளமாக கிடைக்கும். இதற்கு மழையில் நனைந்து வெயிலில் குளித்து வெட்டவெளியில் நடக்க வேண்டும்.
ஆரோக்கிய உணவுகளை உண்டாலும் அது செரிமானம் ஆனால் தான் சத்தாக மாறி உடலில் சேரும். உண்ட உணவு செரிமானம் ஆக பூமியில் கிடைக்கும் காந்த சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அது போதிய அளவில் கிடைத்தால் தான் சுரப்பிகள் வேலை செய்யும். உணவை செரிமானம் செய்து ஆற்றலை உறிஞ்ச வைக்கும். காந்த சக்தி கிடைக்காத போது செரிமானம் மந்தமாகி உண்ட உணவே நஞ்சாச மாறிவிடும். எனவே கூடுமானவரை பூமியுடன் தொடர்பில் இருக்க பழக வேண்டும். அதற்கு வெறுங்காலுடன் நடக்கலாம். பசும்புல்வெளியில் நடப்பது மிகவும் நல்லது. இது போல் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
-மாலதி ஜெயராமன்
- ஓய்வு நேரங்களில் அவர் அருகில் உள்ள நூலகத்துக்கு செல்வது வழக்கம்.
- பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அனுப்பியிருந்தனர்.
கணிதமேதை ராமானுஜம் பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். கணிதத்தில் அவர் புலி. ஆனால் அவர் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியடைந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா.. மூன்று முறை அவர் ஆங்கிலப்பாடத்தில் தோல்வியடைந்தார். அதனால் அவர் உயர்கல்வி படிக்க முடியவில்லை.
இதையடுத்து அவர் சென்னை துறைமுகத்தில் கிளர்க்காக வேலைக்குச் சேர்ந்தார். அப்படிபட்டவர் எப்படி உலகம் போற்றும் கணிதமேதையாக ஆனார் தெரியுமா..?
ஓய்வு நேரங்களில் அவர் அருகில் உள்ள நூலகத்துக்கு செல்வது வழக்கம். அங்கே வெளிநாட்டு பத்திரிகைகளும் இருக்கும். ஒரு பத்திரிகையில் லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் ஒரு கணிதத்தை போட்டு, அதற்கு விடை தெரிந்தவர்கள் எழுதி அனுப்பலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனைப் படித்த ராமானுஜம் அந்த கணக்கின் விடையை எழுதி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார். அவர் போன்று பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அனுப்பியிருந்தனர். அதில் ராமானுஜம் எழுதியது தான் சரியான விடையாக இருந்தது.
இந்த விடையை எழுதிய ராமானுஜம் ஒரு கல்லூரி பேராசிரியராகத்தான் இருப்பார் என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் எண்ணினார். ராமானுஜம் எழுதியிருந்த கடிதத்தில் துறைமுக கிளர்க் என குறிப்பிட்டு இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அவருடையத் திறமையைப் பாராட்டி கடிதம் எழுதியவர், உடனே சென்னைப் பல்கலைக்கழகத்துக்கும் ஒரு கடிதம் எழுதினார்.
அதில் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் கணிதமேதை உங்கள் பல்கலைக்கழகத்தில் இல்லை. உங்கள் பல்கலைக்கு எதிரே உள்ள துறைமுகத்தில் கிளர்க் வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் ஒரு பேராசிரியரை சென்னைக்கு அனுப்பி ராமானுஜத்தை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வரவழைத்தார். ராமானுஜம் தேர்வு எழுதாமலே அவருக்கு பட்டம் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட கணித மேதை ராமானுஜம்.
-அருள் பிரகாஷ்
- மனிதனால் கட்டப்பட்ட அந்த கட்டடங்கள் வேறு வேறாகத் தான் இருக்கின்றன.
- இறைவன் தான் குடியேற வேண்டியே மனிதனின் இதயத்தைப் படைத்துள்ளான்.
"மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் அத்தனை பேரும் இறைவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பின்பற்றும் மதங்கள் மாறுபட்டாலும் அவர்கள் தேடும் பொருள் ஒன்றுதான்."- ரூமி
ஆனால், அவர்கள் தேடும் அந்த ஒரு பொருள், ஒவ்வொருவரின் இதயத் துள்ளும் இருக்கிறது. ஆனால் அவர்களோ, அதை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவன் தான் குடியேற வேண்டியே மனிதனின் இதயத்தைப் படைத்துள்ளான்.
ஆனால் மனிதனோ, தன் கரங்களால் கட்டப்பட்ட கோவில்கள் - தேவாலயங்கள்- மசூதிகள் முதலான கட்டடங்களினுள்ளே தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.
ஆனால், மனிதனால் கட்டப்பட்ட அந்த கட்டடங்கள் வேறு வேறாகத் தான் இருக்கின்றன. அவற்றுள் உள்ள கடவுளரும் வேறுவேறாகத் தான் இருக்கிறார்கள்.
ஆனால் இறைவன், தான் குடியேற வேண்டியே ஆசை ஆசையாக அவரால் கட்டப்பெற்ற உங்கள் இதயமென்னும் கோவிலோ, எல்லோருக்கும் ஒன்றுபோல் தான் இருக்கின்றது. அதில் குடியிருக்கும் இறைவனும் துளிகூட மாற்றமில்லாது அனைவரிடத்தும் ஒன்றுபோல் இருக்கின்றான்.
உயிருள்ள, ஒளிநிறைந்த உங்கள் இதயத்தில் வாசம் செய்யும் உயிர்க் கடவுளை விட்டு விட்டு, நீங்கள் எங்கு போய்த் தேடினாலும் அந்த உயிர்க் கடவுளை உங்களால் கண்டுகொள்ள முடியாது.
-சாலை மக்காமா






