என் மலர்
கதம்பம்

பயபக்தி எப்படி வந்தது?
- அனைத்து மனிதகுலமும் கற்ற பாடம்.
- எந்த ஒன்றும் தோன்றுவதற்கு இயற்கை மூலகாரணமாக இருக்கிறது.
வெல்ல முடியாத பராக்கிரமம் மிக்க எதிரியை அணுகும்போது, சொல்லொண்ணா இழப்புகள் தவிர்க்க இயலாது.
உயிரோடு இருப்பவர்களை காப்பாற்றிக் கொள்ள, எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும், அடங்கி நடக்க வேண்டும்; சரணாகதி ஆக வேண்டும்; பேச்சைத் தவிர்க்க வேண்டும்; கைகட்டி வாய்ப்பொத்தி நிற்க வேண்டும்.
மட்டுமல்ல...
வணங்கியேத்த வேண்டும்.
இதுவே, எஞ்சியுள்ள கூட்டத்தினரைக் காவந்து செய்வதற்கும், மேலும் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கும், இவற்றுக்கும் மேலாக, மன அமைதி பெறுவதற்குமான உத்திகள்.
இதுவே அனைத்து மனிதகுலமும் கற்ற பாடம்.
ஒட்டு மொத்த மனித குலத்துக்கு முன் எழுந்த பராக்கிரமம் மிக்க எதிரி யார் ?
இயற்கை!
வெல்ல முடியாத, சீரழிவுகளை அளித்துக் கொண்டு இருக்கும் இயற்கையின்பால் பட்ட பயத்தைப் போக்குவதற்காக மனிதன் வெளிப்படுத்திய செய்கை ...
'வணங்குதல்'.
வணங்குதலினால் இவனது எதிர்ப்பார்ப்புகளை இயற்கை நிறைவேற்றுகிறதோ, இல்லையோ – இவன் மன அமைதி பெறுகிறான். இதுவே வழிபாட்டின் அடிப்படை உந்து சக்தி.
இயற்கை'னா என்ன?
பிறிதொன்றால் உருவாக்கப்படாது, தனது இயல்பில் மாறாது இருப்பது
எந்த ஒன்றும் தோன்றுவதற்கு இயற்கை மூலகாரணமாக இருக்கிறது. அதே சமயம் இயற்கைக்கான மூல சக்தி ஏது? தெரியாது..
அந்த மூல சக்தியின் பண்புகள் மற்றும் குணங்கள் தெரியும். ஆனால், இயற்கையின் மூல சக்தி எதுவென கேட்டால் எவருக்கும் தெரியாது.
பண்புகள் மற்றும் குணங்கள்?
இயற்கையின் தொழிற்பாடுகள் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கும். எனவே அது அழிவில்லாதது. அதன் ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்றிக் கொள்ளுமே அல்லாமல் ஆக்கவோ அழிக்கவோ செய்யாது.
"நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"
- தொல்காப்பியர்
ஆதிமனிதன் ஐம்பூதங்களாலும் ஏற்பட்ட அழிவுகளால் தன்னைவிட அவற்றுக்குச் சக்தி அதிகம் என்பதை உணர்ந்தான். எனவே நிலநடுக்கம், எரிமலை, கடற் காற்று, மழை வெள்ளம், சூரியவெப்பம், இடி முழக்கம் போன்றவற்றின் சக்தியைக் கண்டு பயந்தான்.
அந்தப் பயமே பக்திக்கு வழிவகுத்துக் கொடுத்தது. அதனாலேயே பயபக்தியுடன் வழிபடவேண்டும் என்று இன்றும் சொல்கிறோம்.
-மானெக்ஷா






