என் மலர்tooltip icon

    மற்றவை

    • தூய காற்று சுவாசப் பாதை வழியே நுரையீரலுக்கு செல்லும்போது, நுரையீரலும் பலப்படுகிறது.
    • உணவின் வாசனையும், நாக்கின் சுவை அறியும் தன்மையும் பாதிக்கப்படுகிறது.

    "திண்டுகல்லுக்கு அருகிலுள்ள தோணி மலை என்றொரு மலைக் கிராமம். வாகனப் புகை இல்லாத, மாசடையாத, தூய காற்று உள்ள இடம்.

    அடர்ந்த மரங்கள், கொடிகள், சில உணவுப் பயிர்கள் சூழ எளிமையான வாழ்க்கை வாழும் மலைக் கிராம மக்கள் வசிக்கும் இடம்.

    அவ்விடத்தில் தங்கிய சில நாட்களில் உயிர் பச்சை படிந்து விட்டது போன்ற குளிர்ச்சியும், நுரையீரலில் மிருதுத் தன்மையும், நாக்கில் புது ருசியும் உண்டானது...."

    என்று, தேசாந்திரி நூலில், எஸ். இராமகிருஷ்ணன் குறிப்பிட்டு இருப்பார். அது நூறு சதவிகிதம் உண்மை.

    இங்கே குறிப்பிட்டுக் கூற வேண்டிய இரண்டு விஷயங்கள், தூய காற்று சுவாசப் பாதை வழியே நுரையீரலுக்கு செல்லும்போது, நுரையீரலும் பலப்படுகிறது. நாக்கின் சுவை அறியும் திறனும் மேம்படுகிறது என்பதுதான்.

    மாசடைந்த காற்றை சுவாசிக்கும் போது மூக்கு, தொண்டை, நாக்கு என்று நுரையீரல் காற்று அறைகள் வரை சளிப் படலம் படிந்து விடுகின்றன. இதனால், உணவின் வாசனையும், நாக்கின் சுவை அறியும் தன்மையும் பாதிக்கப் படுகிறது.

    - வண்டார் குழலி

    • விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார்.
    • உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.

    அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார்.

    அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!''என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

    உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

    வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும்.

    உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

    -சந்திரன் வீராசாமி

    • புத்தாண்டை வரவேற்பது என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
    • புத்தாண்டு அன்று திராட்சை உண்பது அதிர்ஷ்ட வருடமாக்கும் என்று நம்பப்படுகிறது.

    புது வருடம் தொடங்கும்போது, கோவிலுக்குச் செல்வது, புதிய ஆடை உடுத்துவது, வீட்டில் சிறப்பு வழிபாடு செய்வது, சிறப்பு உணவு சமைப்பது என்பதெல்லாம் உலகெங்கும் இருக்கும் நடைமுறைப் பழக்கம்.

    இருப்பினும், உணவில் மட்டும் வெவ்வேறு வகையான நம்பிக்கையுடன் புதுமையான உணவுகள் செய்து, சாப்பிட்டு, புத்தாண்டை வரவேற்பது என்பது, மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

    அவ்வகையில் தமிழ் புத்தாண்டில் நமது பழக்கம், முக்கனிகள், நவதானியம், வெல்லம் வைத்து வழிபாடு செய்வதும், உணவில் வடை பாயசம் செய்வதும் பழக்கம் என்றால், தெலுங்கு வருடப் பிறப்பில் பச்சடி சிறப்பு உணவாக இருக்கிறது.

    அதுபோல், கிரேக்க நாட்டில், புத்தாண்டு அன்று, வெங்காயத்தை கதவில் கட்டித் தொங்க விடுவதும், வெங்காயம் சமைத்து உண்பதும் வழக்கமாக உள்ளது. வெங்காயத்தில் உள்ள அடுக்குகள் போல், இனம் விருத்தி அடையும் என்றும், மறு பிறவி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இதேபோன்று, அதிகம் விதைகள் கொண்ட மாதுளையும் கருதப்படுகிறது.


    ஐரோப்பிய நாடுகளில், 12 மாதங்களைக் குறிக்கும் வகையில், 12 பழங்கள் சாப்பிடுவதும், தொடர்ச்சியை குறிக்கும் வகையில் வட்ட வடிவத்தில் உள்ள கேக், பன், சாக்லேட் சாப்பிடுவதும் வழக்கம்.

    அயர்லாந்து நாட்டில் புத்தாண்டு அன்று பட்டர் பிரட் உணவுகள் சிறப்புணவாக இருக்கிறது. பிலிப்பைன்சில் 13 வகையான, வட்ட வடிவத்தில் இருக்கும் பழங்கள் மட்டும் உணவில் வழங்கப்படுகிறது. சீனாவில், உடைந்து போகாத நீளமான நூடுல்ஸ் சாப்பிடுவது, வரும் வருடத்தில் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

    ஸ்காண்டினேவியன் நாட்டில், வெள்ளி போன்று மின்னும் herring வகை மீன்கள் ( முரண் கெண்டை/ நுணலை) சாப்பிட்டால், அந்த வருடம் முழுவதும் அதிஷ்டம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.


    இத்தாலியில், தங்க நாணயம் போன்று இருப்பதாகக் கருதப்படும் பருப்புகளை பன்றி யுடன் சமைத்து சாப்பிடுவது, புத்தாண்டு சிறப்பு உணவாக இருக்கிறது.

    ஜப்பான் நாட்டில் மோச்சி அரிசியில் தயாரித்த கேக் சாப்பிடுவதும், அந்த அரிசியை கோவிலுக்கு வழங்குவதும் அந்த வருடத்தை சிறப்பாகக்கும் என்பது நம்பிக்கை.

    ஸ்பெயின் நாட்டில், புத்தாண்டு முந்தைய நாள் மற்றும் புத்தாண்டு அன்று திராட்சை உண்பது அந்த வருடத்தை அதிர்ஷ்ட வருடமாக்கும் என்று நம்பப்படுகிறது.

    தென் அமெரிக்காவில், புத்தாண்டு அன்று, அரிசி மற்றும் சிவப்பு பீன்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் Hoppin' John என்னும் உணவு உண்பது வழக்கமாக உள்ளது.

                                                                                                                                                                               -வண்டார்குழலி ராஜசேகர் 

    • பூமியிலிருந்து மிகச் சரியாக, 2.537 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.
    • பக்கத்து நாட்டுக்காரர்கள் உதவுவதைப் போலத்தான் ஆண்ட்ரோமெடா கேலக்ஸியும் நமக்கு ஹெல்ப் பண்ணுது.

    பக்கத்து வீட்டுக்காரர்கள் இருப்பதை போன்று, பக்கத்து நாட்டுக்காரர்கள் இருப்பதைப் போன்று, நமக்கு பக்கத்து பால்வெளி மண்டலமும் இருக்கிறது.

    ஆண்ட்ரோமெடா கேலக்ஸி என்பது அதன் பெயர். பூமியிலிருந்து மிகச் சரியாக, 2.537 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.

    அவசர ஆபத்துக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவுவதைப் போலத்தான், பக்கத்து நாட்டுக்காரர்கள் உதவுவதைப் போலத்தான் ஆண்ட்ரோமெடா கேலக்ஸியும் நமக்கு ஹெல்ப் பண்ணுது.

    நமது பால்வெளி கேலக்ஸிக்கு பிரபஞ்ச சக்தி குறைவாக இருக்கின்ற போதெல்லாம் ஆண்ட்ரோமெடா கேலக்ஸியில் இருந்து நமது பால்வழி கேலக்ஸிக்கு Energy cosmic clouds அனுப்பி வைத்து, நமக்கு ஓடோடி வந்து உதவுகின்றது.

    அண்ட சராசரங்களுக்கும் சிவபிரான் படி அளப்பதாக சொல்லி வைத்திருக்கின்ற கதைகள் இதுதானோ என்னவோ?

    -சமரன்

    • எல்ப் எனும் படமும் கிறிஸ்துமஸ் சமயம் பல தொலைகாட்சிகளில் திரையிடப்படும்.
    • பிரபலமான பண்டிகை தொடர்பான பாடல்களை பாடிய கலைஞர்களுக்கு பணமழைதான்.

    புத்தாண்டு வந்தால் இளமை, இதோ, இதோ தானா என சலிச்சுக்கறோம்.

    படம் ரிலீஸ் ஆகி 43 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒவ்வொரு புத்தாண்டிலும் இ.இ.இ மூலம் ராஜாவின் ஆதிக்கம்தான்.

    ஆனால் இதனால் அவருக்கு தம்பிடிக்கு பிரயோஜனம் உண்டா?

    ராஜாவின் அபிசியல் யுடியூப் சானலில் இந்த பாடலுக்கு 451K வியூக்கள் தான். ஆனால் ஏபி இன்டெர்நெஷனல் தளத்தில் இதற்கு 1.1 கோடி வியூக்கள். ஒவ்வொரு புத்தாண்டு முடிந்ததும் வியூக்கள் எண்ணிக்கை சில லட்சம் எகிறலாம்.

    வெளிநாடுகளில் ராயல்டி, காப்பிரைட் சட்டங்கள் வலுவாக உள்ளதால் இம்மாதிரி பிரபலமான பண்டிகை தொடர்பான பாடல்களை பாடிய கலைஞர்களுக்கு பணமழைதான்.

    1994ல் பாடகி மரியா கரே "All I Want for Christmas Is You" எனும் பாடலை பாடினார்.

    30 ஆண்டுகள் கழித்தும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் சீசனிலும் இந்த பாடல் உயிர்த்தெழும். ரேடியோ, டீவி, இசைநிகழ்ச்சி, டவுன்லோடுகள், யுடியூப் என இந்த பாடல் அமெரிக்காவெங்கும் ஒலிக்கும்.

    ஒவ்வொரு கிறிஸ்துமஸ் சீசனிலும் மரியா கரேக்கு ராயல்டியாக மட்டும் 30 லட்சம் டாலர் கிடைக்கும்.

    எல்ப் எனும் படமும் கிறிஸ்துமஸ் சமயம் பல தொலைகாட்சிகளில் திரையிடப்படும். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் சமயம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யபடும். 20 லட்சம் டாலரை ஆண்டுக்கு ரீ ரிலீஸ் வருமானமாக பெற்றுக்கொடுக்கும்.

    ஆக இம்மாதிரி பண்டிகை சம்பந்தபட்ட ஹிட்டுக்களை கொடுத்துவிட்டால் காலமெல்லாம் பணமழைதான். அதன்பின் நீங்களும் பிசினஸ் பிஸ்தாக்கள் தான்.....அதாவது ராயல்டி சட்டங்கள் வலுவாக இருக்கும்வரை....

    இல்லையெனில் ஊரெங்கும் உங்கள் பாடலை பாடி பண்டிகை கொண்டாடும். நீங்கள் விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருக்கவேண்டியதுதான்.

    - நியாண்டர் செல்வன்

    • ஒரு தகவல்-ன்னு தினமும் சொல்றியே! இதெல்லாம் எங்கேயிருந்து எடுக்கறே?
    • "ஐயா! உங்க பாக்கெட்டிலிருந்து எடுக்கறேன்னு சொல்றேன்.

    ஒரு நிகழ்ச்சிக்காக வானொலி நிலையத்துக்கு

    வந்திருந்த திருக்குறள் முனுசாமி ஒலிப்பதிவு

    முடிந்து புறப்பட்டபோது தென்கச்சி சாமிநாதனை

    அருகில் அழைத்து "இன்று ஒரு தகவல்-ன்னு தினமும் சொல்றியே! இதெல்லாம் எங்கேயிருந்து எடுக்கறே?" என்று கேட்டார். பட்டென்று "உங்க பாக்கெட்டிலிருந்துதான் ஐயா எடுக்கறேன்" என்று சொன்னார் தென்கச்சி.

    "அது எப்படி?

    "நீங்க பேசற கூட்டத்துக்கெல்லாம் தவறாம வந்துடுவேன், உங்க பேச்சைக் குறிப்பு எடுத்துக்குவேன். அதையெல்லாம் கொஞ்சம் மாத்தி ரேடியோவுல சொல்லிடுவேன்."

    திருக்குறள் முனுசாமி சிரித்தார்.

    "ஐயா! உங்க பாக்கெட்டிலிருந்து எடுக்கறேன்னு சொல்றேன். உங்களுக்குக் கோவம் வரலியா?"

    "அது எப்படி வரும்? நானும் வேற எவன் பாக்கெட்டிலயோ இருந்துதானே எடுத்து என் பாக்கெட்ல வெச்சிக்கிறேன்?" என்று மீண்டும் திருக்குறள் முனுசாமி சிரித்தார்.

    -சந்திரன் வீராசாமி

    • மந்தைவெளியில் உள்ள கபாலி தியேட்டரில் ஒரு ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது.
    • பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் அந்த நேரத்திலும் எம்ஜிஆரின் இந்த தன்னம்பிக்கையைக் கண்டு அசந்து போனாராம் தங்கவேலு.

    பிளாட்பாரத்தில் நியூஸ் பேப்பரை விரித்து படுத்திருந்தார் எம்ஜிஆர்.

    பக்கத்தில் நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு.

    இது எம்ஜிஆர் திரையுலகத்திற்கு வருவதற்கு முன், நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம்.

    எம்ஜிஆர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் வடசென்னையில் ஒத்தவாடை என்ற இடத்தில் தங்கியிருந்தார்.

    சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனை தாண்டி வெகு தொலைவில் இருக்கிறது அந்த இடம். தங்கவேலுவும் அங்கேதான் தங்கி இருந்தார்.

    அப்போது மந்தைவெளியில் உள்ள கபாலி தியேட்டரில் ஒரு ஆங்கிலப்படம் ஓடிக் கொண்டிருந்தது.

    அதைப் பார்க்க ஆசைப்பட்டாராம் எம்ஜிஆர். கூடவே தங்கவேலுவை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

    படம் முடிந்தது.

    'அடடா' என்றார் தங்கவேலு.

    "என்ன அண்ணே?"


    "நேரம் ஆயிடுச்சே. நாம தங்கியிருக்கற இடத்துக்கு போக வேண்டிய கடைசி பஸ் போயிடுமே..."

    "வாங்கண்ணே. சீக்கிரம் பஸ் ஸ்டாண்டுக்கு போகலாம்."

    தியேட்டரிலிருந்து விரைவாக மயிலாப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து வந்தார்கள். அப்படியும் இவர்கள் வந்து சேர்வதற்குள் கடைசி பஸ் புறப்பட்டு போய்விட்டது.

    'இப்போது என்ன செய்வது' என்றார் தங்கவேலு. நாம் தங்கியிருக்கும் இடத்திற்கு நடந்தே போய்விடலாமா ?

    ஒத்தவாடை இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. நடந்து போவதற்குள் விடிந்து விடும்.

    ஒன்று செய்தால் என்ன ? இங்கேயே மயிலாப்பூரில் தங்கிக் கொள்ளலாம். அதிகாலை 5 மணிக்கு மேல் வரும் முதல் பஸ்ஸில் ஏறி போய்விடலாம் என்றார் எம்ஜிஆர்.

    வேறுவழியின்றி தங்கவேலுவும் சம்மதித்தார். எல்லாம் சரி இப்போது எங்கே படுப்பது ?

    எம்ஜிஆர் ஒரு சிறிதும் யோசிக்காமல் தன் கையில் வைத்திருந்த செய்தித்தாள்களை காட்டினார்.

    "இதோ, இதை விரித்து இந்த பிளாட்பாரத்தில் படுத்துக்கொள்ளலாம் அண்ணே."

    அடுத்த நிமிடமே கொஞ்சமும் தயங்காமல் மயிலாப்பூர் பிளாட்பாரத்தில் நியூஸ் பேப்பரை விரித்து எம்ஜிஆரும் தங்கவேலுவும் படுத்துக் கொண்டார்களாம்.

    தூக்கம் வராமல் கொஞ்ச நேரம் கழித்து திரும்பிப் பார்த்தார் தங்கவேலு.

    எம்ஜிஆர் ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

    என்ன என்று கேட்டிருக்கிறார் தங்கவேலு.

    எம்ஜிஆர் சொன்னாராம்: "அண்ணே, இன்றைக்கு இந்த ரோட்டில் படுத்திருக்கும் இதே ராமச்சந்திரன், ஒருநாள் இந்த நாட்டையே ஆளப் போகிறான்."

    ஆச்சரியப்பட்டு போனார் தங்கவேலு.

    படுப்பதற்கு ஒரு இடம் இல்லை. பாயும் தலையணையும் கூட இல்லை. செய்தித்தாளை விரித்து பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் அந்த நேரத்திலும் எம்ஜிஆரின் இந்த தன்னம்பிக்கையைக் கண்டு அசந்து போனாராம் தங்கவேலு.

    எனக்கும் கூட இதைப் படித்தபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

    எவ்வளவு அசாத்திய தன்னம்பிக்கையும், அசைக்க முடியாத நேர்மறை எண்ணங்களும் இருந்திருந்தால் எம்ஜிஆர் இப்படி சொல்லி இருக்க முடியும் !

    எம்ஜிஆர் ஒரு லட்சியத்தை நினைத்தார். அதை அடைவதற்காக அதை நோக்கி பயணமும் செய்தார்.

    நாம் எதை நோக்கி தீவிரமாக பயணம் செய்கிறோமோ, அதுவும் நம்மை நோக்கி தீவிரமாக பயணம் செய்கிறது.

    இந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்துகொண்டவர் தயாரிப்பாளர் வி.சி. குகநாதன்.

    - ஜான் துரை

    • என்ன சார்.. போன வருசம் அறுபது தேங்கா கொடுத்துகிட்ருந்துச்சு.
    • அதவிட்டுப்புட்டு அதெ அடிச்சா என்ன அர்த்தம்.. பைத்தியக்காரத் தனமால்ல இருக்கு..

    ஆசிரியர்:- யோவ்.. யார்யா நீ.. தென்ன மரத்தை போயி குச்சியால அடிச்சிக்கிட்ருக்க?

    விவசாயி:- பின்ன என்ன சார்.. போன வருசம் அறுபது தேங்கா கொடுத்துகிட்ருந்துச்சு.. இப்போ என்னடான்னா முப்பது கூட தர மாட்டீங்குது.. என்ன நெனச்சிக்கிட்ருக்கு..!

    ஆசிரியர்: - நீங்க என்ன லூசா .. தென்ன மரம் காய் குறைவா தருதுன்னா.. அதுக்கு என்ன குறைன்னு பாருங்க.. உரம் கம்மியா இருக்கா.... இல்ல வேர்ல எதாவது சேதாரம் இருக்கா.... இல்ல தண்ணி சரியா பாய்ச்சலியா.... இல்ல எதாவது பூச்சி அரிச்சிருக்கான்னு பாருங்க... அதவிட்டுப்புட்டு அதெ அடிச்சா என்ன அர்த்தம்.. பைத்தியக்காரத் தனமால்ல இருக்கு..

    விவசாயி: - இது பைத்தியக்காரத் தனம்னா.. உங்ககிட்ட படிக்கிற மாணவர்களை சரியா படிக்கலைன்னு பிரம்பால அடிக்கிறீங்களே.. அது மட்டும் தப்பில்லையா...?

    ஒரு மாணவர் சரியா படிக்கலைன்னா... அதற்கான சூழல் தப்பா இருக்கலாம்... அது அவங்க பெற்றோரா... இல்ல கூடப் படிக்கிற நண்பர்களா.... இல்ல அவங்க கத்துக்கற முறையா... இல்ல சொல்லித் தர்றவங்க சொல்லி தர்ற முறையில இன்னும் தெளிவும், எளிமையும், ஈடுபாடும் அதிகரிக்க வேண்டி இருக்கா.. இதெ ஆராய்ந்து அதுக்கேத்த மாதிரி ட்ரீட் பண்ணுங்க.. அதெ விட்டுப்புட்டு மனரீதியா முழுசா பக்குவப்பட்டிருக்காத பசங்கள அடிச்சா மட்டும் படிச்சிருவாங்களா சார்..

    -குலசேகர்

    • சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலைக் கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு முல்லாவைத் தொடர்ந்தார்.
    • சாமியார், "முட்டாள் இதைக் கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய்?"

    முல்லா தனது வீட்டின் கூரை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் . முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் என்ன விசயம்? எதற்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் ? எனக்கேட்டார்.

    அந்த சாமியார் "நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன். அதைச் சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது. அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன், மன்னிக்கவும்" என்றார்.

    உடனே முல்லா " எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு. சரி பரவாயில்லை என்னுடன் வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் கூரை மேல் ஏறினார்.

    அந்தச் சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலைக் கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு முல்லாவைத் தொடர்ந்தார்.

    சாமியார் மேலே வந்து சேர்ந்ததும், முல்லா மீண்டும் தனது வேலையைப் பார்க்கத்தொடங்கினார்.

    சாமியார், எனக்கு என்ன தருகிறீர்கள்? எனக் கேட்டார். சற்று பொறுமை இழந்தவராக முல்லா "என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை, மன்னிக்கனும்" என்றார்

    சாமியார், "முட்டாள் இதைக் கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய்?"

    முல்லா , " என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான். அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்கமாக இருந்தது அதான். மற்றும் நான் கீழே வரப்பட்ட அனுபவத்தையாவது (கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன். ஹீ ஹி… " என்றார்.

    "அனுபவப் பாடம் எப்போதுமே உபயோகமானது"

    -ஓஷோ

    • தாழக்குடி போன்ற ஊர் பெயர்களின் காரணம் தாழைமரங்கள் அடர்ந்து இருந்ததால் வந்த பெயர்கள் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
    • மாக்காப்பு அலங்காரத்தில் தலையில் கிரீடமாக சூடப்படுவது தாழம்பூ தான்.

    பூக்களில் ஆண் மலர், பெண்மலர் என வகைகள் கொண்ட மலர் தாழம்பூ.. செந்தாழம்பூ என்றால் சிகப்பு கலரில் இருப்பதாக நினைக்க வேண்டாம். வெண்மை, மஞ்சள் ஆகிய இரு வண்ணத்தில் காணப்படும் மலர். மஞ்சள் நிறத்தில் பூக்கும் மலர் ஆண் மலர் (செந்தாழம்பூ) என்றும் வெண்மை நிறத்தில் பூப்பது பெண்மலர் எனவும் அழைக்கப்படுகிறது.

    ஆற்றோரம், சுனைகள், ஊற்று, கால்வாய்க்கரை, கடற்கரை ஆகிய நீர்நிலை பகுதிகளில் வளரும் மரம்.. திருநெல்வேலி மாவட்டத்தில் தாழை ஊற்று (தாழையூத்து), பெரியதாழை, கூடுதாழை மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் தாழக்குடி போன்ற ஊர் பெயர்களின் காரணம் தாழைமரங்கள் அடர்ந்து இருந்ததால் வந்த பெயர்கள் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

    திருச்செந்தூர் அருகே மேலப்புதுக்குடியில் உள்ள அருஞ்சுனைகாத்த அய்யனார் முற்காலத்தில் தாழையடி அய்யனாா் என்றே அழைப்பார்கள்..சுனையின் அருகாமையில் தாழமரங்கள் நிறைந்து இருப்பதை இப்போதும் காணலாம்.

    தாழையை கவனக்குறைவாக தொடும்போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை "கைதை" என தமிழில் முன்பும், மலையாளத்தில் தற்போது வரை குறிப்பிடுகின்றார்கள். அன்னாசி பழத்தை கைதை செத்தை என மலையாளத்தில் சொல்வார்கள்.. அன்னாசி மரமும் தாழை இனத்து வகையே.

    சிவபெருமானின் பூஜைக்கு உகந்த மலர் இல்லை என்றாலும் மற்ற தெய்வங்களின் பூஜைக்கு தாழம்பூவை பயன்படுத்துவார்கள். குறிப்பாக கன்னியாக்குமரி மாவட்டத்தில் சுடலைமாடசுவாமிக்கு சாத்தப்படும் மாக்காப்பு அலங்காரத்தில் தலையில் கிரீடமாக சூடப்படுவது தாழம்பூ தான்.

    தாழம்பூ அதிக மணம் கொண்டது.. இந்த பூவில் சிறிய பூநாகம் இருக்கும். நல்ல பாம்பை விட விசம் கொண்டது. தாழம்பூவை பறித்து தரையில் தட்டிய பின்னர் தான் எடுக்க வேண்டும். இல்லையெனில் பூநாகம் தீண்டும் என்ற பழைய பாட்டி கதை உண்மையா, பொய்யா தெரியாது..

    அதிக மணம் கொண்ட மலராக இருந்தாலும் பெண்கள் இதனை தலையில் சூடுவதில்லை. சூடினால் தலைவலியை தரும் மலர். மணம் மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்ட மலர். பித்தம் அதிகம் ஆகி வரும். உடல் சூட்டு நோய்களை குணமாக்க தாழம்பூவை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடிப்பதை மருந்தாக சித்த மருத்துவம் சொல்கிறது.

    ஒய்யாரக்கொண்டையில் தாழம்பூவாம். உள்ளே இருப்பது ஓராயிரம் ஈறும் பேனுமாம்.. என உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி போலியாக நடப்பவர்களை பற்றி தமிழில் தாழம்பூவை வைத்து பழமொழியும் உண்டு.

    -என்.வி.டி. அண்ணாச்சி

      ஒருமுறை இரவில் நாடகம் முடித்துவிட்டு காரில் வீட்டுக்குக் திரும்பிக்கொண்டிருந்தார் ராதா. அசதியில் உறங்கி விட்டார். காரை சீரான வேகத்தில் ஓட்டிவந்த டிரைவர் திடீரென பிரேக் போட்டார். கார் குலுங்கி நின்றது. ராதா சட்டென விழித்தார். யாரோ ஒருவன் காரின் குறுக்கே வந்ததால் அந்த திடீர் பிரேக்.

      "விருந்தாளிக்குப் பொறந்த புள்ள. நடுராத்திரியில குறுக்க ஓடுற.." டிரைவர் திட்டினார். ராதா டக்கென இப்படி சொன்னார்:

      "கழுத, நாயின்னு திட்டு. விருந்தாளிக்குப் பொறந்த புள்ளைன்னு திட்டாதே.. ஏன் தெரியுமா? இதே ஊரில நாடகம் நடத்தறப்போ ரொம்ப வூட்டுலே விருந்து சாப்பிட்டிருக்கேன். ஓடினவன் என் புள்ளையாயிருந்தாலும் இருப்பான்."

      ராதா இப்படிப் பல விஷயங்களில் ஒரு திறந்த புத்தகமாகத்தான் இருந்தார். தனக்கு பல மனைவிகள் உண்டு என்பதையும் மூடி மறைக்கவில்லை. ஆனால் எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்ததில்லை. ஏமாற்றியதில்லை. தன்னை நம்பி வந்த பெண்களுக்கு நிறையவே செய்திருக்கிறார்.

      "மத்தவங்க வயிறெரிஞ்சா, பொறாமைப்பட்டா ஒண்ணும் ஆகாது. ஆனா ஒரு பெண்கூட பழகிட்டு, அவளை கர்ப்பமாக்கிட்டு, குழந்தைய கொடுத்துட்டு கைவிடவேக் கூடாது. ஏன்னா அவ வயிறெரிஞ்சா அது நம்மளைப் பாதிக்கும்" என்பார்.

      -செந்துறை வே.குமரவேல்

      • பருப்பு வகைகளில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது.
      • கீரைகளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே இருக்கிறது.

      பெண்கள் கருவுற்றிருக்கும் போது ஃபோலிக் அமிலம் குறைபாட்டால் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கூந்தல் வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமானது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஃபோலிக் அமிலம் எந்தெந்த உணவுகளில் நிறைந்துள்ளது என்பது குறித்து இங்கு காண்போம்.

      பீட்ரூட்: ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை பீட்ரூட்டில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

      பருப்புகள்: பருப்பு வகைகளில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. இதில் ஃபோலிக் அமிலமும் இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. பருப்புகளை கொண்டு சுவையான ரெசிபிகளை செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஃபோலிக் அமிலம் உடலில் சீராக காக்கப்படும்.

      சிட்ரஸ் உணவுகள்: சிட்ரஸ் உணவுகளில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. சிட்ரஸ் உணவுகளான ஆரஞ்சு, எலுமிச்சை, க்ரேப் ஃப்ரூட், கொய்யா ஆகியவற்றில் ஃபோலிக் அமிலமும் நிறைந்திருக்கிறது. இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் உண்டாவது தடுக்கப்படும்.


      ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேர்த்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். சாலட்டாக செய்தும் சாப்பிடலாம்.

      இரும்புச்சத்து உணவுகள்: ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக உள்ளது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து ஒரு முக்கியமான பொருளாக விளங்குகிறது. ஃபோலிக் அமிலம் குறைந்தாலும் இரும்பு சத்து குறைபாடு ஏற்படும். இதனை தவிர்க்க ஈரல், சிகப்பு இறைச்சி, இறால், டோஃபு, கீரைகள், பாதாம், பேரிச்சம் பழம், பயறு, சத்தூட்டிய காலை உணவு தானியங்கள், கடல் சிப்பிகள் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

      கீரைகள்: கீரைகளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே இருக்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். பாலக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தய கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்டவற்றில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. ஃபோலிக் அமிலம் கீரையில் அதிகமாக இருப்பதாலே முடி வளர்ச்சியை அதிகரிக்க கீரை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


      மாதுளைப் பழம்: மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், ஃபோலிக் அமிலத்தை (folic acid) உற்பத்தி செய்து ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.

      முட்டை: முட்டையில் புரதம் மட்டுமின்றி ஏராளமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. உங்களுக்கு பிடித்தமான வகையில் முட்டையை தயாரித்து சாப்பிடலாம். முட்டை உங்களை நிறைவாக வைத்திருப்பதுடன் நாள் முழுக்க ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகிறது.

      வைட்டமின்C: வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஃபோலிக் அமிலம் குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும். ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ், தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றை உண்ணவும். அல்லது மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி மாத்திரைகளை உண்ணலாம்.

      -வைத்தியர் முஹம்மது யாஸீன்.

      ×