என் மலர்
மற்றவை
- மாநாட்டில் புத்தரைப் பற்றி கலைவாணர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார்.
- தந்தை பெரியார் சொல்லி முடித்தபோது மக்களுடைய ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.
1954-ம் ஆண்டில் தந்தை பெரியார் புத்த மத மாநாடு ஒன்றை நடத்தினார். அந்த மாநாட்டில் புத்தரைப் பற்றி கலைவாணர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் பேசிய தந்தை பெரியார் "எல்லோரும் என்னை பெரியார் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கும் மேலே ஒரு பெரியார் இருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா?" என்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து கேட்டார்.
பெரியார் அப்படி கேட்டதும் "பெரியாருக்கு மேலே ஒரு பெரியாரா? யார் அவர்?" என்று அந்தக் கூட்டத்திலிருந்த எல்லோரும் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுக்கத் தொடங்கியபோது தன்னுடைய பேச்சுக்கான விளக்கத்தை தந்தை பெரியாரே சொல்லத் தொடங்கினார்.
"உங்களுக்கு எல்லாம் நான் பெரியார். எனக்குப் பெரியார் கலைவாணர்தான். ஏனென்றால் நான் மேடை ஏறி சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைச் சொன்னால் கல்லால் அடிக்கிறார்கள். நான் பேசுகின்ற அதே கருத்துக்களைத்தான் கலைவாணர் சினிமாவில் சொல்கிறார். ஆனால் அதைப் பார்க்கவும், கேட்கவும் காசு கொடுத்து போகிறார்கள். இப்போது சொல்லுங்கள். நான் சொன்னது நியாயம்தானே. அவர்தானே எனக்குப் பெரியார்" என்று தந்தை பெரியார் சொல்லி முடித்தபோது மக்களுடைய ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.
-கயல்விழி
- இரண்டாம் மூன்றாம் வகுப்பு இருக்கைகள் மரத்தினாலான பெஞ்சுகள்.
- மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் மின் விளக்குகளோ காற்றாடிகளோ இருக்காது.
ஆங்கிலேயர் காலத்தில் தனியார் வசம் இருந்த ரெயில்வே கம்பெனிகளை 1947-இல் சுதந்திரம் அடைந்த பிறகு ஒன்றிணைத்து இந்தியன் ரெயில்வே என்ற பெயரில் நாட்டுடைமை ஆக்கியது நேரு அரசு.
அப்போது முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என்று மூன்று வகையான பெட்டிகள் உண்டு.
முதல் வகுப்பு பெட்டிகளில் இருக்கைகள் பஞ்சு மெத்தைகளால் ஆனவை. அந்த பெட்டிகளில் மின் விளக்குகள் காற்றாடிகள் போன்ற வசதிகள் இருக்கும்.
இரண்டாம் மூன்றாம் வகுப்பு இருக்கைகள் மரத்தினாலான பெஞ்சுகள்.
இரண்டாம் வகுப்பில் மின் விளக்குகள் உண்டு. காற்றாடிகள் இருக்காது.
மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் மின் விளக்குகளோ காற்றாடிகளோ இருக்காது.
-சுந்தரம்
- பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் வண்டியையும் மாட்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுவார்.
- வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுகிறார்.
திருமுருக கிருபானந்த வாரியார் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்பதையும் தாண்டி, மிகச் சிறந்த தமிழ் அறிஞர்.
வேதாந்த தத்துவங்களை எளிதில் புரியும் உதாரணங்களோடு கூறுவதில் அவருக்கு நிகர் அவரே.
1989ல் அருப்புக்கோட்டை சிவன் கோவிலில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவில் அவர் கூறிய தத்துவம் இது..
மாட்டு வண்டி உங்கள் அனைவருக்கும் தெரியும்.. வண்டிக்கு அறிவு கிடையாது. மாட்டுக்கு அறிவு உண்டு.
ஆனால் அறிவுள்ள மாட்டால் வண்டியை தானேபூட்டிக் கொள்ள முடியாது. அறிவில்லாத வண்டியாலும் தானே போய் மாட்டின் மேல் இணைய முடியாது.
வண்டிக்கு சொந்தக்காரன் ஒருவர் உள்ளான். அவன் தான் பூட்டாங்கயிறால் வண்டியையும் மாட்டையும் இணைத்து இயக்குகிறார்.
பயணம் முடிந்தவுடன் வண்டிக்காரன் வண்டியையும் மாட்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுவார்.
நம் உடலுக்குப் பெயர் அசித்து. ஆன்மா பெயர் சித்து. ஆன்மாவுக்கு அறிவு உண்டு. உடலுக்கு அறிவு கிடையாது. இரண்டும் தானே இணைந்து செயல்பட முடியாது.
இறைவன் என்னும் வண்டிக்காரன், பிராண வாயு என்னும் பூட்டான் கயிற்றால் உடலையும் ஆன்மாவையும் இணைத்து இயக்கிக் கொண்டு உள்ளார்.
வாழ்க்கைப் பயணம் முடிந்தவுடன் இரண்டையும் தனித்தனியே பிரித்து வைத்து விடுகிறார். அதற்கு மரணம் என்று பெயர்.
மரணம் வரும்வரை சரணம் சொல்ல வேண்டும் என்றபோது கரவொலி அடங்க வெகுநேரம் ஆனது.
- ஆர்.எஸ். மனோகரன்
- நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.
- எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது.
பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில், ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு பெண்மணியை பார்த்துக் கேட்டார். "உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?".
அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார். ஆனால், அந்த மனைவி தெளிவாக, "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை" என்றார்.
கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார். "என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது.
நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது என் சம்பந்தப்பட்ட விஷயம்... வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால்,நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்.
நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், , நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே. இது ஒரு நீண்ட பட்டியல்.என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு.
"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன்,பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்.. நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு... இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.
-உதயேந்திரன்
- தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும்.
- நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்.
நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.
அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தியால்..
1) மனக் கவலை தூள் படும்.
2) கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
3) ஒற்றைத்தலைவலி சரியாகும்.
4) நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்.
5)ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்.
6) முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்.
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.
- சிவசங்கர்
- பள்ளி ஆசிரியராக ராமையா இருந்த போதே பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
- ஏ.பி. நாகராஜன் பள்ளிக்கூடத்திற்கேப் போனதில்லை.
தமிழ் திரைப்படத்துறையில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர்.
இவரது இயற்பெயர் ராமையா. இவர் தந்தை பெயர் நாராயணசாமி நாயனார். தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார்.
பள்ளி ஆசிரியராக ராமையா இருந்த போதே பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதினார். பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று எண்ணிய இவர், வேலையை விட்டுவிட்டு சேலத்தில் இருந்த ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல நாடகங்கள் எழுதினார். அப்போது இவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர்தான் ராமையாதாஸ்.
அன்றைய காலத்தில் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பெண்கள் என்றால் 'தேவி'யென்றும் ஆண்கள் என்றால் 'தாஸ்' என்றும் தங்கள் பெயருக்குப் பின்னால் வைத்துக் கொள்வார்கள்.
அதன் பிறகு, தானே ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கி முதலில் சிறுவர்களை வைத்தும் அதன் பின்னர் இளைஞர்களை வைத்தும் நாடகங்கள் நடத்தினார். அதில் ஒரு நாடகம், "மச்சரேகை'. இந்த நாடகத்தின்போது தான், பின்னாளில் பல படங்களை எழுதித் தயாரித்து இயக்கிய ஏ.பி. நாகராஜன் தஞ்சை ராமையாதாசிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
ஏ.பி. நாகராஜன் பள்ளிக்கூடத்திற்கேப் போனதில்லை. எல்லாம் அனுபவப் படிப்புத்தான். இவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து இவரைச் சிறந்த முறையில் உருவாக்கிய நாடக ஆசிரியர் ராமையாதாஸ் தான்.
-பாண்டியன் சுந்தரம்
- பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார்.
- கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்” என்றார்.
ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, "வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்" என்றார்.
அதற்கு நண்பர், "உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை" என்றார்.
பெர்னார்ட் ஷா சிரித்தபடி ஓர் உருளைக்கிழங்கை எடுத்தார். அப்பொது அது தவறி கீழே விழுந்து உருண்டு ஓடியது.
அப்பொழுது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர் கழுதை அந்த உருளைக்கிழங்கைப் பார்த்தது. அருகில் சென்று முகர்ந்தது. பிறகு சாப்பிடாமல் சென்றுவிட்டது.
அதைக்கண்ட பெர்னார்ட் ஷாவின் நண்பர் கட கட... வென்று சிரித்துவிட்டார். பிறகு அவர், "பார்த்தீர்களா பெர்னார்ட் ஷா... கழுதை கூட உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை!" என்றார்.
அவரை ஓரக்கண்ணால் பார்த்த பெர்னார்ட் ஷா, "உண்மைதான். கழுதைகள் எல்லாம் உருளைக்கிழங்கு சாப்பிடாது தான்" என்றார்.
அதைக் கேட்டதும் நண்பரின் முகம் சுருங்கிவிட்டது..
-சந்திரன் வீராசாமி
- நாடுகளில் உள்ள சில மக்கள் இனங்கள், இப்படி சீழ்க்கை மொழியில்தான் பேசுகிறார்கள்.
- விசில் மொழிகளை, இசையுடன் கலந்த மொழி என்று சொல்லலாம்.
உலக அளவில் இன்றும் எண்பதுக்கும் மேற்பட்ட மக்கள் சமூகங்களில் மொழிக்குப் பதிலாக, அதாவது சொற்களுக்குப் பதிலாக ஒருவித சீழ்க்கை, சீட்டி (விசில்) மொழி இருக்கிறது.
துருக்கி, ஸ்பெயின், பிரான்ஸ், மெக்சிகோ, சீனா, கேமரூன், மொசாம்பிக், நேபாளம் உள்பட பல்வேறு நாடுகளில் இந்த விந்தையான விசில் மொழிகள் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன.
'அண்ணன் கண்ணிலேயே பேசுவன்டா' என்று பருத்திவீரன் படத்தில், குட்டிச்சாக்கிடம் பருத்தி வீரன் பெருமையடிப்பார் இல்லையா?
அந்தமாதிரி, இந்த நாடுகளில் உள்ள சில மக்கள் இனங்கள், இப்படி சீழ்க்கை மொழியில்தான் பேசுகிறார்கள்.
கரடுமுரடான மலை முகடுகள் நிறைந்த பகுதிகள், அடர்ந்த காடுகளில் இந்த சீழ்க்கை மொழிகள் நன்றாகக் கைகொடுக்கும். 120 டெசிபல், 1.4 Khzல், பேசும் வார்த்தைகளைவிட பத்து மடங்கு அதிக தொலைவுக்கு இந்த விசில் மொழி விறுவிறுவென போய்ச்சேரும்.
அட்லாண்டிக் கடலின் கேனரித் தீவில் சில்போ கோமெரா என்ற விசில் மொழி, தென்மேற்கு பிரான்ஸ்சில் லாருன்ஸ் பகுதியில் ஒரு விசில் மொழி. கிரீஸ் நாட்டில் ஆண்டினா பகுதியில் உள்ள ஸ்பெரியா என்ற விசில்மொழி எல்லாம் மிகவும் புகழ்பெற்றவை.
ஆசிய நாடுகளான வியத்நாம், தாய்லாந்தில் கூட விசில்மொழிகள் இருக்கிறதாம்.
இந்த விசில் மொழிகளை, இசையுடன் கலந்த மொழி என்று சொல்லலாம். அல்லது மொழியுடன் கலந்த இசை என்றும் சொல்லலாம்.
-மோகன ரூபன்
- லாரிக் அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் மிகவும் உதவக்கூடியது.
- எலும்பு அழற்சித்தன்மை வாதம், எலும்புப்புரை, வீக்கம், எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாக்கும்.
தேங்காயை உடைத்து துருவி அதிலிருந்து எடுக்கப்படுவது தேங்காய்ப் பால். இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. முற்றிய தேங்காய்தான் பால் எடுக்கச் சிறந்தது.
தேங்காய்ப் பாலில் வைட்டமின்கள் சி, இ, கே, பி1, பி2, பி3, , பி5, பி6 மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகளும் உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, இயற்கை சர்க்கரை ஆகியவை உள்ளன.
பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் உள்ள தேங்காய்ப் பாலில் தாய்ப்பாலில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பான லாரிக் அமிலம் நிறைந்துள்ளது.
லாரிக் அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் மிகவும் உதவக்கூடியது என்பதால், சிறுகுழந்தைகளுக்கும் தேங்காய்ப்பால் கொடுக்கலாம். மேலும் எலும்பு அழற்சித்தன்மை வாதம், எலும்புப்புரை, வீக்கம், எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாக்கும்.
தேங்காய்ப் பால் கொழுப்பு இருக்கும் என்று அதை அருந்த யோசிக்கிறார்கள். லாரிக் அமிலம் நிறைந்த நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். எனவே போதுமான அளவு தேங்காய்ப் பாலை சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் பெருங்குடல் அழற்சி, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதால் இதய நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம். இதிலுள்ள தாது உப்புகள் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் சீராக இருக்க உதவும். இதிலுள்ள மக்னீசியம் தசைப்பிடிப்பு, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து நரம்புகளை அமைதிப்படுத்தும்.
-மரிய பெல்சின்
- சாத்துக்குடி பழத்தின் பெயர்காரணம் சாத்தான்குடி வணிகர்கள் அறிமுகபடுத்தியதால் சாத்துக்குடி என கூறப்படுகிறது.
- சீனாவில் இருந்து இறக்குமதி ஆன வெண்சர்க்கரை சீனி சக்கரை என்றானது.
ஒரு மொழியில் அந்த மக்களின் வரலாறும் ஒளிந்துள்ளது. ஆங்கிலத்தில் Handicapped என்ற வார்த்தை உண்டு. அதன்பொருள் "கையில் தொப்பி" என்பதாகும். முன்பு உடல் ஊனமுற்றவர்கள் தொப்பியை பிச்சைபாத்திரமாக பயன்படுத்தி தெருக்களில் நின்று பிச்சை எடுத்தார்கள். அதனால் அவர்கள் பெயரே Handicpaped என வந்துவிட்டது. இன்றும் மேலைநாடுகளில் தொப்பியை பிச்சைபாத்திரமாக பயன்படுத்தும் வழக்கம் உண்டு.
Piss Poor என்ற சொல்லும் அதுபோல் தான். முன்பு மிக கொடிய வறுமையில் இருந்தவர்கள் தினமும் நிறைய தன்ணீரைக் குடித்து, சிறுநீர் கழித்து, அதை பாத்திரத்தில் பிடித்துக்கொண்டு போய், தோல் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு விற்பார்கள். சிறுநீரில் அம்மோனியா உண்டு. தோலை பதபடுத்த பயனாகும். அதனால் piss poor என்ற சொல் வழக்கில் வந்தது.
அதேபோல இங்கிலாந்தில் பேய்மழை கொட்டுகையில், பூனைகள், நாய்கள் எல்லாம் பயந்துபோய் வீட்டு கூரை மேல் ஏறி ஒளிந்துகொள்ளும், கூரையே தகரும் வண்ணம் மழை பெய்தால், அவை வீட்டுக்குள் விழும். அதனால் பெருமழைக்கு வந்த பெயர் "It rains cats and dogs"
சாத்துக்குடி பழத்தின் பெயர்காரணம் சாத்தான்குடி வணிகர்கள் அறிமுகபடுத்தியதால் சாத்துக்குடி என கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி ஆன வெண்சர்க்கரை சீனி சக்கரை என்றானது.
- நியாண்டர் செல்வன்
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்துவிதமான பருவத்தினருக்கும் ஏற்ற விடுகதைகள் புழக்கத்தில் உள்ளன.
- விடுகதைகள் காலம்தோறும் தோன்றிய வண்ணம் உள்ளன.
பாமர மக்கள் வாய்மொழி மூலமாகப் படைத்து மக்கள் மத்தியில் உலவவிட்ட இலக்கிய வகைகளுள் 'விடுகதை' என்பது குறிப்பிடத்தக்ககதாகும்.
விடுகதைகளை எங்கள் வட்டாரத்தில் 'அழிப்பாங்கதைகள்' என்று சொல்கிறார்கள். பூட்டுவதும், திறப்பதுமான ஒருவித புதிர்த்தன்மை கொண்டதால் (விடை மூலம் விடுவிக்க வேண்டியதிருப்பதால்) இத்தகைய படைப்புக்களை விடுகதைகள் என்று கூறினார்கள் போலும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்துவிதமான பருவத்தினருக்கும் ஏற்ற விடுகதைகள் புழக்கத்தில் உள்ளன.
மிகப் பழமையான இந்த நாட்டார் சொல்கதை வடிவம், இன்றுவரை புத்துயிர்ப்புடன் எழுந்து மொழியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
விடுகதைகள் காலம்தோறும் தோன்றிய வண்ணம் உள்ளன. அவைகளில் சில நிலம் சார்ந்த மணமுடையதாகவும் இருக்கின்றன.
மருத நிலத்தில் தோன்றிய விடுகதை, கழனியில் விளையும் தாவரங்களைப் பற்றிப் பேசுகின்றன. சான்றாக,
'பச்சைப் பசேல் என்றிருக்கும்
பாகற்காயும் அல்ல
பக்கமெல்லாம் முள் இருக்கும்
பலாக்காயும் அல்ல
உள்ளே வெளுத்திருக்கும்
தேங்காயுமல்ல
உருக்கினால் நெய்வடியும்
வெண்ணையுமல்ல. .'
என்ற விடுகதையைக் கூறலாம்.
இந்த விடுகதையின் விடை 'ஆமணக்கு' என்பதாகும். ஆமணக்கு என்பது, மருத நிலத்தில் அதிகமாக விளையும் தாவரம். இந்தத் தாவரத்தின் விதையை ஆமணக்கு முத்து என்று சொல்வார்கள். ஆமணக்கு முத்தில் இருந்ததுதான் விளக்கெண்ணை தயாரிக்கிறார்கள்.
இந்த விடுகதை வரிக்கு வரி ஒரு புதிரைச் சொல்லி அதற்கு ஏற்ற ஒரு விடையையும் அடுத்த வரியில் சொல்லி அவ்விடையையும் மறுத்து, வாசகனை பொதுவிடை தேடச் சொல்லித் தூண்டுகிறது.
விடுகதையில் மொழி விளையாட்டுகளுக்கும், சொற்சேர்க்கைகளுக்கும் தனி இடம் உள்ளது. பல விடுகதைகள், சொற்சாமர்த்தியத்துடன் திகழ்கின்றன. அமைப்பியல் நோக்கிலும் விடுகதைகளைப்பற்றி ஆய்வுகள் நிகழ்த்த இடம் உள்ளது.சான்றாக,
"பல்லிருக்கிறவன் கடிக்க
மாட்டேன் என்கிறான்
பல்லிலாதவன் கடிக்கிறான்
அவர்கள் யார்?'
என்ற விடுகதையைப் பாருங்கள்.
'பல்' என்ற சொல் சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் சொற்களைத் தவிர்த்து இங்கு, சீப்பின் பல்லைக் குறித்துவருகிறது. 'சீப்பிற்கும் பல் உண்டு' என்ற ரீதியில் பொருள் தேடினால், விடுகதையின் முதல் இரண்டு வரிகளுக்கும் 'சீப்பு' என்ற விடை கிடைக்கும்.
இனி, 'கடிக்கும்' என்ற சொல்லாட்சி, எதார்த்தமான பொருள் நிலையில் இருந்து விலகி, 'புதுச்செருப்பும் கடிக்கும்' என்ற ரீதியில் நாம் பொருளைத் தேடினால் மூன்றாவது வரிக்கு விடையாகப் 'புதுச்செருப்பு' என்று தீர்மானிக்கலாம்.
'பல்' என்ற சொல்லும் அதற்குத் தொடர்புடைய 'கடிக்கும்' என்ற சொல்லும், நடைமுறை பிசகிய வெளியில் பொருள் தேடும் படி இவ்விடுகதையில் இருப்புக் கொண்டுள்ளன. இந்த மாதிரியாக, விடுகதையின் கட்டமைப்புக் குறித்தும் ஆய்வுகளை நிகழ்த்தலாம்.
-கழனியூரன்
- பழைய காலத்தில் வீட்டின் இருபுறமும் திண்ணை வைத்து கட்டுவார்கள்.
- திண்ணைகள் நமது பாரம்பரியம்.
உங்கள் வீட்டில் திண்ணை இருக்கிறதா? அந்த திண்ணையில் உட்கார்ந்து அந்த மகோன்னதமான வசந்தத்தை அனுபவித்து இருக்கிறீர்களா?
ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி, ஓங்கி உயர்ந்த மச்சுவீட்டின் வரவேற்பு திண்ணை வரை அன்றைய மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருந்தன திண்ணைகள்.
இன்று திண்ணைகள் இருக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், வாடகைக்கு கடைகளும் இருக்கின்றன.
இப்போது எந்த வீட்டிற்கும் திண்ணைகள் இல்லை. மக்கள் மனதில் பரந்த எண்ணமும் ஈரமும் இல்லை.
பழைய காலத்தில் வீட்டின் இருபுறமும் திண்ணை வைத்து கட்டுவார்கள்.
வழிபோக்கர்கள் தங்கவும், வீட்டு பெரியவர்கள் மாலைநேரத்தில் காற்று வாங்கவும் வசதியாக இருக்கும்.
கூட்டு குடும்பம் இல்லாமல் எப்படி நமது பண்பாடு சீர்கெட்டு விட்டதோ, அப்படியே திண்ணைகள் இல்லாமல் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதி இல்லாமல் போய்விட்டது.
ஒற்றை திண்ணையை விட இரட்டை திண்ணையே விஷேசமானது. வீட்டுக்கு வருபவர்களை உட்கார வைத்து பேச வசதியாக இருக்கும்.
மாலையில் காற்று வாங்கவும், அருகில் வசிப்பவர்கள் கடந்து செல்லும் போது குசலம் விசாரிக்கவும், வீட்டுப் பெரியவர்கள் மாலை திண்ணையில் அமர்ந்து கதை பேசவும் திண்ணைகளின் பயன்பாடு அளப்பரியது.
எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லி கொண்டுதான் இருந்தன.
அதில் அமர்ந்துதான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள். இளையவர்கள் பல்லாங்குழி விளையாடினார்கள்.
பெரியவர்கள் பரமபதம் ஆடினார்கள், அப்பாக்கள் அரசியல் பேசினார்கள்.
அம்மாக்கள் ஊர்க்கதை பேசினார்கள்.
புழக்கடை திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள்.
எதிர் திண்ணைகளில் காதலர்கள் சமிக்ஞையில் காதலை வளர்த்தார்கள்.
திண்ணைகள் பள்ளிகூடமாகவும், அரசியல் மேடைகளாகவும், நடன அரங்கமாகவும், கலைக் கூடமாகவும், விளையாட்டு அரங்கமாகவும் தேவைக்கேற்ப மாறிக் கொள்ளும் இயல்புடையதாக இருந்தது.
ஆனால்.. இன்று அவை கிராமங்கிளல் கூட மறைந்து வருகின்றன.
திண்ணைகள் வெறும் கல் சிமெண்ட் மணலால் ஆன கலவைகள் மட்டும் அல்ல.
திண்ணைகள் நமது பாரம்பரியம்.






